முனைவர் வா.நேரு
தொல்காப்பியத்துக்கு முன்பே
தமிழுக்கு இலக்கணம் வகுத்தவராம் அகத்தியர்?
எழுத்தாளர் மாலன் புதுக்கரடி
புதுச்சேரி
புதுவைப் பல்கலைக்கழக சுப்பிர மணிய பாரதியார் தமிழியற்புலம் மற்றும் பாரத மொழிகள் குழு சார்பில் ‘அகத்திய மாமுனிவரின் பங்களிப்புகள் எனும் தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) தரணிக்கரசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ‘அகத்தி யரும் தமிழும்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் மாலன் பேசியதாவது:
இந்திய சிந்தனை மரபில் சூரியனின் சுழற்சி அடிப்படையில் ஆண்டுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதேபோல் இந்திய மரபியலில் ஒருவரை குணம், பட்டம், இயல்பு ஆகியவற்றை கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. மொழி என்பது ஒருவரின் கருத்தை அடுத்தவருக்கு எடுத்துரைக்க உருவானது. ஆனால், தமிழில் எழுதுவது எழுத்து, கூறுவது கூற்று, மொழிவது மொழி என்ற தனித்துவமிக்க சிறப்புகள் உள்ளன. ஆங்கிலத்தைப் போலவே தமிழுக்கு இணை மொழியாக சமஸ்கிருதம் இருந்துள்ளது.
சங்ககால இலக்கியங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சமஸ்கிருத எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. வடமொழியில் ரிக் வேதத்தில் அகத்தியரின் 27 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் 21 பாடல்கள் ஒற்று மையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அதே நேரத்தில் தொல்காப்பியத்துக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர் அகத்தியர். அவர் இந்திய பகுதிகளான வட, தென் பகுதிகளை இணைத்தவர். மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாகும் என்கிறார் அகத்தியர். அதையே வள்ளுவரும், பாரதியும் வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளாராம்.
புராண புழுகு மூட்டை கதைகளை வரலாறு ஆக மாற்றுவதற்கு ஸனாதனிகள் காலம் காலமாய் முயன்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 5500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆய்வின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சியின் முடிவின்படி அறிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஏன் இதைப் பற்றிக் கருத்து தெரிவிக்கவில்லை என ஒன்றிய அரசையும் மோடியையும் நேருக்கு நேராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேள்வி கேட்டிருக்கிறார், பதில் இல்லை.
புராண கதாபாத்திரம்
ஆனால் அகத்தியர் என்ற புராண கதாபாத்திரத்தை தமிழ் இலக்கியத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அவர்கள் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். திருவள்ளுவருக்கு காவி அடிக்கும் முயற்சி செய்து திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பது போல காட்ட வேண்டும் என்பதற்காக ஆளுநர் மாளிகை முதல் அவாள்களின் ரகசிய குறிப்புகள் வரை தொடர்ச்சியான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.அதில் வெற்றி பெறமுடியாத நிலையில், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் வெறுப்பினை இந்த விடயத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள்.
முதல் இலக்கண நூல்
“தமிழில் முழுமையாகக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். ’உலகில் நிலவும் பல மொழிகளிலும் உள்ள பிற இலக்கணங்களுக்கு இல்லாத எழிலும் பயனும் வாய்ந்தது தொல்காப்பியம். பழைமையும் பெருமையும் அழகும் அருமையும் வாய்ந்தது’ என நாவலர் சோமசுந்தர பாரதியாரால் பாராட்டப்பெற்றது தொல்காப்பியம்”.
இப்போது தமிழ் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு முன்னரே பார்ப்பனர் ஒருவர் தமிழ் இலக்கண நூலைப் படைத்திருந்தார் என்பதைப் போல ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்கள். ‘நம்பியகப் பொருள்‘ என்னும் நூல் பிற்காலத்தைச் சார்ந்த நூல்.இந்த நூலில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது உண்மையல்ல என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார்கள்.
“தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவருள் இளம் பூரணார், பேராசிரியர் இருவரும் குறிப்பிடத்தக்கோர். இவர்கள் இருவரும் அகத்தியரின் மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கருத்தை ஏற்கவில்லை.
தொல்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. அதில் தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்னும் குறிப்பு எங்கும் இல்லை” (வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,பேரா.முனைவர் பாக்யமேரி,பக்கம்58).
“ தமிழை நீசபாஷை என்று ஒதுக்கி ,வடமொழி மட்டும் தேவபாஷை என்று உயர்த்திப்பேசினார்கள்.எந்த நூலிலாவது உயர்ந்த கருத்து இருந்தால் ,அது வடமொழியில் இன்ன நூலிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்று சொல்லி அதன் பெருமையைக் குறைக்க முனைந்தார்கள்.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் முதலான நூல்களும் வடமொழியில் உள்ள நூல்களின் மொழிபெயர்ப்பே என்று காரணப்பொருத்தம் இல்லாமல் தாழ்த்த முற்பட்டார்கள். தொல்காப்பியனார் தமிழுக்கு எழுதிய இலக்கண நூலும் அவ்வாறு வட மொழியிலிருந்து கற்று எழுதப்பட்டது என்று கற்பனை செய்து .’திரணதூமாக்கனி ‘என்ற வடமொழிப்பெயர் அவருக்கு இருந்ததாகவும் படைத்துக்கூறினார்கள் “ என்று மு.வரதராசன் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு (பக்கம் 12) என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

கட்டுக்கதை
இன்றைக்கு தாங்கள் ஒன்றிய அரசில் ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்தி, வடமொழியின் வழியா கவே தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் படைக் கப்பட்டது என்பதைப் போலவும், தொல்காப்பியருக்கு ஆசிரியராக இருந்தவர் அகத்தியர் என்னும் முனிவர் என்றும் துணிந்து பொய் பேச முயல்கிறார்கள். அதற்குத் துணையாக பதவி ஆசை பிடித்த, பொருள் ஆசை பிடித்த சில தமிழ்ப் பேராசிரியர்களை கையகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வழியாக அகத்தியர் பற்றி பேச்சுப்போட்டி நடத்துகிறோம், கட்டுரைப் போட்டி நடத்துகிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
அகத்தியர் என்று ஒரு முனிவர் இருந்தார் என்பதே கட்டுக்கதை
தோழர்களே! வடமொழிப் புராணக் கதைப்படி அகத்தியர் என்பவர் ஒரு முனிவர்.பார்ப்பனர்.கடவுள் களான சிவனுக்கும் உமையம்மைக்கும் இமயமலையில் திருமணம் வேதமுறைப்படி பார்ப்பனர்கள் வேதம் ஓதி நடந்ததாகவும் அப்படித் திருமணம் நடக்கும்போது உலகத்தில் உள்ள எல்லா முனிவர்களும் இமயமலையில் கூடினர். அப்படி முனிவர்கள் எல்லாம் ஓர் இடத்தில் குழுமியதால், மாட்டு வண்டியில் ஒரு பக்கம் பாரத்தால் தூக்கிக் கொள்வதைப்போல வடக்கு தாழ்ந்ததாம், தெற்குப் பகுதி உயர்ந்ததாம். உடனே சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தெற்குப் பக்கம் சென்று சமப்படுத்து என்று சொன்னாராம்.அகத்தியர் தெற்கே வந்து பொதிய மலையைப் பார்த்தாராம்.உடனே பொதிய மலையில் ஏறி மிதித்தாராம்.உடனே தாழ்ந்திருந்த வடக்குப் பகுதி இவரது மிதியால் வடக்குத் திசை உயர்ந்து சமமானதாம்.இவரது மிதியால் உலகம் மீண்டும் சமம் ஆகியதாம்.உடனே அகமகிழ்ந்த சிவன் தமிழ் மொழியை அகத்தியருக்குத் தந்தானாம். பாரதியும் ‘ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன்‘ என்று பாடி மகிழ்ந்தார்.ஆமாம் அவாளின் கூற்றுப்படி தமிழ் மொழியே வேதியனிடம் சிவன் கொடுத்த பொருளாம்!…
நீண்ட வரலாறு
மொழியியல் அறிஞர்கள் எப்படி மொழி உருவாகியது,வளர்ந்தது, செம்மொழியாக வாழ்கிறது என்பதற்கு நீண்ட வரலாறு வைத்திருக்கிறார்கள். இவர்கள் சிவபெருமான் தமிழை அகத்தியனிடம் கொடுத்தான்,வடமொழியான சமஸ்கிருதத்தை புலவர் பாணனிடம் கொடுத்தான் என்று இரண்டு மொழிகள் தோன்றிய வரலாற்றை முடித்துவிட்டார்கள்.இன்றைய அறிவியல் உலகில் இதனை ஒப்புக் கொள்ள இயலுமா?
அதைப் போல இன்னொரு புராணக்கதை. ”அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் ஒன்று கவிழ்த்துவிட்டது.அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகின்றது.ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்துவிட்ட அவலத்தைக் காணலாம்.இப்புராணக் கதையைச் சிவப்பிரகாசர் பிரபுலிங்கலீலை என்னும் நூலில் எடுத்துரைக்கின்றார். மணிமேகலையும்,
‘அகர முனிவன் அகத்தியன் தனது
காகம் கவிழ்த்த காவிரிப்பாவை“ என மொழிகின்றது என பேரா.முனைவர் பாக்யமேரி குறிப்பிடுகின்றார்.
நாணயமான செயலா?
இத்தனை நாள் வெறும் கதையாக இருந்ததை, இப்படி எல்லாம் நடக்குமா என்று மாணவர்கள், பெரியவர்கள் எள்ளி நகையாடிய ஒன்றை மாணவர்கள் மத்தியில் உண்மை என்று காட்டுவதற்கான முயற்சி யைப் பல்கலைக்கழகங்களும் அதற்குள் இருக்கும் பேராசிரியர்களும் முயற்சி செய்வது மிகுந்த வேதனையைத் தருகிறது. மாலன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்கள் எந்தவிதக் கூச்ச நாச்சமில்லாமல்,”தொல்காப்பியத்துக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர் அகத்தியர்.அவர் இந்திய பகுதிகளான வட தென் பகுதிகளை இணைத்தவர்“ என்று புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேச முடிகிறது.இதற்கு ஆதாரம் எது? அகத்தியர் தொகுத்துத் தந்த முதல் இலக்கண நூல் எங்கே இருக்கிறது?.
சில நூற்பாக்களை வைத்துக் கொண்டு அதனைப் பார்ப்பன முனிவர் அகத்தியர் தான் இயற்றினார் என்று அவர்களாகத் தீர்மானம் செய்துகொண்டு பேசுவது அறிவு நாணயமான செயலா? மாலன் பதில் சொல்வாரா?
அகத்தியன் விட்ட புதுக்கரடி நூலின் முன்னுரையில் ‘தமிழகத்தை திராவிட நாட்டைத் தம் வழிப்படுத்த முதன்முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப் பாதிரிதான் அகத்தியன் ‘ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.அகத்தியன் என்னும் பெயரால் திராவிட நாட்டில் புகுந்த ஆரியக் கூட்டம் எப்படி ஆத்மா, முற்பிறவி, பிறவிப்பயன் என்று நாட்டை ஆண்ட மன்னனை ஏமாற்றி,எப்படி நாட்டைக் கைப்பற்றினர் என்பதனை அழகுறப் புரட்சிக் கவிஞர் இந்தக் கவிதையில் பாடியிருப்பார்.இப்போது மாநில சுயாட்சி கூடக் கொடுக்காமல் அடக்கி வைத்திருக்கும் பார்ப்பனக் கூட்டம் அதே அகத்தியரைத் தூக்கிக் கொண்டு கல்லூரிகளுக்குள்ளும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் உள்ளே நுழைகிறது. நம்மை ஏமாற்ற முயல்கிறது.
தொல்காப்பியமே முதல் இலக்கண நூல்
தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல். அகத்தியம் என்ற நூலே இப்போதுவரை இல்லை. தொல்காப்பிய சூத்திரத்திற்குள்ளும் எந்த இடத்திலும் அகத்தியம் என்ற பெயர் வரவில்லை.பிற்கால பக்தி இலக்கியவாதிகள் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்று குறிப்பிடுகிறார்கள் ஆனால் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் தனக்கு குரு என்று எவரையும் குறிப்பிடவில்லை.
எனவே எப்படி திருவள்ளுவரின் தந்தை ஒரு பார்ப்பான் என்று கதைகட்டிவிட்டார்களோ அப்படித் தமிழரான தொல்காப்பியர் தானே இலக்கணத்தை படைக்கவில்லை ஏற்கனவே ஒரு பார்ப்பனர் படைத்து வைத்திருந்தார் அதன் வழியாக அதன் தொடர்ச்சியாக தொல்காப்பியத்தைப் படைத்தார் என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ் செம்மொழி நிறுவனம் தமிழை வளர்ப்பதற்குப் பதிலாக வடமொழிக்குள் தமிழைக் கொண்டுபோகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே இப்படிப்பட்ட முயற்சிகளை எதிர்த்து மாணவர்கள் ஒன்று திரள வேண்டும் இப்படிப்பட்ட பொய் கருத்துகளைப் பரப்பும் நிறுவனங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். நம்முடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.தமிழ் நாடு அரசும் இப்படிப்பட்ட முயற்சிகளை அடை யாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.