பக்கங்கள்

வெள்ளி, 2 மார்ச், 2018

ஆட்சி மொழிக்காவலர் கீ.இராமலிங்கனார்



                                           


                                                           (பிறப்பு: 12.11.1899)

ஆட்சி மொழிக்காவலர் என அன்புடன் அறிஞர்களால் அழைக்கப் பெற்றவர். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வடமொழிச் சொற்களாலும் புரைமண்டிக்கிடந்த ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல்கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சிமொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் ஆர்வலர். தெ.பொ.மீ மற்றும் திரு.வி.க. ஆகியோரின் சீடர். தமிழ் திருமண வழிபாட்டு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி தொடர்ந்து பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர்.

சென்னையை அடுத்த திருவள்ளூருக்கு அருகே கீழச்சேரி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை இரத்தினம், தயார் பாக்கியம்மாள். இருவருக்கும் அய்ந்து பிள்ளைகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக மரணிக்க ஆறாவது மகவாய்ப் பிறந்தவர் இராமலிங்கனார். கீழச்சேரியிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தமிழ்க் கல்வியைத் துவக்கிய இராமலிங்கனார் பின் மாதா கோவில் பள்ளியில் பயின்றார். சென்னை வந்தவர் அங்கு சிந்தாதிரிப்பேட்டை சீயோன் பள்ளியிலும் இராமலிங்கர் மடத்திலுமாகப் படித்துத் தேறினார். தேவாரப் பாடவகுப்புகளிலும் கலந்துகொண்டு பயின்றார். வெஸ்லி கல்லூரியிலும் பின் பச்சையப்பன் கல்லூரியிலுமாகப் படித்துப் பட்டம் தேர்ந்தார். பின் அரசுப் பணியில் இருந்துகொண்டே தொடர்ந்து தேர்வுகள் எழுதி தன்னை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார். பின் முதுகலைப் பட்டமும் முதுகலைஞர் பட்டமும் பெற்றார். அரசுப் பதவிகளில் அவர் சாதாரண எழுத்தர் பதவிகளில் பணிபுரிந்தபோதும் அதில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த பல ஆங்கில மற்றும் வடமொழிகளுக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் பணியில் அவரது தமிழ் ஆர்வம் அவரை உந்தித் தள்ளியது.
அவர் வகித்த பதவிகள் அனைத்தும் மக்களோடு நெருங்கிய தொடர்புடைய பதவியாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். சிதம்பரம் நகராட்சியில் இவர் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில் அனைத்து வடமொழி மற்றும் ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் மாற்றினார். 

கலெக்டரை ஆட்சியர் என்றும், கமிஷனரை ஆணையர் என்றும், முனிசிபாலிட்டியை நகராட்சி, சேர்மனை தலைவர், கவுன்சிலரை நகர் மன்ற உறுப்பினர் என்றும் மாற்றிக்காட்டிய பெருமை கீ.இராமலிங்னாரையே சாரும். இசைச் சக்ரவர்த்தி நயினார் பிள்ளை வரலாறு, நகராட்சி முறை, தமிழ் ஆட்சிச் சொற்கள், ஆட்சித்துறைத் தமிழ், ஆட்சிச் சொல் அகராதி, தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தமிழ்த் திருமணம் போல பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதில் தமிழ்த் திருமணம் எனும் நூலை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.

(நவம்பர் 12 இவரது பிறந்தநாள்)

- உண்மை இதழ், 1-15.11.17

1 கருத்து:

  1. எங்கள் மண்ணின் மைந்தர் ஆட்சித்தமிழின் ஆதவன் வாழ்க அவர் தம் தமிழ்மேம்பாட்டுப் பணி

    பதிலளிநீக்கு