பக்கங்கள்

திங்கள், 16 மே, 2016

எல்லோரும் கொண்டாடுவோம் - தந்தை பெரியார்


சங்கராந்தி என்று திரிக்கப்பட்ட தமிழ் மரபை மீட்டு, பொங்கலைத் தமிழர் திருநாளாக்கியவர் தந்தை பெரியார். ஏன் இது நமது திருநாள் என்கிற அவரது பார்வை இங்கே பதிவாகி யுள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும்.
ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் (Harvest Festival) என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக் குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப் படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதார மான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப் பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.
இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு விடவில்லை. இம் மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறா மைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்ததாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு  விழாக் கொண்டாடுவோர் வெள் ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள் ஆடு, மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய் யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ண மூர்த்தி மக்களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த் தனகிரி) யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப்பிடித்து காப் பாற்றினதாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், எனக்கு ஒரு நாள் பண்டிகை;
உனக்கு ஒருநாள் பண்டி கையாக, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் பொங் கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண் டார்கள் என்றும் சிரிப் பிற்கிடமான ஆபாச முட்டாள்தன மான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரச னான இந்திரனின் யோக்கியதை எப் படிப்பட்டது மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப் பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
மற்றும், இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதையையும் போகிப் பாண்டிகையென்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்றுநாள் பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் புகுத்திவிட்டார்கள்.
நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக் களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும்  என்பதற்காக மனித சமு தாயம் முழுவதுமே அறிவைப் பயன் படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர் களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம் மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்றுமட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், நல்லுடை உடுத்து வதையும், மனைவி மக்கள் முதலியவர் களுடன் இன்பமாகக் காலம் கழிப் பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி அவர் களுடன் குலாவுவதான காரியங் களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசிய மாகும்.
மற்றபடியாக, மதச் சார்பாக உண் டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக் கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்துவருவ தால்-பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடா மலிருந்து, தங்களை மானமும் அறிவு முள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். மானமும் அறிவுமே மனிதற்கழகு.
கிறித்துவர்கள் காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக் காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக் கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும் இப்படித்தான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப் பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழா வாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.  மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானே யொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
-விடுதலை ஞா.ம.10.1.15

போர்! தமிழ்ப் போர்!!

குயில்  இதழில் புரட்சிக் கவிஞர்
நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.
ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.
தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால்  குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து  கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.
நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.
தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.
தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.
எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!
அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.
தமிழ்
தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து  கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.
வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.
இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.
தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.
தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.
ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.
அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.
தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!
அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!
நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!
குயில் 23.2.1960

-விடுதலைஞா.ம.10.1.15
-

ஞாயிறு, 15 மே, 2016

வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்

முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும்  தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர்.  அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும்  எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன்  ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
--விடுதலை,10.1.15

சனி, 26 டிசம்பர், 2015

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-3

திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
-(குயில், 15---07-1958)

உண்மை,1-15.7.15
ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15---07-1958)
8
அதி
இது தூய தமிழ்ச்சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் அதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார் -தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு --குற்றம். இரியர் -- நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
முரலை
அண்மையில் வடசொற் பற்றுடையவர் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. இதனால் சிரிக்க வாய்ப்பிழந்தேன்.
ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்து நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தனர். முரலை என்ற தொழிற் பெயருக்கு, முரலுவது - ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயர். முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச்சொல்.
முரலி
இது முரலுதலை - ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு - புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க!
மா
இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை!
மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பலபொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுதவேண்டும். (இடையில், ப் விரிக்காவிடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகிவிடும். மா இருக்க மஹா எதற்கு?
கண்ணியம்
இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல் சிறத்தல், என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செப்பிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாயும் வரும்.
கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு, தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும்.
- (குயில், குரல்: 1, இசை : 8, 22-07-58)
காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். 
புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
உண்மை,1-15.8.15
அந்தணர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்.........
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனைவிடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டில் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறாதிருக்க வேண்டும்.
உலகுக்கு முதன்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைத்தமையே காட்டும். மனமானது புலன் வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும் அந்த உணர்வு நிலையிலே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க.
பிணம்
பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே.
(குயில், 05-08-1958)
- -உண்மை,16-31.8.15
கன்னி
இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி-இளமை. கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள்.
இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
தொல்காப்பியம் நூன் மரபு 30-ஆம் பாட்டு.
மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முற் றாம்வருஉம் ரழஅலங் கடையே
என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ் என்னும் இரண்டு எழுத்துகள் தம்முன் தாம் வரும் என்றது.
இதில் ன் என்பதன் முன் ன வருவதற்கு எடுத்துக்காட்டாகக் கன்னி என்ற தூயதமிழ்ச் சொல் காட்டப்பட்டிருக்கின்றது.
காலம்
கால், காலை, காலம் ஒரு பொருட்சொற்கள். இது தூய தமிழ்ச்சொல்லே, எனினும் பார்ப்பனரும் பழிப்பனரும் இதையும் வட்சொல் என்று ஏமாற்றுவர். இதனாலன்றோ தொல்காப்பியச் சொல்லதிகார உரைகாரர் காலம் உலகம் என்ற 58 ஆம் நூற் பாவுரையில், காலம் உலகம் வடசொல்லன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார் என்று விழிப்பூட்டினார்.
உலகம்
இது லோகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று புகலும் பொய்யரும் உள்ளார் அன்றோ! மேலே காலம் என்பதன்கண் உரைத்த தொல்காப்பியச் செய்யுள் உரையாய் இதுவும் தமிழ்ச் சொல் என்றே வற்புறுத்தியுள்ளார். உலகம்- உலகு என்றும் வரும். உலகத்தில்- - துன்பம், --துன்பம் நிறைந்ததாதலின் உலகம் காரணப்பெயர். இவ்வாறு மறைமலையடிகளாரும் வரைந்தனர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளின் முதற்பாட்டில் திருவள்ளுவர் தம் பெற்றோர் நினைவாக அவர் பேர்களாகிய ஆதி பகவன் என்பனவற்றை வைத்தாராம்.
ஆதி பகவன் என்பது வடசொற்றொடர் என்று பரிமேலழகர் கதைத்ததற்குக் காரணம் கண்டு கொள்க. இன்னொரு முறையும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுகிறேன், பகவன் தூய தமிழ்ச் சொல்.
ஆகுலம்
இது வடமொழியன்று தூய தமிழ்ச் சொற்றொடர், ஆகு+உலம் எனப்பிரியும்? ஆகு-ஆகின்ற (ஒருவன் முயற்சியாலாகின்ற) உலம்- - -ஒலி. வினைத்தொகை நிலைத்தொடர். கடல் முதலியவற்றில் உண்டாகும் இயற்கை ஒலியைப் பிரிப்பதற்கு ஆகு என்ற அடை வேண்டியதாயிற்று.
உலம் என்பது உலம்பு என்றதன் கடைக்குறை என்பர். ஆகவே ஆகுலம் என்றது தூய தமிழ்ச் சொற்றொடர் என்க. வியாகூலம் என்பது போன்ற சொற்கள் வடமொழியிற் கேட்ப்படுகின்றன. ஆயினும் அவற்றிற்கும் ஆகுலம் என்பதற்கும் தொடர்பில்லை என அறிதல் வேண்டும். ஆகுலம் என்ற சொற்றொடரை வள்ளுவர் தக்க இடத்தில் வைத்து செய்யுள் செய்து காட்டியருளினார்.
மனத்துக்கண் மாசு இலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
என்பது குறள்.
மனத்துக்கண் மாசற்ற நிலையில் உண்டாகும் நினைப்பும் செயலும் அறமாகும். அல்லாதவை அனைத்தும் அறமாகா. வேறு என்ன எனின் நான் அறம் செய்தேன், நான் அறம் செய்தேன் என்று ஒலிபரப்புதலும் ஒலிபரப்பும்படி செய்தலும் ஆகிய தன்மையுடையவைகளே என்பது இதன் கருத்து. ஈண்டு ஆகுலம் என்பது இன்றியமையாத சொற்றொடர் ஆதல் கண்டு இன்புறவேண்டும்.

(குயில்: குரல்: 1, இசை: 11, 12-08-1958)
-உண்மை,1-15.9.15

காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.

சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
-உண்மை,1-15.10.15
காரணம்
இது தமிழ்ச் சொற்றொடர்.
கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம்.
எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுகுவது ----அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும்.
காரியம்
கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக.

காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டையும் வட மொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேற்றுமையின்மையால்.
கடிகை
இது கடிகா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு கூறுவார் பார்ப்பனரும் ஏய்ப்பனரும். கடி, என்பதற்கு எத்தனை பொருள்கள் உண்டு?
கடி---வியப்பு, அளர், அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர்கலம், இன்பம், சினம், ஐயம், ஒளிக்கை ஒளி, ஓசை கடிதமும், கரிப்பு, திருமணம், களிப்பு. கால நுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சீறல், சிறுகொடி, விரைவு, ஓசை, பூங்கா, நீக்கம், பேய், பிணம், புணர்ப்பு, புதுமை, பொழுது, மிகுதி, மணம், விளக்கம்.
இங்குக் கடி என்பது கால நுட்பத்துக்கானது. கடி வினைத்தன்மை யடைந்து தொழிற்பெயர் இறுதி நிலை பெற்றது. நாழிகை என்பது பொருள். எனவே கடிகை வடசொல் என்பது கரடி. அது தூய தமிழ்ச் சொல்லே.
கடிகாரம்
இது கடிகார யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது _- காட்டுவது - ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே.
கற்பனை
இது கல்பனா என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வடவர். ஆம் என்பார் தமிழறியாத தமிழர் சிலர்.
கற்பனை கல்பனாவின் சிதைவு என்பவர், கற்பனையை வில்பனா என்பதன் சிதைவு என்பார் போலும். நகைப்புக் கிடமாகிறது.
கல்+பு = கற்பு. அனைத்துமோர் முதல்சிலை என்க. இது கற்பனையின் முதனிலையாயிற்று.
கற்பு+அன்+ஐ = கற்பனை என்க. அன் சாரியை, தொழிற்பெயர் இறுதி நிலை.
முதனிலையாகிய கற்பு என்பதன் பொருள் தோண்டுதல் என்பது. ஆகுபெயராய் தோண்டுதலின் பயன், எண்ணத்தின் ஊற்று, புதுப்புது கருத்துக்கள் என்க. எனவே கற்பனை தூய தமிழ்ச்சொல் என்பது வெட்ட வெளிச்சம்.
கல்பனா என்பதொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது தமிழில் கற்பனை என்றுதான் திரிக்கப்படும். திரிக்கப்படவே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வடவர் சொல்லும் கற்பனைக்கும், தமிழர் சொல்லும் கற்பனைக்கும் தொடர்பில்லை என்பதாகும்.
அன்றித் தமிழின் கற்பனையையே வடவர் எடுத்தாண்டார்கள். எனினும் பொருந்துவதே. இந்த உலகில் சமஸ்கிருதம். தமிழுக்குப் பிந்தியது என்பதும், சமஸ்கிருதக்காரர் தமிழுக்குப் பிந்திய நாகரிகம் உடையவர்கள் என்பதும் மறத்தற்குரியன அல்ல.
வடிவு
இது அம் சாரியை பெற்று வடிவம் என்றும் வரும். இச்சொல் வடசொல் என்று ஏமாற்றுவர், ஏமாறற்க.
வார்ப்படக்காரர் தொழிலிடத்தினின்று தோன்றிய பெயர்களில் ஒன்று. வடி+வு = வடிவு. தொழிற்பெயர். தொழிலாகுபெயராக வடிவு செய்தலால் வரும் வடிவத்துக் காயிற்று. செம்பு முதலியவைகளைக் காய்ச்சி அச்சில் கசடு நீங்க வடித்தூற்றலின் ஆகும் வடிவம் எனக் காரணப் பெயராதல் காண்க. வார்ப்படம் என்பதும் இதே பொருளில் அமைந்த காரணப் பெயரே என ஒப்பு நோக்கித் தெளிக!
(குயில்: குரல்:  1, இசை 14, 02.09.58,  இசை 15, 09-09-58)
-உண்மை,16-31.10.15
படிவு
இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.
படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.
படிமம்--வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக்காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள். படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 15, 9-9-58)
தாரம்
தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
தாரம், வல்லிசை, நா, வெள்ளி,
தலைவி, ஓரிசை, கண், என்பன.
என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? -- ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே  வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
(குயில்: குரல்: 1, இசை: 16, 16-9-58)
-உண்மை,1-15.11.15

பரதர், பாரதர், பாரதம், பரதன்
இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;-- நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.
நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.
இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.
மீனெறி பரதவர் மடமகள்
மானேர் நோக்கம் காணா ஊங்கே
என்ற நற்றிணையிலும் காண்க.
இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.
இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்---பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்--பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.
இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.
பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3--23--2)
ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)
இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!
அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.
வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.
இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?
ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.
பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.
(குயில்: குரல்: 1, இசை: 18, 30----09-19--58)
-உண்மை,16-30.11.15
ஓரை
இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகிய
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர். ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
(குயில்: குரல்: 1, இசை: 17, 23.09.1958)
வித்தகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.    (குறள்)
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்.                        (ஔவையார்)
வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
சதுரப்பாடு _ -ஆற்றல்.
வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்வித் தகத்துள் நெல்முனை தோற்றம் என்பது.
வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
(குயில்: குரல்: 1, இசை: 20, 14.10.1958)
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
-உண்மை,1-16.12.15
தாசர்
தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.
தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும்.
தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க தா-_கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க.
எனில், தாசர் என்ற சொல்லுக்கு, கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்ன தான் என்று கேட்கின்றோம்.
தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியும். ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டவர்கள் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று_--விழிப்புற்ற _ --ஆராய்ச்சிமிக்க இக்காலத்திலும் செல்லுமோ!
ஆரியர்_-மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர்_-மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத அய்யர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வந்திருப்பதை நாம் கண்டோம் அல்லவா? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படி-யானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப் பட்டிருக்கும்?
பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் “பகவான் புத்தர்” என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:
ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால், ஆரிய மறையில் தாச, தாஸ் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்கு கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூற்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே, தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் கொடைவள்ளல், நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்று யாகும். ஆவெஸ்தாவில் பர்வதின்யஸ்து என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றி செய்தி வருகிறது. அதில் அவர்களை “தாஹி” என்று  குறித்துள்ளார்கள்.
தாஸ, தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத்தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன் -தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக!
(குயில்: குரல்: 1, இசை: 19, 07-10-1958)
மளிகை
இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஒரு அன்பர் கேட்கின்றார். மலிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே, அன்றியும் ஒரு தமிழ்ச்சொல் சிறிது வேறுபாடு ஆயினும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் கொள்க! ஆகவே மளிகை என்பது தமிழ்ச்சொல் என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக!
மலிகை_நிறைதல். பெருகல் இத்தொழிற் பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்று வரும்.
இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம்.
(குயில்: குரல்: 1, இசை: 21, 21-10-1958)
-உண்மை,16-31.12.15