பக்கங்கள்

திங்கள், 11 டிசம்பர், 2017

" ர ற" ஒலிவேறுபாடும் பொருள் வேறுபாடும் அறிய...... . .

" ர ற" ஒலிவேறுபாடும் பொருள் வேறுபாடும் அறிய...... . .

1. அரம் = அராவும் கருவி
2. அறம் = தருமம்
3. அரி = துண்டாக்கு, திருமால்
4. அறி = தெரிந்துக்கொள்
5. அருகு = பக்கம்
6. அறுகு = ஒருவகைப்புல்
7. அரை = பாதி
8. அறை = கூறு
9. இரத்தல் = யாசித்தல்
10. இறத்தல் = சாதல்
11. இரை = தீனி
12. இறை = கடவுள்
13. உரவு = வலிமை
14. உறவு = சொந்தம்
15. உரி = தோலை உரி
16. உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
17. உரை = சொல்,
18. உறை = வாசி, மேல் உறை
19. துரவு = கிணறு
20. துறவு = சந்நியாசம்
21. கருத்து = எண்ணம்
22. கறுத்து = கருமை நிறம்
23. நரை = வெண்மயிர்
24. நறை = தேன்
25. எரி = நெருப்பு
26. ஏறி = வீசுதல்
27. ஏரி = பெரிய நீர்நிலை
28. ஏறி = மேலே ஏறி
29. கரி = அடுப்புக்கரி, யானை
30. கறி = காய்கறி, மிளகு
31. கீரி = ஒரு விலங்கு
32. கீறி = பிளந்து
33. சுனை = ஊற்று
34. சுணை = சிறுமுள்
35. குனி = வளை
36. குணி = ஆலோசனை செய்
37. தின் = சாப்பிடு
38. திண் = உறுதி
39. கன்னி = இளம்பெண்
40. கண்ணி = மாலை
41. பனி = குளிர்ச்சி, பனித்துளி
42. பணி = வேலை, தொண்டு, பணிவு
43. தினை = ஒருவகை தானியம்
44. திணை = குளம், ஒழுக்கம்
45. பனை = ஒருவகை மரம்
46. பனண = மூங்கில்
47. கனம் = பளு
48. கணம் = கூட்டம், நொடிப்பொழுது
49. மன் = அரசன்
50. மண் = பூமி
51. வன்மை = வலிமை
52. வண்மை = கொடுக்கும் குணம்
53. அரன் = சிவன்
54. அரண் = மதில், கோட்டை
55. தின்மை = தீமை
56. திண்மை = வலிமை
57. இனை = வருந்து
58. இணை = சேர், இரட்டை
59. மான் = ஒருவகை விலங்கு
60. மாண் = பெருமை
61. பொருப்பு = மலை
62. பொறுப்பு = கடமை
63. தரி = அணி
64. தறி = வெட்டு, நெசவு
65. பரி = குதிரை
66. பறி = பறித்தல்
67. சூல் = கருப்பம்
68. சூள் = சபதம்
69. சூழ் = நெருங்கு, வளை
70. தால் = நாக்கு
71. தாள் = பாதம், முயற்சி
72. தாழ் = பணி, தாழ்ப்பாள்
73. மூலை = கோணத்தின் ஓரம்
74. மூளை = உறுப்பு
75. மூழை = அகப்பை
76. அலகு = பறவை மூக்கு, அளவைக்கூறு
77. அளகு = பெண் பறவை, காட்டுக்கோழி
78. அழகு = வனப்பு, அணி
79. தலை = சிரம், உடல் உறுப்பு
80. தளை = கட்டு, அடிமைத்தளை
81. தழை = இலை, வளர்
82. வலி = நோய், வலிமை
83. வளி = காற்று
84. வழி = பாதை, வழிதல்
85. வால் = விலங்கின் வால்
86. வாள் = கத்தி, ஒளி
87. வாழ் = வாழ்தல்
88. வலை = மீன்பிடி வலை
89. வளை = பொந்து, வளையல் வளைவு
90. வழை = ஒருவகை மரம்
91. பொலி = விளங்கு
92. பொழி = ஊற்று
93. பொளி = கொத்து
94. அலை = கடல் அலை, அலைதல்
95. அளை = வெண்ணை, புற்று
96. அழை = கூப்பிடு
97. இலை = தழை
98. இளை = உடல் மெலிவு
99. இழை = நூல் இழை, அணிகலன்,
இழைத்தல்.
100. உலை = நீர் உலை
101. உளை = பிடரிமயிர், வருந்து
102. உழை = உழைத்தல், மான், பக்கம்
-தமிழ் ராஜேந்திரன்,முகலூல் பதிவு, 12.12.17

திங்கள், 20 நவம்பர், 2017

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்

🖥நாம் - முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை - ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

*🎯 பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும் 🎯*அன்புடன் சபீர் முகம்மது(முகநூல்)

செவ்வாய், 14 நவம்பர், 2017

திருவள்ளுவர் எங்கள் ஞானகுரு திருக்குறள் எங்கள் வேதம்!


இது கேரள ஆச்சரியம்

திருவள்ளுவரை நாம் எந்த அளவு மதிக்கிறோம்? கேரளாவில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது.

வாழ்க்கைக்கான அத்தனை அறங்களையும் உள்ளடக்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்கு போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஒரு இறைவனாகவே கொண்டாடப்படுகிறார். திருக்குறள் வேதமாக போற்றப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது ஆதிபகவான் திருவள்ளுவர் கோயில். திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதை சாதித்த சிவானந்தர், குடுமியும் தாடியுமாக குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார். ‘தமிழ் நமக்கு அம்மா மொழி. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். ஞானமடம், தேவாலயம்’ - இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம்.

சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழைப்பட்ட குடும்பம். 8 பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை. ‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில 1974ல வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.

எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். ‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பேர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் புகழ்பெற்ற புத்தகம்’னு சொன்னார்.

ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரூப் மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.

வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது. 33 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. சிவானந்தரும் சரஸ்வதியுமே காதல் தம்பதி தான். ‘‘சரஸ்வதிக்கு சங்கிலி வேதனை நோய் இருந்தது. கோயில், குளம்னு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்க திருவள்ளுவர் கோயிலுக்கு கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில காதல்... கல்யாணம். இப்போ ரெண்டு குழந்தைங்களும் பிறந்தாச்சு’’ - சிரிக்கிறார் சிவானந்தர்.

ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.

‘‘திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்கள். அவங்க பிரதான உணவே மாமிசம்தான். கேரளாவில் எருமை மாமிசம்கூட சாப்பிடுவாங்க. சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாகிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க’’ என்கிறார் சிவானந்தர்.
ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோது இந்துத்துவ, கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்த்தன.

மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். ‘இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களை கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள்’ என்றார்

கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள். கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.

ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜெபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப்பொலி. ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள். வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இருவேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே மடபதியின் சீருடை. மடபதிகளை மக்கள் ‘ஆச்சார்யா’ என்று அழைக்கிறார்கள்.

‘‘71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும்ஜாதி, மத அடையாளமில்லை. 2015க்குள்ள கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்’’ என்ற சிவானந்தரை இடைமறித்து, ‘‘உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்’’ என்றோம். ‘‘அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கறதால என்ன பயன்?

அந்த வேதப்புத்தகத்துல உள்ள பத்து குறளை ஆழப் படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்... அதைத்தான் நாங்க படிப்பிக்கிறோம்’’ -பொட்டில் அடித்தது போல் சொல்கிறார் சிவானந்தர். வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயில்.
- இசை இன்பன்( முகநூல் பக்கம்)15.11.17

திங்கள், 13 நவம்பர், 2017

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

திங்கள், 30 அக்டோபர், 2017

ஜகத்குரு சங்கராச்சாரியசுவாமிகள் “நீச” பாஷையில் பேசலாமா?



1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து...

கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பான் உரையாடல்.

க: என்ன சாஸ்திரிகளே நேற்று சனாதன கான்பரன்சுக்கு வந்திருந்தேளா?

கா: நீங்கள் போயிருந்தேளே என்ன நடந்தது?

க: அதை என்ன சொல்லச் சொல்கிறேள். ஆதிசேஷ னாலும் வர்ணிக்க முடியாது குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவிருக்கும், பாயாசம் பட்சணத்தோடு சாப்பா டையா!

கா: எல்லோருக்குமா?

க: எல்லோருக்குமில்லை. இருந்தாலும் நான் விடுவேனா? சாப்பிட்டு விட்டேன்.

கா: சாப்பாடு கிடக்கட்டும், அதைச் சொல்லி என் வயிற் றெறிச்சலை கிளப்பப் பார்க்கிரேளா, அங்கே என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கோ.

க: முதல் நாள் ஸ்வாமியளவாள் மூனு மணி நேரம் இங்கிலீஷிலே ஜமாச்சுட்டாள். என்ன ஜோர்! என்ன ஜோர்!! நீங்கள் வராமலிருந்துட்டேளே.

கா: உங்களுக்கும் எனக்கும் இங்கிலீஷிலே ஒரு அட்சரம்கூட தெரியாதே ஸ்வாமி. நான் வந்து என்ன பண்ண. உங்களுக்கு எதனாலே அய்யா நன்னாயிருந்தது?

க:  ஸன்னிதானம் இங்கிலீஷிலே பேசுறபோது அங்கே யிருந்த வக்கீல் ஸனாதனிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரெஸிச்சாள். அநேக இடங்களிலே சிரித்தாள். சில சமயங்களிலே “ஹியர்” இன்னாள். அதினாலே நன்னாத்தானே இருந்திருக்கணும்.

கா: என்ன அநியாயம்! ஆச்சாரியாள் அதிலும் ஜகத்குரு “நீச” பாஷையிலேயா ஸனாதனம் பேசறது! என்ன அக் கிரமம், பறையன் கோவிலுக்குள் போனாக்கூட பிராயச் சித்தம் உண்டு. இந்த அதர்மத்துக்கு ஏதையா பிராயச்சித்தம். எல்லாம் புதுசு புதுசா வராப்பலே இதுவும் ஒரு அபிநவ ஸனாதனம் போலிருக்கு?

க: ராஜாவுக்கும் வைஸ்ராய்க்கும் தெரிய வேண்டாமா சாஸ்திரியளே?

கா: நம்ம சாஸ்திரப்படி எந்த சத்ரியன் நமக்கு இப்போ ராஜாவா யிருக்கான், அவனிட்டே தெரிவிக்க, ஆச்சாரிகளும் சவுகர்யம் போலே தர்மாசரணை செய்யலாமானால் காந்தியும் சாஸ்திரத்துக்கு அர்த்தம் நன்னாய்ச் சொல்லலாம்.

க: என்ன சாஸ்திரியளே அப்படியானால் பஞ்சமர் எல்லாம் கோவிலுக்குள் வரலாம் என்கிரேளா.

கா: அப்படித்தான் சொல்கிறேன்.

க: என்ன சாஸ்திரியளே. இதுவரை உங்களை ஸ்னாதனி என்றல்லவா நினைச்சேன். திடீரென ஹரிஜன சாஸ்திரிய ளாய் மாறிட்டேளே.

கா: உமக்கு கண்ணிருக்கா அதோ பாரும் பூட்ஸ் காலோடே அந்த கிருஸ்தவரும் வாயிலே சுருட்டோடே அந்த முஸ்லிமும் த்தஜஸ்தம்பம் வரை போலாமானால் கட்டாயமாய் நம்ம பறையன் முத்தனும் சக்கிலி பழனியும் இன்னம் கொஞ்சதூரம் கூட உள்ளே போலாம் சாஸ்திரி யாளே.

க: (பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு) சாஸ்திரியளே ரொம்ப கோபத்திலிருக்கேள். இப்போ உங்களிட்டே தர்மம் பேசப்படாது! கோபம் படாதய்யா நான் போறேன்.

கா: எனக்கு ஒன்றும் கோபமில்லை சாஸ்திரியளே எல்லாம் ஆசாரியாளுக்குத் தானிருக்கு.

க: என்னய்யா ஸ்வாமிகளைப் பத்தி கண்டபடி பேசுரேள்.

கா: எந்த சாஸ்திரத்திலே அய்யா ஆச்சாரியாளை மோட்டாரிலும், ரயிலிலும் போகக் சொல்லியிருக்கு? எந்த  ஸ்மிருதியிலே, பிராமணனை வக்கீல் பண்ணச் சொல்லி ருக்கு. கோர்ட்டிலே பஞ்சமன் ஜட்ஜா வந்தா அவனுக்கு மரியாதையோடு எழுந்து நின்று ஸலாம் போட்டு “யுவர் ஆனர், யுவர் லாட்ஷிப்” என்று சொல்ல எந்தச் சுருதியிலே சொல்லிருக்கு சாஸ்திரியளே.

க: அதெல்லாம் ஆபத்தர்மம் அய்யா,

கா: ஆபத்தர்மம் இது தானா? லட்சக்கணக்காய் சம்பாதிச்ச பிறகும் கூட இன்னும் ஆசை விடாமல் ராக்கொள்ளி பிசாசு மாதிரி கட்சிக்காரன் ரத்தத்தை உறுஞ்சரது. இவர் தான் இப்போது இந்த ஆபத்தர்மம் நடத்திக் கொண்டு நம்ம சனாதனத்தைக்  காப்பாற்ற  வந்திருக்காளய்யா, எல்லாம் பெரியவாளுக்கு ஒரு ஸ்னாதனம், ஏழைகளுக்கு தனிஸ்னாதனம் போலிருக்கு. கோவிலுக்குள் பஞ்சமனை மட்டுமா போகக்கூடாதென்று சொல்லிருக்கு? பதிதனும் போகக்கூடாதேஸ்வாமி, கோவிலிலே எத்தனை பதிதன் வாரான் தெரியுமா உமக்கு? நீங்கள் தினம் என்னய்யா பிராயச்சித்தம் பண்ணரேள். ஆகமசாஸ்திரப்படி கோவிலில் மூர்த்தியின் ஸான் னித்யம் போய் ரொம்ப நாளாயிருக்க னுமே? இந்த கோவில்களிலே பறையன் போய் என்னய்யா குறையப்போறது? இன்னம் ஒரு விஷயம் அதையும் கேளும். என்னிக்கி நாம் சமஸ்கிருதத்தை கேவலமாய் எண்ணி பர பாஷையை பெரிசாய் நினைத்து நம்ம குழந் தைகளை வாசிக்க வச்சோமோ அன்னிக்கி  தொலைந்தது நம்ம ஸனாதனமும், நம்ம பிராமணயமும். மனுஸ்மிருதி 2ஆவது அத்தியாயம் 168வது ஸூலோகத்திலே ‘எந்தத்

துவிஜன்’ (பிராமண, சத்ரிய வைசிஜன்) வேதாத்யாயனம் பண்ணாமல் மற்றதைப் படிக்கிறானோ அவன் அதே ஜன்மத்திலேயே வெகு லேசாக குடும்பத்துடன் சூத்திரனாய் விடுகிறான். ஆகையால் நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான் அஸெம்ளியிலே ரெங்கய்யர் கொண்டு வந்த பில் ரொம்பசரி. ஓய் சாஸ்திரிகளே இன்னும் கேளும்.

மகாபாகவத்திலே ஏகாதச சகந்தத்திலே சிறீதரர் சொல்லுகிறார் “நோச்சுரேத் யாவனீம் பாஷாம் பிராணை கண்ட கதைரபி அதாவது பிராமணன் கழுத்துக்கு கத்தி வந்தாலும் ஏ பி சி என்று உச்சாரயம் பண்ணக்கூடாது என்று அர்த்தமில்லையா? இப்போது இங்கிலீஷ் உச்சரிக்காத பிராம்ணன் எங்கே அய்யா இருக்கான்? பூரி ஆச்சாரி யாளுக்கு இப்போ நீங்கள் ஏற்படுத்தி இருக்கிற மஹத்வம் யவண பாஷா பாண்டியத் துக்காகதானே?

க: இதெல்லாம் ஏனய்யா பேசரேள்? பிரகிருக சர்ச்சை தீண்டாமையைப் பத்தித்தானே, பின்னே பிராமணன் என்ன செய்யணும் என்கிறீர்?

கா: இப்போது இவ்வளவுஸனாதனம் பேசறவாள் சாஸ்திரப் படியே நடந்து காட்ட வேண்டியது முன்பு பட்டாடாடை கட்டிக் கொண்டிருந்த இங்கிலீஷ் படித்த பிராமணாள் இப்போது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுச் சாந்துக்கு பதில் விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டும் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சீட்டாடிக் கொண்டோ அல்லது  காந்தியை வைதுகொண்டு பழைய தொழில்களை விடாமல் நடத்திக்கொண்டு வந்தால் அது ஸனாதனமாகாது.

முதலாவது, ஆச்சாரியாள் இங்கிலீஷை மறக்கணும்  வக்கீல் ஸனாதனிகள் வக்கீல் தொழிலை விடணும். ஸ்ருதிஸ்மிருதி புராண இதிகாசங்களையும் பாரத்ட அத்தியாபனம் யாகம் பிரதிக்ரஹம் இவைகளைக் கொண்டு உஜ்ஜீவிக்கணும் அவாள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி அவர்கள் நடக்கத் தயாரில்லா விட்டால் அவாள் சனாதனத்தினைப்பற்றி பேசக் கூடாது தெரியுமா?

ஆஸ்திகர்களே 
எது நல்லது? 

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?

அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?

குடி அரசு, 21.12.1930

சிறீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

சிறீரங்கம் சிறீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உற்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.

இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின் றாயோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக சிறீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப் பார்களோ தெரியவில்லை.

குடி அரசு,  21.12.1930

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.           - தந்தை பெரியார்




புதன், 25 அக்டோபர், 2017

தமிழைப்பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துக்கள்

மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. - என்று சொல் லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் - என்று சொல்லு கிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜ கோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப் படுத்த இவை உதவுகின்றன போலும்.

சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்.

உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப்போய் விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவ தோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த் தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லா மியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர் களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதா வது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழு கிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப் பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?

ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார் கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட் கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.

குடியரசு - கட்டுரை - 06-11-1943

-விடுதலை நாளேடு, 16.9.17