1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து...
கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பான் உரையாடல்.
க: என்ன சாஸ்திரிகளே நேற்று சனாதன கான்பரன்சுக்கு வந்திருந்தேளா?
கா: நீங்கள் போயிருந்தேளே என்ன நடந்தது?
க: அதை என்ன சொல்லச் சொல்கிறேள். ஆதிசேஷ னாலும் வர்ணிக்க முடியாது குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவிருக்கும், பாயாசம் பட்சணத்தோடு சாப்பா டையா!
கா: எல்லோருக்குமா?
க: எல்லோருக்குமில்லை. இருந்தாலும் நான் விடுவேனா? சாப்பிட்டு விட்டேன்.
கா: சாப்பாடு கிடக்கட்டும், அதைச் சொல்லி என் வயிற் றெறிச்சலை கிளப்பப் பார்க்கிரேளா, அங்கே என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கோ.
க: முதல் நாள் ஸ்வாமியளவாள் மூனு மணி நேரம் இங்கிலீஷிலே ஜமாச்சுட்டாள். என்ன ஜோர்! என்ன ஜோர்!! நீங்கள் வராமலிருந்துட்டேளே.
கா: உங்களுக்கும் எனக்கும் இங்கிலீஷிலே ஒரு அட்சரம்கூட தெரியாதே ஸ்வாமி. நான் வந்து என்ன பண்ண. உங்களுக்கு எதனாலே அய்யா நன்னாயிருந்தது?
க: ஸன்னிதானம் இங்கிலீஷிலே பேசுறபோது அங்கே யிருந்த வக்கீல் ஸனாதனிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரெஸிச்சாள். அநேக இடங்களிலே சிரித்தாள். சில சமயங்களிலே “ஹியர்” இன்னாள். அதினாலே நன்னாத்தானே இருந்திருக்கணும்.
கா: என்ன அநியாயம்! ஆச்சாரியாள் அதிலும் ஜகத்குரு “நீச” பாஷையிலேயா ஸனாதனம் பேசறது! என்ன அக் கிரமம், பறையன் கோவிலுக்குள் போனாக்கூட பிராயச் சித்தம் உண்டு. இந்த அதர்மத்துக்கு ஏதையா பிராயச்சித்தம். எல்லாம் புதுசு புதுசா வராப்பலே இதுவும் ஒரு அபிநவ ஸனாதனம் போலிருக்கு?
க: ராஜாவுக்கும் வைஸ்ராய்க்கும் தெரிய வேண்டாமா சாஸ்திரியளே?
கா: நம்ம சாஸ்திரப்படி எந்த சத்ரியன் நமக்கு இப்போ ராஜாவா யிருக்கான், அவனிட்டே தெரிவிக்க, ஆச்சாரிகளும் சவுகர்யம் போலே தர்மாசரணை செய்யலாமானால் காந்தியும் சாஸ்திரத்துக்கு அர்த்தம் நன்னாய்ச் சொல்லலாம்.
க: என்ன சாஸ்திரியளே அப்படியானால் பஞ்சமர் எல்லாம் கோவிலுக்குள் வரலாம் என்கிரேளா.
கா: அப்படித்தான் சொல்கிறேன்.
க: என்ன சாஸ்திரியளே. இதுவரை உங்களை ஸ்னாதனி என்றல்லவா நினைச்சேன். திடீரென ஹரிஜன சாஸ்திரிய ளாய் மாறிட்டேளே.
கா: உமக்கு கண்ணிருக்கா அதோ பாரும் பூட்ஸ் காலோடே அந்த கிருஸ்தவரும் வாயிலே சுருட்டோடே அந்த முஸ்லிமும் த்தஜஸ்தம்பம் வரை போலாமானால் கட்டாயமாய் நம்ம பறையன் முத்தனும் சக்கிலி பழனியும் இன்னம் கொஞ்சதூரம் கூட உள்ளே போலாம் சாஸ்திரி யாளே.
க: (பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு) சாஸ்திரியளே ரொம்ப கோபத்திலிருக்கேள். இப்போ உங்களிட்டே தர்மம் பேசப்படாது! கோபம் படாதய்யா நான் போறேன்.
கா: எனக்கு ஒன்றும் கோபமில்லை சாஸ்திரியளே எல்லாம் ஆசாரியாளுக்குத் தானிருக்கு.
க: என்னய்யா ஸ்வாமிகளைப் பத்தி கண்டபடி பேசுரேள்.
கா: எந்த சாஸ்திரத்திலே அய்யா ஆச்சாரியாளை மோட்டாரிலும், ரயிலிலும் போகக் சொல்லியிருக்கு? எந்த ஸ்மிருதியிலே, பிராமணனை வக்கீல் பண்ணச் சொல்லி ருக்கு. கோர்ட்டிலே பஞ்சமன் ஜட்ஜா வந்தா அவனுக்கு மரியாதையோடு எழுந்து நின்று ஸலாம் போட்டு “யுவர் ஆனர், யுவர் லாட்ஷிப்” என்று சொல்ல எந்தச் சுருதியிலே சொல்லிருக்கு சாஸ்திரியளே.
க: அதெல்லாம் ஆபத்தர்மம் அய்யா,
கா: ஆபத்தர்மம் இது தானா? லட்சக்கணக்காய் சம்பாதிச்ச பிறகும் கூட இன்னும் ஆசை விடாமல் ராக்கொள்ளி பிசாசு மாதிரி கட்சிக்காரன் ரத்தத்தை உறுஞ்சரது. இவர் தான் இப்போது இந்த ஆபத்தர்மம் நடத்திக் கொண்டு நம்ம சனாதனத்தைக் காப்பாற்ற வந்திருக்காளய்யா, எல்லாம் பெரியவாளுக்கு ஒரு ஸ்னாதனம், ஏழைகளுக்கு தனிஸ்னாதனம் போலிருக்கு. கோவிலுக்குள் பஞ்சமனை மட்டுமா போகக்கூடாதென்று சொல்லிருக்கு? பதிதனும் போகக்கூடாதேஸ்வாமி, கோவிலிலே எத்தனை பதிதன் வாரான் தெரியுமா உமக்கு? நீங்கள் தினம் என்னய்யா பிராயச்சித்தம் பண்ணரேள். ஆகமசாஸ்திரப்படி கோவிலில் மூர்த்தியின் ஸான் னித்யம் போய் ரொம்ப நாளாயிருக்க னுமே? இந்த கோவில்களிலே பறையன் போய் என்னய்யா குறையப்போறது? இன்னம் ஒரு விஷயம் அதையும் கேளும். என்னிக்கி நாம் சமஸ்கிருதத்தை கேவலமாய் எண்ணி பர பாஷையை பெரிசாய் நினைத்து நம்ம குழந் தைகளை வாசிக்க வச்சோமோ அன்னிக்கி தொலைந்தது நம்ம ஸனாதனமும், நம்ம பிராமணயமும். மனுஸ்மிருதி 2ஆவது அத்தியாயம் 168வது ஸூலோகத்திலே ‘எந்தத்
துவிஜன்’ (பிராமண, சத்ரிய வைசிஜன்) வேதாத்யாயனம் பண்ணாமல் மற்றதைப் படிக்கிறானோ அவன் அதே ஜன்மத்திலேயே வெகு லேசாக குடும்பத்துடன் சூத்திரனாய் விடுகிறான். ஆகையால் நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான் அஸெம்ளியிலே ரெங்கய்யர் கொண்டு வந்த பில் ரொம்பசரி. ஓய் சாஸ்திரிகளே இன்னும் கேளும்.
மகாபாகவத்திலே ஏகாதச சகந்தத்திலே சிறீதரர் சொல்லுகிறார் “நோச்சுரேத் யாவனீம் பாஷாம் பிராணை கண்ட கதைரபி அதாவது பிராமணன் கழுத்துக்கு கத்தி வந்தாலும் ஏ பி சி என்று உச்சாரயம் பண்ணக்கூடாது என்று அர்த்தமில்லையா? இப்போது இங்கிலீஷ் உச்சரிக்காத பிராம்ணன் எங்கே அய்யா இருக்கான்? பூரி ஆச்சாரி யாளுக்கு இப்போ நீங்கள் ஏற்படுத்தி இருக்கிற மஹத்வம் யவண பாஷா பாண்டியத் துக்காகதானே?
க: இதெல்லாம் ஏனய்யா பேசரேள்? பிரகிருக சர்ச்சை தீண்டாமையைப் பத்தித்தானே, பின்னே பிராமணன் என்ன செய்யணும் என்கிறீர்?
கா: இப்போது இவ்வளவுஸனாதனம் பேசறவாள் சாஸ்திரப் படியே நடந்து காட்ட வேண்டியது முன்பு பட்டாடாடை கட்டிக் கொண்டிருந்த இங்கிலீஷ் படித்த பிராமணாள் இப்போது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுச் சாந்துக்கு பதில் விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டும் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சீட்டாடிக் கொண்டோ அல்லது காந்தியை வைதுகொண்டு பழைய தொழில்களை விடாமல் நடத்திக்கொண்டு வந்தால் அது ஸனாதனமாகாது.
முதலாவது, ஆச்சாரியாள் இங்கிலீஷை மறக்கணும் வக்கீல் ஸனாதனிகள் வக்கீல் தொழிலை விடணும். ஸ்ருதிஸ்மிருதி புராண இதிகாசங்களையும் பாரத்ட அத்தியாபனம் யாகம் பிரதிக்ரஹம் இவைகளைக் கொண்டு உஜ்ஜீவிக்கணும் அவாள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி அவர்கள் நடக்கத் தயாரில்லா விட்டால் அவாள் சனாதனத்தினைப்பற்றி பேசக் கூடாது தெரியுமா?
ஆஸ்திகர்களே
எது நல்லது?
கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?
அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும் அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?
குடி அரசு, 21.12.1930
சிறீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்
சிறீரங்கம் சிறீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உற்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.
இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின் றாயோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக சிறீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப் பார்களோ தெரியவில்லை.
குடி அரசு, 21.12.1930
சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது. - தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக