மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. - என்று சொல் லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.
உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் - என்று சொல்லு கிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜ கோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப் படுத்த இவை உதவுகின்றன போலும்.
சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.
பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்.
உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப்போய் விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவ தோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த் தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.
ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.
இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லா மியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர் களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதா வது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழு கிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப் பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?
ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார் கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட் கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.
குடியரசு - கட்டுரை - 06-11-1943
-விடுதலை நாளேடு, 16.9.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக