பக்கங்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

சங்கராபரண ராகம் - அதன் சார்பான செய்தியும் சிந்தனையும்


மு.வி.சோமசுந்தரம்
‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற குறள் ஒலி, தொண்டறத்திற்குத் தூண்டு கோலாக அமையும் ஒலி. நம் ஆசிரியர் அவர்கள் இதனை வலியுறுத்திக் கூறாத நிகழ்ச்சி இல்லை. ஈதல் மூலமாக மானிடத்தை மகிழ வைத்து புகழைப் பெற்று புறத்தே மகிழமுடிகிறது. அகத்தே மகிழவும் மனஅமைதியைப் பெறவும் துணையாக வருவதும் இசையே.

இசையின் சிறப்பை வியந்து, உயர்த்திக் கூறாத உள்ளங்களைக் காண முடியாது. சமநிலை வீரம் காட்டி, புண் பட்டு வீழ்ந்து கிடந்த வீரனின் மனைவி காஞ்சி பண்ணிசைத்து அந்த மறவ னுக்கு இருந்த உடல் துன்பத்தை மறக்கச் செய்தாள். அவனைக் கொத்த வந்த பற வைகளும் விலகிச் சென்றன என்று புற நானூற்று பாடல் ஒன்று விவரிக்கின்றது.
மனிதனுக்கு மட்டுமா இசை இத மாக இருந்தது? இல்லையே மலர்களும் மயங்குகின்றனவே. புதலும் வரிவண்டு ஊதவாய் நெகிழ்ந்தனவே.
வண்டுகள் இசைபாடும் பொழுது புதர்களில் மடிந்து இருக்கும் மொட் டுகள் மலர்ந்து காட்சியளிக்கின்றன என குறுந்தொகைப்பாடல் பகர்கின்றது.

இத்தகைய வல்லமை படைத்த இசைக்கு சொந்தக்காரர்கள் தமிழர் என்பதில் சற்றும் சந்தேகம் வேண்டாம். ஏழிசையும் எம்முடையது என்று தமிழர் என்றும் முழங்கலாம். ஆனால் இம்முழக்கத்தின் முனையை முட மாக்கிய முப்புரி பூண்ட ஆரியப் பார்ப் பனர், சூழ்ச்சி வழியில் தமிழிசைக்கு குழிபறித்து மூடி அதன் வட மண்மேல் கர்நாடக சங்கீதம் என்ற கொடியைப் பறக்கவிட்டனர். பழி அஞ்சாது அழிப் பதையே தொழிலாக ஒரு திறமையாக கொண்ட பார்ப்பனரின் பாசக்கயிற்றைப் பற்றி (எமதர்ம ராஜாவின் ஏவுகணை) பரிதிமாற் கலைஞர் கூறுவதைக் காண்போம்.
தமிழர்களிடமிருந்த பல அரிய விடயங்களை மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் காட்டினர் (தமிழ் மொழி யின் வரலாறு பக்கம் 27) இந்த உண் மையை கருணாமிர்த சாகரம் என்ற நூல். இசைத் தமிழிலி ருந்தே எல்லா இசை வகைகளும் வடமொழிக்கண் சென்றன என்று செப்புகின்றது.

மேலும் தமிழிசைக்கு முகவரிகளான முப்பெரும் இசை மேதைகளான, சீர்காழி முத்துத்தாண்டவர், தில்லை யாடி அருணாச்சலக் கவிராயர், தில்லை மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரை ஆரியத் திரைபோட்டு எண்ண இருட்டில் தள்ளிவிட்டார்கள்.
இம்மூன்று இசை வல்லுநர்களை முக்காடிட்டதல்லாமல், தமிழிசை யையே மேடையைவிட்டு முட்டித் தள்ள வும் தயங்கவில்லை என்பதை 1940இல் திருவையாற்றில் நடந்த தியாகராசர் இசை கச்சேரியில் தமிழில் பாட்டு பாடிய தண்டபாணி தேசிகரை இழித்து, மேடையை விட்டகற்றி, மேடை தீட்டுபட்டது என்று தர்ப்பைப் புல் கூச்ச லிட்டது. இந்த நிகழ்வை முத்தமிழ றிஞர் கலைஞர் ஈரோட்டில் பெரியார் குடியரசு குடிலில் குடியிருந்த காலத்தில் ‘தீட்டாய்டுத்து’ என்ற கட்டுரையை எழுதி பெரியாரின் மனம் குளிர வைத்தார்.

குளிர்காலம் வந்துவிட்டது. சென்னை சபாக்களில் சலங்கையொலியும், கீர்த்தனை கச்சேரிகளும் சக்கைபோடு போடும், மயிலாப்பூர், மாம்பலம் மடிசார் மாமிகளும், சுடிதார் செல்வி களும், கீழ்பாச்சி கிழவர்களும் வானவில் சட்டை வாலிபர்களும், காலை, மாலை நிகழ்ச்சிகளுக்குக் குவியும் கோலாகலக் காட்சியைக் காணலாம். சபாஷ்! சபாஷ் என்ற ஒலியும், தாளம் தட்டும் ஒலியும் அரங்கத்தை ஆட்கொள்ளும்.
அவாள் ராகம், தமிழருக்குப் பண் அவர்களுக்கு, கல்யாணி, அரிகாம்போதி, சங்கரா பரணம், தமிழருக்கு முறையே மருதப் பண், பாலைப்பண், குறிஞ்சிப்பண்
இனி குறிஞ்சிப்பண் என்னும் சங்கராபரணம் ராகத்தைப் பற்றிய ஒரு சுவை கூட்டும் செய்தியைப் பார்ப்போம். இந்த அருமையானதொரு செய்தியை திரு. பி.கோலப்பன், தி இந்து (ஆங்கிலம்) 1.12.2015 இதழில் வழங்கியுள்ளார். நன்றி

மராட்டியர் ஆட்சிக்குத் துணையாக விளங்கிய மன்னர் சரபோஜி தஞ்சையில் வாழ்ந்த காலம். அந்த காலத்தில் நரசய்யர் என்று அறியப்பட்ட நரசிம்ம அய்யர், பாடகர் என்ற புகழ் படைத் தவர். அவர் பாடும் பாடல்களில் சங்கராபரண ராகத்தில் பாடப்பெறும் பாடல்கள் தனிசிறப்பையும் பாராட்டு களையும் பெற்றதாக விளங்கின. சங்கராபரண ராகம், நரசய்யரின் பெரிய சொத்தாகக் கருதப்பட்டது.

நரசய்யருக்கு, ஒரு காலகட்டத்தில் பண நெருக்கடி ஏற்பட்டது. இராம பத்திர மூப்பனார் செல்வாக்குப் பெற்ற பெரிய செல்வந்தர். கபிஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். இவர், இந்திய நடுவண் அரசில் அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் அவர்களின் மூதாதையர்.
நரசய்யர், இராமபத்திர மூப்பனா ரிடம்  உதவி நாட சென்றார். மூப் பனாரின் இல்லத்தில் அன்பு விருந் தினராக சில நாட்கள் தங்கிய பிறகு, தயக்கத்துடன் தன் தேவையை மூப்பனா ரிடம் கூறினார். தனக்கு 80 பொற் காசுகள் தேவைப்படுகிறது என்று கூறி னார். மூப்பனார் மனதில் அனுதாபப் பட்டார். ஆனால் அதனை வெளிப்படுத் தாமல், அவர் கேட்ட பொற்காசுகளுக்கு ஈடாக ஏதேனும் ஆபரணத்தை அடகு வைக்கத் தயாரா என்று வினவுகிறார். நரசய்யர் என்னிடம் உள்ள ஆபரணம் சங்கராபரணம் ஒன்று தான் என்றார்.

நான் வெறும் 80 பொற்காசுகளைத் திருப்பித் தரும் வரையில், எங்கும் சங்கராபரண ராகத்தில் பாடுவதில்லை என்ற உறுதி அளித்ததுடன் எழுத்து மூலமும் எழுதிக் கொடுத்தார். சங்கரா பரணம் அடகு வைக்கப்பட்டது. (இந்த செயலுக்கு சரியான ஆதாரம் இல்லை)

நரசய்யர் கொடுத்த வாக்கு நெடு நாட்களுக்குக் காப்பாற்றப்பட்டே வந்தது. ஆனால் கும்பகோணத்தில் நடக்க இருக்கும் அப்புராயர் என்னும் பெரிய மனிதர் வீட்டுத் திருமணத்தில் நரசய்யர் கச்சேரி செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்பு ராயர், ஆங்கில அரசு அலுவலகத்தில் பணியில் இருந்தவர். ஆங்கில அதிகாரி வாலிஸ் என்பவருக்கு நண்பரும் கூட,
நரசய்யர் தான், தன்னுடைய ஆபரணத்தை அடகு வைத்த நிலைமை யைக் கூறி அப்புராயர் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையை விளக்கினார். இதனைக் கேட்ட அப்புராயர், அடகுக்கான தொகையுடன் அவரின் ஊழியரை கபிஸ்தலம் அனுப்பி ஆபரணத்தை மீட்டுவரும்படி அனுப்பினார்.

மூப்பனார், நரசய்யருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் திருப்பிக் கொடுத்த துடன், அப்புராயரை சந்திக்கவும் கும்பகோணம் விரைந்தார். நரசய்யருக்கு நிறைய பணம் கொடுத்து, நடந்ததை மறந்துவிட அனைவரிடமும் வேண்டிக் கொண்டார். தான் இதை ஒரு விளை யாட்டாக செய்ததாகக் கூறினார். அத்துடன், மகிழ்ச்சியுடன் பணத்தைக் கொடுக்க தயாராக இருந்ததாகவும், தனக்கு மிக வேண்டியவரின் நிலையை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார். நரசய்யர் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு உதவாத பணத்தால் என்ன பயன் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

பெருங்கூட்ட மணவிழாவில் நரசய்யர் தன் சங்கராபரண ராக இசை மூலம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தார். அப்புராயர் குடும்ப இசை வாணராகி விட்டார். மேலும் மன்னர் சரபோஜி, நரசய்யரின் இசை ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, சங்கராபரண நரசய்யர் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தார்.
நரசய்யர் பற்றிய இந்த செய்தியைத் தமிழ் தாத்தா என்று கூறப்பட்டு வரு பவருமான உ.வே.சாமிநாத அய்யர் தாம் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.

கேட்பாரற்றும், கண்டு கொள்ளா மலும் முடங்கி கிடந்த ஓலைச்சுவடி களை, கரையானுக்கு உணவாகாமல் காத்து, தமிழ் இலக்கிய சொத்தை ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும், ஊர்ஊராக சென்று அச்சில் கொண்டு வந்த அரும்பணியை செய்தவர் உ.வே.சாமிநாத அய்யர். வீரமா முனிவர் ஜி.யு.போப், சமீபத்தில் மறைந்த ஜப் பானிய தமிழறிஞரும் தமிழுக்கு பற்றின் காரணமாக தொண்டு செய்தவர்களே.
திரியாக இருந்த நூல் சுடராக ஒளி வீச உதவும் எண்ணெய் போல், தமிழ் தாத்தா என்று அறியப்பட்ட உ.வே. சாமிநாத அய்யருக்கு, ஊக்கமும், ஆதர வும், தமிழ் அறிவையும் வழங்கியவர் களின் பெருமையையும், பெரிய உள்ளத் தையும், தமிழ்ப் புலமையையும் கொசுறு செய்தியாகத் தான் அக்ரகார கரவு உள்ளம் கூறுவது வழக்கமாக உள்ளது. ஆனாலும் நன்றி உணர்வோடு உ.வே.சா. அவரின் என் சரித்திரம் என்ற நூலில் அவருக்கு ஏணியாக இருந்த பெருமான்களின் சான்றாண்மையைக் கூறத் தவறவில்லை.

திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார், மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், வி.கனகசபை பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்க தமிழ்ப்பெரியவர்கள்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ்க் கடலாக விளங்கியவர். அவரிடம் பாடம் கேட்க ஏங்கியவர் பலர். உ.வே.சா அவரிடம் குருகுல மாணவனாக இருந்து தமிழமுது உண்டவர்.
மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பின் திருவாவடுதுறை மடத்தின் 16ஆவது ஆதீனமாக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். அவர் உ.வே.சா-வுக்கு வேண்டிய உதவிகளை நல்கி, பாதுகாப்பு வழங்கினார். திருவாவடு துறையில் புதிய வீடு கட்டிக் கொடுத் தார். அவருடைய வீட்டிற்கு தேவை யானவற்றைத் தட்டுப்பாடின்றி பெற உறுதி செய்தார். மடத்தில் இருந்த சீடர்கள் ஆதீனத்தின் உதவிக்கு விருப்பம் காட்டாவிட்டாலும் தேசிகர், அதன் அவசியத்தை அவர்களுக்கு விளக்கினார்.
கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா ஆசிரியர் பணி பெற தியாகராச செட் டியார் காரணமாக இருந்தார். தேசிகர், உ.வே.சா  மடத்தை விட்டு, கல்லூரிப் பணியில் சேருவதில் உடன்பாடு இல்லை. பிறகு அவரே பரிந்துரைக் கடிதமும், நடத்தை சான்றிதழும் வழங் கினார். படரும் கொடிக்கு கொழு கொம்பாக எனக்கு தேசிகர் அவர்கள் இருந்தார் என்று உ.வே.சா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சல்துறையில் பணியாற்றினா லும் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி, பல ஊர்களுக்குச் செல்லும்போது கிடைக் கும் ஏட்டுச் சுவடிகளையும், கல்வெட் டுகளையும் படி எடுத்தவர் வி.கனக சபைப்பிள்ளை (1855-_1906). அவர் உழைப் பால் பெற்ற சங்க காலத்தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை விளக்கும் நூலை ஆங்கிலத்தில், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் (Tamils Eighteen Hundred Years Ago) என்ற தலைப்பில் வெளியிட்டார்.
ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படி யெடுக்கவும், குறிப்புகள் எழுதுவதுமாக 20 ஆண்டுகள் உழைத்தார். அந்த உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ் வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதய்ய ருக்கு வழங்கினார். உ.வே.சா. தமிழ் தாத்தா என்று பூசுரர் உலகில் புகழுடன் உலா வருகிறார்.

இந்த வேளையில், உ.வே.சாவின் தன் நலத்தைப் பற்றியும், இன உணர்வு பற்றியும் படித்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உ.வே.சா நூல்கள் அச்சிடும் பணி நடைபெறு கிறது. அச்சகத்தில், தமிழகத்தில் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட வல்லிக்கண்ணன் பணியிலிருந்தார். உ.வே.சா எழுத்தில் சில பிழைகளைக் கண்டு அதனைத் திருத்தி முறைப்படுத்தி அச்சிட்டார்.
இதனை, உ.வே.சா விடம் அச்சக மேலாளர் கூறி இளைஞன் வல்லிக்கண்ணனை உ.வே.சா-வுக்கு அறிமுகப்படுத்தினார். உ.வே.சா. பாராட்டினார். பிறகு உ.வே.சாவிடம் ஒரு நாள் இளைஞன் அவரிடம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறி பரிந்துரைத் தார். பார்ப்போம் என்று கூறிப் போனார். சில காலம் கழித்து மீண்டும் கேட்கப்பட்டது. வசதி இல்லை - விருப்ப மில்லை என்று அதன் காரணத்தைக் கூறி ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏணியாகவே தமிழர் இருந்து வந்துள்ளனர். ஏணிப்படி ஏறி புகழ் மொட்டை மாடியில் தாத்தாக்கள் தமிழ்த்தென்றல் காற்றுவாங்கி வலம் வருகிறார்கள்.
-விடுதலை, ஞா.ம.,2.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக