பக்கங்கள்

வியாழன், 10 நவம்பர், 2016

மைல் கல்லில் தமிழ் எண்கள் கண்டுபிடிப்பு

திருப்பூர், நவ.9 ஆங்கிலேயர்கள், தமிழ் எண்களை பயன்படுத்தி யிருப்பதற்கான ஆதாரமாக, திருப்பூர் அருகே, 200 ஆண்டு பழமையான, தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி, ‘ய’ ‘க’ ‘உ’ என, தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்தன.

தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும், தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து, பலருக்கும் அது தெரியாத சூழலே உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழ் சொற் றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். ரோடுகளில், ஊரின் தூரத்தை, தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக, 200 ஆண்டு பழமையான மைல் கல், திருப்பூர் மாவட்டம், பல்லடம், ஜெ.கிருஷ்ணாபுரம் பகுதியில் கிடைத்துள்ளது.

திருப்பூர், ‘வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மய்யத்தை’ சேர்ந்த ரவிக்குமார் கூறியதாவது: மைல் கற்கள் வைக்கும் நடைமுறை, தமிழகத்தில், கி.பி., 10ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இதில், ரோமன், அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது.

இக் கல்லில், இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப் படுகின்றன. பல்லடம், 11 மைல் என்பது, பல்லடம், ‘ய’ ‘க’ என்றும்; பல்லடம், 4 என்பது, பல்லடம் ‘ச’ எனவும் எழுதப் பட்டுள்ளது. மைல் கற்கள், 70 செ.மீ., உயரம்; 50 செ.மீ., அகலம் கொண்டுள்ளன. தற்போது, கி.மீ., குறிக்கப்படும் அளவு, அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேயர் கூட, தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில், தற்போது, இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாகும். இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.
-விடுதலை,9.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக