பக்கங்கள்

ஞாயிறு, 2 ஜூலை, 2017

கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


ழு
தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.
பெரியார்:
சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்
தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்
பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?
தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!
பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?
தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?
பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?
தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!
பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?
தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?
பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.
தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!
பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!
குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!
இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.
பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளறும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.
திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.
காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!
தகவல்: சங்கை வேலவன்
-விடுதலை,5.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக