பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூன், 2018

தமிழைச் சரியாய் எழுத வல்லªழுத்து மிகாத இடங்கள் (1)

பிழைஇன்றி எழுதுவீர்!

அம்ம ஓர் இடைச்சொல். இச்சொல் செய்யுளில் சொற்றொடருக்கு முதலில் வரும்.


அம்ம தோழி. கேட்பாய் தோழி என்று பொருள். இந்த அம்ம என்பதன் முன் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு

அம்ம தோழி மிகவில்லை. அல்லவா? என்ப உண்ப வருப என்றால், என்று சொல்லுவார்கள், என்று உண்ணுவார்கள், என்று வருவார்கள் என்று பொருள். உயர்திணைப் பலர்பால் வினை முற்றுக்கள் இவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது. இயல்பே யாகும்.

என்ப பெரியோர். உண்ப கண்ணனார், வருப தந்தையார். இயல்பே ஆகின காண்க.

அன்ப, நண்ப என்றால் அன்பனே, நண்பனே என்று பொருள். அருகில் இருப்பவனைக் கூப்பிடுவது. அண்மை விளி என்பர். இந்த அண்மை விளியாகிய அன்ப நண்ப என்பவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது. இயல்பே யாகும்.

அன்ப + செல் = அன்ப செல்; நண்ப + தின் = நண்ப தின் மிகாமல் இயல்பாயின காண்க.

செய்யிய போனான் என்ற சொற்றொடரை நோக்குக. இதன் செய்யப் போனான். போனான் என்பதுதான். செய்ய என்பதற்குப் பதிலாகச் செய்யிய என்று பாட்டில் வரும். பேச்சு வழக்கில் வாராது.

செய்யிய என்பது போலவே உண்ணிய காணிய என்றெல்லாமும் வரும். உண்ணிய உண்ண, காணிய காண.

செய்யிய, உண்ணிய, காணிய என்பனபோல வரும் வினையெச்சங்களின் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும்; மிகாது.

செய்யிய + சென்றான் = செய்யிய சென்றான்.

உண்ணிய + போனான் = உண்ணிய போனான்.

காணிய + சென்றான் = காணிய சென்றான்.

இயல்பாயின காண்க.

வாழ்க, வெல்க, செய்க, வாழிய என்பவை வியங்கோள் வினைமுற்றுக்கள். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது. இயல்பே யாகும்.

வாழ்க பெரியார், வெல்க கந்தனார், செய்க பொன்னனார், வாழிய பூதனார் இயல்பாயின காண்க.

வருக என்பதும் வியங்கோள் வினைமுற்றுத்தான். வருக கற்றார் என்று இயல்பாயிற்றுக் காண்க.

இதுவரைக்கும் அ என்ற எழுத்தைக் கடைசியிலுள்ள சொற்களின் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும் என்பது பற்றிக் கூறினேன். அவற்றில் சில கேள்விகள் கேட்கின்றேன்.

பல, சில என்பவை என்ன சொற்கள்? அவற்றின் முன் வரும் வல்லினம் மிகுமா?

விடை: பல, சில அஃறிணைப் பலவின்பால் பன்மைப் பெயர்கள். இவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகாது.

பல போயின, சில சென்றன, சென்றன குதிரைகள் என்ற தொடரில் சென்றன என்பது என்ன சொல்? வலி மிகுமா?

சென்றன அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்று. இதன் முன் வல்லெழுத்து மிகாது. சென்றன குதிரைகள் அதுபோல இன்னும் சில சொற்கள் சொல்லிக் காட்டு.

விடை: மிகாது. அம்ம தோழி என இயல்பாயிற்றுக் காண்க.

அகர ஈற்றுப் பெயரெச்சங்கள் சில கூறுக.

விடை: வந்த குதிரை என்ற தொடரில் வந்த என்பதும், நடந்த கழுதை என்பதில் நடந்த என்பதும் பிறவும் பெயரெச்சங்கள்.

இவற்றின் முன் வலி மிகுமா?

விடை: மிகாது; இயல்பாகும்.

வந்த + குதிரை = வந்த குதிரை

வாழ்க, வாழிய, வருக என்ற வியங்கோள் வினை முற்றுக்களின் முன் வரும் வலி இயல்பாகுமா?

விடை: ஆம்!

ஆ (ஆகார ஈறு)

இனி ஆ என்ற எழுத்தைக் கடைசியாகக் கொண்ட சொல்லின் முன் வல்லினம் வந்தால் மிகாத இடங்களைச் சொல்லுகின்றேன்.

ஓடா, வாரா, உண்ணா, தின்னா என்றால் ஓட மாட்டா, வரமாட்டா, உண்ணமாட்டா, தின்ன மாட்டா என்பது பொருள்.

ஓடா + குதிரைகள் = ஓடா குதிரைகள்.

வாரா + காளைகள் = வாரா காளைகள்.

உண்ணா + குரங்குகள் = உண்ணா குரங்குகள்.

தின்னா + பன்றிகள் = தின்னா பன்றிகள்.

ஓடா, வாரா, உண்ணா, தின்னா என்பனவும் இவை போன்றவைகளும் அஃறிணைப் பலவின்பால் எதிர்கால வினைமுற்றுக்கள் என்று சொல்லப்படும்.

எதிர்மறை என்றால் என்ன?

வரும் என்றால் உடன்பாடு

வாரா என்றால் எதிர்மறை

தின்னும் என்றால் உடன்பாடு

தின்னா என்றால் எதிர்மறை - என வேறுபாடு அறிக.

நண்பா வேலா என்பன சேய்மை விளிகள். சேய்மையி லிருப்பாரை அழைப்பது சேய்மை விளி. விளித்தல் = அழைத்தல், நண்பா, வேலா, குப்பா என்பவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகாது.

நண்பா + போ = நண்பா போ

வேலா + தின் = வேலா தின் பிறவும் இப்படியே

அம்மா, அப்பா, பாப்பா - இவையும் விளிகள்

அம்மா + போவீர் = அம்மா போவீர்

அப்பா + தின்னுக = அப்பா தின்னுக

பாப்பா + செல் = பாப்பா செல்

அண்ணா + தருக = அண்ணா தருக

மிகவில்லை : இயல்பாயின அல்லவா?

சேர சோழ பாண்டியர் என்பவையும் இப்படியே.

சேரா + காக்க = சேரா காக்க

சோழா + போர் புரிக = சோழா போர் புரிக

பாண்டியா + புகழ் பெறுக = பாண்டியா புகழ் பெறுக.

சேராக் காக்க, சோழாப் போர்புரிக என்பன பிழைகள்.

- குயில்: ‘புரட்சிக்கவிஞர்’

சென்னை 1-5-62

-  விடுதலை ஞாயிறு மலர், 26.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக