பக்கங்கள்

புதன், 20 ஜூன், 2018

பிழை இன்றி எழுதுவீர் பாட்டுக்கு இலக்கணம்

வல்லெழுத்து மிகாத இடங்கள்


வல்லெழுத்து என்றது க், ச், ட், த், ப், ற் என்ற வல்லொற்றுக்கள்.

மிகாத இடங்கள் என்றால் என்ன? அகர வீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லெழுத்து வந்தால் இடையில் வல்லொற்று மிகாது. இதுதான் வல்லெழுத்து மிகாத இடம்.

வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டி யவை சில உண்டு. அவைகளைப் படிப்பவர்’ மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘வரும்படி சொன்னான்’ என்பதில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றில் - வரும்படி என்ற சொல் நிலை மொழி. சொன்னான் - வருமொழி.

இனிப் பெயரெச்சம் என்றால் என்ன? எது? என்பவைகளை விளக்குகின்றேன்.

பெயரெச்சம்

பெயர் குறைந்து வரும் எச்சச் சொல், அதாவது, பெயர் குறைந்த சொல் பெயரெச்சம். எனவே, பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் என்க.

எடுத்துக்காட்டு

வருகின்ற பாம்பு. இவைகளில் வருகின்ற என்பது பெயரெச்சம். அது பாம்பு என்ற பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது காண்க.

வந்த குதிரை என்பதில் வந்த என்பது இறந்தகாலத் தெரிநிலைப் பெயரெச்சம்.

வருகின்ற குதிரை என்பதில் வருகின்ற....என்பது நிகழ்காலத் தெரி நிலைப் பெயரெச்சம்.

சென்ற காலம் என்பதில் சென்ற என்பது இறந்தகாலத் தெரிநிலைப் பெயரெச்சம்.

செல்கின்ற காலம் என்பதில் செல்கின்ற என்பது நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சம்.

இவைபோல வருவன எல்லாம் பெய ரெச்சம் என்க. தெரிநிலை என்றால் என்ன?

வல்லினம் வந்தன இயல்பாயின

சிலர், வருகின்றனக் குதிரைகள், பெரியனக் குதிரை கள் எனப் பிழையாய் எழுதி விடுகின்றார்கள். அவர்கள் அகர வீற்று அஃறிணைப் பலவின்பால் வினைமுற்றுக் களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதை அறியார் போலும்.

பல, சில என்பவை பலவின்பால் அஃறி ணைப் பெயர்ச் சொற்கள். | இந்த இரண்டு சொற்களின் முன்பும் வல்லெழுத்து வந்தால் மிகாது இயல்பே யாகும்.

எடுத்துக்காட்டு: பல குதிரைகள், பல பேர்கள், பல தேர்கள், சில குதிரைகள், சில பேர்கள், சில தேர்கள்.

சிலர், பலப்பேர், சிலக் குதிரைகள் என்று பிழையாய் எழுதிவிடுகிறார்கள். அவர் பல, சில என்னும் அஃறிணைப் பலவின்பால் பெயர்களின் முன் வல்லினம் இயல்பாகும் என்பதை அறியார் போலும்.

இதில் இன்னொன்று நினைவிற் கொள்ள வேண்டும்.

பல என்பதன் முன் பல என்பதே வந்தால் பலபல என்றும் ஆகும். பலப்பல என்றும் ஆகும். பற்பல என்றும் ஆகும்.

அப்படியே சிலமுன் சில வரின் சிலசில, சிலச் சில, சிற்சில என்றெல்லாம் ஆகும்.

‘அகரத்தை ஈறாக உடைய கண்ட முதலிய பெய ரெச்சங்களின் முன்போ க, பெ, பி ஆகிய வல்லெழுத்து வந்தால் மிகவில்லை இயல்பாகவே இருந்தது காண்க.

பெரிய + குதிரை = பெரிய குதிரை

சிறிய + பன்றி = சிறிய பன்றி

வலிய + கொக்கன் = வலிய கொக்கன்

மெலிய + கயிறு = மெலிய கயிறு

உள்ள + பணம் = உள்ள பணம்

அகர ஈற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களின் முன் வல்லினம் வந்தால் மிகாது என்பது தெரிகின்றது.

சிலர், வந்தக் குதிரை என்றும், போனப் பிள்ளை என்றும், என்றக் காலம் என்றும், பெரியப் பையன், சிறியப் பாம்பு என்றும் எழுதி வருகிறார்கள். அவர்கள் பெயரெச்சத் தின் முன் வலிவரின் மிகாது என்பதை அறியார் போலும்.

தெரிநிலை வினைமுற்று என்னும், குறிப்பு வினை முற்று என்னும் இருவகை வினை முற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாது இயல்பாகும்.

தெரிநிலை வினைமுற்றுப் பார்ப்போம்.

வந்தன குதிரைகள்

வருகின்றன பறவைகள்

எரிந்தன கொள்ளிகள்

எரிகின்றன கொள்ளிகள்

இவைகளில் முதலில் உள்ளவை இறந்த கால அஃறிணை வினைமுற்றுக்கள். அவற்றின் முன் கு, ப, கொ, கொ ஆகிய வல்லெழுத்துகள் வந்தன. இயல்பாயின. மிகவில்லை .

இனிக் குறிப்பு வினைமுற்றுப் பற்றிப் பார்ப்போம்.

பெரியன குதிரைகள்

சிறியன குதிரைகள்

வலியன கழுகுகள்

இவற்றில் பெரியன, சிறியன; வலியன குறிப்பு வினை முற்றுக்கள். அவற்றின் முன் கு, கு, க ஆகிய வல்லெழுத்துகள் வந்தன. இயல்பாயின; மிகவில்லை.

பெயரெச்சம் பல வருமாறு

நடந்த, நடக்கின்ற, வந்த, வருகின்ற, மடிந்த, மடிகின்ற முதலியவை.

இங்குக் காட்டிய பெயரெச்சங்கள் அகரத்தைக் கடைசியில் உடைய பெயரெச்சங்கள். மேலும் காலத்தைத் தெரியக் காட்டும் தெரிநிலைப் பெயரெச்சங்கள்.

இனிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுகின்ற குறிப்புப் பெயரெச்சங்களும் உண்டு.

பெரிய பாம்பு என்பதில் பெரிய என்பது குறிப்புப் பெயரெச்சம். சிறிய, அரிய முதலியனவும் குறிப்புப் பெயரெச்சங்களே.

பயிற்சி:

கண்ட - இறந்த காலத் தெரிநிலைப் பெயரெச்சம்

காணுகின்ற - நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சம்

சிரித்த - இறந்தகாலத் தெரிநிலைப் பெயரெச்சம்

பெரிய - குறிப்புப் பெயரெச்சம்

சிறிய - குறிப்புப் பெயரெச்சம்

வலிய - குறிப்புப் பெயரெச்சம்

மெலிய - குறிப்புப் பெயரெச்சம்

உள்ள - குறிப்புப் பெயரெச்சம்

ஆகிய தெரிநிலைப் பெயரெச்சத்திற்கு முன்னும், குறிப்புப் பெயரெச்சத்திற்கு முன்னும் வல்லெழுத்து வந்தால் மிகாது. இயல்பாகும்.

கண்ட + போது = கண்டபோது

காண்கின்ற + கண் = காண்கின்ற கண்

சிரித்த + பெண் = சிரித்த பெண்

சிரிக்கின்ற + பிள்ளை = சிரிக்கின்ற பிள்ளை

- குயில் - சென்னை (15-4-62)

-  விடுதலை ஞாயிறு மலர், 19.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக