எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 21 )
தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது!
தாய்மொழியிடத்து அன்பில்லாத வர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.
ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.
தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.
தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.
நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.
(‘குடிஅரசு’ - 18.12.1943)
என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் ‘குடிஅரசில்’ வெளியிட்டார்.
1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.
2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.
3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.
5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.
6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.
7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.
என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.
சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த முத்தமிழ் நிலையம் அழைப்பை ஏற்றுச் சென்று பெரியார் ஆற்றிய உரையில்,
“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.
உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.
(‘குடிஅரசு’ - 08.01.1944)
மேலும், தமிழன் தலைநிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.
“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா?’’ என்று அடிக்கடி உணர்வூட்டினார்.
(‘குடிஅரசு’ - 04.12.1943)
“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ்நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர்களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?
இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர். தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.
1. தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.
2. புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.
3. நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
4. வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது.
தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.’’
(25.12.1943 - ‘குடிஅரசு’ - தலையங்கம்)
(தொடரும்...)
- உண்மை இதழ், 1-15.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக