பக்கங்கள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (19) ஆரியரின் பொய்களை மறுத்து எழுதப்பட்டதே குறள்!

- தந்தை பெரியார்

நேயன்

 


2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருந்தது என்றால் நம்முடைய நாடு எவ்வளவு மேலான நாடாக அன்று இருந்திருக்க வேண்டும்? வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடந்த காலம், குறள் தோன்ற வேண்டிய அவசியம் கூட ஆரிய ஆதிக்கம் தோன்றிய மக்களை அழித்து நமது கலாசாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்குத்தான் வள்ளுவர் குறளை எழுதினார். குறளில் காணப்படும் தத்துவங்கள் அத்தனையும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

நம் நாட்டில் குறளாசிரியருக்கு முன்பு அதே மாதிரிக் கருத்துகளை சித்தார்த்தர் என்ற பெயரை கொண்ட புத்தர் பரப்பியிருக்கிறார். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாகப் பழங்காலம் என்றால், காட்டுமிராண்டிக் காலம் என்றே சொல்லலாம். அதுவும் ஆரியக் கருத்துகள் முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தன்மை கொண்டவைகளேயாகும்! அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட கருத்துகள் தோன்றி காட்டுமிராண்டித்தன்மையை ஒழிக்க முயற்சித்திருக்கின்றன; என்றாலும்,  அக்காட்டுமிரண்டித்தன்மையின் வேகம்தான் இன்னும் நம்மைக் காட்டுமிராண்டிகளாக்கி அதே நிலையில் வைத்திருக்கிறது.

ஆரியர்கள் நம்மை வெற்றி கொண்டார்கள் என்று சொல்லுவது எல்லாம் பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவது எல்லாம், படையெடுப்பினால் போரிட்டு வெற்றி கொண்டார்கள் என்பதல்ல. கலாச்சாரங்களை தங்கள் கருத்துகளை இப்படிப்பட்ட கருத்துக்களை நம்மக்களுக்குள் புகுத்தித்தான் வெற்றி கொண்டார்கள்.  எவ்வளவு மோசமாக இருந்து அவர்கள் புகுத்தியிருந்தால் அப்படிப்பட்ட கருத்துகளைக் கண்டிக்க என்றே இப்படிப்பட்ட அறிவாளிகள் தோன்றியிருக்கக் கூடும். ஆரியர்கள் வேகமாகப் புகுத்திய அந்தக் கருத்துகளை புத்தர், வள்ளுவர் எதிர்த்திருக்கிறார்கள்.

புத்தர், வள்ளுவர் போன்றவர்கள் ஆரிய ஆதிக்கத்தை அதன்வழி முறைகளைப்பற்றிச் சிந்தித்ததில் இருந்து, இக்காட்டுமிராண்டிக் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தாத ஆபாசமான தன்மைகள் உலகில் மற்றும் பல பாகங்களில் முன்பே இருந்திருக்கின்றன என்று தெரிய வருகிறது.

நான் வள்ளுவரை நாத்திகராகக் கொண்டுதான் காண்கின்றேன். அவர் என் கண்ணுக்கு பெரிதும் நாத்திகராகவே காணப்படுகின்றார். மனிதன் ஓர் விஷயத்தைச் சொன்னான் என்றால், அதை மட்டம் என்கின்றோம். மனிதன் ஓர் நல்ல விஷயம் கூறி இருக்கின்றான் என்றால் அவனை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவன்; தெய்வீகத்தன்மை உடையவன் என்பதை எல்லாம் ஒட்ட வைத்து விடுவது என்பதுதான் நம் நாட்டில் நடந்து வந்திருக்கின்றது. தெய்வீகத்தன்மை உடையவர் கூறியது என்றால், ஆராயவே மனிதன் பயப்படுகின்றான். ஆராயவே முன்வருவதில்லை.

மனிதன் தான் அடைய முடியாது என்று எண்ணுவதை, தனக்குத் தெரியாததை, தனக்கு அதாவது, மனிதத்தன்மைக்கு மேம்பட்டது என்று எண்ணுகின்றான். அதுபற்றி ஆராய்வதே பாவம் என்று அல்லவா கூறுகின்றான்! அது எப்படி ஒப்புக்கொள்வது?

வள்ளுவர் எந்த இடத்திலும் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்று எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

இப்படிப்பட்ட வள்ளுவரை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்ட பித்தலாட்டமான கதையும் கட்டிவைத்திருக்கின்றார்கள்.

அவர் ஒரு பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்றும், அதுவும் கலவி முடிந்து உடன் பிறந்தவர் என்றும், அதற்கும் அந்தப் பார்ப்பானின் நிபந்தனைபேரில் அதை பறைச்சியும் மற்றக் குழந்தைகளையும் பிறந்து உடனேயே, பிறந்த இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றதுபோல வள்ளுவரையும் போட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்றும், வேறு யாராலோ எடுத்து வளர்க்கப்பட்டு பல அதிசய அற்புதம் செய்தார் என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் எந்த இடத்திலும் சாதாரணத்தன்மையைவிட தன்னை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் தன்னை ஓர் அறிவியல்வாதி என்றுதான் காட்டிக் கொள்கிறார். தன் கருத்துக்குச் சரி என்றுபட்டதை எடுத்துச் சொல்வதல்லாமல், தன்னை ஓர் கடவுள் நம்பிக்கைவாதியாக எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் எங்கும் கடவுளைப் பற்றி கூறியவரும் அல்ல. எந்த சமயத்தைச் சார்ந்தவரும், நம்பியவரும் அல்ல.

குறள் ஓர் சமய நூல் அல்ல; அது ஓர் அறிவு நூல். அவர் கடவுளைப் பற்றிக் கூறி இருப்பதாக முதல் அத்தியாயத்தையே கடவுள் வாழ்த்து என்று பேர் வைத்து விட்டார்கள். நான் மேலே கூறிய அப்படிப்பட்ட அறிவியல்வாதியா தமது நூலில் கடவுளுக்கு முதல் இடம் கொடுத்திருப்பார்?

புத்தரும் வள்ளுவரும்

2500  ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி,  பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக