பக்கங்கள்

வியாழன், 11 அக்டோபர், 2018

நெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்!

நேயன்

 


“விஞ்ஞானம்,  அறிவு,  தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயன் இல்லை.’’

ஆகவே,  நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கை விடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்.

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரச்சாரம் என்றால், புரிந்தாலும், புரியா விட்டாலும் தலைவணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவத்தனமான, மானமற்ற முட்டாள் தனத்தை விட்டொழியுங்கள்.

அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குக் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதை பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டு பிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே, அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அதுபோல் கும்பிட்ட குழவிக்கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்கவேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப்பட்டம்  நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி, மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இவ்விழிப்பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள். பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்ட வாயிலாகவும், படக் காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும், மேடை பிரசங்கள் வாயிலாகவும் கதாகாலட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து, உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள். முதலமைச்சர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் போன்ற பிறவி அடிமைகள், மற்றும் வயதாகிவிட்டவர்கள் தெரிந்தே பார்ப்பனருக்கு அடிமையாகி பிழைக்கத் துணிந்த மானமற்ற ஈனர்கள், எக்கேடுகெடினும் இளைஞர்களாவது இம்முன் னேற்றத்துக்கு பாடுபட முன் வாருங்கள். உங்களுக்காகவே இல்லா விட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேனும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். இழிஜாதிப் பட்டம் ஒழிக்க முன்வாருங்கள். கல்சாமிக்கு கைதூக்கி தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டல், “வள்ளுவர் மதம்”

என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால், “குறள் நெறி” என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின், உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்ப டிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது.

அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப்படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத்தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவர் மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப்புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். _- ‘விடுதலை’, 31.12.1948.

ஆனால், திருவள்ளுவர் குறளோ இவற்றை ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்கிறார். பிறப்பு - இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை.

திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களில் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத,  வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

குறளை முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால்,  மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? மகம்மது நபி அவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துகளைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.

எனவேதான், எல்லா மக்களும்,  எல்லா மதத்தவரும்  எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள். எனவேதான், அதன் ஆசிரியரைக்கூட சில மதத்தினர் தம்மவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோன்றுகிறார். ஒரு இடத்தில் `மயிரும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்கவேண்டுமானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக் கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கி விடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று. இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதைவிட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

(தொடரும்)

- உண்மை இதழ், 16-30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக