03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...
ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழியின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொதுஜனங்களின் மனத்தில் தேசாபிமான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது. இதுபோலவே தான் சுதந்திரப் போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறிகின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.
சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.
ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் இந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் காந்திக்கு ஜே காங்கிரசுக்கு ஜே கதர் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே இந்தியைப் படியுங்கள் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.
தெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக் கின்றனர் அவர்கள் தங்கள் மொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களை யெல்லாம் ஆக்கி வைத்திருக்கின்றனர். அவைகளைப் படிக்குமாறு மக்களுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது. மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும் உலகப் பொருள்களின் தன்மைகளை அறிந்து அவைகளைத் தமது வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.
தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற பண்டிதர்களும் சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள் நன்மையடையத் தகுந்த உறுப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தான் ஆராய்ச்சியென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களே யொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.
ஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர்களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்பதில்லை. பொதுவாக நமது நாட்டு தேசாபிமானிகளுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என்பதே இருப்பதில்லை வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்றாரோ அதையே பின்பற்றுவதுதான் நமது நாட்டு அரசியல்வாதிகளில் போக்காக இருந்து வருகின்றது. சமுகவிய லாகட்டும், மதவியலாகட்டும் அரசியலாகட்டும், பாஷவியலாகட்டும் மற்ற எந்த இயலாகட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக இதுவரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம். இந்தியியக்கம் முதலியவைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபைக்கு ஒரு கட்டடம் கட்டும் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் வெளிவந்தது. அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலகையான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும, சட்டசபை மெம்பர்களும், தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்ளுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.
உண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசிய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பதுதான் நமக்குச் சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன் வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படியிலலாமல், தமிழ் மக்கள் முன்பின் அறியாததும் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா? மக்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?
இவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
- விடுதலை நாளேடு, 29.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக