மதுரை, பிப்.16 அரசு அலுவலகங்கள், தனியார் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, அரசின் அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் மார்ச் 8இல் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் அர சாணைப்படி, 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிறமொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும். இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஸ்டோர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், சில்க்ஸ், ஓட்டல் என ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி உள்ளனர். இவற்றை மாற்றி அங்காடி, அடுமனை, மருந்துக்கடை, பட்டு மாளிகை, உணவகம் என தமிழில் பெயர் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள், கடைகளில் அரசின் அரசாணைப்படி, 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழில் கடையின் பெயர் பலகை எழுத உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் மார்ச் 8ல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- விடுதலை நாளேடு, 16.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக