பக்கங்கள்

வெள்ளி, 31 மே, 2019

திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்? (2)

துக்ளக்கின்' கோணல் பார்வை....


கி.தளபதிராஜ்


மயிலாடுதுறை


நேற்றைய தொடர்ச்சி....


சமதர்ம ஞானி வள்ளுவர்.!


வள்ளுவர் அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்மவாதியாவார் என்று கூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடைமையின் அடிப் படையை நாம் குறளில் காண முடிகிறது. 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று ஒரு குறளில் கூறுகிறார். ஒருவன் பிச்சை எடுத் துத்தான் வாழவேண்டிய நிலை இருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஒழி என்று எடுத்துக்காட்டியிருக் கிறார்.

'குடிஅரசு' 7.5.1949

திருவள்ளுவர் தலைசிறந்த சம தர்மவாதி. ஆனதால்தான் ஒரு துறையையும் பாக்கிவிடாமல் சக லத்தையும் தொகுத்துக் கூறியிருக் கிறார்

'குடிஅரசு' 8.11.1949

"திருக்குறள் இப்படி பொது வுடைமை பேசுவதாக குறிப்பிட்ட பெரியார், திருவள்ளுவரை பார்ப் பன ஆதிக்க எதிர்ப்பாளராகவும், திருக்குறளை கண்டன நூலாகவும் அடையாளம் காண்கிறார். பெரியா ரின் இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் குடி அரசில் திருக்குறளைப் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தது.

"திருவள்ளுவர் குறளை எழுதிய காலம், ஆரிய மதக் கடவுள்கள், சாஸ்திரங்கள், புராண இதிகாசங் கள் ஆரிய பழக்கவழக்கங்கள் இந்த நாட்டில் புகுந்துவிட்ட காலமாகும். திருவள்ளுவர் அந்தணர் யார் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அதனாலேயே ஏற்பட்டி ருக்கிறது.

'அந்தணர் என்போர் அறவோர் மற்ற எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்'

என்கிற குறள், அந்தணர் என்கிற ஜீவகாருண்யம் நிறைந்த ஒரு தமிழ்ச் சொல்லை, ஜீவகாருண்யத்தின் ஜென்ம விரோதிகளான பார்ப் பனர்கள், தங்களையே குறிப்பிடக் கூடிய ஒரு தனி ஜாதிச் சொல்லாக ஆக்கிவிட எத்தனிக்க, அந்த எத் தனமும் மக்களால் உண்மை என்று நம்பக்கூடிய அளவில் வந்து விட்ட தனால்தானே, அந்தணர் என்பது ஜாதிப்பெயரல்ல யார் யார் மற்ற ஜீவன்களின் துன்பத்தை தொல் லையை, கஷ்ட நஷ்டத்தை தங்களு டையது என்று கருதி அவைகளைப் போக்குவதற்கான பரிகாரத்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் வாழ்க் கையில் ஒரு லட்சியமாகக் கொண்டு நடக்கிறார்களோ அவர்கள் தான் அந்தணர்கள் என்று விளக்க வேண் டியதாகிவிட்டது. பார்ப்பனர்கள் தங்களை அந்தணர்கள் என்று சொல்லிகொள்வது தப்பு. அவர் களை மற்றவர்கள் அந்தணர்கள் என்று உடன்பட்டுப் போவது எழுதுவது அதைக்காட்டிலும் பெரிய தப்பு என்று இந்தக் குறள் கண்டிக்கவில்லையா? 'மறப்பினும் ஒத்த கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'

என்பது ஒரு குறள். இது பார்ப் பான் என்றால் அவன் எவ்வளவு தான் கொலை பாதகனாய் இருந் தாலும், அவன் பிறந்த பிறப் பினாலேயே உயர்ந்தவனாவான். பூதேவன் அவனே. அவனையே மக்கள் பூஜிக்க வேண்டும் என்கிற கருத்தைப் பார்ப்பனர்கள் பரப்பிய தனால் அல்லவா, அதை மறுத்து கடவுள் முகத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுகிற பார்ப்பனனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டு விட்டால் அவன் இழி மகன்தான். மனிதனுக்கு ஒழுக்கம்தான் முக்கி யமே தவிர பிறப்பு ஜாதி முக்கியமல்ல என்று தானே இந்தக் குறள் வற்புறுத்துகிறது.

அவர்களுடைய கொள்கை, வேள்வி - யாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அது மட்டுமல்ல. யாக வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிற வர்கள் எல்லாம் சூத்திரர்கள் - சண்டாளர்கள் - அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப்பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? '

"அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செருத்து உண்ணாமை நன்று"

என்று சொல்லுகிறார். இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதை தெரிவிக்க வில்லையா? மற்றும் அதைக் கண்டன நூல் என்று மாத்திரமல்லாமல், ஒரு மாபெரும் பகுத்தறிவு நூல் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

கண்டன நூல் என்றால் எதைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று பார்ப்போமானால், ஆரியத்தை ஆரியப் பண்பை அதிலுள்ள உண் மையான ஒழுக்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஏற்காத ஆபாச மூட பழக்க வழக்கங்களைக் கண்டிக்கும் கண்டன நூல் என்றே எண்ணலாம். மற்றும் பல மதவாதிகளின் கற்பனை களை அதாவது பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காததும், வெறும் நம்பிக்கை; நம்பியாக வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தி னால் மாத்திரமே நிற்பதாகிய பல மூட நம்பிக்கைகளை ஒழித்து, மக் களுக்கு இயற்கைத் தன்மை விளங் கும்படி செய்வதாகிய பகுத்தறிவு நூல் என்றே சொல்லலாம்."

'குடிஅரசு' 30.4.1949.

திருவள்ளுவரை பொதுவு டைமைவாதி என்றும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் என்றும் சொன்ன பெரியார் அவரை நாத் திகர் என்றும் அடையாளப்படுத் தினார். 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்' என்ற குறளைச் சுட்டிக்காட்டி, "பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று வள்ளுவர் சொல் லியிருக்கிறார். அவர் பொய்யா மொழிப் புலவர் என்பதால் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று துணிவாய்ச் சொல்லிவிட்டார். இப் படிச் சொல்வதால் வள்ளுவர் நாத் திகராகிறார்" என்கிறார் பெரியார்.

"எல்லாவிதத் துறைகளைப் பற்றியும் நல்வழி காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை. பொதுவாக நன்னடத்தை, நாகரீகம் என்பவையெல்லாம் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ள வேண்டி யதையே அடிப்படையாகக் கொண் டதாகும். அதற்கான நெறிகள் வழிகள் குறளில் காணலாம். சுலப மாக கூற வேண்டுமானால் குறள் ஒரு பகுத்தறிவு நூல்

குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன் ஜென்மம் என்பவை போன்ற சொற்கள் இல்லவே இல்லை. குறளில் கடவுள் என்ற சொல்லோ, கடவுள் என்ற வஸ்துத் தன்மையோ அறவே இல்லை. கட வுள் இல்லையானால் மற்ற வற்றை எப்படி அதில் காண முடியும்?

கடவுள் வாழ்த்து என்று குறளில் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே? என் றால், வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா?"

'குடிஅரசு' 7.5.1949

இந்துமதப் புராணங்களில் காணப்படும் பிறவி பேதம் திருக் குறளில் இல்லை என்றும், அவற்றில் காணப்படும் மூட நம்பிக்கைகளும் குறளில் இல்லை என்றும், நமக்கு இருக்கும் ஒரே நீதி நூல் அதுவே என்பதால் அந்தக் குறள் வழி நின்று பணியாற்றுங்கள் என்று இளைஞர் களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

"திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் கூறுவதெல்லாம் நமது பெரியோர்கள் கூறிய நீதி நெறி நூல்களில் காணப்படுபவைகளே ஆகும். அவ்வித நீதி நெறி நூல்களில் தலையானதான குறளில் திராவி டரின் உயர்ந்த பண்புகள் காணப்படு கின்றன.

ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் ஆகியவைகளை எதிர்த் துப் பேசியவர்கள், பேசுபவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் குறளை எதிர்த்துப் பேசியவர்கள் நம் நாட் டில் மட்டுமல்ல; மற்ற எந்த நாட்டிலும் கிடையாது. அவ்வளவு உயர்ந்த பண்புகள் அதில் மலிந்து கிடக்கின்றன. அவ்வித குறளை நாம் மறந்து, அதற்கு மாறான கருத்து களைக் கொண்ட ஆரியர்களின் மத இதிகாச நூல்களெனெப் படுபவை களை பின்பற்றியதாலேயே நாம் இந்த இழிநிலைக்கு ஆளானோம்.

ஆரியர்களின் நூலில் பிறவியில் உயர்வு _ தாழ்வு என்ற பேதமை கற்பிக்கப்பட்டுள்ளது. நமது வள் ளுவர் குறளிலோ, அவ்விதப் பேத மைகளைச் சிறிதும் காண முடியாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தினை வகுத்துள்ளவர் நம் வள்ளுவரேயாவார். பிறப் பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் பேதமை என்பதை விளக்கியதோடு அவர் நின்று விடவில்லை. மேலும் கூறுகிறார். தொழிலினாலும் அவ் வித வேறுபாடுகள் கூடாதென்று. அதாவது 'சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையினால்  -_"ஒருவன் செய்யும் தொழிலைக் கொண்டும் மக்கள் சமுதாயத்திலே வேற்றுமை காண்பித்தல் கூடாது. என்று வலியுறுத்தியிருக்கிறார் வள்ளுவர்.

"அன்பர்களே! ஆரியர்களின் நீதி நூல்களென்று கூறப்படும் ராமா யணம், கீதை, புராணம் ஆகியவை களில் காணப்படும் மடமைகள் எவ்வளவு வஞ்சகம் நிறைந்ததென்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமா? நமது குறளில் எந்த இடத்திலும் மதக்குறி அணிய வேண்டுமென்று கூறப்படவில்லை. மோட்சத்திற்காக கடவுள் பேரால் கல்லைக் கட்டிக் கூத்தாடுமாறு கூறவில்லை ஆனால் மனிதத் தன் மையுடன், ஒழுக்கமுடன் நடந்து கொள்வதையே வலியுறுத்துகிறார்.

எனவே மக்களின் ஒழுக்கத்திற்கு மாறான ஆரிய நூல்களை அறவே புறக்கணித்து, நம் நீதி நூலாகிய குறளைப் படியுங்கள் என்று திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் கூறி வருகிறோம்.

இளைஞர்களே! எதிர்காலம் உங்களிடம் தான் இருக்கிறது. நம் நாடு மற்ற நாடுகளைப் போல முன்னணியில் நின்று, மக்களும் நல்வாழ்விற்கு உட்பட வேண்டுமா னால் நமக்கு இருக்கும் ஒரே நீதி நூலாகிய குறள் வழி நின்று பணியாற்றுங்கள். அதற்கு மாறான மற்ற ஆரிய நூல்களையும், அந் நூல்களுக்கு ஆதரவு தரும் கோயில், கடவுள், திருவிழா போன்றவைகளை யும் வெறுத்து ஒதுக்குங்கள்!" என்கிறார் பெரியார்

'விடுதலை' 14.4.1949

திருக்குறளுக்கு எதிராக உண்மையிலேயே செயல்பட்டவர்கள் யார்? மூன்றாவது சங்கத்தைப்பற்றி கால்டுவெல் சொல்லும்போது, வள் ளுவர் தாழ்த்தப்பட்ட புலையர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் மூன்றாம் சங்கத்தில் அவருடைய குறள் அரங்கேற்றப்பட்டதை பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் மூன்றாம் சங்கத்தையே கலைத்து விட்டனர்" என்று கூறுகிறார்.

"தீக்குறளைச் சென்றோதோம்' என்பதற்கு தீமை செய்யும் குறளைச் சென்று ஓதோம் என்று விளக்க மளித்தவர் சங்கராச்சாரியார்.

காவிரி நீர் பிரச்சினைத் தொடர் பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா? இல் லையா? அதற்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன? என்று பெங்களூரு திரு வள்ளுவர் சிலை திறப்பை நக்க லடித்தது "தினமலர்". திருக்குறளை அழிக்க நினைத்தவர்கள் அதற்கு வாய்ப் பில்லாமல் போகவே கீதை யின் சாரமே குறள் என்று கதை கட்டி விட்டார்கள். இவர் கள்தான் இப் போது பெரியார் மீது புழுதி வாரி வீசுகிறார்கள்.

திருவள்ளுவரை சமதர்ம ஞானி என்றும், பொதுவுடைமை வாதி என்றும், நாத்திகர் என்றும், திருக் குறளை தமிழர்களின் நீதிநூல் என்றும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த கண்டன நூல் என்றும் பாராட்டியும், போற்றியும் மாநாடு கள் கூட்டிப் பெருமைப்படுத்திய தந்தை பெரியாரை, திருக்குறளை மலம் என்று விமர்சித்ததாக திரித் திருக்கிறார் ஆடிட்டர் குரு மூர்த்தி. கோயபல்ஸ் பிரச்சாரங்கள் தமிழ் நாட்டில் ஒரு போதும் எடுபடாது என்பதை நாடாளுமன் றத் தேர்தல் முடிவுகளே உணர்த்தி விட்டன.

-  விடுதலை நாளேடு, 31.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக