பக்கங்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஹிந்தி மொழிக் கண்டன கூட்டம் தோழர் த.வே.உமாமகேசுவரம் அவர்களின் வீரமுழக்கம்

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவின் கீழ் நேற்று மாலை 5 மணிக்கு ஹிந்தி கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தஞ்சையினின்றும், வெளியூர்களிலிருந் தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் குழுமிமிருந்தனர்.

செந்தமிழ்ப் புரவலர் இராவ் சாகிப் வே.உமா மகேசுவரம் பிள்ளை எல்லோரையும் வரவேற்றுப் பேசுகையில் கூறியதாவது:- இன்று இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கத் தோழர் வி.நாடிமுத்துப்பிள்ளை வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அவரிடமிருந்து வந்த கடிதமொன்றில் நான் காங்கிரஸ் கட்சியிலுள்ள வனாதலால் தலைமை வகிக்க வரமுடிய வில்லை, ஆனால் கூட்டத்திற்கு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம் "எதுவானாலும் அவர்கள் அகச்சான்றிற்கு இது சிறிதும் பொருந்தாது என்றே கொள்ளவேண்டும். தமிழ்க்குத் தீங்கு வருங்கால் பேசாது, ஒழுங்கு நடவடிக் கைக்குப் பயந்து உண்மைக் கருத்தை வெளியிடத் தயங்கிக் கோழையாயிருப்பது ஆண்மைத் தமிழனுக்கு அழகாகுமா? எனவே, நாம் காலம் தாழ்த்தல் கூடாது. விரைந்து ஆவன புரிதல் வேண்டும். பேச்சு உரிமை வேண்டும். உள்ளத்தில் பட்ட கருத்தை வெளியிட ஒவ் வொருவருக்கும் உரிமை வேண்டும் எனக் காங்கிரஸ் காரர் வாயளவில் கூறுகின்றனர்.

ஆனால் செய்கையிலே, வடநாட்டார் எதைச் சொன்னாலும் ஆராயாது ஏற்றுக் கொண்டு நம்மைத் தங்கள் கைப்பாவை போல் இயக்க விரும்புகின்றனர். என்னே அவர்கள் அறிவின்மை! நெஞ்சாரக் கண்ட தைப் பிறருக்காகவிட்டுக் கொடுத்தல் தமிழருக்கு அடுக்காது. வீரப் பெண்களும் 'நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என்று ஆண்மையுடன் கூறிய நக்கீரனும் இருந்த நாடு நம் தமிழ்நாடு, தலைவர்க்காகத் தன் மனதில் பட்ட உண்மைகளை வெளியிட அஞ்சுவது, பின்னிடுவது மதியீனம்! மதி யீனம்!! என்று பலமுறை அறை கூவுவேன். உயிரை விடினும் மானத்தை விடக்கூடாது. தாய்க்குச் சோறு போடாதிருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பார் செய்கை "தாய்க் கொலை சால்புடைத்து" என்பார் கூற்றுக்கே ஒப்பாகும்.

எனவே, நம் முயற்சிக்கும் பல இடர்கள் வரும். ஆனால் நாம் ஆண்மையுடன் - வினைத்திட்பத்துடன் எடுத்ததை முடிக்க வேண்டும்,'' பின்னர் வக்கீல் தோழர் வெங்கடாசலம் பிள்ளை பி.ஏ.பி.எல். அவர்களைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொண் டார். திரு.வேங்கடாசலம் பிள்ளையவர்கள் எதிர்பாராத வகையில் தன்னை தலைமை வகிக்க வேண்டுமாறு கூறியதற்காக வந்தனம் செலுத்திவிட்டுத் தோழர் உமா மகேசுவரம் பிள்ளையவர்கள் ஹிந்தி கண்டத் தீர்மா னத்தைக் கொண்டு வருவார் எனக் கூறியமர்ந்தார்.

"ஹிந்தியை 1, 2, 3ஆவது பாரங்கட்குக் கட்டாய பாடமாக வைப்பதுடன், மேல் வகுப்புகட்கு சரித்திர பாடத்தை ஹிந்தியில் பயிற்றுவித்தல் வேண்டும் என அரசியலார் செய்யும் முடிவை கரந்தைத் தமிழ்ச்சங்க ஆதரவின் கீழ்க்கூடியுள்ள தஞ்சைப் பொது மக்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்''

என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து விளக்கிக் கூறுகையில், ஆங்கிலம், கணிதம், சரிதம், உள நூல், பவுதீக நூல், பூதநூல், தாவர நூல், எனச் சுமக்கமாட்டாத பல பாடங்களைச் சிறுவர்கள் தலையில் ஏற்றியி ருக்கையில் ஹிந்தியையும் சிறுவர்கள் கற்க வேண்டு மென்பது பொருந்துமா ஜெர்மனி, பிரஞ்சு, ஜப்பான் முதலிய நாடுகளில் அயல் மொழி மூலம் கல்வி கற்றல் கிடையாது. சென்ற 350. ஆண்டுகளாய் ஆங்கில ஆட்சியில் நம் தமிழ் பாழ்பட்டது. 1910ஆம் ஆண்டு அரசியல் செல்வாக்கு பெற்ற கல்வி இலாகா டைரக்டர் தோழர் வி.கிருஷ்ணசாமி அய்யர் தமிழைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்றார். அதனை அரசியலாரும் ஒப்பினர். அக்காலம் தான் நம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தோன்றியது. இதுவரை நம் சங்கம் செய்த கூக்குரல் கடல்வரை எட்டியது. மக்கள் கிளர்ச்சி செய்தனர். அதன் பயனாக இன்று ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களைத் தமிழ் மொழியில் கற்க அரசாங்கத்தார் உதவி செய்தனர். இதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தர்க்கம், இயைபு நூல், பூதநூல், ஒலிநூல் முதலியவைகளைத் தமிழில் எழுதுவித்துப் பாடமாக்க முனைகின்றனர். இந்த நிலையில் ஹிந்தி வந்தால் தமிழ் நிலை என்னாவது: காந்தி, ஜவஹர் போன்றவர்களும் நம்மிடம் பேச வாயில்லாத ஊமையர்களாய் 'சாத்தான் சர்க்கார்' மொழியாகிய ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். நம்முடன் உறவாட அவர்கள் ஏன் தமிழ் கற்றல் கூடாது: நம்மவர் வடநாட்டார்க்கு அடிமையாய் - தன் மதிப்பின்றி 'நீர் வழிச்செல்லும் புணைபோல்' வட நாட்டார் கூறிய தையே கிளிப்பிள்ளைகள் போல் கூறி வருகின்றனர். இது கொடுமை! கொடுமை! கொடுமை!!!

'ஹிந்தி' வந்தால் வடமொழியாளருக்குச் சுலபமாக லாம்! ஹிந்தி, பட்லர் இங்கிலீஷைப் போல் மொகலாயர் காலத்தில் தோன்றிய ஒரு கதம்பமொழி. அதற்கு எழுத்துண்டா? இலக்கியமுண்டா? நாகரிகத்தில் தாழ்ந்த இலம்பாடிகள்' பேச்சைப்போன்ற மொழி. இவர்கள் செய்கை இந்நிலையில் 'மக்களே போலும் கயவர்' என்ற பெரியாரின் வாக்கை நினைவூட்டுகின்றது. வடநாட்டினருடன் பேச உறவாட ஹிந்தி பயன் பெறுமாம்! ஒருவேளை ஏன் இறுதிக் காலத்தில் நான் காசியாத்திரை போகுங்கால் பீடி, சுருட்டு விலை பேசி வாங்கவும் ஜட்கா வண்டிக்காரனுடன் பேசவும்  வேண் டுமானால் உதவி செய்யும்! ஜவகர் ஓரிடத்தில் சிறந்த மொழிகளில் தமிழையும் ஒன்றாகக் குறிப்பிடுவதுடன், அவரவர்கள் தாய் மொழியைப் புறக்கணிக்காதீர்கள்; ஹிந்தியைப் பொதுப் பேச்சிற்காக வேண்டுமானால் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நம்மவர் போல் கோழைகளாய் போலி வேடம் போடவில்லை. இன்னும் நம் நாட்டில் 100க்கு 90 பேர் சரியாக எழுதப்படிக்கத் தெரியாத நிலையிலிருக்கின்றனர். எனவே 100 பே ரும் எழுதப்படிக்க நிலைவந்த போது ஹிந்தியைப் பற்றிப் பேசிக் கொள்ளு வோம். ஆனால் இது, படித்த பட்டதாரிகளின் எண்ணிக் கையைக் குறைக்கச் செய்யும் வழி சூழ்ச்சியென நினைக்கவேண்டியிருக்கின்றது. ஏன்? அதை வெளிப் படையாகச் சொல்லிவிடுகின்றது தானே! அரசியல் ஆட்சி முறையே இன்னதென்று தெரியாதவர்கள் பழக்கமில்லாதவர்கள் எங்கனம் ஆட்சி நடத்துவர்? குருட்டாம் போக்கில் வந்த வெற்றியினால் தலைகால் தெரியாது குதிக்கின்றனர். ஏன் கவுரவமாக எங்கட்கு ஆட்சி முறை - அரசியல் நடாத்தும் முறை தெரிய வில்லை என்று கூறிவிடுவதுதானே! எனவே அவர்கள் செய்ய எண்ணும் அறியாச் செயலை தமிழ் நலங்கருதும் ஒவ்வொருவரும் கண்டித்தல் வேண்டும் என்பதோடு இத்தீர்மானத்தை ஒப்புக்கொள்ளுவீர்கள் என்ற முறை யில் உங்கள் முன் கொண்டு வருகிறேன் எனக்கூறி முடித்தார். தஞ்சைக் காங்கிரஸ்வாதி தோழர் மருதமுத்து மூப்பனார், வக்கீல் தோழர் ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை, திருவையாற்று அரசர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் தோழர் ஆர்.வெங்கடாசலம் பிள்ளை, காக்கைச் தமிழ்ச் சங்க கல்லூரி தலைமையாசிரியர் தோழர் சிவ. குப்புசாமிப் பிள்ளை முதலியோர் தீர்மா னத்தை ஆதரித்துப்பேசக் கடைசியில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் முடிவுரைக்குப்பிறகு திரு. த.வே.உமா மகேசுவரம் நன்றி கூறுகையில் நம் பேச்சு ஒவ்வொன் றும் தலைவர்கள் காதில் போய் விழவேண்டும். அத னால் அவர்கள் தங்கள் அறியாப்போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும். நிற்க, ஹிந்தியைக் தங்கள் கழகத் தின் சார்பாகக் கண்டிக்க வேண்டும் என்று மாண வர்கள் கேட்டதற்காகத் திருவையாற்றிலுள்ள ஒரு சாஸ்திரியார் கண்டவாறு மாணவர்களைக் திட்டி, பய முறுத்தி விரட்டினாராம்! என்னே அவர்தம் வன் கண்மை! இன்றே அப்பார்ப்பனர்களின் ஆர்ப்பாட்டம் இங்ஙனமிருந்தால் அவர்கள் கோரும் "ராமராஜ்யம்" வந்தால் தம் நிலை என்னாவது? எனவே நீங்கள் சிறி தும் அஞ்சாது  பட்டிமாடுகளாகிய ஹிந்தி முதலியற்றை ஓட்டி தமிழை முன்னேற்றுங்கள் என்று பேசினார். கூட்டம் 9 மணிக்கு முடிந்தது.

- 'விடுதலை', 2.9.1937

- விடுதலை நாளேடு,9.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக