பக்கங்கள்

சனி, 17 ஆகஸ்ட், 2019

இறுதி மூச்சுள்ள மட்டும் எதிர்த்தே தீருவோம்!

24.07.1948  - குடிஅரசிலிருந்து... -

இவ்வுலகில் அடிபடுவதற்கென்றே பிறப் பிக்கப்பட்டவைகள் மூன்றாகும். அவை ஒன்று, பெண்கள். இரண்டு, சூத்திரர்கள்; மூன்று, பறை (முரசு) இவையாகும். இப்படிப்பட்ட மிக மிக இழித்தன்மையான வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட ஒரு கதைக்காகவா இந்தியை இந்நாட்டில் நுழைக்க வேண்டும்?

பெண்கள் உரிமை வேட்கை கொண்ட லையும் இத்தமிழ் நாட்டில், சூத்திரன் என்கிற வார்த்தையை ஏட்டில்கூட இருக்கவிட மாட்டோம் என்று எண்ணிறந்த வாலிபர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்திலா, பெண்ணடிமையையும், சூத்திர இழிவையும் காக்கும் இந்தியை வீரத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக்க நினைப்பதா? இது புத்திசாலி தனமாகுமா? இதைவிட முட்டாள் தனம் வேறு உண்டா?

தமிழ் மொழிக்குள்ள பண்பில், லட்சணத்தில் ஒரு பங்கு பண்புகூட இந்தி மொழியில் இல்லை என்பதை அமைச்சரேக்கூட ஒப்புக் கொள்வார். தமிழ்மொழி மந்தியையும் மனிதனாக்கும் தன்மை பெற்றது. ஆனால், இந்தியோ மனிதனையும் மந்தியாக்கும் தன்மையுடையது.

ஆகவே, கலையற்ற, பண்பற்ற, கலைஞர்களை ஈன்றெடுக்கும் ஆற்றல் அற்ற, மனிதர்களின் மனிதத்தன்மையை அகற்றி அவர்களை மந்திகள் ஆக்கவல்ல இவ் இந்திமொழி இந் நாட்டு மக்களுக்குத் தேவையற்றது. இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்.

ஒரு காலத்தில் நாவலந் தீவு பூராவும், இன்றையப் பரத கண்டம் பூராவும் பரவியிருந்த தமிழகம், முதலில் விந்தியம் வரை குறுகி இன்று வேங்கடம் வரை குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இத்தமிழகத்தில் இந்தி நுழைந்து விடுமானாலோ தமிழகமே மறைந்து போகும், மாண்டு போகும்.

ஆகவே இதை கடைசி மூச்சுள்ளவரை ஒவ்வொரு தமிழனும் எதிர்த்தே தீர வேண்டும்.

- தமிழ்ப் பெரியார் திரு.வி.க.

17.07.1948-ஆம் நாள் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் திறப்பாளர்

 - விடுதலை நாளேடு, 17.8.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக