உலக மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நெறியை நினைவூட்டி, அறிவுறுத்தும் அறநூல், திருவள்ளு வரின் திருக்குறள்.

‘பிறப்பொக்கும் எல்லார்க்கும்' என்ற பேதமிலா பெருநெறியே மனித குலத்தினை உயர்த்திடும் வாழ்வியல் என்பதையும், எதையும் உன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முடிவு செய் என்றும் இடித்துள்ளது. மனித குலத்திற்கு வாழ்வியலாகும் முக்கிய கூறு மூன்று. அறம், பொருள் - இன்பம் என்பதே என்பதை விளக்கிடும் நூல். தமிழ்ப் பண்பாடு திராவிட நாகரீகம் எப்படி சிறந்ததாக 2500 ஆண்டுகளுக்கு முன் தழைத்தோங்கியிருந்தால், இப்படிப்பட்ட ஒப்பற்ற உயர் அறிவுச் செம்மல் இப்படிப்பட்ட திருக்குறளை - ‘குறுகத்தறித்த குறளாக' ஆக்கி தந்திருக்க முடியும்.

இதுவரை திருக்குறள் எத்தனையோ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு செம்மொழி தமிழின் அரும் அறிவுக் கருவூலங்களில் முதன்மையதாக உள்ளது!

அதன் பதிப்புகள் பலவும் வந்துள்ளது. ஆனால் இப்போது, சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தவரால் ‘மீள் பதிப்பாக' 2016 இல் வெளியாகி யுள்ள திருக்குறள் 1812ஆம் ஆண்டு வந்த பதிப்பின் மீள் பதிப்பு!

208 ஆண்டுக்கு முன் வந்த திருக்குறள் பதிப்பினை நமது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிவு விருந்தாக்கியுள்ளனர்.

மூலப் பதிப்பு புள்ளிகள் வைக்கப்படாத ஓலைச் சுவடி எழுத்துக்கள். ஏனெனில் புள்ளி வைத்தால் எழுத்தாணி ஓலைச் சுவடியைக் கிழித்துவிடக்கூடிய அவலம் உண்டு. அதனால் மக்கள் மனதால் அப்புள்ளியைப் போட்டு நிரப்பியே படித்துப் பயன் பெறப்பழகி விட்டிருக்கக் கூடும்.

அப்பதிப்பு அப்படியே தலைப்பு உட்பட - புள்ளி யில்லாமலே, (ஒரிஜினலில்) மூலத்தில் உள்ளபடி மீள் பதிப்பு அழகிய அச்சு, கட்டுகள் கூட ஒரு அருமை யான கையடக்க பரிசுப் பொருளாகப் பெறத் தகுதி யான நூலாக வெளி வந்துள்ளது.

“திருக்குறள்" (புள்ளியில்லாதது கூட) உள்ளே அதிகாரம் - குறட்பாக்கள் அனைத்தும் இம்முறை யிலே அப்படியே அச்சில் மீள் பதிப்பாக வெளி வந்துள்ளது!

200 ஆண்டுக்கு முன்னரே வந்துள்ள நம் இலக் கிய அறிவுக் கருவூலம் பற்றிய, ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலக இயக்குநர் திரு. க.சுந்தர் அவர்கள் எழுதியுள்ள பதிப்புரை பல அரிய தகவல்கள் தருகிறது. படியுங்கள்.

பதிப்புரை

செவ்வியல் இலக்கியங்களில் முதலில் அச்சேறி யது திருக்குறளே. 1812ல் வெளிவந்த இப்பதிப்பு, புள்ளியில்லா மெய்யெழுத்துக்களுடன் அச்சிடப் பட்டுள்ளது. இப்பதிப்பைத் தொடர்ந்து பல பதிப்பு கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திருக்குறள் முதற்பதிப்பு நூல் உலகளவில் இன்று ஐந்திற்கும் குறைவான பிரதிகளே உள்ளன. அரிதான இந் நூலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் இந்நூல் அனைவரிடத்திலும் சென்றடையும் என்ற எண் ணம் எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகரான திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் திருக்குறள் இன்பத்துப்பாலில் ஏழு குறட்பாக்களுக்கு நாட்டுப்புறப் பாணியில் பாடல்கள் இயற்றியுள்ளார். இத்தொகுப்பிற்கு திரு. டிராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்த ஓவியங் களுடன் புத்தக வடிவிலும், அதற்கு திரு. தாஜ் நூர் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஒலிப்பேழை வடிவிலும் 27 நவம்பர் 2016 அன்று வெளியிடப் படுகிறது. அதே நாளில் இப்பாடல் இசை அரங் கேற்றமும் நடைபெறவுள்ளது. இந்நாட்டுக்குறள் விழா திருக்குறள் ஆர்வலர்களைக் கொண்ட வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடக குழுமத்தினால் நடத்தப்படுகிறது. இவ்விழாவன்றே இம்மீள்பதிப்பை வெளியிடுவது மிக பொருத்தமாக இருக்கும் என வள்ளுவர் குடும்பத்தினர் ஊக்க மளித்தனர். இதற்காக, திருக்குறள் நூலின் முதல் பதிப்பு பிரதியை எண்ணிமப்படுத்தி, எண்ணிமத் தொழில்நுட்பம் மூலமாக சுத்தம் செய்து முதல் பதிப்பு பிரதியில் எந்த ஒரு மாற்றமும் திருத்தமும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கப்படுகிறது.

இம்மீள்பதிப்பை சேகரிப்பாளர் பிரதியாக (Collector's edition) அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். 1812ல் வெளிவந்த பதிப்பு அக்காலத்திலேயே பிரதி வேண்டுவோரிடம் பொருளுதவியை முன் கட்டணமாக பெற்றுக்கொண்டே அச்சிட்டப்பட்டது. அதேபோல் இம்மீள்பதிப்பையும் பொருளுதவி பெற்றே அச்சிட எண்ணினோம். ஸ்ரீராம் காபிடல் லிமிடெட் நிறுவனம் (Shriram Capital Limited) இதற்காக பெரும்பான்மை தொகையாக ரூபாய் மூன்று லட்சம் நல்கையாக வழங்கியுள்ளது. இந்நல் கையுடன், மீதமுள்ள பணத்தை ஆர்வலர்களிடம் பிரதிகளுக்கான முன்பணம் பெற்று இப்பிரதி அச்சிடப்படுகிறது. இப்பிரதியின் மூலம் வரும் வருவாய் நூலகப் பணிகளுக்குச் செலவிடப்படும்.

- க. சுந்தர் இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை

பாராட்டத்தக்கப் பணி. ஒவ்வொரு இல்லத்திலும் அணி செய்ய வேண்டியது.

இதனை எனக்கு 1.12.2020 அன்று நேரில் வந்து அளித்து மகிழ்ச்சியை வழங்கிய நண்பர்கள் திராவிட சிந்துவெளி நாகரிக ஆய்வாளர் திரு. ஆர்.பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்களுக்கும், இயக்குநர் க.சுந்தர் அவர்களுக்கும், நண்பர் விசுவேஷ் அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றி!