பக்கங்கள்

திங்கள், 18 ஜனவரி, 2021

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்  - பெரியாரின் பங்களிப்பு என்ன?

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவின்படி தமிழ் மிகத் தொன்மையான மொழி. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழுமை பெற்றிருந்த மொழி.

வட்டெழுத்தில் தொடங்கி இன்று பயன்படுத்தப்படும் வகையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன.

ஓலைச் சுவடிகளில் எழுதும்போது புள்ளி வைப்பது இயலாது. ஓலையில் ஓட்டை விழும். எனவே புள்ளி என்பதைக் கூட "புளளி" என்றே எழுதுவர்.

கல்வெட்டுக்களில் இந்தச் சிரமம் இல்லை.

பின்பு அச்சு எனும் Printing அறிவியல் அறிமுகமானபின்பு எழுத்துகளில் மாற்றம் தேவைப் பட்டது.

அதாவது எழுதும் பொருட்கள், அச்சு, இன்றைய கணினி ஆகியவற்றுக்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

அச்சுக் கலை உருவானபோது, வீரமாமுனிவர் அதற்கேற்ப சில. மாற்றங்கள் செய்கிறார்.

அது எ, ஏ, தே. தோ என்று இன்று நாம் பயன்படுத்தி வரும் மாற்றம். முன்பு எ என்பதை ஏ என்று ஒலிக்கும் வகையில் எழுத மேலே புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இதற்கென அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

வீரமாமுனிவருக்குப் பிறகு  7 எழுத்துகளுடன் ஐ, ஒள எனும் எழுத்துகளிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஐ என்பதை அய் எனவும் ஒள என்பதை அவ் என்றும் மாற்றக் கோரினர்.

அவ்வாறு தமிழறிஞர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் ....

1930 - காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.

1933 - திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.

1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.

1935 - குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் பெரியார். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ).

1941 - சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1948 -  பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.

1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார்

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன.

1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)

1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.

1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம் ஜி ஆர் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.

1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

இந்த வரிசையில்,

பெரியார் இதுகுறித்த கட்டுரை எழுதியதோடு நிற்காமல் குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் அச்சிலேயே இந்த மாற்றத்தை அரசின் ஒப்புதலோ, அங்கீகாரமோ இல்லாமலேயே அமல்படுத்தி செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல் விதையிட்டவர் 1930 - ல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா.

35 ல் தான் பெரியார் இதை முன்னெடுக்கிறார்.

காரணம், அச்சகத்தில் பழைய எழுத்துகளைக் கோர்ப்பதில் நடைமுறைச் சிக்கல், குறிப்பாக அச்சு வார்ப்பதில் இரட்டை வேலையாக இருந்தது.

ஆனால், இந்த மாற்றங்களில் ஐ. ஒள ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,  கடுமையாக எதிர்த்தனர். காரணம் இவை ஓரெழுத்து மொழியாக நின்று பொருள் தரக்கூடியவை பிரித்தால் அந்தப் பொருளைத் தராது என்று ண் எதிர்த்தனர்.

இதையடுத்து இந்த இரு எழுத்துகளை விட்டுவிட்டு மீதமுள்ள 7 உயிர் மெய் எழுத்துக்களைத் திருத்தி 19/10/1978 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

பெரியார் செய்ததாலும், பெரியாரை சிறப்பிக்கவுமே எம்.ஜி.ஆர் செய்தது இது


ஆனால் பெரியார், 

எழுத்து சீர்திருத்தத்தைக் குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: 

‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, பொதுவாகவே தம்மைப் பற்றிக் குறிப்பிடும்போது

"நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’  என்று குடிஅரசு, 25.12.1927 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாணை வெளியிட்டும் பதிப்பகங்கள், பத்திரிகைகள் பல மாறவில்லை. அரசு சலுகைகள் கிடைக்காது என எச்சரிகை விட்டவுடன் மாற்றம் பெற்றது.

( கட்டுரை முழுமை பெறவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக