பெரியார் மறுமொழி தமிழர் திருநாள்
தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண) கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும் பலர்.
இந்நிலைகளுக்கு மாற்றாகவும், தமிழ் மக்களிடையே தமிழிய உணர்வும் இனநல உணர்வும் கிளர்ந்தெழுதற்கு வாய்ப்பாகவும், பொங்கலை வாழ்வியல் சிறப்பு விழா வாகக் கொண்டாடுவதோடு, இயக்க நிலைப்படுத்தியும் நாடெங்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரு மக்கள் சிலர் மனங்கொண்டனர்.
பேரா. கா. நமச்சிவாயனார் ஏறத்தாழக் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொங்கல் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்னும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழுணர்வுடைய அரசியல் கட்சித் தலைவர்கள் முதலானோரைக் கண்டு அளவளாவியதன் விளைவாகப் பொங்கல் தமிழர் திருநாளாக மலர்ந்தது. நாடெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடைபெறலாயின.
தமிழர் திருநாள் தொடர்பாக மலேயாவில் உள்ள பெரியவர் புலவர் கா.ப. சாமி அவர்கள் கூறியுள்ளது அறியத் தக்கது. அது வருமாறு:
1937இல் திருச்சியில் அனைத்துத் தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு, பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அதில் கா. சுப்பிரமணி யனார், மதுரைத் தமிழவேள் பி.டி. இராசன், திரு.வி.க., மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால், அங்கு இருந்த சூழ்நிலையில், அம் மாநாட்டிற்குச் சென்றிருந் தேன். அந்த மாநாட்டில், பொங்கல் சமய விழாவா, சமய மற்ற விழாவா என்று கடுமையான தருக்கம் நடைபெற்றது.
இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் இது (பொங்கல்) சமயச் சார்பு இல்லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்த இலக்கணம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம், எந்த இதிகாசம் இருக்கிறது? எனவே, எந்தப் புராணமும் இல்லாத போது, தமிழில் புறநானூற்றில் பிட்டங் கொற்றனின் வரலாற்றில் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும்? நண்பர் ஈ.வெ.இரா. இதை ஏற்றுக் கொண் டாலும் சரி, ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி! என்றார்.
இல்லை; நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக மறுமொழி உரைத்தார். பெரியார்தாம் இம் மாநாட்டை நடத்தினார்.
பொங்கல் மதச்சார்பற்ற, முதன்மையான, பொன்னான விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர். திரு.வி.க எழுந்து, அருமை நண்பர் ஈ.வெ.இரா. அவர்கள், பொங்கலைச் சமயச் சார்பற்ற ஒரு தனிப் பெருந் தமிழர் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்குத் தமிழுலகமே பாராட்டக் காத்திருக்கிறது என்று குறிப் பிட்டார். அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாகப் பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.
இச்செய்தி பலருக்குத் தெரியாது. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது அகவை 19.
அம்மாநாடு சிறப்பாக இந்தியை எதிர்ப்பதற்கு கூட்டப்பட்டதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைமுன்மொழிந்தவர் பி.டி. இராசன். வழிமொழிந்தவர் திரு.வி.க. தமிழர் திருநாள் கொண்டாடத் தொடங்கிய பின் வகை வகையான பொங்கல் வாழ்த்துக் கள் எழிலார்ந்த தோற்றத்தொடும், இனிய தமிழிலும் ஏற்றமிகு கருத்துகளொடும் மக்களிடையே பரவின. ஆரியப் பார்ப்பனர்கள் நடத்திய இதழ்கள் தீபாவளி மலர் வெளியிட்டு வந்ததைப் போல், தமிழுணர்வார்ந்த ஏடுகள் பொலிவான தோற்றத்தோடு பொங்கல் மலர் வெளியிடலாயின.
மேற்கூறியவாறு பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்குத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடத்தப்பட்டன. தூயதமிழ்க் காவலர் கு.மு .அண்ணல் தங்கோ அவர்கள் தமிழர் திருநாளை ஆண்டுதோறும் பத்துநாள் விழாவாகப் பல்லாண்டுக் காலம் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மறுமொழி
பொங்கற் பெருநாளைத் தமிழர் திருநாளாக அறிவித்து அதனைத் தமிழ்நல, இனநல இயக்கங்களும் பிறவும் எழுச்சியுறக் கொண்டாடத் தொடங்கிய அளவில் அது தமிழ்மக்கள் வாழும் அயல்நாடுகளிலும் பரவலாயிற்று. ஆயினும் மலேயா -- சிங்கப்பூர் நாடுகளில் தமிழர் திருநாளைப் பரப்புவதில் பெரிதும் முனைந்து நின்றவர் களுட் சிலரே அதில் சற்று முரண்படுவார் ஆயினர்.
தமிழர்களில் கடவுள் நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்டவர்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் சமயக் கடைப்பிடிகள் சில ஒட்டி நிற்றலைச் சுட்டிக்காட்டி, பொங்கல் விழா இந்துமதப் பண்டிகை யென்றும், அது தமிழர் திருநாளாகாது என்றும், தமிழர் திருநாளைப் பொங்கலொடு சார்த்தக் கூடாது என்றும், பொங்கற் பெருநாள் வேறு; தமிழர் திருநாள் வேறு என்றும் குறுக் குச்சால் ஓட்டத் தொடங்கினர்.
மலேயா -_ சிங்கப்பூரில் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள் என்பாரும், அது இந்துமத விழாவே; தமிழர் திருநாள் அன்று என்பாருமாய்த் தமிழர்கள் முரண்பட்டு நின்ற நிலையில், அங்குச் சுற்றுச் செலவு மேற்கொண் டிருந்த தன்மானத் தந்தை பெரியார் ஈ.வெ.இரா. அவர்க ளிடம் இதுபற்றி அவர்தம் கருத்தை அன்பர்கள் உசாவி னர். அப்போது பெரியார் அவர்கள் கூறிய மறுமொழி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!
அதுவருமாறு: பொங்கல் தமிழர் விழாதான். அது இந்துமத விழா ஆகாது. இந்தமத விழாவாக இருந்தால், மற்ற மற்ற இந்துமத விழாக்களைப் போல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுமா இல்லையா? அப்படிக் கொண்டாடப்படுவது இல்லையே, அது ஏன்? பொங்கல் தமிழ்நாட்டில் மட்டுந்தானே, அதிலும் தமிழர்களால் மட்டுந்தானே கொண்டாடப்படுகிறது!
பார்ப்பனர்கள் அதைக் கொண்டாடுகிறார்களா? இல்லையே! இந்துமத விழாவாக இருந்தால் அதைப் பார்ப்பான் கொண்டாடாமல் இருப்பானா? அவன்தானே, அதைக் கொண்டாடுவதில் முந்திக் கொண்டு நிற்பான்! பார்ப்பான் அதைக் கொண்டாடவில்லை; கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என்றால் என்ன பொருள்? அது தமிழர் திருநாள் என்பதுதானே! இதில் என்ன அய்யப்பாடு?
- நூல்: "தமிழ்த் தேசிய திருநாள்'
புலவர் இறைக்குருவனார்