பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

திருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்

  பெரியார் அவர்களும் புன்முறுவலோடு கைகூப்பி தமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் காட்டி விட்டு, தமது சொற்பொழிவைத் தொடங்கினார்கள். அவர்தம் 2 மணி நேர உருக்கமான சொற்பொழிவை மக்கள் யாவரும் மிக மிக அமைதியாகக் கேட்டனர்.


சொற்பொழிவின் துவக்கத்திலேயே தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும், அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்டபோதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக்கொண்டமை. தான் நடந்துகொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத்தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக்கொடுக்கும் வரை சற்று தாமதம் ஏற்படினும், பொறுத்திருந்தே பார்த்து நடத்தலே மேலானது என்றும், அதனால் சற்று சங்கடம் ஏற்படினும், அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துக்கள் அதில்  காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமோ அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க, தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை தம் அருமை நண்பர் பா.வே.மாணிக்க நாயக்கர் காலத்திலேயே தமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள்வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாட்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும், இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகளும் ஆரிய மாயையும் பெரும் அளவுக்கு நீங்கி தாம் எடுத்துக் கூறும் சீர்திருத்த கருத்துகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். நமது பிரச்சாரம் வெற்றி பெற்று விட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்துவிட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்ப துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும் நாணயமும் மிகவும் கெட்டுவிட்ட தென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிக மிக மலிந்துவிட்டதென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும் போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும், அவருக்கே பயன்படாது போய்விட்டமை காரணமாக வேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வள்ளுவர் - பொதுவுடைமைக்காரர்

மேலும், அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, இத்தகைய புனித சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துக்கள் பரப்பப்படவேண்டுமென்றும், ஆண்டுதோறும் இதுபோன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும் என்றும் கூறி, குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்றும், திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப் பட்டு விரைவில் செயலாற்றத் துவங்குமென்றும், அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்றும் கூறி, மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.

என்.எஸ்.கிருஷ்ணன்



அடுத்தபடியாகப் பேசிய நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன், அவர்கள் குறளுக்கு தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்கு ஒரு சிறிதும் பயன்படாததாக இருக்கிறதென்றும் நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற்கான முடிவு இம்மாநாட்டின் கண் ஏற்பட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டு சில காங்கிரஸ் அறிவாளிகள் பெரியார் அவர்கள் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவதுபோல், தம்மால் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாதென்றும், திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், மக்கள் யாவரும் மனிதத் தன்மை பெற்று மனிதர்களாக வாழவேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டுதான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார் என்றும், அவர் வாழ் நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தரவேண்டு மென்றும்கூறி இடுக்கண் வருங்கால் நகுக என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

சி.என்.அண்ணாதுரை

 


பிறகு, அண்ணாதுரை அவர்கள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்டவேண்டுமென்றும், குறளுக்கு நல்லதோர் உரைகாண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஓர் நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு அமைக்கப்பட வேண்டு மென்றும், அச்செயற்குழுவுக்கு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைத் செயலாளராக இருக்கவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா.அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியவர்களை அங்கத்தினர் களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும், அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பிரேரேபிக்குமுகத்தான், மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூல்கள் பல தேடிப் பார்த்தபோது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத்கீதை, இராமாயணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் இவை யாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரிய பிரச்சாரத்தால் புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள், திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவைகள் இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டித் திராவிடர்களுக்கும் _- எல்லா தமிழர்களுக்கும் தருகிறார் என்று குறிப்பிட்டார்.  மேலும், இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும், திராவிடன் கையில் குறளிருப்பதை பகவத்கீதை ஏந்தித் திரியும் பார்ப் பனர்கள் காண்பார்களாயின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து, நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல், தம் அகம்பாவத்தையும் மூட நம்பிக்கைகளையும்  கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறினார்.

நல்லதோர் செயல் திட்டம்

தளபதி அண்ணாதுரை மேலும் பேசுகையில், பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார் என்றும், அவர் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை  கைவிட்டறியாத நாம், பெரியார் ஓர் நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்ல பண்ணையாளர்களாகிய நாம், அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லாவகையாலும் பாடுபடுவோம் என்றும், திருக்குறளை துணைக்கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நம் வாழ்வைக் கெடுக்கவேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படுமோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் என்றும், கம்பருக்குத் திருவிழாக் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும் என்றும், விரைவில் வெற்றிமுரசு கொட்டி நமது பெரும்படைப் போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும்படை, ஒவ்வொரு போரிலும் வெற்றியே கண்ட நம் பெரும்படை திக்கெங்கணும் புறப்படும் என்றும், வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழ செயலாற்றும் என்றும் சூளுரை கூறி தம் சொற்பொழிவை முடித்தார்.
தீர்மானங்கள் யாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தலைவரின் சுருக்கமான முடிவுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.

- உண்மை இதழ், 1-15.5.18

திருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது!



சரியாகப் பத்து மணிக்குப் பெரியார் அவர்கள் கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் அவர்களை அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து பின் மொழிய திரு. ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார்.

தான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப் பதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பிறகே தம் சொற்பொழிவைத் தொடங்கினார். அவர் தம்முடைய அரிய சொற்பொழிவில் திருக்குறள் எப்படி ஆரிய கலாச்சாரத்திற்கு நேர் விரோதமான நூல் என்பதைத் தொல்காப்பியத்தின் ஆதாரங் கொண்டும், ஆரிய வேதங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டும், மொகஞ்சதாரோ கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களைக் கொண்டும் விளங்குமுகத்தான் திராவிடர்கள் எப்போதுமே யாகத்தையும், அதன் மூலம் பிராணிகளை பலியிடுதலையும் வெறுத்து வந்தவர்கள் என்பதையும், அதனால் ஆரியர்களால் விரோதிகள் என்றும், அடிமைகள் என்றும் தூற்றப்பட்டார்கள் என்றும் எடுத்துக் காட்டினார். யாகத்தை வெறுப்பவர்கள், பலியை வெறுப்பவர்கள், இந்திரனை வழிபடாதவர்கள், விரதங்களை அநுஷ்டிக்காதவர்கள், மிருதுவான சப்தமுடைய மொழியைப் பேசுபவர்கள் என்று தென்னாட்டில் இருந்த மக்களைக் கூறியிருப்பதிலிருந்தே திராவிடர் கலாச்சாரம், ஆரிய கலாச்சாரத்திற்கு விரோதமானது என்று காணக் கிடக்கிறதென்றும், வால்மீகி ராமாயணத்தில் யாகத்தை வெறுத்தவர்கள் ராட்சசர்கள், வானரங்கள் என்று கூறியிருந்தாலும், அவர்களையே பெரிய சாஸ்திரங்களில் வல்லுநர் என்றும், நிர்வாகத் திறமையும், அரசியல் அறிவும் பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ராட்சசர்கள் என்று கூறப்பட்டிருப்பது திராவிடர்களையே குறிக்கிறதென்பது நன்கு பெறப்படுகிறதென்றும்,

மேலும் காட்டு மிராண்டிகள் என்று அவர்களை வர்ணித்திருந்தும் அவர்களிடத்து நடத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒன்றுகூட காணப் படவில்லை என்பதையும் எடுத்துக் காட்டி, பஜனர் ஒருவரால் எழுதப்பட்ட பத்ம புராணத்தை ஆதாரமாகக் காட்டி தமிழர்களின் பண்பாட்டின் மேன்மை எவ்வளவு ஆரிய கலாச்சாரத்திற்கு புறம்பானது என்று எடுத்துக்காட்டினார்.

மேலும் பேசுகையில், வேதத்தில் காணப்படும் கலாச்சாரம் ஹிம்சையையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால், திராவிட கலாச்சாரமோ அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். திருக்குறளில் யாகம் முதலாயன வெறுக்கப்பட்டிருப்பதும், உழவுத்தொழில் மேன்மைப்படுத்தப்பட்டிருப்பதும், பரத்தையர் நேசமும், மது உண்ணலும் வெறுக்கப் பட்டிருப்பதும் முற்றிலும் ஆரியத்திற்கு முரண்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு என்று பலபலத் திருக்குறளின் மேன்மையை எடுத்துக்கூறி, திருக்குறளைத் திராவிடர்கள் பொக்கிஷம்போல் காப்பாற்றி, திருவள்ளுவர் வழிப்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதன் மூலம் திராவிட நாட்டைக் காப்பாற்றி அதன்மூலம் இந்தியாவை ஏன் உலகத்தையே காப்பாற்ற வேண்டியது திராவிடனுடைய கடமை என்றும் குறிப்பிட்டதோடு,

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் வாழ்க்கையை அமைக்க பலவான சூழ்ச்சிகள் இன்று நாட்டில் நடைபெற்று வரும் இக்காலத்தில் இந்து மதம் ஆனது அன்புவழி போதிக்கும் அறக்கோயில்களை கொலை களமாக்கி வைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது மிகமிக அவசியம். இந்நாடு உய்ய, இவ்வுலகு உய்ய திருக்குறள் ஆட்சி ஏற்படுவது தவிர வேறு வழியில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறி,

திருவள்ளுவர் அறத்துப்பால் ஆரியர்களின் வேதஸ்மிருதி வாக்கியங்களுக்கு முரண்பட்ட தென்றும், ஆரியர் காட்டிய கடவுள்கள் திருவள்ளுவரின் கடவுளுக்கு முற்றிலும் முரண்பட்டது என்றும், திருவள்ளுவரின் பொருளியல் பாக்கள் யாவும் கவுடல்ய அர்த்த சாஸ்திரத்திற்கு, முற்றிலும் மாறுபட்டதென்றும் அதில் விபசாரத்தொழில் வருமானமும், மது வருமானமும் குறிப்பிட்டிருக்கும் வள்ளுவர் இரண்டையும் கண்டித்திருக்கிறார் என்றும், திருவள்ளுவர் இன்பப் பாக்கள் யாவும் வத்சயனார், காமசூத்திரத்திற்கு, வெறும் ஆண் பெண் புணர்ச்சி லீலைகளைக் காட்டும் நூலுக்கு முற்றிலும் முரண்பட்டு தலைசிறந்த மனோதத்துவ ஆராய்ச்சி நூலாக விளங்குகிறதென்றும் கூறினார்.

பின்னர் பெரியார் அவர்கள் சிறிதுநேரம் பேசிய பின் தோழர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். நேற்றைவிட இன்று மக்கள் திரளாக மாநாட்டில் கலந்துகொண்டனர். கொட்டகை பூராவும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். கோவை ராவ்சாகிப் திரு.சி.எம்.ராமச்சந்திர செட்டியார் அவர்களும், அறிஞர் அண்ணாதுரை அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டார்கள். நாவலர் பாரதியார் அவர்களும் வந்திருந்தார்கள்.

நெடுஞ்செழியன் அவர்கள் பேசிய பிறகு தொடர்ந்து அன்பழகன் அவர்களும், விருதுநகர் திருக்குறள் சங்கத் தலைவர் வெள்ளச்சாமி நாடார் அவர்களும் திரு.கா.அப்பாதுரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். தலைவர் அவர்கள் வேறு அலுவல் நிமித்தம் வெளியில் செல்லுகையில் எனக்குப் பதிலாக நாவலர் பாரதியார் அவர்கள் தலைமை வகித்துத் தருவார் என்று கூறி விடைபெற்றுச் சென்றார். நேற்று போல் இன்றும் கோர் ஆபீஸர் தோழர் ரா.ஜெகதீஸ்வரன் தலைமையில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர் 20 பேர் வந்திருந்தனர். சில சிறிய காயங்களுக்கு முதற் சிகிச்சை அளிக்கப்பட்டது. நண்பகல் 12.30 மணிக்கு தோழர் கா.அப்பாதுரை அவர்கள் வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்பு தோன்றியது வங்காளத்தில்தான் என்றும், அவ்வெதிர்ப்பின் தோற்றுதல்தான் பவுத்த மதமும், சமண மதமும் என்று எடுத்துக் கூறி, வங்காளிகளும் திராவிடர்களே என்றும், திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சி அளிக்கப் பாடுபட்டு வருவோமானால், விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர்களின் ஆரிய மோகமும் மாய்ந்து பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

பிறகு, இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள் வள்ளுவரது இன்பப் பாக்களின் காமத்துப் பாலில் கூறப்பட்டுள்ள குறள்களின் மேன்மையைப் பற்றி சிறிது நேரம் பேசிய பிறகு, தலைமை வகித்த நாவலர் பாரதியார் அவர்கள் காமம் என்ற சொல்லையே புலவர்கள், வடமொழிச் சொல் என்றே முடிவு கட்டத் துணிந்துவிட்டார்கள்போல் காணப்படுகிறது என்றும், காமம் தூய தமிழ்ச் சொல்தான் என்றும், வடமொழிதான் அதை தமிழினிடமிருந்து கடன் வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் எடுத்துக் கூறி, காமம் என்ற சொல் தமிழில் காதலையும், வடமொழியில் பொதுவாக எல்லா ஆசையையும் குறிக்குமென்றும் தெரிவித்தார். பகல் உணவிற்குப் பிறகு மாநாடு மறுபடியும் 3 மணி சுமாருக்கு நாவலர் திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் கூடியது. சேலம் இராசிபுரத்தில் இருந்து வெளிவரும் திருக்குறள் ஆட்சியின் ஆசிரியர் தோழர் திரு. அரங்கசாமி அவர்கள், நாடெங்கணும் திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி சிறிது நேரம் பேசினார்கள். பிறகு விடுதலை ஆசிரியர் தோழர் எஸ்.குருசாமி அவர்கள், இந்நாட்டில் வதியும் பார்ப்பனர்களும் தம் ஜாதி அகம்பாவத்தைக் கைவிட்டு திராவிடர்களோடு தனிநாடு காணும் முயற்சியில் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதியே, குறள் மாநாடு போன்ற பொது மாநாடுகள் கூட்டப்பட்டும்கூட, பார்ப்பனர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள தவறியே வருகிறார்கள் என்றும், பார்ப்பனர்கள் எப்போதும் போன்றே இன்றும் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருந்து வருகிறார்கள் என்றும், பார்ப்பனியம் அடியோடு அழிக்கப்படும் வரை இன்பத் திராவிடத்தைக் காண்பது இயலாது என்றும், ஆரிய மனுதர்மத்தின் நேர் எதிர் நூலாகிய வள்ளுவர் குறள் இதற்கு வெகுவாகப் பயன்படுமாதலால் அதன் கருத்துக்களைப் போற்றிப் பரப்ப வேண்டியது திராவிடன் ஒவ்வொருவனுடைய கடமையும் ஆகும் என்று எடுத்துக் கூறினார். பெரியார் பேச்சு

பிறகு, பெரியார் அவர்கள் பேச எழவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைகொட்டி பேராரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டனர்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-30.4.18

தமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது! ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது!


ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளின் மொழியியல் அறிஞர்கள் ஓராண்டுக் காலம் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.


சமஸ்கிருதம் தொன்மொழி, செம்மொழி என்பதெல்லாம் மோசடியானவை. சமஸ்கிருதம் எழுத்தற்ற பேச்சு மொழி. அதை எழுதாக்கிளவி என்றே அழைப்பர். தமிழிலிருந்துதான் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் பின்னாளில் தரப்பட்டது.

தமிழ்ச் சொற்களை மாற்றித்தான் சமஸ்கிருத சொற்களை உருவாக்கினர்.

சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்றும், சுரம் என்ற தமிழ்ச் சொல்லை ஜுரம் என்றும், அரசன் என்ற தமிழ்ச் சொல்லை இடவல மாற்ற முறையில் ராஜன் என்று ஆக்கினர். இந்த உண்மைகளை மறுக்க எந்த ஆரிய பார்ப்பானாவது தயாரா? உண்மையான தொன்மொழியாம் செம்மொழித் தமிழைத் தமிழர்கள் போற்றிக் காக்க வேண்டும்.

போலி மொழியான செத்த சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்துத் தடுக்க வேண்டும்!

- உண்மை இதழ், 16-30.4.18

*பெரியார் மீதான அவதூறுகளுக்கு சவுக்கடி*

#மதிமாறன்
*பெரியார் மீதான அவதூறுகளுக்கு சவுக்கடி*

கேள்வி :
*பெரியாரும் திராவிட இயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?*

க.சுரேசு, கயத்தாறு.
*தோழர் வே.மதிமாறன்* பதில் :-
*பொய்....!.*
*பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர்.*..!

தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.

*திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.*

👉🏿
*பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை' என்கிற தனித்தமிழ் பெயர்கள்.*

*1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள்.*

*மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.*

*மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்'' என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.*

*புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான்.*
*அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்ய பாடுபட்டார்.*

*அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.*
*‘நமஸ்காரம்' என்கிற சமஸ்கிருதத்தையும், "கும்புடுறேன் சாமி' என்கிற அடிமை தமிழையும் ஒழித்து "வணக்கம்' என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான்.*
*இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.*
>>>>>>>>>>>>>>>>>>>>>>

*அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே.*

*திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி.*
-------------------
*கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை.*
---------------------
*இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.*

ஆக, *பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே.
*பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.*

சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.
1.8.17, முகநூல்பதிவு