பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

திருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது!



சரியாகப் பத்து மணிக்குப் பெரியார் அவர்கள் கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் அவர்களை அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து பின் மொழிய திரு. ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார்.

தான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப் பதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பிறகே தம் சொற்பொழிவைத் தொடங்கினார். அவர் தம்முடைய அரிய சொற்பொழிவில் திருக்குறள் எப்படி ஆரிய கலாச்சாரத்திற்கு நேர் விரோதமான நூல் என்பதைத் தொல்காப்பியத்தின் ஆதாரங் கொண்டும், ஆரிய வேதங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டும், மொகஞ்சதாரோ கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களைக் கொண்டும் விளங்குமுகத்தான் திராவிடர்கள் எப்போதுமே யாகத்தையும், அதன் மூலம் பிராணிகளை பலியிடுதலையும் வெறுத்து வந்தவர்கள் என்பதையும், அதனால் ஆரியர்களால் விரோதிகள் என்றும், அடிமைகள் என்றும் தூற்றப்பட்டார்கள் என்றும் எடுத்துக் காட்டினார். யாகத்தை வெறுப்பவர்கள், பலியை வெறுப்பவர்கள், இந்திரனை வழிபடாதவர்கள், விரதங்களை அநுஷ்டிக்காதவர்கள், மிருதுவான சப்தமுடைய மொழியைப் பேசுபவர்கள் என்று தென்னாட்டில் இருந்த மக்களைக் கூறியிருப்பதிலிருந்தே திராவிடர் கலாச்சாரம், ஆரிய கலாச்சாரத்திற்கு விரோதமானது என்று காணக் கிடக்கிறதென்றும், வால்மீகி ராமாயணத்தில் யாகத்தை வெறுத்தவர்கள் ராட்சசர்கள், வானரங்கள் என்று கூறியிருந்தாலும், அவர்களையே பெரிய சாஸ்திரங்களில் வல்லுநர் என்றும், நிர்வாகத் திறமையும், அரசியல் அறிவும் பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ராட்சசர்கள் என்று கூறப்பட்டிருப்பது திராவிடர்களையே குறிக்கிறதென்பது நன்கு பெறப்படுகிறதென்றும்,

மேலும் காட்டு மிராண்டிகள் என்று அவர்களை வர்ணித்திருந்தும் அவர்களிடத்து நடத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒன்றுகூட காணப் படவில்லை என்பதையும் எடுத்துக் காட்டி, பஜனர் ஒருவரால் எழுதப்பட்ட பத்ம புராணத்தை ஆதாரமாகக் காட்டி தமிழர்களின் பண்பாட்டின் மேன்மை எவ்வளவு ஆரிய கலாச்சாரத்திற்கு புறம்பானது என்று எடுத்துக்காட்டினார்.

மேலும் பேசுகையில், வேதத்தில் காணப்படும் கலாச்சாரம் ஹிம்சையையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால், திராவிட கலாச்சாரமோ அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். திருக்குறளில் யாகம் முதலாயன வெறுக்கப்பட்டிருப்பதும், உழவுத்தொழில் மேன்மைப்படுத்தப்பட்டிருப்பதும், பரத்தையர் நேசமும், மது உண்ணலும் வெறுக்கப் பட்டிருப்பதும் முற்றிலும் ஆரியத்திற்கு முரண்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு என்று பலபலத் திருக்குறளின் மேன்மையை எடுத்துக்கூறி, திருக்குறளைத் திராவிடர்கள் பொக்கிஷம்போல் காப்பாற்றி, திருவள்ளுவர் வழிப்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதன் மூலம் திராவிட நாட்டைக் காப்பாற்றி அதன்மூலம் இந்தியாவை ஏன் உலகத்தையே காப்பாற்ற வேண்டியது திராவிடனுடைய கடமை என்றும் குறிப்பிட்டதோடு,

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் வாழ்க்கையை அமைக்க பலவான சூழ்ச்சிகள் இன்று நாட்டில் நடைபெற்று வரும் இக்காலத்தில் இந்து மதம் ஆனது அன்புவழி போதிக்கும் அறக்கோயில்களை கொலை களமாக்கி வைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது மிகமிக அவசியம். இந்நாடு உய்ய, இவ்வுலகு உய்ய திருக்குறள் ஆட்சி ஏற்படுவது தவிர வேறு வழியில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறி,

திருவள்ளுவர் அறத்துப்பால் ஆரியர்களின் வேதஸ்மிருதி வாக்கியங்களுக்கு முரண்பட்ட தென்றும், ஆரியர் காட்டிய கடவுள்கள் திருவள்ளுவரின் கடவுளுக்கு முற்றிலும் முரண்பட்டது என்றும், திருவள்ளுவரின் பொருளியல் பாக்கள் யாவும் கவுடல்ய அர்த்த சாஸ்திரத்திற்கு, முற்றிலும் மாறுபட்டதென்றும் அதில் விபசாரத்தொழில் வருமானமும், மது வருமானமும் குறிப்பிட்டிருக்கும் வள்ளுவர் இரண்டையும் கண்டித்திருக்கிறார் என்றும், திருவள்ளுவர் இன்பப் பாக்கள் யாவும் வத்சயனார், காமசூத்திரத்திற்கு, வெறும் ஆண் பெண் புணர்ச்சி லீலைகளைக் காட்டும் நூலுக்கு முற்றிலும் முரண்பட்டு தலைசிறந்த மனோதத்துவ ஆராய்ச்சி நூலாக விளங்குகிறதென்றும் கூறினார்.

பின்னர் பெரியார் அவர்கள் சிறிதுநேரம் பேசிய பின் தோழர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். நேற்றைவிட இன்று மக்கள் திரளாக மாநாட்டில் கலந்துகொண்டனர். கொட்டகை பூராவும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். கோவை ராவ்சாகிப் திரு.சி.எம்.ராமச்சந்திர செட்டியார் அவர்களும், அறிஞர் அண்ணாதுரை அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டார்கள். நாவலர் பாரதியார் அவர்களும் வந்திருந்தார்கள்.

நெடுஞ்செழியன் அவர்கள் பேசிய பிறகு தொடர்ந்து அன்பழகன் அவர்களும், விருதுநகர் திருக்குறள் சங்கத் தலைவர் வெள்ளச்சாமி நாடார் அவர்களும் திரு.கா.அப்பாதுரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். தலைவர் அவர்கள் வேறு அலுவல் நிமித்தம் வெளியில் செல்லுகையில் எனக்குப் பதிலாக நாவலர் பாரதியார் அவர்கள் தலைமை வகித்துத் தருவார் என்று கூறி விடைபெற்றுச் சென்றார். நேற்று போல் இன்றும் கோர் ஆபீஸர் தோழர் ரா.ஜெகதீஸ்வரன் தலைமையில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர் 20 பேர் வந்திருந்தனர். சில சிறிய காயங்களுக்கு முதற் சிகிச்சை அளிக்கப்பட்டது. நண்பகல் 12.30 மணிக்கு தோழர் கா.அப்பாதுரை அவர்கள் வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்பு தோன்றியது வங்காளத்தில்தான் என்றும், அவ்வெதிர்ப்பின் தோற்றுதல்தான் பவுத்த மதமும், சமண மதமும் என்று எடுத்துக் கூறி, வங்காளிகளும் திராவிடர்களே என்றும், திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சி அளிக்கப் பாடுபட்டு வருவோமானால், விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர்களின் ஆரிய மோகமும் மாய்ந்து பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

பிறகு, இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள் வள்ளுவரது இன்பப் பாக்களின் காமத்துப் பாலில் கூறப்பட்டுள்ள குறள்களின் மேன்மையைப் பற்றி சிறிது நேரம் பேசிய பிறகு, தலைமை வகித்த நாவலர் பாரதியார் அவர்கள் காமம் என்ற சொல்லையே புலவர்கள், வடமொழிச் சொல் என்றே முடிவு கட்டத் துணிந்துவிட்டார்கள்போல் காணப்படுகிறது என்றும், காமம் தூய தமிழ்ச் சொல்தான் என்றும், வடமொழிதான் அதை தமிழினிடமிருந்து கடன் வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் எடுத்துக் கூறி, காமம் என்ற சொல் தமிழில் காதலையும், வடமொழியில் பொதுவாக எல்லா ஆசையையும் குறிக்குமென்றும் தெரிவித்தார். பகல் உணவிற்குப் பிறகு மாநாடு மறுபடியும் 3 மணி சுமாருக்கு நாவலர் திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் கூடியது. சேலம் இராசிபுரத்தில் இருந்து வெளிவரும் திருக்குறள் ஆட்சியின் ஆசிரியர் தோழர் திரு. அரங்கசாமி அவர்கள், நாடெங்கணும் திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி சிறிது நேரம் பேசினார்கள். பிறகு விடுதலை ஆசிரியர் தோழர் எஸ்.குருசாமி அவர்கள், இந்நாட்டில் வதியும் பார்ப்பனர்களும் தம் ஜாதி அகம்பாவத்தைக் கைவிட்டு திராவிடர்களோடு தனிநாடு காணும் முயற்சியில் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதியே, குறள் மாநாடு போன்ற பொது மாநாடுகள் கூட்டப்பட்டும்கூட, பார்ப்பனர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள தவறியே வருகிறார்கள் என்றும், பார்ப்பனர்கள் எப்போதும் போன்றே இன்றும் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருந்து வருகிறார்கள் என்றும், பார்ப்பனியம் அடியோடு அழிக்கப்படும் வரை இன்பத் திராவிடத்தைக் காண்பது இயலாது என்றும், ஆரிய மனுதர்மத்தின் நேர் எதிர் நூலாகிய வள்ளுவர் குறள் இதற்கு வெகுவாகப் பயன்படுமாதலால் அதன் கருத்துக்களைப் போற்றிப் பரப்ப வேண்டியது திராவிடன் ஒவ்வொருவனுடைய கடமையும் ஆகும் என்று எடுத்துக் கூறினார். பெரியார் பேச்சு

பிறகு, பெரியார் அவர்கள் பேச எழவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைகொட்டி பேராரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டனர்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-30.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக