பக்கங்கள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

03.05.1947 - குடிஅரசிலிருந்து... -

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங் கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக் காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்த வர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய் நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கை களை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத் தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக் களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக் குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட் டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங் களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை யாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)

- விடுதலை நாளேடு, 16. 8 .19

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (2)

13.11.1948-குடி அரசிலிருந்து...


சென்றவாரத் தொடர்ச்சி

எனவே, தான் மேல் இரண்டு நூல் களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபு ராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமா யணத்தில் ராமனும் ஆரியத் தலை வர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள் ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டு மிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப் படுகின்றன. அதில்தான் வைக்கப் புல்லி லிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட் டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத் திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதி விட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்த தாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற்றிற்குத் தகப்பன் மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டி ருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட் சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப் பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக் கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்பட வில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமயமாகவே காட்டப்பட்டிருக் கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப் படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில் ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக் கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மை யையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத் திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித் திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட்டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விப சாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித் திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக்கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதக னாய் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பிறந் தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக் கமாக நடந்து கொண்டிருப்பதாக யாரா லும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத் தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளு டைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப்பெண்டை அடைந்து கூடி இன் புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்.                  - தொடரும்

- விடுதலை நாளேடு, 16 .8 .19

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!

13.11.1948-குடி அரசிலிருந்து...

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்ப தாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள் ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்து விட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப் பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்பு களையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?

ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரியநூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற் றப்பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்பு களுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒரு வரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்

மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறுகின்றன இரா மாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டு மிராண்டித்தனமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக்கூடி யனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு ராமாயணக் காலட்சேபமா?

நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாராயணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப்பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்துவிட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மையானவர். ரெட்டியார் ராமாய ணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்ட மிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!

கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங் களின் வாயிலாக சினிமாக்களில் படக் காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு விட்டதன் பயனாய், இன்றும் வலி யுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடா ளும் அரசன் முதற்கொண்டு, காட்டி லேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும், எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணா மலைச் செட்டியாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படி யாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப் பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோ ருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. திராவிடர்களை இழிமக்க ளென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத் தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப் பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்

ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் இவற்றுள் பாரதந் தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமா யணந்தான் முந்தியது என்று கருது கிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தை யொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப் பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டது தான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற்பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது. கந்தபுராணத்தில் பாரதத் திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம்

-  விடுதலை நாளேடு, 9.8.19

கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள் - அகலமான செங்கல் சுவர் கட்டடம், இரும்பு துண்டுகள் கண்டுபிடிப்பு



கீழடி, ஆக.9  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் வெளி நாட்டு வகையைச் சேர்ந்த அணிக லன்கள் புதன்கிழமை  கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கீழடியில் தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பலரது நிலங் களில் தோண்டப்பட்ட 20 -க்கும் மேற் பட்ட குழிகளிலிருந்து மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய் யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள் ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந் நிலையில் புதன்கிழமை போதகுரு என்பவர் நிலத்தில் அகல மான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங் கல்களை விட இவை அகலமானவை என தெரியவந்துள்ளது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம்  நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கெனவே 6 உறைகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 7 -ஆவது உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.  மேலும் இங்கு கிடைத் துள்ள அணிகலன்கள், வடஅமெ ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் வகை கல்லில் செய்யப்பட்டவை என்றும், இதனால் பழங்காலத் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரும்புத் துண்டுகள் கண்டெடுப்பு

தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இரும்புத் துண்டுகள், 2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப் பட்டவை என தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 9 .8 .19

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஹிந்தி மொழிக் கண்டன கூட்டம் தோழர் த.வே.உமாமகேசுவரம் அவர்களின் வீரமுழக்கம்

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவின் கீழ் நேற்று மாலை 5 மணிக்கு ஹிந்தி கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தஞ்சையினின்றும், வெளியூர்களிலிருந் தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் குழுமிமிருந்தனர்.

செந்தமிழ்ப் புரவலர் இராவ் சாகிப் வே.உமா மகேசுவரம் பிள்ளை எல்லோரையும் வரவேற்றுப் பேசுகையில் கூறியதாவது:- இன்று இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கத் தோழர் வி.நாடிமுத்துப்பிள்ளை வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அவரிடமிருந்து வந்த கடிதமொன்றில் நான் காங்கிரஸ் கட்சியிலுள்ள வனாதலால் தலைமை வகிக்க வரமுடிய வில்லை, ஆனால் கூட்டத்திற்கு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம் "எதுவானாலும் அவர்கள் அகச்சான்றிற்கு இது சிறிதும் பொருந்தாது என்றே கொள்ளவேண்டும். தமிழ்க்குத் தீங்கு வருங்கால் பேசாது, ஒழுங்கு நடவடிக் கைக்குப் பயந்து உண்மைக் கருத்தை வெளியிடத் தயங்கிக் கோழையாயிருப்பது ஆண்மைத் தமிழனுக்கு அழகாகுமா? எனவே, நாம் காலம் தாழ்த்தல் கூடாது. விரைந்து ஆவன புரிதல் வேண்டும். பேச்சு உரிமை வேண்டும். உள்ளத்தில் பட்ட கருத்தை வெளியிட ஒவ் வொருவருக்கும் உரிமை வேண்டும் எனக் காங்கிரஸ் காரர் வாயளவில் கூறுகின்றனர்.

ஆனால் செய்கையிலே, வடநாட்டார் எதைச் சொன்னாலும் ஆராயாது ஏற்றுக் கொண்டு நம்மைத் தங்கள் கைப்பாவை போல் இயக்க விரும்புகின்றனர். என்னே அவர்கள் அறிவின்மை! நெஞ்சாரக் கண்ட தைப் பிறருக்காகவிட்டுக் கொடுத்தல் தமிழருக்கு அடுக்காது. வீரப் பெண்களும் 'நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என்று ஆண்மையுடன் கூறிய நக்கீரனும் இருந்த நாடு நம் தமிழ்நாடு, தலைவர்க்காகத் தன் மனதில் பட்ட உண்மைகளை வெளியிட அஞ்சுவது, பின்னிடுவது மதியீனம்! மதி யீனம்!! என்று பலமுறை அறை கூவுவேன். உயிரை விடினும் மானத்தை விடக்கூடாது. தாய்க்குச் சோறு போடாதிருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பார் செய்கை "தாய்க் கொலை சால்புடைத்து" என்பார் கூற்றுக்கே ஒப்பாகும்.

எனவே, நம் முயற்சிக்கும் பல இடர்கள் வரும். ஆனால் நாம் ஆண்மையுடன் - வினைத்திட்பத்துடன் எடுத்ததை முடிக்க வேண்டும்,'' பின்னர் வக்கீல் தோழர் வெங்கடாசலம் பிள்ளை பி.ஏ.பி.எல். அவர்களைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொண் டார். திரு.வேங்கடாசலம் பிள்ளையவர்கள் எதிர்பாராத வகையில் தன்னை தலைமை வகிக்க வேண்டுமாறு கூறியதற்காக வந்தனம் செலுத்திவிட்டுத் தோழர் உமா மகேசுவரம் பிள்ளையவர்கள் ஹிந்தி கண்டத் தீர்மா னத்தைக் கொண்டு வருவார் எனக் கூறியமர்ந்தார்.

"ஹிந்தியை 1, 2, 3ஆவது பாரங்கட்குக் கட்டாய பாடமாக வைப்பதுடன், மேல் வகுப்புகட்கு சரித்திர பாடத்தை ஹிந்தியில் பயிற்றுவித்தல் வேண்டும் என அரசியலார் செய்யும் முடிவை கரந்தைத் தமிழ்ச்சங்க ஆதரவின் கீழ்க்கூடியுள்ள தஞ்சைப் பொது மக்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்''

என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து விளக்கிக் கூறுகையில், ஆங்கிலம், கணிதம், சரிதம், உள நூல், பவுதீக நூல், பூதநூல், தாவர நூல், எனச் சுமக்கமாட்டாத பல பாடங்களைச் சிறுவர்கள் தலையில் ஏற்றியி ருக்கையில் ஹிந்தியையும் சிறுவர்கள் கற்க வேண்டு மென்பது பொருந்துமா ஜெர்மனி, பிரஞ்சு, ஜப்பான் முதலிய நாடுகளில் அயல் மொழி மூலம் கல்வி கற்றல் கிடையாது. சென்ற 350. ஆண்டுகளாய் ஆங்கில ஆட்சியில் நம் தமிழ் பாழ்பட்டது. 1910ஆம் ஆண்டு அரசியல் செல்வாக்கு பெற்ற கல்வி இலாகா டைரக்டர் தோழர் வி.கிருஷ்ணசாமி அய்யர் தமிழைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்றார். அதனை அரசியலாரும் ஒப்பினர். அக்காலம் தான் நம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தோன்றியது. இதுவரை நம் சங்கம் செய்த கூக்குரல் கடல்வரை எட்டியது. மக்கள் கிளர்ச்சி செய்தனர். அதன் பயனாக இன்று ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களைத் தமிழ் மொழியில் கற்க அரசாங்கத்தார் உதவி செய்தனர். இதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தர்க்கம், இயைபு நூல், பூதநூல், ஒலிநூல் முதலியவைகளைத் தமிழில் எழுதுவித்துப் பாடமாக்க முனைகின்றனர். இந்த நிலையில் ஹிந்தி வந்தால் தமிழ் நிலை என்னாவது: காந்தி, ஜவஹர் போன்றவர்களும் நம்மிடம் பேச வாயில்லாத ஊமையர்களாய் 'சாத்தான் சர்க்கார்' மொழியாகிய ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். நம்முடன் உறவாட அவர்கள் ஏன் தமிழ் கற்றல் கூடாது: நம்மவர் வடநாட்டார்க்கு அடிமையாய் - தன் மதிப்பின்றி 'நீர் வழிச்செல்லும் புணைபோல்' வட நாட்டார் கூறிய தையே கிளிப்பிள்ளைகள் போல் கூறி வருகின்றனர். இது கொடுமை! கொடுமை! கொடுமை!!!

'ஹிந்தி' வந்தால் வடமொழியாளருக்குச் சுலபமாக லாம்! ஹிந்தி, பட்லர் இங்கிலீஷைப் போல் மொகலாயர் காலத்தில் தோன்றிய ஒரு கதம்பமொழி. அதற்கு எழுத்துண்டா? இலக்கியமுண்டா? நாகரிகத்தில் தாழ்ந்த இலம்பாடிகள்' பேச்சைப்போன்ற மொழி. இவர்கள் செய்கை இந்நிலையில் 'மக்களே போலும் கயவர்' என்ற பெரியாரின் வாக்கை நினைவூட்டுகின்றது. வடநாட்டினருடன் பேச உறவாட ஹிந்தி பயன் பெறுமாம்! ஒருவேளை ஏன் இறுதிக் காலத்தில் நான் காசியாத்திரை போகுங்கால் பீடி, சுருட்டு விலை பேசி வாங்கவும் ஜட்கா வண்டிக்காரனுடன் பேசவும்  வேண் டுமானால் உதவி செய்யும்! ஜவகர் ஓரிடத்தில் சிறந்த மொழிகளில் தமிழையும் ஒன்றாகக் குறிப்பிடுவதுடன், அவரவர்கள் தாய் மொழியைப் புறக்கணிக்காதீர்கள்; ஹிந்தியைப் பொதுப் பேச்சிற்காக வேண்டுமானால் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நம்மவர் போல் கோழைகளாய் போலி வேடம் போடவில்லை. இன்னும் நம் நாட்டில் 100க்கு 90 பேர் சரியாக எழுதப்படிக்கத் தெரியாத நிலையிலிருக்கின்றனர். எனவே 100 பே ரும் எழுதப்படிக்க நிலைவந்த போது ஹிந்தியைப் பற்றிப் பேசிக் கொள்ளு வோம். ஆனால் இது, படித்த பட்டதாரிகளின் எண்ணிக் கையைக் குறைக்கச் செய்யும் வழி சூழ்ச்சியென நினைக்கவேண்டியிருக்கின்றது. ஏன்? அதை வெளிப் படையாகச் சொல்லிவிடுகின்றது தானே! அரசியல் ஆட்சி முறையே இன்னதென்று தெரியாதவர்கள் பழக்கமில்லாதவர்கள் எங்கனம் ஆட்சி நடத்துவர்? குருட்டாம் போக்கில் வந்த வெற்றியினால் தலைகால் தெரியாது குதிக்கின்றனர். ஏன் கவுரவமாக எங்கட்கு ஆட்சி முறை - அரசியல் நடாத்தும் முறை தெரிய வில்லை என்று கூறிவிடுவதுதானே! எனவே அவர்கள் செய்ய எண்ணும் அறியாச் செயலை தமிழ் நலங்கருதும் ஒவ்வொருவரும் கண்டித்தல் வேண்டும் என்பதோடு இத்தீர்மானத்தை ஒப்புக்கொள்ளுவீர்கள் என்ற முறை யில் உங்கள் முன் கொண்டு வருகிறேன் எனக்கூறி முடித்தார். தஞ்சைக் காங்கிரஸ்வாதி தோழர் மருதமுத்து மூப்பனார், வக்கீல் தோழர் ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை, திருவையாற்று அரசர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் தோழர் ஆர்.வெங்கடாசலம் பிள்ளை, காக்கைச் தமிழ்ச் சங்க கல்லூரி தலைமையாசிரியர் தோழர் சிவ. குப்புசாமிப் பிள்ளை முதலியோர் தீர்மா னத்தை ஆதரித்துப்பேசக் கடைசியில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் முடிவுரைக்குப்பிறகு திரு. த.வே.உமா மகேசுவரம் நன்றி கூறுகையில் நம் பேச்சு ஒவ்வொன் றும் தலைவர்கள் காதில் போய் விழவேண்டும். அத னால் அவர்கள் தங்கள் அறியாப்போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும். நிற்க, ஹிந்தியைக் தங்கள் கழகத் தின் சார்பாகக் கண்டிக்க வேண்டும் என்று மாண வர்கள் கேட்டதற்காகத் திருவையாற்றிலுள்ள ஒரு சாஸ்திரியார் கண்டவாறு மாணவர்களைக் திட்டி, பய முறுத்தி விரட்டினாராம்! என்னே அவர்தம் வன் கண்மை! இன்றே அப்பார்ப்பனர்களின் ஆர்ப்பாட்டம் இங்ஙனமிருந்தால் அவர்கள் கோரும் "ராமராஜ்யம்" வந்தால் தம் நிலை என்னாவது? எனவே நீங்கள் சிறி தும் அஞ்சாது  பட்டிமாடுகளாகிய ஹிந்தி முதலியற்றை ஓட்டி தமிழை முன்னேற்றுங்கள் என்று பேசினார். கூட்டம் 9 மணிக்கு முடிந்தது.

- 'விடுதலை', 2.9.1937

- விடுதலை நாளேடு,9.8.19