பக்கங்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

ஸ்ரீயை ஒழித்துவிட்டு திரு

ஸ்ரீ
உயர்திரு ஆச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்துள்ள தீமைகள் பல. இவைகளைப்பற்றிப் பல தடவை விளக்கியிருக்கிறோம். இவைகளில் ஒன்றுதான் ஸ்ரீ!
1937இல் முதலமைச்சராயிருந்தபோது இந்தத் தீமையைச் செய்தார்.
பெயருக்கு முன்பு எழுதப்படுகின்ற மரியாதைச் சொல்லான மிஸ்டர் என்பது இங்கிலீஷாயிருந்தபடியால் அதற்குப் பதிலாக, ஸ்ரீ என்பதை நுழைத்து உத்தரவு பிறப்பித்தார். அதாவது இருந்தால் இங்கிலீஷ்! இல்லாவிட்டால் சமஸ்கிருதம்! தமிழ் மட்டும் வளரக் கூடாது. இப்பேர்ப்பட்டவரைத் தமிழர் என்றும், தமிழுக்காகப் பாடுபடுகிறவர் என்றும் கூறுகின்றவர்களின் மூளைக்கோளாறுக்காக நாம் வருந்துகிறோம்.
இங்கிலீஷில் மிஸ்டர் என்கிறார்கள்; ஃப்ரெஞ்சு மொழியில், மான்ஷேர் என்கிறார்கள்; ஹிந்தியில் ஸ்ரீஜத் என்கிறார்கள்; சமஸ்கிருத்தில் ஸ்ரீ என்கிறார்கள்.
இந்த ஸ்ரீயை ஒழித்துவிட்டு திரு என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசியலாரைக் கேட்டுக் கொள்வதாக இவ்வாரத்தில் பெண்ணா கரத்தில் கூடிய தமிழக ஆட்சி மொழி மாவட்ட மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை நாம் வரவேற்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் ஸ்ரீ ஸ்ரீ மான் ஸ்ரீமதி ஆகிய வடமொழிச் சொற்களுக்கு அடிமையாயிருக்கக் கூடாது. மந்திரிகள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்வது உண்மையானால், அந்த உணர்ச்சியை, மொழிப்பற்றை, செய்கையில் காட்ட வேண்டும். திரு என்ற சொல்லையே பயன்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கனியிருக்கக் காய் சுவர்வது ஏன்? கரும்பிருக்க வேம்பை மென்று தின்பது ஏன்? சந்தனமிருக்கச் சேற்றை யள்ளிப் பூசிக் கொள்வது ஏன்?
உறக்கம் இருக்க, நித்திரை ஏன்? கடல் இருக்க சமுத்திரம் ஏன்? கனவு இருக்க, சொப்பனம் ஏன்? வணக்கம் இருக்க, நமஸ்காரமும் நமஸ்தேயும் ஏன்?
அழகான, வலுவான, சொந்த வீட்டை விட்டு, இடிந்து சரிந்து கிடக்கும் வாடகை வீட்டுக்குக் குடி போகலாமா? காங்கிரஸ் மந்திரிகளை நோக்கிக் கேட்கிறோம்.
திரு. ஆச்சாரியார் அவர்கள் செய்துள்ள தீமைகளையெல்லாம் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்,. இன்றைய மந்திரிகள்.
இந்தப் பட்டியலை ஒவ்வொரு மந்திரியின் மேஜைமீதும் வைத்திருக்க வேண்டும். இவைகளை ஒவ்வொன்றாக, ஒரே மாதத்துக்குள் ஒழித்துக் கட்டி விட வேண்டும். இருநூறுக்குக் குறையாத செய்கைகளுண்டு இந்தப் பட்டியலில்.
தேர்தல் நேரத்தில் மட்டும், தமிழ் என்றும், தமிழர் என்றும், கூத்தாடி, ஏமாற்றினால் போதாது. தமிழில் உண்மையான பற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீ உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். இனி, தமிழ்ப் பெரு மக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
எதற்கும் ஆட்சியாளரின் உத்தரவையே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. எழுதும் போதும், பேசும்போதும், திரு தோழர் ஆகிய சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஸ்ரீ என்று பேசுவோரை அவ்வப்போது திருத்த வேண்டும். பொதுக் கூட்டங்களில் யாராவது பிடிவாதமாக ஸ்ரீ என்று பேசினால் கைதட்டி எள்ளி நகையாட வேண்டும். அல்லது எழுந்து நின்று, திரு எனச் சொல்லுங்கள் எனத் திருத்த வேண்டும். தமிழுக்காகவும், தமிழர் ஆட்சிக்காகவும் தனிப்பணி புரிவதாகக் கூறுகின்ற தமிழரசுக் கழகத்தாரும் இந்தத் துறையில் கவனஞ் செலுத்தலாம்.
திரு.சி.ஆர். அவர்களின் காலத்திலேயே இந்த ஸ்ரீயை ஒழித்துக் கட்டினால்தான் தமிழனுக்குப் பெருமை. இல்லாவிடில், இந்தத் தமிழனுக்கு மானமேது? எதைத் தூக்கி வைத்தாலும் சுமந்து கொண்டு திரிவான்! மொழிப்பற்றுமில்லை; இனப்பற்றுமில்லை, என்று அவர் கருதிக் கொண்டிருப்பதை மெய்ப்படுத்தியவர்களாவார்கள்.
ஆரியன், அவன் மதத்தை மட்டுமல்ல; கலாச்சாரத்தை மட்டுமல்ல; மொழியையும் நுழைத்துத் தமிழ் மக்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும். இனத்தாலும், மொழியாலும் வேறுபட்டவர்கள் இனி எந்தநாளும் ஒன்றுபட முடியாது. அன்னியனான ஆரியன் தொடர்பை அறவே நீக்குங்கள்!
விடுதலை 16.4.1954

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக