பக்கங்கள்

வியாழன், 23 ஜூலை, 2015

சங்ககால இறையனார் - கடவுளா?


அ. அறிவுநம்பி
புதுவைப் பல்கலைக் கழகம் புதுச்சேரி


2003 மே 10,11 நாட்களில் தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற 34ஆம் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.
சங்க இலக்கியப் பாடல்களில் பலராலும் பல சூழல்களிலும் எடுத்து மொழியப் பெறும் பாடலொன்று உண்டு. கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலே அது. தலைவன் கூற்றில் அமையும் அப்பாடலுக்கான ஆசிரியர் இறையனார் என்பர். இவ்வளவே குறுந்தொகை நூல் நுவலும் செய்திகள், உரைகாரர்களும் பிறரும் இப்பா முக்கண்ணுடைய சிவனால் வரையப் பெற்றதென்று கூறிடுவர். தருமி, நக்கீரன், பாண்டியன் எனப் பிற மாந்தரையும் அவர்கள் இணைத்து ஒரு திருவிளையாடல் நிகழ்த்தியுள்ளனர். இறையனார் என்பது உமையொரு பாகனைக் குறித்ததா எனக் காணப் புகுதலே இக்கட்டுரையின் மய்யக்கரு.
அ. சங்கப் பாடல்கள் பலவற்றிற்குப் போதியதாகவும் உரியதாகவும் விளக்கம் கிடைப்பது பாடலின்கீழ் வரையப் பெற்றுள்ள கொளுப் பகுதியில்தான். சான்றாகக் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் எனத் தொடங்கும் புறப் பாடல் கொளுவின்றிப் படிப்பாரால் வேறு விதமாகவே கருதப் பெறும். தோல்வியுற்ற மன்னன் சிறையில் நீர் கேட்டுத் தாமதமான பணியின் காரணமாக மானம் பெரிது என்று மொழிந்த சூழல், வரலாறு, பாடியவன் போன்றவை கொளு வழியாகவே பெறப் பெறும். கொங்குதேர் என வரும் பாடலின் கீழே சிவன், தருமி, நக்கீரன், பாண்டியன் என எந்தக் குறிப்பும் இல்லை. ஏனைய சங்கப் பாக்களிலும் இவர்கள்பற்றி எவ்விதப் பேச்சுமில்லை. அகச்சான்றுகளைக் காட்டாமலேயே பாடல் புனைந்தவன் பரமசிவன் எனப் பகர்வது பொருந்துவதாக இல்லை.
ஆ. இறை என்ற சொல்லால் மயக்கமேற்பட்டிருக்க வாய்ப்புண்டு. சங்ககால இலக்கியத்தில் இறை என்ற சொல் கடவுளைக் குறித்த சொல்லாகப் பயின்று வரவில்லை. நீயுந்தவறிலை எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலில் இடம் பெறும் இறையே தவறுடையான் என்ற வரியுட்பட, இறை என்ற சொல் பயின்று வருமிடங் களில் எல்லாம் அச்சொல் மன்னனைக் குறித்ததேயன்றி மகேசனைக் குறிக்க வில்லை. எனவே இறையனார் என்ற பெயரில்  உள்ள இறை என்ற சொல் லைக் கடவுளெனப் பொருள்கோடற்கும் வாய்ப்பில்லை. ஆர் விகுதியும் இறைவனுக்காக இணைக்கப் பெற்றதாகக் கொள்ளவும் இயலாது. ஏறத்தாழ அனைத்துப் புலவர்களின் பெயர்களும் ஆர் விகுதியுடன் தென்படுகின்றன. இதனால் இறையன் என்ற புலவரின் பெயர் ஆர் விகுதி பெற்று இறையனார் ஆயிற்று எனக் கோடல் சாலும். எனவே இறை; இறையன், இறையனார் ஆகியவை மன்னன், மாந்தன் பெயர்களாக இருக்க முடியுமே தவிர  கடவுளுக்கும் இச்சொற்களுக்கும் எவ்வித உறவுமில்லை.
இ. ஏனைய சில சங்கப் பாக்கள் புலவர்கள் பெயரை, குறிப்பாகப் புலவர் குழாத்தின் தலைமைப் புலவர் பெயரை முன் வைக்கின்றன. மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்கள் பாடாது வரைக என் நிலவரை என வரும் வஞ் சினப் பா ஒரு பதச்சோறு. முக்கண்ணன் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நின்றமை மெய்ம்மையாகில் யாரேனும் ஒரு புலவர் தம் பாட்டினில் அதை இழைத்திருப்பார். காலத்தால்  பிற்பட்ட தெனக் கருதப் பெறும் கலி. பரிபாடல் ஆகியவற்றில்கூட இக்குறிப்பு ஏது மில்லை. அகச்சான்றாக அத்தொன்மம்  இடம் பெறவில்லை என்பது உற்றுநோக்க வேண்டிய பகுதியாகும். நக்கீரர் எனும் புலவர் பாடிய தனிப்பாடல்கள், திருமுருகாற்றுப்படை போன்ற தனிநூல்கள் எவற்றிலும் இத்தொன்மக்கூறு இடம் பெறவில்லை. நக்கீரர் இடம் பெற்ற தொன்மக் கதை அவராலும் சுட்டப் பெறவில்லை. அவர் காலத்திய புலவர்களாலும் சுட்டப் பெறவில்லை. இவையாவும் கணக்கி லெடுக்கப் பெற வேண்டிய பகுதிகளாகும்.
ஈ. நக்கீரரின் எழுத்துகளில் முருகன் முன் நிறுத்தப் பெறுவதே முதன்மை யாகவுள்ளது. சிவன் முதன்மைத்துவம் பெற்றமைக்குப் போதிய சான்று களில்லை. சிவன், முருகன் போன்றார் தமிழ்ச் சங்கப் புலவர்களாகப் பங்காற்றியமைக்கு வலுவான அகச் சான்றுகள் எதுவுங் கிடையாது. நக்கீரர் பெயர், இறையனார் களவியலுரை போன்றவை மீள் பார்வைக்குரிய கூறுகளாகின்றன. தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் தருமி பற்றிய திருவிளையாடல் பேசப் பெறவில்லை.
உ. தொன்மக் கதையை உருவாக்கி யோர் மேற்குறித்த இறையனாரின் குறுந்தொகைப் பாடலைத் தம் எழுத்து வரைவில் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். தம் முன்னோரின் வரி களையோ முழுப் பாடலையோ பின்வந்தோர் பயன்படுத்தியிருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள. எழுதி யவரின் பெயர், பின்புலம் போன்ற வற்றைச் சுட்டாமல் அவருடைய சொல்லாடல்களைச் சிதைக்காமல் அவ்வண்ணத்திலேயே தம் எழுத்து களோடு பொதிந்து தருவது பொதுமரபு. சான்றாகச் சிவப்பிரகாசர் போன்றோர் திருக்குறளைச் சொல் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தியுள்ளதை நோக்கவியலும், தாயுமானவர் போன் றோரின் பாடலடிகளை, பாடல்களைப் பாரதியார் கொண்டிருக்கிறார் என்ப. இதனையொப்பவே தருமி, இறைவன், நெற்றிக்கண் ஆகியவற்றை இழைத்துப் பிறந்த தொன்மக் கதையினூடே குறுந்தொகைப் பாடலும் பின்னப் பெற்றிருக்க வேண்டும்.
ஊ. பாரதி, பாரதிதாசன் போன் றோரின் பாடல்கள் எழுத்துச் சிதைவு றாமல் இன்றைய திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்வுகளில் இடை செருகப் பெறுகின்றன. பாடலினைப் புனைந்தாரும், எழுதப் பெற்ற பின்புலமும் கூறப்பெறுவதில்லை. அந்த இடத்திற்கு ஏற்ற வரிகளை முன்வந்த புலவர்கள் கூறியிருக்கவும் அதனை அப்படியே வழிமொழிந்துள்ளனர். இதனைப் போலத் தருமி பற்றிய தொன்மக் கதை நிகழ்வுகளுக்கேற்ப இறையனாரின் பாடல் அமைவுற்ற மையால் அப்பாடலை அப்படியே தொன்மத்துள் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஈ. சில நேரங்களில் காரணங்களின் அடிப்படையில் சில புனைவுகள் உருவாகியிருக்கின்றன. சிலப்பதிகாரம், பரிபாடல் உட்பட எல்லா இலக்கி யங்களும் மதுரையில் தவழ்ந்த ஆற்றின் பெயரை வையை என்றே புகலும். மருவுதல் காரணமாக வையை என்ற சொல் வைகை ஆயிற்று. வைகை என்ற சொல்லிற்கு விளக்கம் தர வேண்டு மென்பதற்காகப் புனையப் பெற்ற கதையே மதுரையம்பதியில் மன்றல் நாளன்று பூதகணத்தானொருவனின் தாகந்தீர்க்க ஆலவாயண்ணல் அவனை நோக்கி வை, கை என ஆணையிட்ட தாகவும் அதுவே வைகை ஆறாயிற்று. எனவும் கதைக்கப் பெற்ற ஒன்றாகும். இதுபோன்றே இறையனாரின் குறுந் தொகைப் பாடலினை மய்யக் கருவாகக் கொண்டு சித்தரிக்கப் பெற்றதே தருமி கதையாயிற்று எனவும் கொள்ள இயலு கின்றது. எவ்வாறாயினும் இறையனார் என்பவர் பிறைசூடிய  பெம்மானாக இருக்க வாய்ப்பில்லை என்பது பெறப் பெறுகின்றது. குறுந்தொகைப் பாடலில் கொளு இல்லாமையும், நக்கீரர் உட்படச் சங்கப் புலவர் எவரும் நெற்றிக்கண் மூலம் நக்கீரர் குலைவுற்ற செய்தியைப் பேசாமையும், சங்க காலத்தில் இறை என்ற சொல் மன்னனைக் குறித்தே வருகின்றதன்றிக் கடவுளரைக் குறித்து வாராமையும், சிவன் சங்கப் புலவனாக வந்ததோ, பாப்புனைந்ததோ பிறவோ இலைமறை காயாகக் கூட இலக்கியத்தில் இடம் பெறாமையும் இன்ன பிறவும் இறையனார் என்ற சொல் சிவபெரு மானைக் குறிக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றன. தேவார முதலிகளும் இதுபற்றிப் பாடவில்லை. தருமி, நக்கீரர், நெற்றிக்கண் ஆகியவற்றை உள்ளடக்கிய தொன்மம் குறுந்தொகைப் பாடலை அடிக்கருவாகக் கொண்டு புனையப்பட் டதாக இருக்கலாம். அல்லது, சிவன் தருமிக்காகப் பாடல் புனைந்ததாக வரும் தொன்மத்தில் குறுந்தொகைப் பாடல் நேர்த்தியாகப் பொருத்தப் பெற்றிருக்க லாம். எவ்வாறாயினும் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியை வரைந்த இறையனார், நீலமணிமிடற்றா னில்லை என்பது தெளிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக