கல்வியில் சிறந்தோங்கிய தமிழர்:
மொழி ஆய்வாளர்கள் கருத்துப்படி உலக மொழிகளுக்கு தமிழே மூலமொழி, மூல இலக்கியங்களைப் பெற்றது என்பதால் தமிழரே கல்வியிலும் சிறந்து விளங்கினர். கல்வியில் சிறந்து விளங்காமல் மொழி வளமும், இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் ஏற்பட்டிருக்க முடியாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தமிழில் உருவாகியிருக்கிறது என்றால் அதற்குமுன் எத்தனை ஆயிரம் வருடங்களாகத் தமிழர் கல்வியில் சிறந்திருப்பர் என்பதை கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். தொல்காப்பியத்தின் வளம், நுட்பம், இலக்கண வரையறைகளைப் பார்க்கும்போது அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கல்வியில் சிறந்திருந்தமை விளங்குகிறது.
திருக்குறளின் நுட்பங்களை, வளமையை, செறிவைப் பார்க்கும்போதும், கல்வியின் கட்டாயம் அதில் பேசப்படுவதாலும் தமிழரின் கல்வி எந்த அளவிற்கு சிறந்தோங்கியிருந்தது என்பதை மதிப்பிடலாம்.
பெண்களும் கல்வியில் சிறந்தோங்கினர்:
ஆரிய பார்ப்பனர்கள் ஊடுருவுதற்கு முன், அரசன் முதல் எளிய குடிமக்கள்வரை தமிழர்கள் கல்வியில் சிறந்தோங்கியமைக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. பெண்பாற் புலவர்கள் கல்வித் திறத்தோடு விளங்கியமையை அவர்களின் படைப்புகளைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வை போன்றோர் அதற்குச் சிறந்த சான்றாக உள்ளனர். காரணம், பண்டைய நாளில் கற்பதற்கு எத்தடையும், யாருக்கும் இல்லை! இக்கருத்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களே உறுதி செய்கிறார்கள். ‘‘பண்டைய உலகம் தனது மக்களுக்கு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாததற்காக அது குற்றம்சாட்டப்படுவதுண்டு. ஆனால், எந்தச் சமுதாயமும் மதக் கருத்துக்களைப் பொதுமக்கள் படிப்பதையும் அறிந்து கொள்வதையும் தடுத்ததில்லை. எந்தச் சமுதாயமும் பொதுமக்கள் அறிவு பெறுவதையும் தடுத்ததில்லை. எந்தச் சமுதாயமும் பொதுமக்கள் அறிவைத் தேடி அடைவதைக் குற்றமாகக் கருதித் தண்டனை ஏதும் அளித்ததில்லை. பொதுமக்களுக்கு அறிவைத் தர மறுத்த ஒரே தெய்வீகச் சட்ட வல்லுநராக மனு ஒருவரைத்தான் கூறலாம்.’’ (அம்பேத்கர், 1999:61)
வேதமே சற்றேறக்குறைய 500 தமிழ்ச் சொற்களைக் கடன் பெற்றுள்ளது. வேதம் தோன்றிய காலம் கி.மு.1200. அதன்பின் பல நூற்றாண்டுகள் கழித்தே சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. “வேதங்கள் சமஸ்கிருத நூல்கள் அல்ல. பாணினியால் திருத்தம் செய்யப்பட்ட மொழியில் தோன்றிய இலக்கியங்களே சமஸ்கிருதம்’’ என்கிறார் சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள். (ஆதாரம்: உலகமொழிகளில் தமிழ்ச் சொற்கள் _ ப.சண்முகசுந்தரம் (பக்கம் _16) உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
“இராமாயணம் மகாபாரதம் போன்றவை கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை’’ என்கிறார்கள் கே.சி.கன்னா, ஏ.பார்த் என்ற அறிஞர்கள். (மேற்படி நூல், பக்கம் 17). H.G.Wells என்ற அறிஞர், “ஆரியர்கள் நாகரிகமுடைய மக்களான தமிழர்களைத் தொடர்புகொள்ளும் வரை அவர்களுக்கென்று எழுத்துமுறை இருந்ததில்லை’’ என்கிறார். (ஆதாரம்: A Short History of the World)
“கி.மு. முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளிலும், நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாத சமஸ்கிருதம் கி.பி.350க்குப்பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்து வளர்ந்தது. இக்காலத்தில்தான் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 163_3. பாரத வித்யாபவன் வெளியீடு)
கி.பி.4ஆம் நூற்றாண்டில்தான், கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சர்வந்தி என்பவரால் உலோக வியாபகம் என்ற பிராகிருத மொழிநூல், “கதசப்தசாயி’’ என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் பெயர்க்கப்பட்டது.
“சூரசேனி என்ற பிராகிருத மொழியைச் செம்மை செய்து, சமஸ்கிருதம் (செம்மை செய்யப்பட்டது என்று பொருள்) என்றாக்கினர்’’ என்கின்றனர் ஸ்டிவென்சன், ஹட்ஜன் என்ற ஆய்வாளர்கள். ஆக, தொன்மை மொழியென்று உலகை ஏமாற்றி ஆரியர்கள் பெருமை பேசும் சமஸ்கிருதம் தமிழ் மூலத்தைக் கொண்டே உருவாக்கப் பட்டது. காரணம், பிராகிருத மொழியே தமிழின் திரிபாகும்.(P.C.Sircar, Prakrit Grammar, Culcutta) ஆக, சமஸ்கிருதத்தின் மூலம் தமிழே யாகும். “தமிழ் இலக்கிய மரபுகளே பிராகிருத மொழிமூலம் சமஸ்கிருதமாக்கப் பட்டன’’ என்கிறார் George Hart (ஆதாரம்: Tamil Heroic Poems). ஆக, ஆரியரின் எழுத்து, கல்வி, நூல் எல்லாம் தமிழரிடமிருந்து பெற்று திரித்து, மாற்றி உருவாக்கிக் கொண்டவையே.
ஆரியர் ஊடுருவலும் தமிழர் கல்வி இழந்தமையும்:
தமிழரிடையே ஜாதிப் பிரிவுகளோ, மூடநம்பிக்கைகளோ இல்லாத காரணத்தாலும் பெண்களே சமுதாயத்தில் உயர்நிலையில் வைத்து மதிக்கப் பட்டமையாலும் அடித்தட்டு மக்களும், பெண்களும் கல்விகற்க சமவாய்ப்பு பெற்று கற்று வந்த நிலையில், ஆரியர் புகுந்து, ஆதிக்கம் செலுத்தி, ஆட்சியாளர் துணைகொண்டு சாஸ்திரம் புனைந்து, ஜாதிப் பிரிவுகளையும், பெண்ணிழிவையும் உருவாக்கியதன் பயனாய், பெரும்பான்மை மக்களும், பெண்களும் கல்வி பெறும் வாய்ப்பை இழந்தனர்.
சூத்திரர்கள், பஞ்சமர்கள் கல்வி கற்கக் கூடாது என்று சாஸ்திர சட்டங்களை வகுத்ததால், மக்களில் பெரும்பகுதியினரான அவர்கள் கல்வியை இழந்தனர். அயோத்திதாச பண்டிதர் காலத்தே அவர் மறைந்து, மறைந்து கல்வி கற்றார் என்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த பெண்களும் படிக்கக் கூடாது. அவர்களுக்கென்று சுயஅறிவு இருக்கக் கூடாது. கணவனின் அறிவையே அவளின் அறிவாகக் கொண்டு வாழ வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டில் கூட சங்கராச்சாரி சொன்னார் என்றால் (ஆதாரம்: தெய்வத்தின் குரல்), ஆரிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அக்காலத்தில் எப்படி யிருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
பல்துறை அறிவுகள் பாழாய்ப் போயின:
ஆரியர் ஆதிக்கம் செலுத்துவதற்குமுன் தமிழர்கள் இலக்கியம், வானியல், மருத்துவம், கடலியல், கட்டடம், அணைகள், போர், உடற்பயிற்சி, வணிகம், நீதி, ஒழுக்கம், தத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், உடற்கூறு என்று பல்துறைக் கல்வியறிவும் பெற்று உயர்நிலை வாழ்வு வாழ்ந்தனர். ஆனால், ஆரியர் ஊடுருவல், ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் கல்வி யென்பதை வேதம், சாஸ்திரம், புராணம், ஆன்மிகம் என்றாக்கி, அதுவும் தங்களுக்கே என்றாக்கி, அனைத்துத் துறை கல்வியையும் அழித்தனர்.
தமிழர் நூல்களைத் தமதாக்கினர்:
ஆரியர் மொழியே பின்னாளில் வந்தது என்றும், தமிழர் இலக்கியங்களை, அறநூல்களை மாற்றியும், திரித்தும் தமதாக்கினர் என்றும் முன்னர் விளக்கினோம். அதன்வழி தமிழரின் சிறந்த படைப்புகளை, சிந்தனைகளையெல்லாம், களவாடி, தமக்கேற்பத் திரித்து சமஸ்கிருத படைப்புகளாக்கினர்.
அரிய நூல்களை அழித்தனர்:
நீர்ச் சோதனை, நெருப்புச் சோதனையென்று பித்தலாட்டமாக, மோசடியாக யுக்திகளைக் கையாண்டு தமிழரின் அரிய படைப்புகளை அழித்தனர். தரமான நூல்கள் ஓடும் நீரில் எதிர்த்து வரும், நெருப்பில் சாம்பலாகாமலிருக்கும் என்று சொல்லி, நீரிலும், நெருப்பிலும் தமிழர் நூல்களை போடச் செய்து அழித்தனர்.
போகிப் பண்டிகை என்ற மடமையை உருவாக்கி, பழையனவற்றைப் போக்குதல் என்ற சடங்கை ஏற்படுத்தி, வீட்டிலுள்ள அரியச் சுவடிகளையெல்லாம் நெருப்பில் எரிக்கச் செய்தனர். இப்படி பல்லாற்றானும் தமிழன் கல்வி அறிவை, சிந்தனையை நூல்களை உலகிற்குக் கிடைக்காமல் செய்தனர்.
குலவழித்தொழில் மூலம் கல்வியைப் பறித்தல்:
பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணப் பிரிவை சமுதாயத்தில் உருவாக்கி, பஞ்சமர் என்று ஒரு பெரும் பிரிவு மக்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி, அவரவர் தொழிலையே அவரவர்கள் செய்ய வேண்டும். கல்வியென்பது சூத்திரர்க்கும், பஞ்சமர்க்கும் உரியதல்ல என்றாக்கி, சூத்திரரும், பஞ்சமரும் உழைப்பாளிகளாகவே பரம்பரைப் பரம்பரையாக வாழ வேண்டும்; கற்று வேறு பணிகளைச் செய்யக் கூடாது என்று சட்டம் வகுத்து, இருபதாம் நூற்றாண்டு வரைச் செயற்படுத்தியதால், இராசகோபாலாச்சாரியர் ஆட்சிக்காலம் வரை சூத்திரர்களும், பஞ்சமர்களும் கல்வியிழந்து தற்குறிகளாய் பரம்பரை வேலையையே செய்து பிழைப்பு நடத்தினர்.
இந்நிலையில் ஆரிய பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் சமஸ்கிருதக் கல்வியை நாடு முழுமையும் அரசின் செலவில் வளர்த்ததோடு, தமிழர்க்கு அறவே கல்வி கிடைக்காது செய்தனர்.
வேதங்களை கீழ்ஜாதி, சூத்திரர், பஞ்சமர் பெண்கள் எவரும் படிக்கவோ, படிப்பதைக் கேட்கவோ கூடாது. மீறினால், கேட்ட கீழ் ஜாதிக்காரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது, மனு போன்ற ஸ்மிருதிகள் - நூல்களின் கட்டளை (Injunction),, படித்தவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று சட்டம் செய்தனர். வடமொழியே தென்னிந்தியா முழுவதிலும் உயர்பண்பாட்டு மொழியாய் ஆக்கப்பட்டது என்று எழுதுகிறார் கே.ஏ. நீலகண்ட சாத்திரி. கிறித்தவத்தை இந்தியப் பண்பாட்டுவழித் தென்தமிழ்நாட்டில் பரப்பிய கத்தோலிக்கக் கிறித்தவத் துறவி டிநோபிலி மதுரையில் நாயக்க அரசர் சமஸ்கிருத வேதக் கல்வி கற்பிக்கச் செய்திருந்த ஏற்பாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
புதுவைக்குப் பக்கத்திலுள்ள பாகூரில் சமஸ்கிருதக் கல்விக் கென்றே பல்லவன் நிருபதுங்கன் காலத்தில் ஒரு கல்விநிலையமே இயங்கியது. டி. நோபிலி 1610இ-ல் எழுதிய ஒரு கடிதத்தில் மதுரையில் பத்தாயிரம் மாணவர் அரசின் இலவச உதவியுடன் சமஸ்கிருதவழிக் கல்வி கற்றதைக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பிராமணக் குழந்தைகள். பிராமணர்கள் பயிலுவதற் காகப் பிரம்மபுரி கடிகை என்னும் கல்லூரிகள் நடத்தப்பட்டன. நிருபதுங்க வருமன் காலத்தில் காவேரிப் பாக்கத்தில் வைணவ மடம் ஒன்று இருந்ததையும் அங்கே பிராமணர்கள் வேதாந்த சாத்திரங்கள் பயின்றதையும் அறியமுடிகிறது.
புதுவை அய்ரோப்பியர் கைவசம் ஆகும் வரை (1673) அங்குத் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஒரு பள்ளி கூட நடத்தப்படவில்லை. நாகப்பட்டினத்தில் கி.பி.1058-இல் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இருந்தது. அதில் 200 பிராமண மாணவர்கள் வேதம் படித்தனர். 50 பிராமண மாணவர்கள் சாத்திரம் படித்தனர். வேதங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள் பட்டமீமாம்சை, பிரபாகர மீமாம்சை ஆகிய சாஸ்திரங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள், நூலகர் ஒருவர் ஆக அங்கிருந்த 257 பேருக்கும் இலவசமாகத் தங்கவும், உண்ணவும் நல்ல வசதிகள் அரசர்களால் செய்து தரப்பட்டிருந்தன. தென்னார்க்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில், முதல் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு சமஸ்கிருதக் கடிகை இருந்தது. சோழமன்னன் அனைத்து மானியங்களையும் வழங்கினான். அதில் 270 பிராமண மாணவர்கள் கற்று வந்தனர்.
எண்ணாயிரத்திற்குப் பக்கத்தில் திருபுவனை (புதுவை) என்னும் இடத்தில் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அதில் 260 பிராமண மாணவர்களும், 12 ஆசிரியர்களும் இருந்தனர். செங்கற்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வீர இராஜேந்திர சோழர் காலத்தில் (1067) சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அங்கு ஆசிரியரும், மாணவரும் சேர்ந்து உறையவும், உண்ணவும் அனைத்து ஏற்பாடுகளும் அரசரால் செய்யப்பட்டிருந்தன. திருவாவடுதுறையில் ஒரு மருத்துவப் பள்ளி இயங்கியது. சமஸ்கிருத நூல்களான அஷ்டாங்க கிருதயமும், சாரகசம்ஹிதையும் அங்கே கற்பிக்கப்பட்டன.
இதற்கு மறுதலையாகத் தமிழ்க் கல்வி கற்பித்த நிறுவனங்கள் பற்றியோ திருக்குறள், தொல்காப்பியம் முதலான இலக்கிய இலக்கணங்களைப் பயிற்றுவித்த கல்விக் கூடங்கள் பற்றியோ தமிழர் தம் பண்டைக்கால, இடைக்கால, பிற்கால வரலாற்றில் ஒரு சான்றும் கிடைக்கவில்லை. (ஆதாரம்: பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய “தமிழர் அடிமையானது எவ்வாறு?’’ என்ற நூல்.)
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் மய்யப் பகுதியில் விஜயாலயசோழன் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு வித்திட்டான். சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளரப் பொன்னையும், பொருளையும், நிலத்தையும் தானமாக வழங்கச் செய்தனர். (கே.கே.பிள்ளை, 2002:317)
திராவிடர் இயக்கங்களால் கல்வி உரிமை பெற்றோம்
1920 முதல் 1928 வரை தொடர்ந்த ஜஸ்டீஸ் கட்சி (நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் நூற்றாண்டு இவ்வாண்டு) ஆட்சி தான் முழு அதிகாரங்கள் இல்லாத நிலையிலும்கூட கல்வியைப் பரப்பினர். பனகல் அரசர் முதல்வராக இருந்தார். கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை பரப்பினார். ஏ.பி.பாத்ரே அப்போது கல்வி அமைச்சர். ஆச்சாரியார் - 2500 பள்ளிகளை மூடினார், 1938_-39இல். பிறகு 6000 பள்ளிகளை மூடினார் 1952-_54இல். குலதர்மக் கல்வித் திட்டத்தைப் புகுத்தினார். தந்தை பெரியாரின் போராட்டத்தால் ஆச்சாரியார் பதவி விலகினார். காமராசர் வந்ததுதான் தனித்திருப்பம். அவர் நாடெல்லாம் கல்விக் கூடங்களைத் திறந்தார். கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது! திராவிடர் இயக்க ஆட்சிகள் அவற்றைத் தொடர்ந்தன!
மருத்துவக் கல்வி பயில நீதிக்கட்சி ஆட்சிக்குமுன் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மனு போட முடியும். தந்தை பெரியார் முயற்சியால், பனகல் அரசர், ஜஸ்டீஸ் முதல்வராக மாறினார். சமூகநீதிப்படி, தேர்வுக் கமிட்டியை நியமித்தார். சமஸ்கிருதம் கட்டாயம் என்பதை மாற்றி பார்ப்பனர் அல்லாதாரும் மருத்துவம் பயில வழி செய்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியும் கிறித்துவ தொண்டு அமைப்புகளும்:
ஆங்கிலேயர் ஆட்சி வந்தபின் ஆரிய பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஜாதியினரும் கல்வி கற்கும் வாய்ப்பு ஓரளவிற்கு வந்தது. கிறித்தவர்கள் கல்விக் கூடங்களை அமைத்து சூத்திரர்களும், பஞ்சமர்களும் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தினர். இதன்மூலம் சூத்திரர்களும், தாழ்த்தப்பட்டோரும் ஒரு சிறு அளவிலாவது கல்வி கற்று விழிப்புப் பெற்றனர்.
தந்தை பெரியாரின் புரட்சி:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையில், ஆரியத்திற்குச் சேவகம் செய்து அடிமைகளாய் வாழ்ந்த தமிழர்களை, சுயமரியாதைச் சூடேற்றி, சொரணை கொள்ளச் செய்த பெரியார், கடும் பிரச்சாரங்கள் மூலம் விழிப்பு கொள்ளவும் செய்தார். கல்வி என்பது கடையருக்கும் உரியது என்று உரிமைக்குரல் எழுப்பி, காமராசர் போன்ற ஆட்சியாளர்கள் மூலம் கல்வி எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்து, குலக்கல்வி முறையைக் கொன்று குழிதோண்டிப் புதைத்தார். அரசியல் சாசனத்தை முதல்முறையாக திருத்தச் செய்து, இடஒதுக்கீட்டை உருவாக்கி, அதன் மூலம் கல்வி பயிலவும், பயின்றபின் வேலை பெறவும் சூத்திர, பஞ்சமர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
இதன்வழி கல்வி வெள்ளம், காய்ந்துகிடந்த தமிழர் மத்தியில் பாய்ந்தது. கல்விப் பயிர் செழித்தது. கற்று வேலை பெற்றதால், தங்கள் பிள்ளைகளைத் தமிழர்கள் படிக்கச் செய்தனர். இன்று தமிழர் ஆரிய பார்ப்பனர்களைப் பின்தள்ளி, கல்வியில் அறிவியலில் சாதித்து வருகின்றனர். ஆரியப் படையெடுப்பை வீழ்த்தி தமிழர்க்கு உயர்வான உரிமை வாழ்வைத் தந்த பெருமை பெரியாரையேச் சேரும்! தற்காலத்தில் ஆரியர்களின் ஆதிக்கத்தில் வரும் போதெல்லாம் கல்வியை காவி மயமாக்கவும், கல்வியை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித எதிர் நூல்களான பகவத் கீதை, பாரதம் போன்றவற்றைப் பாடநூலாக்கி கல்வியைச் சீரழிக்கின்றனர். சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளை கல்வியில் நுழைத்து மடமையை வளர்க்கின்றனர். நம்பிக்கை என்ற பெயரில் புராணங்களைத் தூக்கிப் பிடித்து, அவற்றிற்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்து மக்களின் அறிவைப் பாழாக்குவதோடு, அறிவு சார்ந்து வளர்க்கப்பட்டக் கல்வியை ஆன்மிகம் சார்ந்து, மதம் சார்ந்து, ஆரியம் சார்ந்து உருவாக்க முயற்சிக்கின்றனர்.
ஒவ்வொரு முயற்சியின் போதும் பெரியார், அம்பேத்கர் தொண்டர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விழிப்புடனிருந்து அவர்களின் சூழ்ச்சியை வீழ்த்தி வருகின்றனர். ஆரிய பார்ப்பனர்கள் கல்வியில் தங்கள் பண்பாட்டைத் தொடர்ந்து திணிக்கவே செய்வர். எனவே, மக்கள் விழிப்புடனிருந்து அதை முறியடிக்க வேண்டும்.! ஸீ
-உண்மை,16-31.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக