பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆட்சியில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- கோவி.லெனின்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றுகிறது அரசு. அர்ச்சகராக விரும்புவோருக்கு அதற்குரிய ஆகமப் பயிற்சியும் அளிக்கிறது. அதனை எதிர்த்து சிலர் வழக்கு தொடுக்கிறார்கள். ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். ஆகம விதி என்பது அரசியல் சட்ட விதிகளைவிட வலிமை வாய்ந்ததா? இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் சட்டம் என்பது வருணாசிரமம்-ஆகமம்-அய்தீகம் -மதப் பழக்கவழக்கம் இவற்றிற்கு கீழேதான்!  இந்த இந்தியாவுக்குள்தான்  தமிழகம் இன்று அடங்கியிருக்கிறது. தனக்கென்று தனித்துவமான  ஆட்சி முறையை ஒரு காலத்தில் கொண்டிருந்த தமிழகம், அதனை இழந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிகிவிட்டது.

ராகுல சாங்கிருத்தியாயன் தனது வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் திராவிடர் வாழ்வையும் ஆட்சி நிர்வாகத்தையும் பற்றி நிறையவே குறிப்பிட்டிருக்கிறார். ஆரியர்கள் வடக்கிலிருந்து இங்கு வந்து, திராவிட மன்னனை சந்தித்தபோது,  தனது அமைச்சரவையில் உள்ளவரிடம் மன்னன் ஏதோ எழுதிக் கொடுக்க, அவர்  அதை  எடுத்துச் சென்று திரும்பும்போது, ஆரியர் எதிர்பார்த்து வந்திருந்த பொருளைக்  கொண்டு வந்து கொடுத்ததையும் தெரிவித்திருக்கிறார். இது ஆரிய மன்னனுக்கு ஆச்சரியமானதாகத் தெரியும். வாயால்  சொல்லாமல் எப்படி ஒரு பொருளைப்பெற  முடிகிறது என்பதுதான் அந்த  ஆச்சரியத்திற்கானக்  காரணம். ஆரியர்களின் மொழிக்கு எழுத்துரு  கிடையாது. திராவிடத்தின் மூத்த மொழியான தமிழ் அப்போதே எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த  செம்மொழியாக சிறந்து விளங்கியது என்பதும்-அந்த  மொழியைச் சேர்ந்த  ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் ஆரியர்கள் அறியாத ஒன்றாக இருந்தது என்பதுமே ராகுல சாங்கிருத்தியாயன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் செய்தியாகும்.
வாழ்வியல் சார்ந்த நிலப்பரப்பை நிர்வகிப்பதில் பழந்தமிழர்கள் தனித்துவமானத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நன்னிலங்களை வகுத்து, இவை திரிந்து பாலை உருவாகும் எனும் ஐந்தாவது நிலப்பகுதியையும் குறிப்பிட்டனர். நிலவளத்தைக் காக்க நீர்மேலாண்மை என்பதும் தமிழர்களின் சிறப்பம்சமாக இருந்தது. ஆறு, வாய்க்கால், ஏரி, குளம், ஊருணி என ஒன்றுடன் ஒன்று இணைந்த நீர் வலையம் (நெட்வொர்க்) உருவாக்கப்பட்டிருந்தது. கடலில் கலக்கும் காவிரித் தண்ணீரைத் தேக்கிவைத்து, அதன் மூலம் வயல்களுக்குப் பாசனம் செய்யும் நோக்குடன் கட்டப்பட்ட கல்லணை இதற்குப் பெருஞ்சான்றாக விளங்குகிறது.
மன்னர் ஆட்சிதான். எனினும், மக்களின் நலன் காக்க வேண்டும் என்பது முதன்மையானதாக இருந்தது. ஆட்சியை அவ்வப்போது இடித்துரைக்கும் அமைச்சர்களும் புலவர்களும் கொண்ட அவை அமைந்திருந்தது. போர் உண்டு. பெரும்பாலும் அது தன் எல்லையினைப் பாதுகாப்பதற்கும், அல்லது எது தனது எல்லை என்ற உரிமையை நிலைநாட்டுவதற்குமாக நடந்துள்ளன. தமிழர்களின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகள் இருந்துள்ளன. வீரர் அல்லாதவர்கள், புறமுதுகிட்டு ஓடுவோர், காயம்பட்டோர், முதியோர், இளையோர், இவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்கிற போர்க்கள நீதியை தமிழ்  இலக்கியமான புறநானூறு சுட்டிக்-காட்டுகிறது. அகநானூறு, குறுந்தொகை உள்ளிட்டவற்றில்  தமிழரின் அகவாழ்வு இலக்கணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இயற்கையுடன் இணைந்து-மனித வளர்ச்சிக்-கேற்ற நிர்வாகத்திறன் கொண்ட ஆட்சியும் அதன் கீழ் வாழ்ந்த மக்களையும் பழந்தமிழர் இலக்கியத்திலிருந்து அறிய முடிகிறது. இத்தகைய ஆட்சியிலும் வாழ்க்கையிலும் பின்னர் ஊடுருவியது ஆரியம்.
சிலப்பதிகாரத்தில் மாமுது பார்ப்பனனையும் தீவலத்தையும் சுட்டிக்காட்டுகிறார்  இளங்கோ அடிகள். இதன்வாயிலாக  1800 ஆண்டுகளுக்கு முன்பே ஆரியத்தின் தாக்கம் இந்த மண்ணில் ஏற்பட்டுவிட்டதையும் அதனுடன் தொடர்ந்து நடக்கும் பண்பாட்டுப் போரையும் தமிழகத்தின்  வரலாறு நெடுக காணமுடியும். ஆரியத்தை ஆதரிக்கும் ஆட்சிகளே சிறப்பான ஆட்சிகள் என்று வரலாறு பதியப்பட்டுள்ளது. ஆரியத்திற்கு மாற்றாக ஆட்சி செய்து மக்கள் நலன் காத்த மன்னர்கள் பலரும் அரக்கர்களாக சித்திரிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி செய்த  காலம் இருண்டகாலம் எனப்படுகிறது. உண்மையில் களப்பிரர் காலத்திற்கு முன்னரே வடமொழியின் ஆதிக்கமும் ஆரியத்தின் தாக்கமும் தமிழக மன்னர்களின் ஆட்சியில் ஊடுருவத் தொடங்கிவிட்டன. களப்பிரரும் வேற்று மொழியினர்தான். அவர்கள் சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதன் பொருட்டு, அவர்களின் நிர்வாக முறை இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதப்பட்டன. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்ட சமண சாக்கிய சமயச் சார்புடைய தமிழ் நூல்களே. எனினும், களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்கிறவர்கள் உண்டு. (புத்த மதத்தை தழுவி, போர்களைத்  தவிர்த்து, மக்கள் நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்திய  அசோகரின் ஆட்சியை பொற்காலம்  என்று சொல்வ-தில்லை.  மவுரியப் பேரரசு காலத்தில் பல அறிவியல் நூல்கள் இயற்றப்பட்டன. ஆயினும், ஆரியத்தின் வழியில் ஆட்சி நடத்திய குப்தர்கள் காலமே இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப்படுகிறது)
கி.பி. 470இல் வச்சிரநந்தி அமைத்த திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர உதவியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (திரமிளர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிபு என்கின்றனர் ஆய்வாளர்கள். கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலுவின் விளக்கம்  மாறுபட்டுள்ளது. திரை மீளர்..அதாவது, அலைகடலில் பயணித்து மீண்டு வந்தவர்களே திரமிளர் என்கிறார். இந்தத் திரமிளரே பின்னர் திராவிடர்  ஆயினர் என்பது அவரது கூற்று. தமிழர்களே உலகின் முன்னோடி  கடலோடிகள் என்பதால் அவர்கள்தான் திரமிளர்கள் -திராவிடர்கள்  என்கிற  பார்வை இந்த  ஆய்வில்  வெளிப்-படுகிறது) களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சியேற்பட்டது என்பதையும் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்பவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்றும், அவர்களைவிட அதிகளவில் சமஸ்கிருத மொழியைக் கையாண்டு, ஆரியத்தினை கடைப்பிடித்த  பல்லவ மன்னர்களின் ஆட்சி, கலைப்பொலிவு மிகுந்தது என்றும் வரையறுக்கப்-படுவதை நாம் காணலாம்.
பல்லவர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்  பிற்காலச் சோழர்கள். இவர்களில்  மாமன்னனான ராஜராஜசோழன் ஆட்சிக்-காலத்தில் தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு, ஆரியப் பார்ப்பன மேலாண்மைக்கு வழிகாணப்-பட்டது.. உழைக்கும் மக்கள் அனைவருக்குமான அரசாக இருந்த தமிழக ஆட்சி நிலைமாறி, சதுர்வேதி மங்கலங்கள் எனப் பார்ப்பனர்களுக்கு நிலங்கள்  தாரை வார்க்கப்பட்டன. கோவில் நிர்வாகமாக இருந்தாலும், அரசவை முடிவுகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் ஆளுகைக்குட்பட்டன. கரிகாலச்சோழன் காலத்தில் (கி.பி.2ஆம் நூற்றாண்டு) கல்லணை கட்டப்பட்டது. ராஜராஜசோழன், ராஜேந்திர  சோழன் காலங்களில் (கி.பி.11ஆம் நூற்றாண்டு) தஞ்சையிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. கரிகாலன் காலத்திலும் சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலும் தங்கள் எல்லைகளைத் தீர்மானிப்பதற்கான போர்களே நடந்தன. ஆனால் பிற்கால சோழமன்னர்கள் காலத்திலோ நாடுகளைப் பிடிக்கும் வேட்கையுடன் கடல் கடந்து படை கொண்டுசென்று போர்கள் நடத்தப்பட்டு வெற்றிமுரசு கொட்டப்பட்டது. இத்தகைய போர்களில் உயிர்ச்சேதங்கள் மிக அதிகமாக நடந்ததுடன், போர்ச்செலவை ஈடுகட்டும் விதத்தில் வரிச்சுமைகள் அதிகரிக்கப்பட்டன. வலிமை, வீரம், படைத்திறன் இவையே போரின் வெற்றியென்று திண்ணமாய் நம்பி திட்டமிட்டு ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களை, யாகம் செய்யச் சொல்லி, யாகத்தின் மூலம் வெற்றியைக் குவிக்கலாம் என்று ஏராளமான பொருட்களை வீணடித்து யாகம் செய்யச் செய்தனர் ஆரியர்கள். வீரம் மிகுந்த தமிழர் நெஞ்சில் யாகம் என்ற மூடம் புகுந்தது. இதன் வழி யாகம் செய்யும் ஆரியர்க்கு மதிப்பும், செல்வாக்கும், முன்னுரிமையும் கிடைத்து, அவர்கள் கட்டுப்பாட்டில் தமிழ் மன்னர்கள் வந்தனர்.
மனிதர்களைவிட மதங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. சைவமா, வைணவமா, சமணமா என்ற போட்டியில் மனிதர்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டன. கல்வி, வேலை, பெண்கள் நலன் உள்ளிட்ட  அனைத்தும் மனுதர்மத்திற்கு ஆட்பட்டன. இந்த நிலை பிற்காலப்  பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்திலும் நீடித்தன.  மணிநீரும்  மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது  அரண் என இயற்கை சார்ந்த நாட்டையும், குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு என மக்களின் நலன் கருதி ஆட்சி  செய்யும்  மன்னனையே உலகம் சார்ந்து நிற்கும் என்கிற நிர்வாக முறையையும் வலியுறுத்திய திருக்குறளின் மேன்மையை, ஆரிய ஆதிக்கத்தின் விளைவாக சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் ஆக்கிரமித்தது. அதன்படி ஆட்சி செலுத்தத் தொடங்கிய பல்லவர் ஆட்சிக் காலத்தையும், பிற்காலச் சோழர் ஆட்சியையும் பொற்காலம் என்றனர். திருக்குறளில் உழவுக்கும் உழவருக்கும் முதன்மை தரப்பட்டுள்ளது. சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் அப்படியில்லை.  மக்களை அச்சுறுத்தி வேலை  வாங்கியாவது நிலத்தி-லிருந்து பெரும் வருவாய் பெறவேண்டுமென்று சாணக்கியர் போதித்துள்ளார். மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு அதன் வழியான சமத்துவ நிர்வாகத்தை அர்த்த சாத்திரம் வலியுறுத்துகிறது.  திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் மூலம் சாதி பாகுபாடற்ற சமத்துவத்தை நிலை நாட்டுகின்றது. திருக்குறளில் அறமே முதன்மையானது. அதன் வழி நின்றே பொருளியலும் அதற்குட்பட்ட ஆட்சித் திறனும் விளக்கப்படுகிறது. அர்த்த சாத்திரம், மன்னனின் வெற்றியே முதன்மை-யானது என்றும் அந்த  வெற்றிக்காக அறத்தை  மீறுவதும் போர் தர்மமே என்பதை அடிப்படையாகக் கொண்டது. வரிவிதிப்புக் கொள்கைகளிலும் திருக்குறளும் அர்த்த சாஸ்திரமும் முற்றிலும் வெவ்வேறானவை. அரசனின் அதிகாரத்திற்குப் பணிவதைவிட, மக்களே மனமுவந்து வரிசெலுத்தும் நிலைமை  வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. மக்களை வருத்தி, அச்சுறுத்தி வரி வாங்குவது அரசனின் கடமை என்கிறது அர்த்தசாஸ்திரம்.  மக்களின் மூடநம்பிக்கையையும், மதப் பற்றையும், அறியாமையையும் பயன்படுத்தி அரசின் கஜனாவை நிரப்பலாம் என்றும்,  மது,   -பாலியல் தொழில் உள்ளிட்ட வழிகளிலும் அரசன் தனது களஞ்சியத்தை நிரப்புதற்கு முயலவேண்டு-மென்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. இதற்கு நேர்மாறானது  திருக்குறள் நெறி.
மேலும் அர்த்தசாஸ்திரத்தில், தெருவில் சாம்பல் முதலானவற்றைப் போட்டால் அரைக்கால் வெள்ளிப் பணம் அபராதம். தெருவில் சேறாகத் தண்ணீர் தேங்கு மாறு விட்டால் கால் வெள்ளி அபராதம். இவையே ராஜ வீதியில் நடந்தால் இருமடங்கு அபராதம்.  புண்ணிய ஸ்தலங்கள், புண்ணிய தீர்த்தங் கள், ஆலயங்கள், அரண்மனை முதலானவற்றின் அருகில் இயற்கைக் கடன்களைக் கழிப்பவனுக்கு அபராதம் விதிக்கவேண்டும். இறந்த விலங்குகளின் உடல்களை நகரத்தின் நடுவில் போடுபவருக்கு அபராதம். இறந்த மனிதர்களின் உடலை மாற்றுப்பாதையில் கொண்டு சென்றாலும் அபராதம் என்றெல்லாம் மக்களை அச்சுறுத்தி வரிவிதிப்பு செய்ய வழி சொல்லப்பட்டுள்ளது. மக்களைவிட அரண்-மனையும் கஜானாவுமே முக்கியம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்ற அரசுகளைத்தான் இந்திய வரலாற்றில் பொற்கால ஆட்சி என்கிறார்கள். கோவில், யாகம், பூஜை, புனஸ்காரம் இவற்றிற்கே அத்தகைய ஆட்சிகளில் முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டன. பிறநாட்டு ஆட்சியாளர்கள் படையெடுத்து வந்த நேரங்களில்கூட போர்க்கருவிகளைத் தயார் செய்யாமல் யாகங்கள் நடத்தி தப்பித்துவிடலாம் என்கிற அளவிற்கு மன்னராட்சி முறை மாறிப்போயிருந்தது. இதனால் பல அரசுகள் எளிதாக வீழ்ந்தன. ஆக ஆட்சியில் ஆரியம் புகுந்ததன் விளைவாய் மனிதம் கைவிடப்பட்டு, வீரம் புறந்தள்ளப்பட்டு, கருவூலத்தை நிறப்புவதும், யாகம் செய்வதும் முதன்மையானது. இது ஆரியம் நிகழ்த்திய மிகப்பெரும்  பண்பாட்டுப் படையெடுப்பாகும். தமிழர் ஆட்சியில் நீதி என்பது உயிருக்கும் மேலாய் நின்றது. தன் மகனேயாயினும் தண்டனைதான் என்ற சமநீதி சமுதாயத்திற்குக் கிடைத்தது. ஆனால் ஆரியம் ஆட்சியில் நுழைந்த பின் ஜாதிக்கொரு நீதி என்ற அநீதி நடப்பிற்கு வந்து அதுவே செயற்பாட்டிலும் பின்பற்றப்பட்டது. கொலை செய்தாலும் ஆரியர் மட்டும் தண்டிக்கப்படாத அநீதி அதன்படி நிலைநாட்டப்பட்டது.
ஆட்சியில் அமைச்சுப் பணி முழுமையும் தமிழரிடமிருந்த நிலைமாறி, மெல்ல மெல்ல ஆரிய பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்டு, பின்னாளில் பெரும்பாலும் ஆரியர்களே அமைச்சராகும் அவலம் வந்தது. அதன்வழி ஆரியர் விருப்பப்படி ஆட்சி என்றாகி அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி, தமிழன் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டான்.
மக்கள் பணி, மக்கள் பாதுகாப்பு, மக்கள் நலம் என்ற ஆட்சியின் நோக்கம் மாற்றப்பட்டு, ஆலயப் பணி, கடவுள் தொண்டு, பூசை, விழா, கோயில் என்று ஆரியப் பண்பாடு ஆட்சியின் நோக்காயிற்று.
பிரிட்டிஷார்தான் தற்போதுள்ள இந்தியாவை ஏறத்தாழ ஒற்றை ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். அவர்களின் அதிகார  மய்யத்திலும் ஆரியம் சேவகம் செய்து, அடித்தட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. சுதந்திர இந்தியாவிலும் இதே நிலைதான். ஆரியத்திற்கு எதிராக  ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலரின் குரல்கள் ஒலித்தன. ஆரிய எதிர்ப்பையும் சமூக நீதி விடுதலையையும் முன்வைத்து தமிழகத்தில் மகத்தான இயக்கம் தோன்றியது. அதுவே திராவிடர் இயக்கம். அதனை வலிமைப்படுத்தி _- எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை உறுதியுடன் நடத்தியவர் தந்தை  பெரியார். சமூகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தி, மறுமலர்ச்சியை உண்டாக்கியதுடன், அரசியலிலும்  புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் விளைவே, அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அரசு. அதன் மூலம் சமூக மாற்றத்திற்கான பல திட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டன. எனினும், முக்கியமான அதிகாரங்கள் பலவும் இப்போதும் ஆரியத்தின் கையிலேயே உள்ளன. முழுமையான உரிமை- உண்மையான விடுதலை- ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சம அதிகாரம் என்பது இன்னமும் எட்டப்படவில்லை.
மத்திய அரசுப்பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27% இடங்கள் சட்டப்பூர்வமான முறையில் ஒதுக்கப்-பட்டிருந்தாலும் நடைமுறையில் கடந்த 20 ஆண்டுகாலமாக 7% முதல் 12% அளவிலான இடங்களே கிடைத்து வருகின்றன என்றால், இந்திய அரசியல் சட்டத்தை மீறிய ஆரியத்தின் அதிகாரமே இங்கு கோலோச்சியிருப்பது விளங்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைப் பெற்றிருக்கும் ஆரிய அதிகாரத்திற்கு எதிரானப் போராட்டங்கள் தொடர்ந்த படியே உள்ளன.

-உண்மை,16-31.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக