- பேராசிரியர் டாக்டர் காளிமுத்து
உலகம் இதுவரை எத்தனையோ படையெடுப்புகளைக் கண்டிருக்கிறது. வாள்முனையில் மக்கள் வாழ்வை மண்ணோடு மண்ணாக்கிய ‘மாமன்னர்களை’ உலக வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. வெட்டுண்ட தலைகள், வேல்பாய்ந்த நெஞ்சுகள், வெருண்டோடிய மன்னர்கள், வீழ்ந்துபட்ட பேரரசுகள் என்று வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் அரச படையெடுப்பகளைக் காண முடிகிறது.
இத்தகைய நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் திராவிட இனத்தின் மீது ஒரு படையெடுப்பு நடந்தேறி நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது இன்றுவரை! புல்லும் பூணூலும், செந்நிறமும் சிவந்த இதழ்களும் இப்பூவுலகின் தொன்மைக் குடிமக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டன.
கைபர் _ போலன் கணவாய்களின் வழியாக _ மய்ய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் நுழைந்த காலந்தொட்டு இன்றுவரை திராவிட மக்களின் பண்பாட்டை, மொழியை, கலையை நாகரிகத்தைச் சிதைப்பதிலேயே கவனமாக இருந்து வருகின்றனர். தொல்காப்பியர் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர்களின் அழிவு வேலைகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆரியச் சொற்கள் பலவற்றைத் தமிழில் கலந்து தமிழை ஆரிய மயமாக்கி விடுவார்களோ என்று கவலைப்பட்ட தொல்காப்பியர் சமற்கிருதச் சொற்களைத் தமிழில் எழுத நேரிடும்போது வடமொழி எழுத்துக்களால் அவற்றை எழுதித் தமிழில் ஊடாட விடக் கூடாது என்றும், அவற்றைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுத வேண்டும் என்றும் அவர் தெளிவாக விதிகளை வகுத்துக் கொடுத்துள்ளார். க்ஷ, ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டுதான் எண்ணற்ற சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்தார்கள். (‘ரஸம்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘ரசம்’ என்று எழுதலாம்; மேஜை என்பதனை ‘மேசை’ என்று எழுதலாம்). இதனால் சாறு என்ற சொல்லும் மிசைப் பலகை என்ற சொல்லும் வழக்கிழந்து போய்விட்டன. ‘விவாஹம்’ என்ற சமற்கிருதச் சொல்லைப் பார்ப்பனர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். இதனால் ‘மன்றல்’, ‘மணம்’, ‘தேவை’ முதலான இயல்பான தமிழ்ச் சொற்கள் மறையத் தொடங்கின. (திராவிடர் கழகம் இப்போது ‘மன்றல்’ விழா என்று அந்தச் சொல்லுக்கு உயிர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தூய தமிழ்ச் சொல்லான சலம் என்பதை ஜலமாக்கினர். சோற்றைச் ‘சாதம்’ என்றும், வெப்பத்தை உஷ்ணம் என்றும், சுரம் என்பதை ‘ஜுரம்’ என்றும், காட்சி என்பதைக் காட்க்ஷி என்றும், பறவையைப் பட்க்ஷி என்றும், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் நுழைத்துத் தமிழ்ச் சொற்களை வழக்கிலிருந்து அகற்றினார்கள்.
மக்களின் உடல் உறுப்புக்களின் பெயர்களை வடமொழியில் மாற்றினார்கள். தலையைச் சிரம் என்றும், கையைக் கரம் என்றும், காலைப் பாதம் என்றும், முட்டியை முஷ்டி என்றும், புட்டத்தை புஷ்டம் என்றும், தலைமயிரைக் கேசம் என்றும், உடம்பைத் ‘தேகம்’ என்றும் சமஸ்கிருதத்தில் மாற்றித் தமிழர்களை வஞ்சித்தார்கள்.
சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பூங்குன்றன், குமணன், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன், இளங்கோ, கரிகாலன், பொன்னிவளவன், அமுதன், மருதன், பூங்குழலி, தேன்மொழி, கனிமொழி போன்ற அழகிய தமிழ்ப் பெயர்கள் இன்று ஷண்முகம், ஈஸ்வரன், ரமேஷ், சுரேஷ், முருகேஷ், நாகேஷ், ஜலஜா, மலஜா என்று வாயில் நுழையா வடமொழிப் பெயர்களைத் தமிழ்க் குழந்தைகள் தாங்கித் தள்ளாடுகின்றன.
தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை _ ‘எப்போதும் வென்றான்’, பொன்விளைந்த களத்தூர், மணல்மேடு, ஏரியூர், ஆற்றூர். இப்படிப்பட்ட ஊர்களின் பெயர்கள் எல்லாம் பார்ப்பனரின் பண்பாட்டுப் படையெடுப்புக்குத் தப்பி நிற்கும் சில ஊர்கள்! மயிலாடுதுறையை ‘மாயூரம்’ என்றும், பழமலையை விருத்தாசலம் என்றும், ‘திருமரைக்காடு’ என்பதனை வேதாரணியம் என்றும், ‘நீலமலை’ நீலகிரி என்றும், ஏலமலை ‘ஏலகிரி’, பண்ணன் ஆண்டமலை வராக கிரி என மாற்றப்பட்டுப் ‘பன்றிமலை’ என்றும் சமற்கிருத மயமாக்கப்பட்டுவிட்டன.
தமிழரின் இசை கர்நாடக சங்கீதமாகி விட்டது. “பரதநாட்டியம்’’ தமிழ் நாட்டியத்தை ஆரியர்கள் தமதாக்கினர். தமிழர்தம் உணவக ங்கள் ‘வசந்தபவன்’ என்றும், ‘ஆரியபவன்’ என்றும், ‘பிராமணாள் சாப்பிடும் இடம்’ என்றும் பெயர் சூட்டப்பெற்றன.
தமிழன் உடுத்திய வேட்டி ‘வேஷ்டி’-யாகிவிட்டது; அவன் தோளில் தொங்கிய துண்டு ‘அங்க வஸ்திரமாகி விட்டது. வடக்கில் இருந்த தமிழ்ப் பெயர் தாங்கிய பல இடங்கள் சமற்கிருத மயமாக்கப் பட்டுவிட்டன. எ.டு: திருநகர் என்பது சிரீநகர் என மாற்றப்-பட்டிருக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தமிழ் இலக்கியங்களின் பாடுபொருள் ‘மக்கள் வாழ்க்கை’; மக்களின் வாழ்வியலே படைப்-பாளிகளின் மய்யப் பொருளாக இருந்தது. ஆனால் இதே காலப் பகுதியிலும் இதற்கு முன்னரும் வடமொழியில் தோன்றிய இலக்கியங்கள் மக்களைப் பாடவில்லை; மாறாகக் கண்ணுக்குப் புலப்படாத கடவுளரைப் பற்றிப் பாடின; அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளை இலக்கியம் என்று அங்கே எழுதி மூடநம்பிக்கைகளை மக்களிடையே ஆரியர்கள் விதைத்தார்கள். தமிழ்மக்களின் அகத்திணை இலக்கியங்களுக்கு ஈடாக உலகில் எந்த மொழியிலும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சாதி, மதம், இனம், மொழி, நாடு _ இவற்றைக் கடந்து நிற்கும் இயற்கை இலக்கியங்கள் நம்முடைய அகத்திணை இலக்கியங்கள். இவை மக்களின் காதல் வாழ்வை இயற்கைப் பின்புலத்தில் எடுத்தியம்புகின்றன.
ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பு அமைதியாக நடந்தது. இதன் விளைவாகத் தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் _ கருப் பொருள் மாற்றப்பட்டது. மக்களின் காதல் வாழ்வு கைவிடப்பட்டுக் கடவுளரின் காம விளையாட்டுகள் கருப்பொருள்களாயின. கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் இலக்கியத்தின் போக்கே முற்றிலும் மாறிப் போயிற்று. பழந்தமிழ் மக்களின் இயற்கையோ-டொன்றிய அகத்திணைக் கோட்பாடு அகற்றப்பட்டு அவர்கள் அதுவரை அறிந்திராத _ அவர்களுக்குப் புறம்பான _ மனித நேயத்திற்கு எதிரான கன்னிகாதானங்களைச் சிறப்பித்துப் பாடும் புராணங்களை எழுதும் நிலையை ஆரியப் பார்ப்பனர் உருவாக்கி வைத்தனர்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆரியப் பார்ப்பனரின் வைதீக மதம் செல்வாக்குப் பெற்ற காரணத்தால் தமிழ் மக்களுக்கான கல்வி நிலையங்கள் ஆள்வோரின் கவனத்தில் படாமல் மறைந்து போயின. இதனால் அறிவுத் துறையில் தமிழ் தழைத்-தோங்க முடியவில்லை. பக்திப் பாடல்களால் _ தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களால் தமிழ் அறிவை மழுங்கடித்தனர். ‘தமிழைப் பக்தியின் மொழி’ என்று கூறிப் பார்ப்பனரும் அவர்தம் அடிவருடிகளும் பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆரியம் தமிழில் புகுந்ததால் ஏற்பட்ட தீய விளைவு இது!
“மற்ற மக்கள் எல்லாரும் காட்டுமிராண்டி-களாக வாழ்ந்த காலத்தில் கப்பல் ஓட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஓர் எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை. ஏன்? தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தமிழர்-களின் தொன்மை வரலாற்றையும் அண்மை வரலாற்றையும் ஒப்பிட்டுக் காட்டி நமக்கு உணர்வூட்டுகிறார்.
ஆரியர்களின் மனுதரும சாத்திரத்தைத் தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்த அற்றை நாள் அரசர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரிய-வில்லை. குலத்துக்கொரு நீதி கூறும் மனுதருமமே இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்து மக்களை ஆட்சி செய்து வருகின்றது. அதேநேரத்தில் பிறப்பின் அடிப்படையில் மக்கள் அனைவரும் நிகர் என்னும் வள்ளுவரின் திருக்குறளை ஆரியர்கள் மக்களிடமிருந்து மறைத்து விட்டார்கள். பரிமேலழகரைப் போன்று திருக்குறளுக்கு உரையெழுதிய சிலரும் மனுதருமக் கருத்துக்களைப் புகுத்தியே குறளுக்கு உரை வரைந்தனர். இவ்வாறு ஆரியத்தின் தாக்குதலுக்கு உள்ளான திருக்குறளை எடுத்து ஆராய்ந்து ‘இது மனுதருமத்திற்கு எதிராக எழுந்த நூல்’ என்று அதற்கென்று மாநாடு நடத்தித் திருக்குறளை மக்களிடையே கொண்டு சென்றார் தந்தை பெரியார்.
ஈராயிரம் ஆண்டுகளாகத் திருவள்ளுவருக்குப் பூணூல் போட்டு, அவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவான் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்று கதை எழுதி வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். 1967_ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் வள்ளுவர் மார்பிலிருந்து பூணூலை அகற்றிவிட்டுத் திருவள்ளவருக்குச் சிலை வைத்தார்.
இந்த உலகம் இனியது; இதில் வாழ்வது மகிழ்ச்சிக்குரியது. இறப்புக்குப்பின் உடல் அழிந்து போகிறது. அவ்வளவே. இது தமிழர் வாழ்வில் வேரூன்றிய சிந்தனை. இதனை மாற்றி இறப்புக்குப்பின் மறுஉலகம் ஒன்று இருக்கிறது. அங்கு நரகம், சொர்க்கம், ஊர்வசி, ரம்பை, மேனகை முதலானவர் வந்து வாசலில் நின்று நம்மை வரவேற்பர். பார்ப்பனர்க்குத் தீங்கிழைத்தால், அவர்கள் செய்த குற்றத்திற்-காகத் தண்டனை கொடுத்தால், நரகத்தில் விழ நேரிடும். கொதிக்கும் எண்ணெய்க் கொப்-பறையில் வறுத்தெடுப்பார்கள் என்ற கருத்தியல் அடிப்படையிலேயே நூல்கள் எழுதப்பட்டன. இவற்றையெல்லாம் தந்தை பெரியார் அம்பலப்படுத்திக் காட்டினார்.
கருநாடகத்தில் வழங்கிய தமிழில் ஏராளமான சமற்கிருதச் சொற்களைக் கலந்து அதனைக் கன்னட மொழியாக்கிவிட்டனர். இதைப் போன்றே ஆந்திராவிலும் மலை-யாளத்திலும் வழங்கிவந்த தமிழோடு எண்ணற்ற சமற்கிருதச் சொற்களைக் கலந்து அவற்றை முறையே தெலுங்காகவும் மலை-யாளமாகவும் மாற்றிவிட்டனர். இம்மொழிகளில் உள்ள சமற்கிருதச் சொற்களை நீக்கிவிட்டால் அவை அருமையான தமிழாகிவிடும் என்று தந்தை பெரியார் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் பேசிய சேர நாட்டில் சமற்கிருதம் கலந்து மலையாளமானதே இதற்கு நல்ல சான்று.
ஆரியர்கள் எங்கே சென்றாலும் முதலில் மொழி அழிப்பு வேலைகளில்தான் ஈடுபடுவார்கள். மராட்டிய மாவீரன் என்று போற்றப்பட்ட சிவாஜியின் காலத்தில் மராட்டிய மொழியில் ஆயிரக்கணக்கான சமற்கிருதச் சொற்களைக் கலந்து அதனை உருமாற்றிய கதையை மஜும்தாரைப் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
மேலும், தமிழ் யாப்பு மரபிலும் ஆரியப் பார்ப்பனர் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பாக்களில் சிறந்ததான வெண்பா ஆரிய பார்ப்பனர்களுக்கு உரியதென்றும், ஆசிரியப்பா அரசர்க்குரியது என்றும், கலிப்பா வைசியர்க்குரியது என்றும், வஞ்சிப்பா சூத்திரர்க்குரியது என்றும் பாக்களிலும் வர்ணம் பிரித்துப் பாழாக்கினர்.
இவ்வாறு வளம்கொழிக்க வாழ்ந்த தமிழ், ஆரியரின் பண்பாட்டுப் படையெடுப்பால் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. என்றாலும், இடையூறுகளைப் படுகுழியில் தள்ளிவிட்டுத் தமிழ் மீண்டும் புத்தெழுச்சி பெறுவதற்குத் தந்தை பெரியார் காவலரண் போல நின்று தமிழைக் காத்து வளர்த்தார். இந்தி எதிர்ப்பு, சமற்கிருத எதிர்ப்புப் போராட்டங்களைத் தந்தை பெரியார் தலைமையேற்று நடத்தியிருக்காவிட்டால் தமிழ் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும். இவற்றையெல்லாம் தமிழ் இளைஞர்கள் எண்ணிப் பார்த்து எதிர்காலத்தைச் சீரமைக்கத் தமிழர் தலைவரின் தலைமையில் அணிதிரள வேண்டும் என்பதே தமிழர் திருநாளில் நாம் வைக்கும் வேண்டு-கோளாகும்.
-உண்மை,16-31.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக