பக்கங்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சமஸ்கிருதம்பற்றி அண்ணா


சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்து போனதால் அதனை இறந்த மொழி (Dead Language) என்று பல மொழி ஆராய்ச்சி வல்லுநர் தக்க ஆதாரங்களோடு கூறிப் பன்னெடுங் காலமாயின. என்றாலும் சிலர், இன் றும்கூட அதனை உயிர்மொழி அதாவது பேச்சு வழக்கில் இருக்கும் மொழி என்று கூறும் தங்கள் பழைய பாட்டை விட்ட பாடில்லை. சமஸ் கிருதத்தினிடத்துப் பற்றுக் கொண்டுள் ளவர்கள் அதனைப் போற்றி வளர்ப் பதில் நமக்கொன்றும்  தடையில்லை.
ஆனால், சமஸ்கிருதத்தின் துணை கொண்டு, தமிழ் மக்களின் நாகரிகத்தைக் குலைத்து வர்ணாஸ்ரம முறையைப் புகுத்தி, அதனால் பிளவையும் ஒற்று மையின்மையும் ஏற்படுத்தி, ஒரு சிலர் தங்கள் ஆதிக்கத்திற்கு அரண் தேட முயலும் போக்கினையே நாம் கண்டிக் கிறோம் என்று பல முறை விளக்கி யுள்ளோம்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழி எனக் கருதுவதில்லை. அவர் களின் எண்ணமெல்லாம் வட மொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான். அதைத்தான் அவர்கள் போற்றுவர்.
அதன் உயர்வைத் தான் அவர்கள் உணருவர். அதனிடத்தில் தமக்குள்ள காதலை சில நிமிடங்கள் குளத்தங் கரையில் உட்கார்ந்து கொண்டேனும் ஒரு மூச்சு அழுது பார்த்துவிடுவர் அதற்குக் காரணம் அவர்கள் தம்மை ஆரியரென எண்ணிச் சமஸ்கிருதத்தை ஆரிய மொழியெனக் கொண்டு, அது பிறமொழிகளைவிட மேன்மையானது எனவும் கூறி, அதனைத் தேவபாஷை எனக் கருதி வந்ததால் தங்கள் நல்ல கெட்ட காரியங்களுக்கும், பூசைக்கும், வடமொழிதான் உபயோகிப்பர். அம்மட்டோ! அந்த மொழியையே பிறரும், வாழ்க்கையின் மிக முக்கியமான சமயங்களில் உபயோகிக்க வேண்டு மென்ற வழக்கத்தையும் புக விட்டனர்.
நாள் முழுவதும் நாம் பேசுவது, படிப்பது, எழுதுவது தமிழ், நாம் கேட்கும் அவ்வளவும் தமிழ்! நமது கொஞ்சி கூடிக் குலாவுதலுமான வேளையிலே நமது மொழி. ஆனால் அம்மொழி கல்யாணத்திற்கு உபயோக மாவதில்லை. சாஸ்திரிகள் அழுத்தமும், திருத்தமுமாக ஓகார அலங்காரத்துடன், அழுகுரலோ அலறலோ ஏதோ என நாம் மருளும் நிலையுடன் ஏது அவர் சொன்னாரோ, எது அதன் பொருள் ஏதுமறிகிலோமே, நாம் ஏங்கும் விதத்திலும், சமஸ்கிருதம் சுலோகமோ மந்திரமோ கூறினால் கல்யாணம் முடியும்! அது மட்டுமா! ஆண்ட சிவ னுக்கும் நமக்கும் இடையே, அம்மொழி யிலேயே அய்யர் பேசி அருள்வாக்கு தருவார்.
எனவே, என்னதான் மேன்மை, தொன்மை முதலியன பேசினாலும், எவ்வளவு ஏடுகளைத் தேடி பிடித்துப் பதிப்பித்தாலும், மடத்தில்  மகாவித் வான் ஆனாலும் விருத்தியுரையும் விளக்க உரையும் எழுதினாலும் பார்ப் பனர் சமஸ்கிருதத்தின் மீதுதான் தமது உயிரை வைத்துள்ளார்கள். நேரிடும் போது அதற்குத்தான் சலுகை காட்டு வார்கள்.
உயர்வும், உரிமையும் அதற்கே தருவார்கள் பரணையில் இருப்பினும், ஏதேனும் கிட்டினால், அன்புடன் சமஸ்கிருதத்திற்கே ஆக்கம் தருவார். எமது  மொழி எம்மை உயர்த்திய மொழி! பரந்த திராவிட நாட்டில் எம்மைக் குருமாராக்கிய மொழி! உயர் சாதிக்காரராக எம்மை உயர்த்திய மொழி பிறரை அடிமை கொள்ள உதவிய மொழி அம்மொழிக்கு ஆக்கமெனில் எமக்கே அம்மொழி அழிந்ததெனில் எமது உயர்வுக்கு அழிவு என்ற எண்ணம் பார்ப்பனர் மனதை விட்டு அகன்றதே இல்லை அவர்கள் அவ்விதம் எண்ணுவதில் தவறுமில்லை.
தம்மை உயர்த்திக் கொள் ளவும், பிறரை அடிமை கொள்ளவும் சமஸ்கிருதந்தான் அவர்களுக்கு உதவி தந்தது. கங்கை நதி தீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலே அவர்களை, காவலரையும் ஏவலராக கொள்ள உதவி செய்தது. வீராதி வீரனும், வீழ்ந் தடி பணியும் விசித்திரத்தை உண்டாக் கிற்று. முடிதரித்து நாடாண்டவர்கள்  கண்டால், நடுநடுங்கிப் பொன்னும் பொருள் பிறவும்தந்து அடிமைகளாக வாழ வைத்ததற்கு அம்மொழி உத விற்று. ஆரியர் வாழ்விற்கு சமஸ்கி ருதமே அடிகோலிற்று. ஆரியர் ஆதிக் கம் அழிக்கப்பட வேண்டுமானால் சமஸ்கிருதத்துக்குள்ள ஆக்கம் தேய வேண்டும் என்ற உண்மையைப் பார்ப் பனர் உணர்ந்துள்ளனர்.
அதன் பய னாக அம்மொழிக்கு ஆபத்து என்றால் தமக்கே ஆபத்து வந்ததெனத் துடித்து அதற்குப் பாதுகாப்புத் தேடவும், அந்த மொழிக்குப் பக்கபலமாக உள்ள மொழியையும், வழியையும் ஆதரிக்கவும் முற்படுகின்றனர். தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள அவர்கள் மொழியைப் போற்றுவதும்,  அதனைப் பரப்பி ஆக்கம் பெற எண்ணுவதும், இயற்கை. ஆனால் இந்த உண்மையை உணராது, பிறர் ஏமாந்து அவர்கள் பின் சென்று வலையில் சிக்குகிறார்களே, அதுதான் ஆச்சரியமாகவும், நமக்குக் கவலை தருவதாகவும் இருக்கிறது.
எதற்காகப் பார்ப்பனர்கள் சமஸ் கிருதத்தைப் போற்றுகின்றனர்? ஏன் அதற்கொரு தனி உரிமை கேட்கின்ற னர்? எதற்காக ரானடே மண்டபத்தில் கூடி, சமஸ்கிருத காப்புப் படை திரட்டுகின்றனர்? இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா, ஏமாந்துள்ள தமிழர்கள்?
சமஸ்கிருதம், பேசப்பட்டும் எழுதப் பட்டும், பலருக்கும் பயன்பட்டும் இருக் கிறதா? கடைவீதியிலும் பள்ளிக்கூடத் திலும், பாராளுமன்றத்திலும், காராளர் களத்திலும், சாலையிலும், சோலையி லும், சமஸ்கிருதமா உலவுகிறது? கொஞ்சும் குழந்தைகள் பேசுவது அம்மொழியா! கோமள காதலியர் குழையும் மொழி அஃதோ! எங்கே இருக்கிறது. சமஸ்கிருதம்? என்ன பணியாற்றுகிறது? எவர்க்கு உதவுகிறது? செத்த மொழியன்றோ? சீந்துவாரற்றுச் சாய்ந்த மொழியன்றோ? தமிழர் விரட்டி ஓட்டிய மொழியல்லவா? அப்படிப்பட்ட மொழிக்குத், தம்மாலி யன்ற வரை முயற்சி செய்து ஒரு ஹானியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகச் சிலர் கூறுகின்றனரே.
மயானத்திற்குச் சென்ற பிணத்தை மந்திர உச்சாடனம் செய்து பிழைக்க வைப்போம் என்கின்றனரே. இதன் கருத்து என்ன? ஏன் இந்த சாஸ்திரி களுக்கு இவ்வளவு அக்கறை சமஸ் கிருதத்தின்மீது பிறந்தது என்பதை தமிழர் எண்ணிப் பார்க்க வேண்டாமா என்று கேட்கிறோம். நாம் மேலே எடுத்துக்காட்டியபடி சமஸ்கிருதம், இந்நாட்டிலே பரவி இருந்த வேளை யில் தான், பார்ப்பனருக்கு அதிகமான ஆதிக்கம் இருந்தது.
வர்ணாஸ்ரம தர்மம் உச்ச நிலையை அடைந்து வாழ்ந்தது. படிப்படியாகச் சமஸ்கிருத ஆக்கம் சாய்ந்தது, அதன் கூடவே சனாதனமும், வர்ணாஸ்ரமும் வீழ்ந்தன இந்தியாவில் மற்ற இடங்களில், சமஸ் கிருதம் பெற்ற ஆக்கம் அழிக்கப்பட வில்லை என்றாலும், நமது தமிழ்நாட் டில், சமஸ்கிருத ஆதிக்கம் புகுத்துவ தற்குப் பட்டபாடே அதிகம். அதன் படையெடுப்பை எதிர்த்து அநேக புரட்சிகள் நடத்தப்பட்டன. இந்தியா வில் சமஸ்கிருதத்தை தூர விலகி நில் என்று கண்டிப்பாகக் கூறிய இடம் தமிழ்நாடுதான். தமிழ்மொழி ஒன்று தான் சமஸ்கிருத சல்லாபத்துக்கு இரை யாகாது தனித்து நின்று, தன் கருத்தைப் பரப்பிற்று.
இடை இடையே தளர்ந்த காலத்திலே, தமிழரின் ஏமாளித்தனம் தலை தூக்கிய நேரத்திலே, தமிழ்நாட் டில் சமஸ்கிருதம் தனது கருத்துக்களை மட்டும் தமிழர் வாழ்விலே புகுத்தி விட்டது. அதன் பயனாகவே நமது நாட்டிலும் பார்ப்பனியம் வளர்ந்தது. மொழி, கலையைப் புகுத்தும் வழி. சமஸ்கிருதம் ஆரிய மொழி; எனவே ஆரியக் கலையைப் புகுத்த அதுவே வழி. இதுதான் சமஸ்கிருத மொழியைத் தமிழர் பலமாக எதிர்ப்பதற்குக் கார ணம்.
சமஸ்கிருத மொழியை ஏற்றால், அதன் ஆதிக்கத்தை வளர்த்து விட் டால், அதனிடம் தஞ்சம் புகுந்தால், தமிழர் தமது கலையை இழந்து நிலையையும் இழப்பர் என்று கருதுவ தாலே தான், தமிழ்ப் பேரறிஞர்கள் சமஸ்கிருதம் நுழையக் கூடாது எனக்கூறி வந்தனர். சமஸ்கிருத மொழி யின் துணையினால் புகுத்தப்படும் ஆரிய நாகரிகம், வர்ணாஸ்ரமத்தை வளர்க்கும்.
வர்ணாஸ்ரமம் வளர்நதால், முற்போக்கு கெட்டு, காட்டுமிராண்டித்தனம் ஏற்படும் எனக் கருதுவதாலேயே, பகுத்தறிவாதிகள், சமஸ்கிருத நுழை வையும் அதன் சாயலான இந்தித் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இதனை உணராது நம்மவரிலேயே சிலர், இந்தியினால் கேடு என்ன? எதற்காக அதனை எதிர்ப்பது? என்று கேட்கும் போதுதான் நமக்கு விஷய மறியாது பேசுகின்றனரே என்று ஏக்கம் பிறக்கிறது.
திராவிட நாடு 2.11.1947
-விடுதலை ஞா.ம.6.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக