பக்கங்கள்

வியாழன், 25 மே, 2017

மொழி ஒப்பாய்வு வரலாறு


மொழி ஒப்பாய்வுக்கு ஓர் உந்து விசையாக விளங்கியது டார்வினுடைய பரிணாம வளர்ச்சிக்கொள்கை ஆய்வு பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் ஒப்பாய்வுகள் எல்லாவற்றிற்கும் தாயாக இருந்து வழிகாட்டி இருக்கிறது. டார்வினுடைய அணுகுமுறையை மிக நல்ல அளவிற்குப் பயன்படுத்தி வெற்றி கண்டது மொழியியல் உலகு. இந்த அணுகு முறையை அப்படியே இலக்கிய ஒப்பாய் விற்கும் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு ஒப்பாய்வுக் களங்கள் எல்லாவற்றிற்கும் இந்த ஆய்வு முறை விரிவுபடுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் இந்த மொழி ஒப்பாய்வு அய்ரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த பொழுதெல்லாம் மிகுந்த வியப்போடு பார்த்தார்கள். சில விதிமுறைகளை வகுத்துக் காட்டி மொழியியல் உலகில் வகுக்கப்பட்ட இந்த விதிமுறை ஒரு இயற்பியல் துறையில் ஏற்பட்ட விதி முறை போல, ஒரு வேதியல் துறையில் ஏற்பட்ட விதிமுறை போலப் போற்றத்தகுந்தது என்றெல்லாம் ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது தான் இந்த மொழி ஒப்பாய்வுக்கு அறிவியல் நிகர் நிலை கிடைத்தது. முன்பே குறிப்பிட்டது போல 78, 79 வாக்கில் எதிர்பாராத விதமாக தமிழ் - ஜப்பானிய மொழி ஒப்பாய்வில் பலருக்கும் ஒரு அக்கறை ஏற்பட்டது.

திராவிட மொழிகளும்

உலகில் உள்ள வேறு சில மொழிகளும்

மிக் ஆல்ப்பின் என்பவர் ஒருவர் 70 வாக்கில் ஏலமைட் மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமையை ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்குக் கொஞ்சம் முன்னதாகவே டாக்டர் சதாசிவம் என்பவர் (பேராசிரியர் பர்ரோ அவர்களிடம் ஆய்வு செய்தவர்) சுமேரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள உறவைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். அது நூலாக விரிவாக வெளிவரவில்லை. ஆய்வறிக்கை அளவில் அப்படியே அமைந்து போய்விட்டது. அதை வெளியிடுவதற்கும் சில முயற்சி கள் எடுத்தோம், சரியாக நிறைவேறவில்லை. அதன் பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆப்பிரிக்க மொழிகளுள் ஒன்றான ‘ஒலூஃப்’ என்ற ஒரு மொழியையும் திராவிட மொழி களையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு நடந்தது. இன்டியாயே என்பது அந்த ஆய்வை நடத்தியவர் பெயர். மதிப்பிற்குரிய செங்கோர் என்பவர் அங்கே அதிபராக இருந்த காலத்தில் அந்த ஆய்வு இங்கே தொடங்கப்பட்டது. அந்த ஆய்வு நிகழ்ந்தபொழுது அதுவும் வியப்பிற்குரியதாக இருந்தது. அந்த ஆய்வுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வு அது.

இப்படித் திராவிட மொழிகளையும் உலகில் உள்ள மற்ற மொழிகளையும் ஒப்பிட்டு நடக்கிற ஆய்வு 70 களில் ஆங்காங்கே நடந்தது. சுமேரிய மொழிக்கும் - தமிழுக்கும், ஏலமைட் மொழிக் கும் - திராவிட மொழிகளுக்கும், ஒலூஃப் மொழிக்கும் - திராவிட மொழிகளுக்கும் இப்படி ஆய்வுகள் நடந்தன. அப்புறம், பாஸ்க்கு மொழிகளுக்கும் - திராவிட மொழிகளுக்கும் உள்ள உறவைப் பற்றி லகோவரி என்ற ஓர் அறிஞர் ஒரு புத்தகமே வெளியிட்டார். அது 70 களுக்கு முன்பு நடந்தது. இப்படிப் பல்வேறு ஆய்வுகள் வந்துகொண்டிருந்த நேரம். இவையெல்லாம் 70-களில் சற்று முன் பின்னாக, நடந்த ஆய்வுகள். இந்தச் சூழலில் பரவலாகத் திராவிட மொழி ஒப்பாய்வில் தனி அக்கறை ஒன்று ஏற்பட்டது. அதற்கு மேல் டில்லியில் இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லோகேஷ்சந்த்ரா, தமிழ் மொழிக்கும் - ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவைப் பற்றி ஒரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதியி ருந்தார். அதுவும் 70களில் நடந்தது (கொஞ்சம் முன்பு கூட இருக்கலாம்)

அந்தக் கட்டுரையில் அவர் பொதுவாகச் சில நல்ல செய்தி களை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் மொழிக்கும், ஜப்பானிய மொழிக்கும் உள்ள ஒலி அமைப்பு முறை ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை அந்தக் கட்டுரையில் தெளிவாக்கி எழுதியிருந்தார். இது அப்பொழுது இருந்த ஒரு சூழ்நிலை.

பல்வேறு மொழியியற் கொள்கைகள்

எழுபதுகளுக்கு முன்பு மொழியியல் உலகில் பல்வேறு கொள்கைகள் உருவாயின. சோம்ஸ்கி ஒரு கொள்கை சொல்லுவார், சார்லஸ் லேம்ப் இன்னொரு கொள்கை சொல்லுவார், ஹாலிடே என்பவர் வேறு ஒரு கொள்கை சொல்லுவார். இப்படி மொழியி யலில் பல்வேறு அணுகுமுறைகள், கொள்கைகள் வெளிவந்த நேரம். இப்படி கொள்கைகள் வெளிவந்த பொழுதெல்லாம் அந்தக் கொள்கைகள் வரலாற்று முறையில் ஆய்ந்த ஆய்வுக்கு மாற்றாக அமையவில்லை. இதில் நான் சொல்ல வருகிற செய்தி மொழியியலில் இன்றைக்கு உள்ள மொழியின் இன்றைய நிலையை ஆராய்வது ஒன்று. மொழியினுடைய வரலாற்றை ஆராய்வது என்பது வேறொன்று. இரண்டு விதமான பிரிவு இருக்கிறது. இன்றைக்கு உள்ள நிலையை ஆராய்வதை Descriptive Linguistics  என்று சொல்லுகிறோம். வரலாற்றை ஆராய்வதை Historical and Comparative Linguistics என்று சொல்லுகிறோம்.

நன்றி: நூல்: தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வு,

அளித்தவர்: மணிசாரதி

-விடுதலை ஞா.ம.,20.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக