பக்கங்கள்

வியாழன், 12 அக்டோபர், 2017

இராமநாதபுரம் அருகே 5000 ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால கற்கோடரி கண்டெடுப்பு



முல்லைக்கோட்டை, செப்.29 இராமநாதபுரம் அருகே போக லூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப் பகுதியில் 40 ஏக்கர் பரப்பள வில் பானை ஓடுகள் சிதறிக் கிடப்பதாக ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன்ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரிகோபால கிருஷ்ணன் ஆகியோர் அப் பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது புதிய கற்கா லத்தைச் சேர்ந்த கற்கோடரி, தானியங்களை அரைக்க பயன் பட்ட அரைப்புக்கற்கள், கவண் கல், குறியீடு உள்ள பானை ஓடுகள், மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச்சில்லுகள், சுடு மண் கெண்டியின் உடைந்த பகுதி, கைப்பிடி,மான் கொம்பு, இரும்புதாதுக்கள், இரும்புக்கழிவு கள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகி யவை கண்டெடுக்கப்பட்டன.

இங்கு கிடைத்த கற்கோ டரி புதிய கற்காலத்தைச் சேர்ந் தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. கருங்கல்லால் ஆன இதைநன்கு தேய்த்து வழு வழுப்பாக்கி மெருகேற்றியுள்ள னர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்றவெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாக பயன் படுத்தியுள்ளார்கள். ஒரு கருப்பு -சிவப்பு பானை ஓட்டில் த என்னும் தமிழ் பிராமி எழுத்துபோன்ற குறியீடும், மற் றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன.

இவை 2000 ஆண்டுகள் பழ மையானவை. புதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்க கால பானைஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல்சங்க காலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இவ்வூர் விளங்கியுள்ளது.வட தமிழ்நாட்டில் அதிகஅளவில் புதிய கற்காலக்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
-விடுதலை நாளேடு, 29.9.17

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக