ஆசிரியர்: முனைவர் கருவூர் கன்னல்
வெளியீடு: கௌரா ஏஜென்ஸீஸ்,
4, சிங்கப்பெருமாள் கோவில் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600005.
தொலைபேசி: 9790706548/9790706549
விலை: ரூ.60/- பக்கங்கள்: 68
தமிழரின் தொன்மையையும், தமிழின்தொன்மையையும் விளக்கும் சான்றுகளான கல்வெட்டுகள், தொல்பொருள் பற்றிய செய்தியையும் அவற்றை ஆராய்ச்சி செய்து ஆய்வாளர்களின் கருத்துகளையும் தொகுத்து இந்நூலை அளித்துள்ளார் முனைவர் கருவூர் கன்னல்.
அமெரிக்காவின் தொல் குடிகளான மாயா இனம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் தென்பகுதியிலே இருந்து சென்று குடியேறிய இனம்தான் என்பது நம்பக் கூடியதாக இருக்கிறது என்று எரிக்வான் டானிக்கன் என்ற செர்மானிய ஆய்வாளர் கூறியுள்ளார்.
கால்டுவெல்லும், வடஇந்தியருக்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்துப் பப்பரப் புலி அல்லது யானைப்புலி என்னும் ஆப்பிரிக்க மரங்கள் தென்இந்தியாவின் தென்கோடியில் உள்ள கோட்டாற்றிலும், பழைய கொற்கையிலும் இன்னும் காணப்படுகின்றன என்கிறார். மேலும், உலகில் கண்டெடுக்கப்பட்ட மாந்த எலும்புக் கூடுகளில், 1891இல் துபாயிசு என்பவரால் சாவாவில் எடுக்கப்பட்ட நிமிர்ந்த குரங்கு மாந்தனின் காலம் கி.மு.5 இலட்சம் ஆண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும், சாவாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரு நாடே குமரிக் கண்டம் எனலாம் என்ற தேவநேயப் பாவாணர் அவர்கள் தம் ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார்.
சுமத்திராவில் வாழும் காரோ படக் என்னும் இனத்தவர் சேரர், சோழர், பாண்டியர், கலிங்கர் என்னும் பெயர்களை இக்காலத்தும் வழங்கி வருகின்றனர். மேலும், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், உறவுப் பெயர்கள் சப்பானிய மொழியில் இன்றும் வழங்கி வருகிறது.
இச்செய்தி உண்மை என்பதற்குச் சான்றாக, சுமத்திராவில் வாழும் காரோ படக் என்னும் இனத்தவர் சேரர், சோழர், பாண்டியர், கலிங்கர் என்னும் பெயர்களை இக்காலத்தும் வழங்கி வருகின்றனர். மேலும், சப்பானிய மொழியியலார், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்றும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், உறவுப் பெயர்கள் அதுவும் சப்பானிய மொழியில் இன்றும் வழங்கி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்றுத் தெளிந்து ஆய்ந்து கூறியுள்ளார்கள்.
உலகின் முதல் மாந்த இனமான திராவிட இனத்தின் உற்பத்திக் கருவிகள் பிற மாந்த இனப் பெருங் கற்கால நாகரிகத்திலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பிற மாந்த இனக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பெருங்கற்களைப் பயன்படுத்தியபோது பிரும்மகிரியில் வாழ்ந்த திராவிடர்கள் இரும்பையே தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
இலெனின் கிராடு நகரத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர், குபான் வட்டாரத்தில் தமது அகழ்வு ஆராய்ச்சிகளை நடத்தியபோது அக்குழுவின் தலைவர் வி.போச் கரோர் செய்தியாளர்களுக்கு நேர் உரை அளித்தபோது ‘குபான் வட்டாரத்தில் ஒரு கல்லறையைப் பார்வையிட்ட பொழுது அங்கு ஒரு மண் மேட்டைக் கண்டோம். அதைத் தோண்டிய போது பெண்கள் அணியும் தங்க நகைகளைக் கண்டெடுத்தோம். அவை இரண்டு தங்க வளையல்களும், இரண்டு தோடுகளும், ஒரு தொடரியும் (Chain) ஆகும். இந்த அழகான தங்க நகைகள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இந்நகைகளின் வேலைப்பாடு மிக அருமையானது. இந்நாகரிகம், கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்தது எனத் தோன்றுகிறது’’ என்று கூறியுள்ளார்.
இச்செய்தியிலிருந்து இந்நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும், கி.மு. வுக்கு முன்னர் வழங்கிய தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் தலைவியர் தங்கத்தால் செய்யப்பட்ட வளையல்களையும், காதணிகளையும், தொடரிகளையும் அணிந்துள்ள செய்தியை அந்நூல்களின் மூலம் நன்கறியலாம். எனவே, உருசியாவில் கண்டெடுக்கப்பட்ட நகைகளால் தமிழர் நாகரிகம் அந்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரவியிருந்தது என்பதற்கும், தமிழர் அங்கு வாழ்ந்திருந்தனர் அல்லது வணிகம் செய்தனர் என்பதற்கும் கட்டியம் கூறுவது போல இருக்கிறது.
கி.மு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒன்று உருசிய நாட்டு உசுபெசுகித்தானில் செராபாத் இசுடெப்பியில் அகழ்ந்தெடுக்கப்பெற்றுள்ளது. இது 45 மாத்திரி (மீட்டர்) அகலமும், 65 மாத்திரி (மீட்டர்) நீளமும் கொண்டது. 4 மாத்திரி (மீட்டர்) உயரமுள்ள சுற்றுச்சுவருடன் காணப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் நான்கு வழிபாட்டுப் பீடங்கள் காணப்படுகின்றன. நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றின் எச்சமாக விளங்கும் நான்கு வழிபாட்டுப் பீடங்களாக இக்கருவறை இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நிலம், நீர், தீ, காற்று விசும்பின் மயக்கமே உலகம் என்ற கருத்து பழந்தமிழ் மாந்தரிடம் சிறந்து விளங்கியது. தமிழர் கி.மு. விற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் நிலம், நீர், தீ, காற்று, விசும்பின் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைப் பலபடப் பாடியுள்ளனர். எனவே, குமரிக்கண்டம் சிதைந்த போது சென்று தங்கிய மாந்தர்களில் எச்சமாகக்கூட இக்கோயில் இருக்கலாம் என்பதற்கு மேலே கண்ட செய்திகள் அரணாக விளங்குகின்றன.
உசுபெசுக்கித்தான் குடியரசைச் சார்ந்த குசான் நகரின் பக்கலில், கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்தர் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ‘அமுதார்யா’ ஆற்றின் வடகரையில் உள்ளது. இங்குத் தோண்டி எடுக்கப்பட்டுள்ள காசுகளும், புத்த சமயத்தை நினைவுபடுத்துகின்றன.
வரலாறு என்பது ஓர் இனக் குமுகாயத்தின் உற்பத்திக் கருவியிலும், உற்பத்தி உறவிலும் தொடங்குகிறது. ஏனென்றால், மாந்தர்கள் கூடி வாழும் குமுகாய அமைப்பின் கட்டுமானமே உற்பத்தி உறவில்தான் வளர்ந்து வந்திருக்கிறது. எனவே, உற்பத்தி உறவின் வளர்ச்சியே பண்பாடு _ நாகரிகம் எனப்படும். ஓர் இனத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், கலைகளையும் உண்டாக்குவதே உற்பத்தி உறவுகள்தான் எனத் துணிந்து கூறலாம். எனவே, மாந்த இனத்தின் தோற்றத்தைக் கூட உற்பத்திக் கருவிகளைக் கொண்டும், உற்பத்திப் பொருள்களைக் கொண்டும் ஆய்ந்துணரலாம்.
உலகின் முதல் மாந்த இனமான திராவிட இனத்தின் உற்பத்திக் கருவிகள் பிற மாந்த இனப் பெருங் கற்கால நாகரிகத்திலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பிற மாந்த இனக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பெருங்கற்களைப் பயன்படுத்தியபோது பிரும்மகிரியில் வாழ்ந்த திராவிடர்கள் இரும்பையே தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள். எனவே, உற்பத்திக் கருவிகளிலேகூட உலக நாகரிகத்தின் முன்னோடி திராவிடர்களே என்பது வெளிப்படுகின்றது.
புதிய கற்கால மாந்தர்கள் இன்றைய தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வாழ்ந்திருக்கின்றனர். பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கோள் கொண்ட பகுதிகளிலும் வாழ்ந்திருப்பர் என்பதற்குச் சான்றுகள் பல தேவையில்லை.
இன்றைய பெரியார் மாவட்டத்தில் உள்ள கொடுமணல் என்னும் ஊரிலும், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் முட்டம் என்னும் இடத்திலும் புதிய கற்கால மாந்தர்களின் கருவிகள் கண்டெடுக்கப்பட்டு ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், கோவலன்பொட்டல் என்னும் இடத்திலும், வடஆற்காடு மாவட்டத்தில் ஆம்பூர் அருகில் உள்ள அர்மாமலை என்னும் இடத்திலும், புதிய கற்காலக் கைக்கோடாரிகளும், பிற கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாடி என்னும் ஊரில் கற்காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. நீலகிரி மலையில் உள்ள பெல்லிச்சி என்னும் இடத்திலும் கற்காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட வாழ்வியல் சின்னங்கள் தென்னகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகள் மாந்த இனம் தோன்றி உலக நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளைவித்த இடம் குமரிக் கண்டமே என்பதை உணர்த்துகின்றன.
உடுமலையில் இருந்து 35 கல் தொலைவில் உள்ள மறையூர் என்னும் இடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள கீழ்வாலை என்னும் ஊரில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காமராசர் மாவட்டம், சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்ற இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நுண் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.
மிகப் பழங்காலத்திலேயே கெய்ரோ நகருக்குத் தெற்கே செங்கடல் கரையோரமாய் இருக்கும் கியூசேயிர்-அல்-கடிம் என்ற துறைமுகத்தருகே சில இடங்களைத் தோண்டியபோது அங்கு ஒரு கொல்லன் பட்டறையும், ஒரு பானை ஓடு மீதுள்ள ஒரு தமிழ் பிராமிக் (Brahmi) கல்வெட்டும் அகப்பட்டிருக்கின்றன.
இன்னும் தமிழ் பிரமியிலேயே உள்ள ஒரு கல்வெட்டினைத் தாங்கி நிற்கும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் பானை ஓடு மீதுள்ள கல்வெட்டு சாதன் (Caatan) எனவும், இரண்டாவது பானை ஓட்டின் மீதுள்ள கல்வெட்டு காணன் (Kanan) எனவும் தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.
இந்த இரண்டு இந்தியர்கள் காதன் அல்லது சாதன், காணன் ஆகியோர் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தாதுப் பொருட்களை உருக்கி உலோகம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நம்மால் உணர முடியும் செய்திகளே. பொதுவாக இந்தியர்கள் என்று குறிக்கப்பட்டாலும் அவர்கள தமிழர்களாய்த் தான் இருந்திருக்க வேண்டும். இவ்வுண்மை அந்தத் தமிழ் பிரஹமி பானை ஓட்டுக் கல்வெட்டுகள் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இந்த அரிய கல்வெட்டை அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றுள்ள சிந்து சமவெளியோ, கங்கைச் சமவெளியோ அன்று இல்லை. அவை கடலுள் இருந்து பல நூறாயிரம் ஆண்டுகளுக்கப் பிறகே வெளிக் கிளம்பின. இமயமலையும் அவ்வாறே.
இந்தியப் பூலோகத்திலும் சரி, அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் சரி, முதன்முதலாக வரலாற்றுக்குரிய இடமாகத் தென்புலந்தான் இருந்திருக்கிறது என முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
கோவையில் இருந்து 25 கல் தொலைவில் உள்ள வெள்ளருக்கம் பாளையத்திற்கு அருகில் வேட்டைக்காரன் மலை என்னும் இடத்தில் ஒரு குகைக் கோயிலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதுபோலவே,
திருச்சி மாவட்டம், அரியலூருக்கு அருகில் உள்ள கொட்டை ஆதனூர் என்னும் ஊரில் கல்மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல நீலகிரியில் உள்ள கல்மரமும், உதகை மண்டிலப் பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக்கு முற்பட்ட வாழ்வியல் சின்னங்கள் தென்னகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகள் மாந்த இனம் தோன்றி உலக நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளைவித்த இடம் குமரிக் கண்டமே என்பதை உணர்த்துகின்றன.
இந்தியக் கடல் தோன்றுவதற்கு முன்னர் அங்கே பெரும் நிலப்பரப்பு ஒன்றிருந்தது. அது நாவலந் தீவு எனப்பட்டது. அய்ரோப்பிய மக்கள் அதற்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். சிலர் காண்டுவானா என்றும் கூறினர். இதன் நடுவில் மேருமலை நின்றது. அதன் ஒரு கொடுமுடியே இலங்கைத் தீவு, வடக்கே ஆசியாக் கண்டம் இருப்பது போன்று தெற்கே நாவலந் தீவு இருந்தது என ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு தென்னிந்தியாவும், ஈழமும், மலேசியாவும், ஆசுதிரேலியாவும், ஆப்பிரிக்காவும், இலங்கையும் இணைந்திருந்த ஒரு பெருந்தீவாக விளங்கிய நாவலம் தீவே இன்றைய மாந்த இனத்தின் தாய் மண் என்பதையும், தமிழ் நிலமே உலக மக்களின் நாகரிகப் பண்பாட்டுக் கருப்பை என்பதையும் நன்குணரலாம்.
நூல்: தமிழ் இனத்தின்தொன்மையும்
ஆசிரியர்: முனைவர் கருவூர் கன்னல்
வெளியீடு: கௌரா ஏஜென்ஸீஸ்,
4, சிங்கப்பெருமாள் கோவில் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600005.
தொலைபேசி:9790706548/9790706549
விலை: ரூ.60/- பக்கங்கள்: 68