ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சி யாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக்குழப்பம் இருப்பதற்குத் தொடராண்டு முறை இல்லாதது முக்கியக் காரணமாகும்.
பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என் கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துள் ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்கு முறையைப் பின்னாளில் ஆரியர்கள் தாங்கள் கையகப் படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப் போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும், வானியல் கலையையும், அய்ந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டு விட்டது.
இந்தக் குழப்பத்தை நீக்க அய்ந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு.31 எனக் கொண்டு, திருவள் ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத் துவதென முடிவு செய்தனர். இழந்த தொன் மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம் எனப் பல்வேறு சமயத்தைத் தழுவிய அந்த அய்ந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணம் சான்றுகளும் இருக்கின்றன.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்ட கழக இலக்கியங் களில் காணப்பெறும் சான்றுகள் சில:
1. தைஇத் திங்கள் தண்கயம் பாடியும் - நற்றிணை
2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை
3. தைஇத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு
4. தைஇத் திங்கள் தண்கயம் போல - அய்ங்குறுநூறு
5. தையில் நீராடித் தவம் தலைப்படு வாயோ - கலித்தொகை
தை பிறந்தால் வழி பிறக்கும். தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய் மொழிச் சான்றாக அமைந்துள்ளன.
இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்கு உரிய வானவியல் அடிப்படை யிலான காரணத்தைக் காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றி வரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென் செலவு (தட்சாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெல வும் ஆடி முதல் மார்கழி வரை தென் செலவுமாகும். அந்த வகையில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்கு கிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத் திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.
இப்படியும் இன்னும் பல அடிப்படை உதாரணங்களாலும் தை முதல் நாளை அய்ந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன் பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள்,
பொங்கல் நன்னாள்!
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.
தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத் தாரின் தாக்குதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக் காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானி யல் கலையை அய்ந்திரக் (சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போது தான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப் படுத்த முடியும்.
- லெட்சுமணன், ஈப்போ
நன்றி: முகம், சனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக