பக்கங்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

தமிழின் பெருமையும் - பழமையும் வடமொழியால் வந்த கேடு வித்வான் மா. இராஜமாணிக்கம் விளக்கம்

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.8.1938) தமிழ் மாணவர் கழகத் திறப்பு விழாவைச் செய்த வித்வான் மா.இராசமாணிக்கம் பி.ஓ.எல். அவர்கள் செய்த சொற் பொழிவின் சாரம்:

தமிழின் பழமை

நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் ஆரியர் வருகைக்கு முன் தமிழ் பரவி இருந்ததென்பது ஆராய்ச்சி யாளர் துணிபாகும். திராவிட மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ்மொழி என்பதும் அவ்வாசிரியர் கொள்கை. தென்னிந்தியாவிலுள்ள தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம், துளுவம், குடகு என்னும் ஆறு செப்பஞ்செய்யப்பட்ட பல மொழிகளும், துடா, கோட்டா, கோண்ட், கூ, ஓராயன், இராஜ் மஹால் என்னும் செப்பஞ்செய்யப் படாத ஆறு இந்திய மொழிகளும் ஆக  இப்பன்னிரண்டும் தமிழ் மொழிக்கே நெருங்கிய உறவு முறையில் இருந்தாலும், இவற்றில் பழமையானது தமிழாக இருத்தலாலும் பண்டைத் தமிழே இவற்றிற்குத் தாய்மொழி எனக்கூறல் தவறாகாது. மேலும், சிந்துப் பிரதேச ஆராய்ச்சிகளிலிருந்தும்

பலுஜிஸ்தானத்தில் பேசப்படும் பிராகிமொழியிலிருந்தும் தமிழ் மொழி இந்தியா முழுவதும் அல்லாமல் பலுஜிஸ்தான வரை யிலும் ஆரியர் வருகைக்கு முன் பரவியிருந்தது என்பதை நிரூபித்துக் காட்டலாம்.

ஆரியர் கி.மு. 2600க்கு முன் இந்தியாவில் இல்லை யென்பது சர்.ஜான் மார்ஷல் முதலிய ஆராய்ச்சியாளர் துணிபு. எனவே கி.மு. 2600 முன் வரையில் நம் தாய் மொழியாகிய தமிழ் நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் பரவியிருந்தது என்பதை தமிழராகிய நாம் அறிந்து மகிழ்தல் வேண்டும். ஆரியர் வந்தவுடன் அவர்கள் மொழியாகிய வடமொழியை வட இந்தியாவில் இருந்த தமிழ் மக்கள் பேச நேரிட்டது. தமிழ் மக்களுடைய உச்சரிப்பு, பேச்சு முறை முதலியவற்றால் வடமொழியின் உச்சரிப்பும், பேச்சு முறையும் கெட்டதோடு தமிழ் மொழியின் உச்சரிப்பும் பிறவும் கெட்டு நாளடைவில் தமிழ் அழிநிலையை அடையத் தொடங்கியது. பெருவாரியான தமிழ் மக்களு டைய கூட்டுறவால் வேதகால வடமொழியே கெட்டு விட்டது. முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே இக்கெடு தலை காணலாமென்பது ஆராய்ச்சியாளர் முடிவு (டாக்டர் சனிதிகுமர்சட்டர்ஜி வரைந்துள்ள "வங்க மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்") நாளடைவில் வடமொழி தமிழர் கலப்பால் கேடுற்றுப் பிராக்கிருத மொழிகளாக மாறிவிட்டது. அவற்றில் ஒன்றுதான் புத்தர் பேசிவந்த பாலி பாஷை. இப்பிராகிருத மொழிகளும் நாளடைவில் கிரேக்கர், பராணீகர், துருக்கியர், ஆப்கானியர், மங்கோலியர் முதலிய பல நாட்டு மக்கள் தொடர்பால் (அவர் தம் மொழிகளின் கலப்பால் கெட்டு இன்று வழங்கப்படும் வங்காளி, பஞ்சாபி, சிந்தி, இந்தி, குஜராத்தி, மராத்தி, முதலிய வட இந்திய மொழிகளாகப் பரிணமித்தன. இவற்றிற்கு ''இந்திய ஆரிய மொழிகள்" என்பது இன்று வழங்கும் பெயராகும்.

வடமொழி கலப்பால் வருங்கேடு

இவ்வாறு வட இந்தியா முழுவதும் பல்வேறு நாட்டு மக்கள் குடி புகுந்து பல்வேறு மொழிகளைப் பேசத் தலைப்பட்டதும் பல்வேறு நாகரிகமும் வளரவே, தமிழ் மொழியோ, தமிழரோ இருத்தற்கு இடமில்லையாயிற்று. ஆயினும் இம்மொழிகளின் கலப்பால் கொலையுண்ட தமிழை வட இந்தியாவிலுள்ள கோண்ட், க, ஓராயரன், இராஜ்மஹால், பிராஹி முதலிய மொழிகளில் இன்னும் காணலாம். தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவும் இம் மொழிகளைப் பேசும் மக்களிடம் இன்னும் காணலாம்.

வட இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் தோன்றவே வட இந்தியாவுக்கு அடுத்த ஆந்திரநாடு ஆரிய நாகரிகத்திற்கு உள்ளாகி அங்கிருந்த மொழியும் வடமொழிக் கலப்புடையதாக ஆகி விட்டது. தெலுங்கில் உள்ள எல்லாச் சொற்களும் தமிழ்ச் சொற்களுக்குப் பெரிதும் பொருத்த முடையனவாகக் காணப்படினும் இன்றைய தெலுங்கு மொழி வடமொழியின் உதவியில்லாமல் இயங்க முடியாத பரிதாப நிலைக்கு வந்து விட்டது. இதே நிலைமை சுமார் கி.மு. 500 வருடங்களுக்கு முன்னரே கன்னட மொழிக்கும் நேர்ந்து விட்டது, அதே பரிதாப நிலை கி.பி. 8ஆம் நூற்றாண் டுக்குப் பிறகு மலையாளம், குடகு, துளுவம் முதலிய மொழி களுக்கும் ஏற்பட்டு விட்டது. அதாவது விந்திய மலைக்குத் தென்பாலிருந்த தமிழ் வடமொழிக் கலப்பேற்று தெலுங்காக வும், கன்னடமாகவும், மலையாளமாகவும். குடகு ஆகவும், துளுவமாகவும் மாறிவிட்டது.

தமிழின் பரிதாப நிலைமை

ஆனால், இந்தப் பெரிய மாறுதல் நமது தமிழ்மொழிக்கு உண்டாகவில்லை. ஏனெனில் தூய இரத்தவோட்டமுடைய அக்காலத்தமிழ் மக்கள் தம் தாய்மொழியை வடமொழிக் கலப்பு ஏற்படாமல் இயன்றவரையிலும் தடுத்து வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களைப் பயின்றார் நன்கு உணரக்கூடும். தொல்காப்பிய முதலிய சங்க நூல்களில் நூற்றுக்கு நான்கு சொற்களே உடமொழிச் சொற்களாகக் கூறலாம். பிற்காலத்திய சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகிய நூல்களில் - வடநாட்டு மதங்களாகிய பவுத்தமும், சமணமும் பரவிய காலத்தில் (கி.பி. முதல் இரண்டு நூற்றாண் டுகளில்) நூற்றுக்கு பத்துப் பதினைந்து வடசொற்கள் தமிழ் மொழியில் நுழைந்து விட்டன என்பதைத் தமிழ் அறிஞர் நன்குணர்வர். பின்னர்த் தேவார திருவாசக காலங்களிலும் (கி.பி. மூன்று முதல் எட்டு நூற்றாண்டுகள் முடிய) நாலாயிரப் பிரபந்தம் பாடப்பெற்ற காலங்களிலும் வட சொற்கள் நூற் றுக்கு இருபதுக்கு மேலாகத் தமிழ் மொழியில் இடங்கொண்டு விட்டன. பின்னர் வந்த வைணவ ஆச்சாரியர்கள் காலத்தில் வடமொழியும் தமிழ் மொழியும் கலந்த மணிப்பிரவாள நடைதோன்றிற்று. அந்நடையே அன்று முதல் இன்று வரை யில் கதாகலாட்சேபங்களிற் பாகவதர்களாலும், வைணவ அடியார்களாலும் பேசப்பட்டு வருகின்றது. பின்னர் வந்த கம்பராமாயணம் முதலிய நூல்களிலும், புராணங்களிலும், வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலப்புண்டன. வில்லி புத்தூராழ்வார் பாரதத்தில் நூற்றுக்கு அய்ம்பதுக்கு மேலாகவே வடசொற்கள் நுழைந்து விட்டன. இதற்குப் பிற்பட்ட காலத்தில் விஜயநகர அரசர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட போதும் மகாராட்டிர ஆட்சி ஏற்பட்ட போதும் முறையே தெலுங்கு மொழிகளும், மகாராஷ்டிர மொழி களும் ஒரு சில உருது மொழிகளும் தமிழில் கலக்கலாயின. இவற்றின் பயனாய்க் குமரகுருபர சுவாமிகள் போன்ற சைவ ஆசாரியர் பாடிய பிரபந்தங்களிலும் 'சலாம், சொக்காய் போன்ற உருது சொற்கள் இடங்கொண்டு விட்டன. இவை போல் இடங்கொண்ட சொற்கள் பலவாகும். இது உரை கூறியவற்றால் பண்டைக் காலத்திலிருந்து தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் புகுந்து அவற்றின் பயனாய் நாம் தமிழ் மொழிச்சொற்களை இழந்து நிற்கின்ற பரிதாப நிலையையும், தமிழ் மொழி தன் தூய்மையை இழந்து நிற்கின்ற கேவல நிலையையும் நன்றாக அறியலாம்.

தாய் மொழிக் கவலையில்லாததால் வந்த கேடு

சுமார் 150 ஆண்டுகளாக ஆங்கிலம் அரசியல் மொழி யாக இருந்து வருவதும் அதனால் எழுதப்படும் தமிழும் பேசப்படும் தமிழும் எந்த அளவில் கெட்டிருக்கின்றது என்பதை அறிவுடையோர் நன்கு உணரக்கூடும். நமது பேச்சு மொழி பெரிதும் ஆங்கிலச்சொற்களையே கொண் டிருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். எழுத்து முறையிலேயும் பீச்சு, பார்க், லைட் அவுஸ், ஹார்பர், ஹவர் (மணி) முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் புகுந்து விட்டன என்பதை வெட்கத்தோடு கூறவேண்டிய நிலையில் இருக்கி றோம். சுருங்கக் கூறின் தமிழன் என்ற உணர்ச்சி இல்லா மையால் தான் நாம் நமது தாய்மொழிப் பற்றிய கவலையில்லாமல் விலங்கினும் கேடு கெட்ட தன்மையில் இருந்து வந்திருக்கிறோம். மேற் கூறிய பல மொழிகளின் கலப்பால் நமது நாகரிகமே மிகப்பெரிய அளவில் மாறுபட்டு விட்டது என்பதையும் சங்க நூல்களைப் படித்த தமிழறிஞர் நன்கு அறியக்கூடும். பண்டைத் தமிழர்கள் திருமணத்தில் வட மொழி மந்திரங்களில்லை; தீவலம் வருதல் இல்லை; தட் சணை பெற புரோகிதன் இல்லை; இது முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணம'' என்று காலஞ்சென்ற சரித்திரப் பேராசிரிய ரான தோழர் பி.மு.சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளதை ("பண்டைத் தமிழர் சரித்திரம்'") உண்மைத் தமிழர்களாகிய நீங்கள் கவனித்தல் வேண்டும். அப்பண்டை மணமுறை இன்று இல்லாமற் போனதற்குக் காரணம் யாது? என்பதை நீங்களே உணருங்கள். மொழிக்கலப்பால் நாகரிகக்கலப்பும் ஏற்படும் என்பது இவ்வொன்றைக் கொண்டே உணரப்படும் நம் தமிழ்ப்பண்டிதர் தம் குழந்தைகட்குத் திருஷ்டி தோஷம் முதலியவை நீங்க முஸ்லிம் மத குருக்களிடம் சென்று வரு தலை நீங்கள் அறிவீர்கள். இந்தத்திருஷ்டி தோஷம் முதலிய வற்றை நீக்குவதற்கு நம் மதப்பெரியார்களோ கடவுளரோ பயன் அற்றவர்களா? இங்ஙனம் பலதுறைகளிலும் கருத் தூன்றிப் பார்க்கும் பொழுது தமிழர் நாகரிகம் உருக்குலைந்து விட்டது என்பதை அறிவுடையோர் மறுத்தல் இயலாது. போதாக்குறைக்கு ஆங்கில நாகரிகம் ஓர் அளவில் நன்மை செய்திருப்பினும் அது தமிழர் நாகரிகத்தையே பெரிதும் மாற்றிவிட்டது என்று அழுத்தமாகக் கூறலாம். இதற்குத் தமிழர் தம் அறிவீனமே காரணமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

நமது தமிழ் மொழி தூய்மையடைய வேண்டுமானால் நமது நாகரிகம் ஓரளவாவது நிலைத்திருக்க வேண்டுமானால் தமிழராகிய நாம் ''தமிழர்' என்ற அழுத்தமான உணர்ச்சி யோடு பண்டைத் தமிழர் கையாண்ட முறைகளை இக்காலத் திற்கேற்ற அளவில் கையாண்டு ஒரு மனப்பட்டவர்களாய் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து எறிந்து தமிழ் உணர்ச்சியோடு வாழ்வோமாயின் தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழ் நாகரிகமும் இன்றுள்ள அளவிலாவது நிலை பெற்றிருக்கக்கூடும். இன்றேல் "தமிழன் இறந்து விட்டான்; தமிழ்மொழி இறந்து விட்டது; தமிழ் நாடும் மறைந்து விட்டது" என்ற கேவல எண்ணத்துடன் விலங்கி னங்களாய் நடைப்பிணங்களாய் உயிருள்ள வரையில் ஊசலாடித் திரியும் கொடிய நிலையே ஏற்படும். இதனை நன்குணர்ந்து தமிழர் செந்நெறிப்பற்றி நடப்பாராக! தமிழ் நாடு, தமிழர், தமிழ் வாழ்வதாக!

- 'விடுதலை', 27.8.1938

-  விடுதலை நாளேடு, 11 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக