பக்கங்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல 1&2

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

அருந்தமிழ் தோழர்களே!

இந்த நான்காவது சென்னை மாகாணத் தமிழ் மகாநாட்டிற்கு தலைமை வகிக்க என்னை அழைத்து என்னை பெருமைப் படுத்தியதற்காக என் மனமுவர்ந்த நன்றி உங்களுக்கு உரித்தானது. அவ்வண்ணமே எனது நன்றியை உங்களுக்குச் செலுத்துகிறேன்.

இம்மகாநாட்டை மாகாண தமிழர் மகாநாடென்று குறித்திருப்பதால் தமிழர் என்னும் பதத்தின் உண்மைப் பொருளை நாம் சரியாக அறிகிறோமாவென்று சற்று சந்தேகத்திற்கு இடந்தருகிறது என்பதற்குட்பட்ட வரையில் தமிழன் என்கிற பதத்திற்கு ஓர் அர்த்தமே பொருத்தமானது. யார் ஒருவர் தொன்றுதொட்டு தலைமுறை தத்துவமாக தமிழ் மொழியைத்தாய் மொழியாகக் கொண்டு அம்மொழியை பிரதானமாக அனுட்டித்து போற்றி வரு வாரோ அவரே தமிழர் ஆவாரே அன்றி மற்றொருவருக்கும் அப்பதம் பொருத்தமாகாது. அன்னிய நாட்டினர் தமிழ்மொழியில் பெரும் ஆராய்ச்சி செய்து தேர்ச்சிபெற்று புலமைத்தன்மை அடைந்திருப்பினும், தமிழ் மொழிக்கு என்ன அரும்பெரும் தொண்டு புரிந்திருப்பினும் அவர் தமிழர் ஆகமாட்டார்.

தமிழர் யார்

நம் நாட்டில் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்ட, மதுரை சேசுசபையைச் சேர்ந்த பெஸ்கிசாமியாரும் ஆங்கில பாதிரியாராகிய போப்பய்யரும் நமது மொழியில் மிகவும் புலமை அடைந்தவர்கள் என்பது எல்லோரு மறிந்தவிடயம். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியும், போப்பய்யரின் தமிழ் இலக்கணமும், மிகவும் பெருமை வாய்ந்த தமிழ் நூல்களாக இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் வீரமாமுனிவராவது, போப்பய்யராவது தமிழ ரென்று கருதப்படுவார்களா? அவ்வாறே வெளிநாட்டி லிருந்து நம்மிடத்தில் குடியேறியவர்கள், எவ்வளவு காலங்களுக்குமுன் நம்மிடம் வந்து சேர்ந்தவர்களாயினும், இந்நாட்டிலேயே எப்போதுமிருக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களாயினும் நம் தமிழ் மொழியை தன் மொழியாகக் கொள்ளாமல் இருப்பின் அவர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள். அவசிய நிமித்தமும் தன் சவுகரியத்தை உத்தேசித்து நம் மொழியைப் பழக்கவழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரணத்தைக் கொண்டு மாத்திரம் தமிழராக மாட்டார்கள்.

பார்ப்பனர் தமிழரா?

குறிப்பாக நம் நாட்டில் பார்ப்பனர்கள் தமிழர் ஆவார்களா ஆகமாட்டார் என்பதுதான் என் முடிவு. நம் நாட்டில் அநேக நூற்றாண்டுகளாக இருந்திருந்தும் நம்முடன் கலவாமல் தங்களை ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவே வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல் தாங்களே ஏனையோரை விட மேல் வகுப்பினர் என்று சொல்லிக்கொண்டு தம் சொந்த மொழி வடமொழியாகிய ஆரிய மொழியே என்றும் அம்மொழி நம்மொழியாகிய தமிழ் மொழியை விட மேன்மைப்பட்டதென்றும், அது ஒரு தெய்வீக மொழியென்றும், அம்மொழியே கடவுள் வணக்கத்திற்கும் மற்றுமுள்ள அவர்களுடைய சடங்கு களுக்கும் பொருத்தமானதென்றும், தமிழ்மொழி இக் காரியங்களுக்கு பொருத்தமற்றதென்றும், அதை இழிவு படுத்தி பேசுபவர்கள் எவ்விதத்தில் தமிழரென்று அழைக்கப் பட பொருத்தமுள்ளவர் களென்று எனக்கு விளங்கவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் தமிழர் ஆகமாட்டார்கள் என்று சொல்வது மிகையாகாது.

தமிழ் நாடு எது?

மேலும், தமிழ்நாடு என்பது எந்த நாடென்று நிர்ணயிப் பதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. சென்னை நகரிலிருந்து குமரி வரையில் மலையாளத்துக்கு கிழக்கே உள்ள நாடே தற்காலத்திய தமிழ் நாடு என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். நாம் இந்நாட்டிற்கு இப்போது இந்தியமாக்கடலில் மூழ்கிக்கிடக்கும் ஓரிடத்திலிருந்து வடக்கே வந்தோமா அல்லது ஆரியர்கள் வருகிறதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மத்திய ஆசியாவிலிருந்து தெற்கே வந்தோமா என்கிற விஷயம் சரித்திர ஆராய்ச்சிக்காரர் நிர்ணயிக்க வேண்டிய காரியம்.

தமிழர் எவருக்கும் அடிமைப்பட்டவரல்ல

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே நாம் வாழ்ந்து வந்திருக்கிறது நம் நாடே நம்நாடென்பதும் இந்நாட்டு மக்கள் நாமே என்பதும் யாரும் மறுக்க முடியாத விடயம். வடஇந்தியாவில் பல்வேறு மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒவ்வொருவரையும் பின்வருபவர் அடக்கி, ஒருவர் ஒரு காலத்திலும் மற்றொருவர் வேறொரு காலத்திலும் ஆதிக்கம் புரிந்து வந்ததாகவும் சரித்திர மூலமாகவும் அறிகிறோம். தமிழர் வடநாட்டு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததில்லை. ஆனால் நாமும், நம்மைச் சேர்ந்த மற்றொரு திராவிட வகுப்பினரும், ஒரு காலத்திலும் இந்த வடநாட்டு ஆதிக்கங்களில் ஒன்றிற்காவது நாம் உட்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் சந்திரகுப்தர் என்னும் சக்கரவர்த்தியால் ஒரு புகழ்பெற்ற ஆட்சி வடநாட்டில் நடத்தப்பட்டதாகவும் அவருடைய பேரனாகிய அசோக சக்கரவர்த்தி காலத்தில் அவருடைய ஆட்சி ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் இன்னும் வெளிநாட்டிலும் பரவியிருந்ததாகவும் தெரிகிறது.

வடநாட்டார் அந்நியரே

ஆனால் அக்காலத்திலும்கூட நம் நாட்டில் நம் மூவரசர்களாகிய, சேர, சோழ, பாண்டிய மன்னர்களே அரசு புரிந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு முகம்மதியர்கள் வடஇந்தியாவில் புகுந்து தங்கள், ஆதிக்கத்தை நிலைநிறுத்தி டெல்லி மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு பரவிய ஆட்சியை மொகல் சக்கரவர்த்திகள் நடத்தி வந்திருக் கிறார்கள். அக்காலத்திலும் தென்னாட்டாராகிய நாம் அந்த ஆதிக்கத்திற்கு உட்படாமல் தனிப்பட்ட வகையிலேயே நம்முடைய காரியங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆங்கில ஆட்சி நம் நாட்டில் நிலைபெற்ற பிறகே நாமும் வட நாட்டினரும் ஒரே ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கின்றோமே தவிர அதற்குமுன் எந்தக் காலத்திலும் நமக்கும் வடநாட்டினருக்கும் யாதொரு கலப்புமிருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்திலும் தென்னாட்டு திராவிடர் களுக்கும் வடநாட்டு ஆரியர்களுக்கும் ஒத்துமையையோ, சம்பந்தத்தையோ காட்டக்கூடிய காரியம் ஒன்றே. அது எதுவெனில் நம்மிருவரும் ஒரே வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு உள்பட்டிருக்கிறதே ஆகும். மற்ற எல்லாக் காரியங்களிலும் நாம் வேறு அவர்கள் வேறு வகுப்பினராகவே காணப் படுகிறோம். மக்கள் பேசும் மொழியிலோ சாப்பிடும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ, நாம் வேறு அவர்கள் வேறாகவே இருக் கிறோம். மேலும் பூர்வீகக் கலை, நாகரீகம், இவ்விஷயங் களைப் பற்றி விசாரிப்போமானால் வடநாட்டு ஆரியர் களுக்கும் அய்ரோப்பிய ஆரியர்களுக்கும் வெளிப்படும் சம்பந்தம் கூட நம்மவர்களுக்கும் வட நாட்டாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிடர் இந்தியரா?

இன்னும் ஆழ்ந்துபார்ப்போமானால் திராவிட மக்களாகிய நாம் இந்தியர்கள் அல்லவென்றே சொல்ல வேண்டும். இந்தியர் என்று ஒரு பதம் ஏற்படுவதற்கே காரணம், நம் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட தூரத்திலுள்ள பஞ்சால தேசத்தில் ஓடும் இந்தஸ் நதியே அந்த நதியின் பெயர் இந்தஸ் என்று இருந்தபடியால் அதை அடுத்தாற் போல் உள்ள நாட்டிற்கு இந்தியாவென்னும் பெயர் வழங்கப்பட்டது. அந்த நாட்டில் குடியேறி இருந்த மக்கள் கிழக்கே போகப் போக அந்த பெயரும் அவர் களுடனே நகர்ந்து சென்றது. ஆகவே காலக்கிரமத்தில் விந்தியமலை தொடர்புக்கு வடக்கே உள்ள நிலப்பிரிவு முழுவதிலும் இந்தப் பெயர் வழக்கத்தில் வந்தது. அம்மக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒருக்காலும் வராத நம் நாட்டிற்கு அது பொருத்தமாகாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்குமுன் வடஇந்தியாவின் மேல் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் தீ கிரேட் என்னும் ஒரு தளகர்த்தனின் சரித்திரத்தை எழுதிய கிரேக்கர் சரித்திர ஆசிரியர்கள் வடநாட்டைப் பற்றி எழுதும் போது இந்தியாவென்று எழுதினமையால் இந்தியதேசம் இருக்கிற விடயம் மேல் நாட்டார் அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டது. ஆயிரக்கணக் கான மைல்களுக்கப்பால் உள்ள மேல்நாட்டார்கள் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் உள்ள வித்தியாசங்களை அறியாமையால் இமயமலைத் தொடர்புக்கு தெற்கே உள்ள நாடு முழுமைக்கும் இந்தியாவென்று ஒரு பொதுப் பெயர் கொடுத்து அப்பெயர் இப்பொழுது நம் நாட்டிற்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆரியக்கூட்டுறவால் வந்த வினை

இவ்விதம் இரு வகுப்பினரும் தனிப்பட்ட முறையில் வளர்ந்து வந்தபோதிலும் நாளடைவில் இரு வகை கலைகளுக்கும் மொழிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு வடநாட்டு நாகரிகத்தாலும், வடமொழியாலும் நம் நாகரிகமும் நம் மொழியும் சீர்குலைந்து போனதென்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விதம் சீர்குலைந்தமைக்கு தனித்தமிழ் தேய்ந்து மற்ற திராவிட நாடுகளில் தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையாளமாகவும் இருந்து வருகிறதே போதிய சான்றாகும். நாம் பேசி வரும் தமிழே வடமொழியில் கலப்புற்று கெடுதலடைத்திருப்பதை தெற்றென விளக்கும்.

நாகரிகத்தைப் பார்ப்போமானால் சிறு வயதிலேயே பெண்களை மணம் செய்விப்பதும், ஆண்களை இழந்த பெண் மக்களை மறுமணமில்லாமல் வைப்பதும் தீண்டாமைப் பேயை நாட்டில் ஆடவிட்டிருப்பதும், நமக்குள்ளாகவே சாதி என்னும் பேரால் அனேக பிரிவுகளை ஏற்படுத்தி இருப்பதும், நமக்கு ஏற்பட்டிருக்கும் பெருஞ்சீர்கேட்டின் பல அடையாளங்களாகும்.

இவ்வுண்மைகளை நான் வற்புறுத்திச் சொல்வதன் நோக்கம் நாமும் நம்மைச் சார்ந்த மற்ற திராவிட மக்களும் பூர்வீகம் தொட்டு வடநாட்டாருக்கு வேறுபட்ட வகுப்பினர். அவர்களுடன் நாம் கலந்து கொள்ளுவதனால் நமக்கு இடையூறுகள் ஏற்படுமே தவிர வேறில்லை, நம் நாடு ஒரு தனிப்பட்ட நாடு என்பதை நாமெல்லோரும். உணர வேண்டுமென்பதற்கே.

- விடுதலை - 28.12.1938

- விடுதலை நாளேடு 13 11 19

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல (2)

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

நமது சுயராஜ்யம் திராவிட ராஜ்யமே

ஆகவே நாம் சம்பந்தப்பட்ட வரையில் சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இருக்குமேயாகில் அந்த ராச்சியம் தமிழ் அல்லது திராவிட ராச்சியமாக இருக்க வேண்டும். ஆதிக்கத்தை நடத்துகிறவர்கள் திராவிடர்களாய் இருந்தால் மட்டுமே அது உண்மையில் சுயராச்சியம் ஆகும். இப்போது சென்னையில் நடைபெற்று வரும் ராச்சியம் அப்பேர்ப்பட்ட ராச்சியம் ஆகுமாவென்று பார்ப்போ மானால் இல்லையென்று திண்ணமாகச் சொல்லலாம்.

நமது மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் பத்து பேர் கொண்ட மந்திரிசபையில் 4 பேர் பார்ப்பன ஆரியர்கள். இச்சபையில் தலைமை வகித்து தான் ஒருவரே அதிகாரி மற்றவர்கள் பொம்மைகள் என்று பொதுமக்கள் கருதக்கூடிய விதத்தில் நடந்துவரும் முதல் மந்திரி ஒரு பார்ப்பன ஆரியர். இப்படி அமைக்கப்பட்டிருக்கும் மந்திரி சபை தாங்கள் செய்யும் காரியங்களில் வாக்காளர்களாகிய தமிழர்களாகிய உங்கள் நோக்கத்தை எதிர்பார்க்கிறார்களா? இல்லை. எல்லாக் காரியங்களிலும் காங்கிரசின் நிர்வாகக் கமிட்டியாரின் அபிப்பிராயத்தையும் தீர்மானங்களையும் எதிர்பார்த்தே நடத்துகிறார்கள். இந்த நிர்வாகக் கமிட்டியின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆரியரே. திராவிடர்கள் அல்லவென்பது உலகமறிந்த உண்மை. இக்காரியக் கூட்டத்தாராவது தாங்களே சுயேச்சையாக ஒரு முடிவுக்கு வருகிறார்களா? எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு அறிந்த மட்டும் தந்தையாயிருப்பவர் காங்கிரசில் அவர் 4 அணா அங்கத்தினர்கூட அல்லவென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே இப்போது நமது மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆதிக்கம் சுயராஜ்யம் என்று சொன்னால் மக்களை ஏமாற்றுவதாகாதா? இவ்வாட்சி பார்ப்பனர் ஆட்சியென்றால் மிகையாகுமா? இவ்வாட்சியை திராவிட மக்கள் மேல் ஆரியர் நடத்தும் ஆதிக்கமென்றால் பொருத்தமாகாதென்று யாராகிலும் சொல்ல முடியுமா?

பார்ப்பன ஆட்சிப்பலன்

இவ்வாட்சியினரின் செய்கைகளில் சிலவற்றை மட்டில் பரிசீலனை செய்து அவைகள் திராவிட மக்களின் முன்னேற்றத்துக்கு ஒத்ததாய் இல்லாவிடினும் எவ்வளவு தூரத்திற்கு தற்கால நிலையையாவது பாதுகாத்து அவர் களுடைய தன் மதிப்பைக் கெடுக்காமலாவது இருக்குமா வென்று பார்ப்போம். தமது ஆதிதிராவிட சகோதார்களைச் சில காலமாக ' ஹரிஜன் ஹரிஜன்" என்று காங்கிரஸ்வாதிகள் அழைக்கிறார்களே. அதைப்பற்றி சற்று யோசிப்போம். ஏர்வாடா சிறையில் அரசியல் சூழ்ச்சியில் பேர்போன காந்தியார் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை தேர்தலில் பொதுத்தொகுதியில் கொண்டு வந்து மாட்டக்கருதி உண்டு பண்ணிய வார்த்தையாகும் இந்த 'ஹரிஜன்' என்னும் பதம். நமது மந்திரிமார்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல் இந்த வார்த்தையை சர்க்கார் உத்தரவுகளிலும் சட்டசபை நடவடிக்கைகளிலும் எந்தெந்த சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்போதெல்லாம் உபயோகிக்கிறது மாத்திரமல்லாமல் சட்டங்களில் முதல் கொண்டு இவ்வார்த்தையைப் புகுத்தி இருக்கிறார்கள். மக்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களென்று நாளடைவில் அறியாமல் போவதற்கு அவர்கள் பெயரை மாற்றி அவர்களுக்கு ஒரு புதுப்பெயர், அதிலும் சொந்த மொழியில்லாமல் அன்னியமொழியில் கொடுக்கிறதைவிட தகுந்தவழி வேறுண்டா? அடுத்தப்படியாக எல்லோருக்கும் "ஸ்ரீ" இப்போது பட்டம் அளித்திருக்கிறார்களே அதுதான் என்ன! தமிழ் மக்களாகிய நமக்கு வடமொழியிலுள்ள "ஸ்ரீ"யை உபயோகிப்பதின் பொருத்தமென்ன? பொருத்த மில்லை யேல் அதன் நோக்கமென்ன? அடுத்தாற்போல் சமஸ்கிருதத்தை ஒத்து வந்த இந்தி மொழியை நம்மேல் சுமத்துவதின் நோக்கமென்ன? இச்செய்கைகள் ஒவ் வொன்றும் தனிப்பட்ட செய்கைகளா அல்லது ஒரு நோக்கத் துடன் நடைபெற்று வருகின்றவைகளா? என்னோக்கத்துடன் இக்காரியங்கள் நடத்தப்பட்ட போதிலும், முடிவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாம் பாதுகாத்தவந்திருக்கும் நமது தமிழக கலையையும் தமிழ் நாகரிகத்தையும் நாம் தமிழரென்கிற உணர்ச்சியையும்கூட சாகடிக்கும் தன்மையும் உடையதல்லவா?

அடக்குமுறைக் கொடுமை

இந்தி சம்மந்தமாக இன்னும் விரிவாய் எடுத்து சொல்கிறது அவசியமில்லையென்று நினைக்கிறேன். எவ் விதம் அதை புகுத்த மந்திரியார் முயற்சித்து வருகிறா ரென்பதும் அதை எதிர்ப்போருக்கு விரோதமாக அடக்கு முறையை அனுஷ்டித்து வருவதும் அது சம்பந்தமாக நூற்றுக்கணக்கான நமது மக்கள் ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகள் முதற்கொண்டு சிறைக்கு அனுப்பப் பட்டிருப்பதும் விசேடமாக நமது பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும். உங்களெல் லோருக்கும் தெரிந்த காரியம். என்ன குற்றத்திற்காக இவர்களெல்லாம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், செம்மொழியாகிய தமிழ் வாழ விரும்பி, நம் கலையையும், நம் நாகரிகத்தையும் காப்பாற்ற வேண்டு மென்ற கவலை கொண்ட ஒரே குற்றமே. இம்மந்திரி மார்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றேதான். நீங்கள் எந்த காலத்திற்கும் அதிகாரம் வகித்திருக்கப் போகிறதில்லை. நீங்கள் கணக்குப் கொடுக்கவேண்டிய நாள் தினந்தோறும் நெருங்கி வருகிறது அப்போது உங்களுக்கு தமிழ் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்'' என்பதே தான்.

நாம் செய்ய வேண்டுவன

முடிவாக நம் நாகரிகத்தையும் நம் கலையையும் காப்பாற்றி வளர்க்க வேண்டுமானால் என்னென்ன விடயங்கள் அவசியம் என்பதைப்பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

முதன் முதலாக நம் மக்களிடம் உள்ள படிப்பினையை விலக்க வேண்டும். தொன்று தொட்டு நமது கிராமங்களில் இருந்து வந்த பழைய திண்ணைப்பள்ளிக் கூடங்களுக்கு புத்துயிர் கொடுத்து பழைய முறையில் அப்பள்ளிகளை நடத்தி வருவோமானால் எல்லா மக்களையும் குறுகிய காலத்துக்கள் படித்தவர்களாக ஆக்குகிறது கூடுமான காரியம் என்பது என்னுடைய முடிவு. பணச்செலவும் பொறுக்கக்கூடியதாகவே இருக்கும்.

நான்கு ஆண்டு அளவில் பள்ளியில் தங்கும் பிள்ளைகள் நன்றாக எழுதப்படிக்கும் திறமை வாய்ந்தவர்களாகக் கூடும். நமது பள்ளிகளில் எந்த தரப்பள்ளியாயினும் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு பல்கலைக்கழங்கள் வரை தமிழ்ப்படிப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியம். தமிழுக் கென்று ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். இப்போதுள்ள பல்கலைக்கழகங்களிலொன்றாவது அதற்கு உபயோகப்படாமல் போகுமாயின் ஒரு தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். அக்கழகம் எவ்வகைப் பட்டதாயினும் அதை மேற்பார்ப்பவர்கள் தமிழில் தேர்ச்சி அடைந்து திறமை வாய்ந்த தமிழர்களாகவே இருக்க வேண்டும். எந்த நாட்டிற்கும் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளுத்திறமை அவசிய மாகையால் அதற்காக ஒரு தரைப்படையும் ஒரு கடல்படையும், ஒரு ஆகாயப்படையும் அவசியம்.

இது சம்பந்தமாக நாம் உடனே செய்ய வேண்டியது நமது மாகாண படையைத் திரும்பவும் புதுப்பிக்க வழிதேட வேண்டும். தமிழர்களின் முக்கிய தொழில் பயிர்த்தொழி லானதாலும் அவர்கள் அனேகமாய் கிராமவாசி களாகையாலும், கிராம முன்னேற்றத்திற்கு வேண்டிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். பயிர்ச் செயலில் புதுவழிகளை அனுசரிப்பது மாத்திரமல்லாமல் விளையும் பொருள்களை தக்க விலைக்கு விற்கவேண்டியது அவசிய மாகையால் அதற்குள்ள வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து வழிகளைச்சீர்ப்படுத்தவேண்டும். நம் நாட்டிலுள்ள துறைமுகங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதன் காரணமாய் வியாபாரக் கப்பல்களும் கடைசியாக சண்டைக் கப்பல்களும் ஏற்படுகிறதற்கு வசதிகள் உண்டு பண்ண வேண்டும்.

கிராம கைத்தொழில்களை ஆதரிக்க வசதிகள் ஏற்பட வேண்டும். அத்தொழில்கள் நாடெங்கும் ஒரே தொழிலா யில்லாமல் இடத்துக்கேற்ற தொழிலை ஆதரிக்கவேண்டும். நான் மேற்கூறிய காரியங்கள் ஒரே தினத்தில் ஏற்படக் கூடியவை அல்ல. நாளடைவில் அமலுக்கு கொண்டுவர வேண்டியவை. உடனே இப்போதே நாம் கவனிக்க வேண்டிய விடயத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி என் முன்னுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

நமது போர்

நாம், இப்போது அரசு புரிந்து வரும் மந்திரிசபையாருடன் போர்புரிந்து வருகிறோம். அப்போரின் நோக்கம் என்னவெனில் பல்லாயிரமாண்டுகளாய் நமக்கென்று நம் முன்னோர் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்திருக்கும் நமது பழையமொழி, கலை, நாகரிகம், நம்முடைய தனிப்பட்ட வாழ்வு இவைகளைக் காப்பாற்றவே இப்போரில் ஈடுபட்ட தன் பலனாய் நான் முன் சொல்லியது போல நமது அரும்பெரும் தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் இன்னும் சுமார் 600 தமிழ் மக்களும் சிறையில் அடைபட்டு வருந்துகின்றனர். இவ்விதம் அடக்குமுறையை அனுசரிப்பதால் நமது தைரியத்தைக் கலைத்து நம்மைத் தோல்வியடையும்படி செய்யலாமென்று முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் நம்புகிறார் போலும். நாம் ஒற்றுமையாகவும் திடத்துடனும் இந்த ஆபத்தை எதிர்த்துப் போர்புரிய வேண்டியது நமது கடமையாகும். இப்போருக்கு வேண்டிய திரேக பலத்தையும் மனதிடத்தையும் நம்மெல்லோருக்கும் கொடுக்க வேணுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

- விடுதலை - 28.12.1938

-  விடுதலை நாளேடு 15 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக