*திருக்குறளில் இந்து கடவுள்கள் பெயர் இருப்பதாக பதிவிட்ட எச்ச.ராஜா.. உண்மை என்ன?*
தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதற்கு பாஜகவே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று டிவிட்டரில் கீழ்காணும் பதிவை பகிர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திருக்குறளில் இந்து மத கடவுள்கள் பெயர் இருப்பதாக கூறினார்.
எச்.ராஜா பகிர்ந்துள்ள அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறள்களை நாம் நியூசு தரப்பில் வாசித்து அதன் பொருள் விளக்கத்தை ஆராய்ந்தோம். அதில் எச்.ராஜாவின் பதிவில் கூறியதை போல் எந்த இந்துமத கடவுள்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது உறுதியாகிறது.
எச்.ராஜா குறிப்பிட்டுள்ள குறள்களையும் அதன் விளக்கத்தையும் தற்போது காண்போம்.
குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
பொருள்:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
பொருள்:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள்:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொருள்:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
குறிப்பு: திருமகள் என இக்குறள்களில் செல்வத்தையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு
பொருள்:
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு
பொருள்:
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
பொருள்:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
பொருள்:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்
பொருள்:
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
பொருள்:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.
குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
பொருள்:
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
பொருள்:
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.
இத்தனை குரள்களிலும் திருமால், இந்திரன், எமன், ப்ரம்மதேவர் என்ற பெயர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. மரணம் குறித்து வரும் இடத்தில் எல்லாம் எமன், கூற்றுவன் என பொருளறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். ஆனால், வள்ளுவர் எமன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லக். இந்து மதத்தினர் எமன் என்பதை போல், இஸ்லாமியர்கள் உயிர் எடுக்கவரும் வானவரை இஸ்ராயீல் என அழைக்கிறார்கள். அதே போல், சில இடங்களில் பொருளறிஞர்கள் கடவுள் குறித்து வரும் இடத்தில் திருமால், இந்திரன் என்னும் சொற்களை புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார்கள். காரணம், இந்துக்கள் அதிகமுள்ள சமுதாயத்தில் அவர்களது தெய்வங்களை குறிப்பிட்டால் தான் புரியும் என்ற காரணத்தால் கூட இருக்கலாம். மேலும், பொருளறிஞர்களும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாலும், அதன் தாக்கம் இருந்திருக்கும். மாறாக வள்ளுவர் எழுதியுள்ள குறலில் எச்.ராஜா குறிப்பிட்டதை போல் எந்த மதத்தின் கடவுள் பெயரும் இல்லை என்பதே தெளிவாகிறது.
இந்து மத வேதங்கள் பலவும், பிறப்பின் அடிப்படையில் நால் வர்ண ஏற்றத்தாழ்வை முன்வைக்கின்றன. அப்படி இருக்கையில் எச்.ராஜா கூறுவதை போல், திருக்குறள் இந்துமத கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தால், அவர் பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமுத்துவ கருத்தை வலியுறுத்தும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை எழுதி இருக்க மாட்டார்.
- ரமேஸ் கோவ்ந்தரஜ் முகநூல் பதிவு
8.11.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக