பக்கங்கள்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

சமஸ்கிருதத்துக்கு தமிழ் மொழி அளித்துள்ள கொடை

சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான மசோதா மீது விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆதாரங்களோடு நாடாளுமன்றத்தில் பேச்சு. 

 நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது ரவிக்குமார் பின்வருமாறு தெரிவித்தார்: 

மாண்புமிகு மக்களவை மாற்றுத் தலைவர் அவர்களே! 

சமஸ்கிருதத்துக்கென மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதற்கான இந்த மசோதா மீது பேச வாய்ப்பளித்ததற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இங்கே பேசிய பல உறுப்பினர்கள் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான தொன்மை தொடர்பான தகவல்களைக் கூறினார்கள். தமிழ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுகிற மொழியாக இப்போது இருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருந்தது பின்னாளில்தான் தென்னிந்தியாவிலே மட்டும் பேசப்படுகிற மொழியாக மாற்றப் பட்டது என்பதை மொழியியல் வல்லுநர்களுடைய கூற்றுகளை ஆதாரமாகக்கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.

 பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சித்திர குறியீடுகள் இதுவரை எந்த மொழி என்று அடையாளம் காணப்படாமல் இருந்தன. அஸ்கோ பர்போலா என்ற மொழியியல் அறிஞர் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடைய முன்னோடி என்று கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காகத் தமிழக அரசின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

 சமஸ்கிருதத்துக்குப் பல கொடைகளைத் தமிழ்  அளித்திருக்கிறது. எழினி என்ற தமிழ்ச் சொல்தான் சமஸ்கிருதத்தில் யவனிகா என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தமிழறிஞர் சீனி.வேங்கடசாமி அவர்கள் பல கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு நிரூபித்து இருக்கின்றார்.  அது மட்டுமல்ல நமது தேசிய பறவையாக இருக்கின்ற மயில் என்பதைக் குறிக்க  நாம் மயூரா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அது தமிழிலிருந்து கடன்பெற்ற சொல்தான். நீர், அனல், ஆடு, கான், களம், தாமரை, தண்டு, பல்லி, புன்னை, மயில், மல்லிகை, மை, மகள், மாலை, மீன் என்னும் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்தில் நீர, அனல, எட, கானன, கல, தாமரஸ, தண்ட, பல்லீ, புன்னாக, மயூர, மல்லிகா, மஷி, மஹிளா, மாலா, மீனா எனப் பயன்படுத்தப்படுகின்றன. 
இந்த நேரத்திலே ஏற்கனவே இங்கே சுட்டிக்காட்டியபடி எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

சமஸ்கிருதத்திற்கென்று ஏற்கனவே 16 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன; 112 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் உயர் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது;  10,000 கல்லூரிகளில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது;  அரசு ஆதரவோடு 8000 சமஸ்கிருத பாடசாலைகள் இந்த நாட்டிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே சமஸ்கிருதம் நசிவு அடைந்துவிடவில்லை. ஆனால், அதற்காக மூன்று பல்கலைக்கழகங்களை உடனடியாக மத்திய அரசு உருவாக்குகின்ற இந்த நேரத்திலே தமிழுக்கென்று ஒரு மத்திய பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமர்கிறேன். நன்றி, வணக்கம்!” 

ரவிக்குமார் பேசியதைக் கேட்ட மக்களவை மாற்றுத் தலைவர் திரு பத்ருஹரி மஹதாப், ஒரிய மொழியில் ஏராளமான தமிழ்ச்சொற்கள் கலந்திருப்பதை சுட்டிக்காட்டி ரவிக்குமாரின் கருத்துகளை ஆமோதித்தார்.
-  கட்செவி மூலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக