மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு
• Viduthalaiசென்னை,நவ.23- கருநாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல் வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல் களை உடனே வெளியிடவும் தொல் லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ப வரால் இந்திய தொல்லியல் ஆய்வகம்(Archaeological Surveyof India)1861ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோயில்கள், மலைகள், குகைகள் உள்ளிட்டஇடங்களில் இருக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ‘படி எடுத்தல்’ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகின்றன. முதலில் பெங்களூ ருவில் இருந்த இந்திய தொல்லியல் ஆய்வகம் 1862இல் சென்னைக்கு மாற்றப்பட்டது.
கல்வெட்டு படிகளை குளிர்ச்சியான இடத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதால், அந்த ஆய்வகம் 1903இல் ஊட்டிக்கும், பின்னர், நிர்வாக கார ணங்களுக்காக 1966இல் மைசூருவுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆய்வகத்தில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, இங்கு தமிழ் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றமும் அவ்வாறே உத்தர விட, மைசூரு ஆய்வகத்தில் இருந்து முதல்கட்டமாக 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சமீ பத்திய கணக்கெடுப்பின்படி, மைசூரு ஆய்வகத்தில் 70 ஆயிரம் கல்வெட்டு படிகள் உள்ளன. அதில் தமிழ் கல்வெட்டு படிகள் சுமார் 24 ஆயிரம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அதில் 13 ஆயிரம் படிகளை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். அவை அனைத்தும் பார்கோடு முறையில் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டு, ஒவ்வொரு கல்வெட்டு தொடர்பான தகவல்களும் அதில் தெளிவாக குறிப்பிடப் பட் டுள்ளன. தற்போது வந்திருப்பதில் சோழர், பாண்டியர், பல்லவர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள், குறு நில மன்னர்களில் வானாதிராயர்கள், முத்தரையர், சம்புவரையர், நுளம்பர் மரபினரின் கல்வெட்டுகள் உள்ளன. சோழர்களின் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன.
இவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், ஒன்றிய அரசின் பரா மரிப்பிலேயே உள்ளது. எனவே, கல்வெட்டு தகவல்களை வெளியிட ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மொத்தம் உள்ள 24 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளில் 15 ஆயிரம் கல் வெட்டுகள் இதுவரை தொல்லியல் துறையால் வெளியிடப்படாத புதியவை ஆகும். அவற்றில் மன்னர்களின் வரலாறு மட்டுமின்றி மருத்துவம், கல்வி, கலைகள், கோயில்களில் அரங் கேற்றப்பட்ட நாடகம், நடனம் உள் ளிட்ட மக்கள் வாழ்வியல் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மைசூருவில் உள்ள மற்ற தமிழ் கல் வெட்டு படிகளையும் விரைந்து பெற்று, அதில் உள்ள அரிய விவரங் களை தொகுத்து வெளியிட்டால், 18ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாட் டின் புதிய வரலாற்று தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஆர்வலர் சண்முக சுப்ர மணியன் கூறும்போது, ‘‘மைசூரு ஆய்வ கத்தில் 48 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 24 ஆயிரம் படிகளே உள்ளன. எனவே, எஞ்சியவற்றையும் விரைந்து மீட்கவேண்டும்.
மீட்கப்பட்ட படிகளை மாநில தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை குளிர்ந்த நிலையில் பராமரிப்பது அவசியம் என்பதால், ஊட்டி போன்ற மலைப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ் கல்வெட்டுகளில் இருந்து, இதுவரை வெளிவராத முக்கிய வரலாற்று பதி வுகள், குறிப்புகளை வெளியிட வேண் டும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக