பக்கங்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2023

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பேரணி!

 ஹிந்தித் திணிப்புக்கு எதிராக

கேரளம் - ஆந்திரா - தெலங்கானா - கருநாடகா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் களத்தில் குதிப்பு: மேற்கு வங்கத்தில் பேரணி!

புதுடில்லி, அக்.14- ஒன்றிய அரசின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற நரேந்திர மோடி அரசின் முடிவு நாடு முழுவதும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 

இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வழக்கமாக தமிழ்நாடு, கேரளா, கருநாடக மாநிலங்களில் மட்டுமே ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ஆந்திரா, தெலங்கானா தாண்டி மேற்குவங்கத்திலும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள்  வேகமாக எழுந்துள்ளன. அங்கு போராட்டங்களும் துவங்கி யுள்ளன. 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை  அளித்தது. அதில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ்  போன்ற வற்றிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் ஹிந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் ஹிந்தியை இடம்பெற செய்ய வேண் டும் என்று பரிந்துரை செய்தது.  இது ஹிந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரள முதல மைச்சர்கள் உடனடியாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“பன்முகத்தன்மைதான், இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும், வலிமையுமாக இருக் கிறது. அப்படியிருக்க, ‘பாரத் மாதா கீ ஜே’  என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஓர்  அரசியல் முழக்கமாக்கி குரல் எழுப்பிக் கொண்டே ஹிந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட  நினைப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும்” என்று கூறிய தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஹிந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி சார்பில் அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங் களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர்  மோடிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார். 

“நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது. இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே, ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8 ஆவது  அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும்  இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர்  தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே  வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியை யும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக் கூடாது.

அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு  நல்லதல்ல. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தினார். 

தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களைத் தொடர்ந்து,  ஹிந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ், “இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தி யும் ஒன்று. அய்.அய்.டி.களிலும், பிற ஒன்றிய அரசின்  வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட் டாயமாக திணிப்பதன் மூலம், பாஜக கூட்டணி  அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது. மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தித் திணிப்பு கூடாது” என்று எச்சரித்தார். இதேபோல கருநாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

மேற்கு வங்கம்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெங்கால் போக்கோ (ஙிணீஸீரீறீணீ ஜீஷீளீளீலீஷீ) எனும் அமைப்பு  ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக உடனடியாக பேரணி ஒன்றை நடத்தி, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வங்கமொழி இலக்கியவாதிகளான சிஷேந்து முகோபாத்யாய், கவிஞர் ஜெய் கோஸ்வாமி, கல்வியாளர் பவித்ரா சர்க்கார் போன்றோர் ஆதரவுடன் நடைபெற்ற இந்த பேரணியில், ஒன்றிய  அரசின் பணிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை திணித்து ஹிந்தி தெரியாத மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், வங்கத்தின் காவலர் என்று அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ், கன்னட தேசியக் கவிஞர் குவேம்பூர் ஆகியோரின் படங்கள் மட்டு மன்றி, தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர்கள்  அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களையும் ஏந்திச் சென்று தங்களின் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். 

பங்களா பக்சாவின் பொதுச்செயலாளர் கர்க் சட்டோபாத்யாய் அளித்துள்ள பேட்டியில்,  

“விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள், தங்களின் அடுத்த தலைமுறையினர் இந்திக்கு அடிமையாக வேண்டும் என்பதற்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

மேலும், ஹிந்தித் திணிப் புக்கு எதிராக அக்டோபர் 16 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

மாநில மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியை தூக்கிப்பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியைத் திணிப்பதை அனுமதியோம் என்று எதிர்ப்பும்  தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஆர்எஸ்எஸ் இயக்கம், “ஹிந்தி, ஹிந்து,  ஹிந்துஸ்தான்” மற்றும் “கலாச்சார தேசிய வாதம்” என்கிற தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட மோடி அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது, தேச விரோத மற்றும் அரசமைப்புச்சட்ட விரோதம் என்றும், இது நாட்டின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்துவரும் பண்பை அழித்துவிடும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.  

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான ஆட்சி மொழி மீதான நாடாளு மன்றக் குழு, நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்கள் அனைத்திலும் பயிற்று மொழியாக, ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தி மட்டுமே கட்டாய மாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதன் கீழ் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப்  டெக்னாலஜி மற்றும் ‘எய்ம்ஸ்’ ஆகியவை வருகின்றன. மத்தியப் பல்கலைக் கழகங்கள், கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்றவை தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களின் கீழ் வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திலும் ஹிந்தி பேசாத மக்கள் நுழைய முடியாதவாறு செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் குழு இவற்றுக்குத் தெரிவு செய்திடும் தேர்வுகளில் கட்டாயமாக ஆங்கில மொழிக் கேள்வித் தாள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு வேற்றுமைப் பண்புகளிலும் உள்ள ஒற்றுமையை வளர்த்தெடுக்கப்படும் என்று அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதி மொழிகளையும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரிய மரபுகளையும் மறுதலிக்கிறது. . இதர  மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியைத் தூக்கிப்பிடிப்பது தேசிய ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும். பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட அமித்ஷா, இந்தியர்களை இப்படி மொழி அடிப்படையில் பிரித்தாள முயல்வதும், இதன்மூலம் நாட்டையே பிளவுபடுத்த முனைவதும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல.

மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் ஏற்கெனவே வேதனையை அனுபவித்துவரும் விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கையானது கடும் பாதிப்பை ஏற்படுத்திடும். விவசாய நெருக்கடியால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள விவசாயக் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், குறைந்த கட்டணத்தில் அரசு நிறுவனங்களில் கல்வி கற்று, அதன்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் எதிர்காலக் கனவுகள் தகர்ந்து தரைமட்டமாகிவிடும்.   ஆர்எஸ்எஸ்ஸின் பாசிஸ்ட் சூழ்ச்சியை முறியடித்திட நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்திட விடுதலைப் போராட்டத்தின் போது ஒன்றுபட்ட பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையையும் பாதுகாத்திட இது மிகவும் முக்கியமாகும். 

இவ்வாறு விவசாயிகள் சங்கத்தின் அறிக்கையில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக