பக்கங்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2023

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம்

 சட்டமன்றத்தில் இன்று

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம் 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

சென்னை,அக்.18. அலுவல் மொழி தொடர்பான நாடாளு மன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப்பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டமன்றத்தில் இன்று இதுதொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சட்டமன்றத்தில் இன்று (18.10.2022) கேள்வி நேரம் முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதில் அவர் கூறியதாவது,

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடுமுழுவதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தநேரு அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித் துள்ளது.

அந்த பரிந்துரைகளில், 

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான அய்அய்டி, அய்அய்எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்துக்கு பதில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்;

ஹிந்தியை பொது மொழி­யாக்கிடும் வகையில் தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்பம் சாரா கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்;

இளைஞர்களின் வேலைவாய்ப்பில் கட்டாயத்தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை மட்டும் முதன்மைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஹிந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடி யோடு ஒதுக்கிவைத்து எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான - நம் நாட்டின் பன்மொழி கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப் பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. நடை முறைப்படுத்தக் கூடாது என இந்திய பிரதமர் அவர்களுக்கு 16.10.2022 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்துக்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு அவர்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப் படையில் ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப் பட்டுள்ளதற்கும் எதிராக இப்பொழுது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவின் பரந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட ஹிந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரை களை நடைமுறைப்படுத்தக்கூடாது என ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன் என முதலமைச்சர் கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டமன்றம் இன்று கூடியதும் கேள்வி நேரத்துக்கு முன்பாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் எழுந்து நின்று பேச முற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் கேள்வி நேரம் முடிந்தவுடன் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார். அதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அவையின் மய்யப்பகுதி, பேரவைத்தலைவரின் இருக்கை அருகே கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

பேரவைத் தலைவர் பல முறை எச்சரித்தும் அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததால் அவர்களை அவைத்தலைவர் வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் குண்டுகட்டாக அவர்களை வெளியேற்றினர்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும் அதனைத் தொடர்ந்து 5.12.2016 அன்று அவரின் எதிர்பாராத மரணம் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் திரு. அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை இந்த அவையில் வைக்கப்பட்டது.

நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

22.5.2018ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாக பொதுச்சொத்துக்கள் தனியார் சொத்துகள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள்குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக