பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2019

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகள்

#மணியரசம்_டோஸ்_நெ_10

"தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.
                                                -மணியரசன்

தந்தைபெரியார் பேசியதை, எழுதியதை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டியும் ஒட்டியும் அவர் மீது அவதூறு பரப்புவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படுவதில்லை இவர்கள்.

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகளை மறுப்பதும், மாற்றுக் கருத்தை முன்வைப்பதும் கருத்துரிமை என்பதை மறுக்க இயலாது. ஆனால் பெரியாரின் முழுநேரத் தொண்டே மொழியை எதிர்ப்பதுதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது.

தந்தைபெரியார் மொழியை பற்றி பலமுறை பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரது கருத்து அந்தந்த காலத்தின் அரசியல், அப்போது பார்ப்பனர்கள் கையாண்ட வழிமுறைகள், தமிழக ஆட்சியாளர்களின் போக்கு, தில்லி அரசின் செயல்பாடுகள்,மற்ற கட்சிகளின் நிலை என அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு அதற்கான எதிர்வினைகளாக வெளிப்பட்ட சிந்தனைகளாகும்.

கடவுள் மத பக்தர்களுக்கு பெரியாரின் பகுத்தறிவு கருத்துகள் கசக்கும். பெண்களை அடக்கியாள்வதே ஆண்மை என்று கருதுவோர் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஏற்க இயலாது. ஜாதிப் பெருமை பேசுவோருக்கு பெரியாரின் ஜாதி ஒழிப்புக் குரல் இனிமையாக இருக்காது. அவ்வளவு ஏன்? தீவிரமாக காதலிப்பவர்களுக்கு காதல் குறித்த பெரியாரின் கருத்துகள் உவப்பாக இருக்காது. அதைப் போலவே மொழிப் பற்றாளர்கள் பெரியாரின் மொழி குறித்த கருத்துகளை ஏற்கத் தயங்குவது இயல்பு.

மொழிவழி தேசியம் பேசுவோர் இந்த இடத்தில் சறுக்கிடத்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்களின் அரசியல் அடித்தளமே மொழியில்தான் அமைந்துள்ளது.அளவற்ற மொழிப்பற்றே அவர்களின் இயங்கு விசையாக உள்ளது.எனவே அவர்கள் பற்றுதலற்ற நிலையிலும், பக்க சார்பற்ற முறையிலும் மொழியை அணுகுதல் இயலாது. இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். எந்த மொழியானாலும் அதன் மீது அளவு கடந்த பற்றுள்ளவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆய்வியல் நோக்கில் செல்லமுடியாது. அதிலும் தமிழை பொறுத்தவரை மொழிப் பற்று என்ற நிலையையும் தாண்டி பலருக்கு மொழி பக்திதான் மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலையில், மொழிகுறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், வளர்ச்சி- மாறுதல் பற்றியும் பெரியார் உட்பட எவரும் சிந்திக்கவோ,பேசவோ,எழுதவோ கூடாதென்பதும், அப்படி சிந்திப்பவர்களை மொழிப் பகைவர்களாக சித்தரிப்பதும் வலதுசாரித் தன்மைக்கு உரம் சேர்க்குமேத் தவிர வருங்காலத் தலைமுறைக்கு ஒருபோதும் வளம் சேர்க்காது!

மனிதப் பற்று, வளர்ச்சிப் பற்று தவிர வேறெந்த பற்றுமற்ற தந்தைபெரியாரின் மொழிச் சிந்தனைகள் இன்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அடுத்ததடுத்த தலைமுறைகள் மொழியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும்போது இதெல்லாம் சாதரண சங்கதியாகி விடும்.

காட்டுமிராண்டி காலத்திலேயே இருக்காதே! காலத்திற்கேற்ப மொழியை திருத்து என்கிறார் பெரியார்.
இதில் என்ன தவறு? இதை தவறு என்று சொல்பவர்கள் அய்ந்தாம் தலைமுறை 5G     அலைபேசியைத்தானே பயன்படுத்துகிறார்கள்? மொழி மட்டும் முதல் தலைமுறையாகவே இருக்க வேண்டுமா? அப்படி இருக்கத்தான் முடியுமா?

இன்று ஆங்கிலப் பேச்சு பயிற்சி மய்யங்களில் (Spoken English) இங்கிலீஷ் பேசுவதற்கு எளிமையான வழியாக சொல்லித் தரப்படுவது முதலில் வீட்டில் எல்லோரிடமும் இங்கிலீசில் பேசுங்கள். தவறாக பேசினாலும் பரவாயில்லை. வீட்டில் பேசிப் பழகப் பழக பொதுவெளியில் பிழையின்றி உங்களால் இங்கிலீஷ் பேசமுடியும் என்பதுதான்.

பயிற்சிக்கு பணம்கட்டி இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்துகிற நமக்கு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பெரியார் தனக்கே உரிய நடையில் எளிமையாகச் சொல்வது கசக்கிறது!

தகவல் தொழில்நுட்பத் துறை, கணிணித் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் என உயரம் தொடும் நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கை வசமானது எப்படி என்பதை சிந்தித்து பாருங்கள். அதைவிடுத்து பெரியாரை தமிழ்மொழியின் எதிரியாக சித்திரம் தீட்டுவது நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழைப் புகழ்ந்து கொண்டே தமிழர்க்கு இரண்டகம் செய்வோரை நண்பர்களாகவும், தமிழ் மீது  விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே தமிழ் காக்கவும், தமிழர் நலன் காக்கவும் தொடர்ந்து களத்தில் நிற்போரை எதிரிகளாகவும் கருதுகிற  நம் மக்களின் மொழி உணர்ச்சியை மிக இலாவகமாக மொழிப் பற்றாகவும், மொழி பக்தியாகவும் மாற்றி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் பார்ப்பனர்களே!
எப்போது தங்களுக்கு தமிழ்மொழி தேவை என்று கருதினார்களோ அப்போது தமிழுக்கு ஒப்பனை செய்து உலவ விட்டவர்களும் பார்ப்பனர்களே!
வரலாற்றை புரட்டிப் பாருங்கள். தமிழுக்கு இந்த தெய்வீகப் பெருமை வந்தது எப்போது? என்று தெரியும்.

ஆயிரக்கணக்கான சங்க இலக்கிய பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடிப் பொறுக்கியெடுக்கும் வகையில்தான் தமிழ் மொழி குறித்த சொற்றொடர்கள் வருகின்றன. திருக்குறளில், அறநெறி இலக்கியங்களில் தமிழ் குறித்து புளகாங்கித பெருமைகள் ஏதுமில்லை. மொழியென்பது தன் உணர்வுகளையும், தான் அறிந்தவைகளையும் பிறருக்கு வெளிப்படுத்தும் நுட்பமான ஒரு அழகியல் கருவி என்ற வகையில்தான் பழந்தமிழர்கள் மொழியை கையாண்டனர்.

அந்த தெளிவு அன்றைக்கு இருந்ததால்தான் அறிவுத் தேடலுக்கு வழிவகுத்த புத்தரின் சிந்தனைகள்
மொழி கடந்து இங்கு வேரூன்றி வளர்ந்தது. இன்றைய வரை தமிழகத்தில் ஊருக்கு ஊர் தோண்டத் தோண்ட புத்தர் சிலைகள் கிடைக்கிறது.

பவுத்தம்,சமணம் போன்ற வேத எதிர்ப்பு கொள்கைகள் நிலைபெற்று செழித்த போது அதை அறிவு வழியிலும், அறவழியிலும் எதிர் கொள்ள இயலாத பார்ப்பனர்கள் மொழியை கருவியாக கொண்டு வீழ்த்தினார்கள்.
ஆழ்வார்கள்- நாயன்மார்களின் பக்தி இலக்கிய காலத்தில்தான் தமிழுக்கு தெய்வீகப் பெருமை ஏற்றப்பட்டது.
"சங்கத்தமிழ்" "தெய்வத்தமிழ்" "தேமதுரத் தமிழ்" செத்தவரை பிழைக்க வைத்திடும் "சாகாவரம் பெற்றத் தமிழ்" சிவனிடமிருந்து பிறந்த "செந்தமிழ்"  என்ற புகழாரங்கள் அப்போதுதான்  மொழி மீது சூட்டப்( சுமத்தப்)பட்டது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற
பவுத்த,சமண நெறிகளை வீழ்த்துவதற்கு தமிழ் மொழியையும், தமிழ் அரசர்களான சோழர்களையும்-பாண்டியர்களையும்
பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பவத்தர்கள் சமணர்கள் தமிழறியாதவர்கள் என்பதுதான் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட முதன்மையான தாக்குதல்.

ஊன்றி கவனித்தால் ஒன்று புரியும்.
சோழர், பாண்டியர் ஆட்சி முடிவடைந்த பின்னர்., பவுத்தம்- சமணம் வீழ்ந்த பிறகு ஆழ்வார்கள் எவரும் அவதாரம் எடுக்கவில்லை.நாயன்மார்கள் ஊர்தோறும் நெஞ்சுருக பதிகம் பாடவில்லை.
கம்பராமாயணம், பிரபந்தங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற பெரும் இலக்கியங்கள் தோன்றவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர தெலுங்கர்கள் புதிய மன்னர்களாக எழுந்தார்கள்...
பார்ப்பனர்களின் வேத மதத்திற்கு இசுலாமியர்கள் புதிய எதிரிகளாக முளைத்தார்கள்.
நியாயமாக பார்த்தால் பிறமொழி ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெறும்போதுதான் தமிழ் உணர்ச்சி பீறிட்டிருக்க வேண்டும்!
பக்தி இலக்கிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்க வேண்டும்!
அழகுதமிழ் பாமாலை கொண்டு அடியார்கள் ஆண்டவனை தொழுதிருக்க வேண்டும்! ஆனால் நடந்தது என்ன?

விஜயநகர பேரரசை அண்டிப் பிழைக்கவும், சுல்தான்களை எதிர்க்கவும் இப்போது பார்ப்பனர்களுக்கு தமிழ்மொழியும், அதன் பெருமைகளும் தேவைப்படவில்லை. எனவே
இந்த காலகட்டத்தில் எந்த மணிக்கதவும் தமிழ் பாடி திறக்கவில்லை!
தமிழ் பாடல் கேட்டு முதலைகள் வாய்பிளந்து நிற்கவில்லை!
சிவன் நேரடியாக வந்து எவருக்கும்
தமிழ் பாட முதல்அடி எடுத்துக் கொடுக்கவில்லை!
பைந்தமிழ் கேட்டு விஷ்ணு பைநாகப் பாயை சுருட்டிக்கொண்டு கிளம்பவில்லை!

இந்த காலகட்டத்தில் பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களான ஏழை எளியவர்கள்தான் தமிழின் உயிரை இழுத்து பிடித்து காப்பாற்றி வந்தனர்.

அடுத்து வந்தது வெள்ளையர் ஆட்சி!
மிலேச்ச பாஷையை கற்று, கடல் கடந்து கல்வி பெற்று அரசு துறைகளை ஆக்ரமித்தனர் பார்ப்பனர்கள்.
தமிழைப் பற்றிக் கொண்டு ஆங்கிலம் அறியாமல் தடுமாறி வீழ்ந்து கிடந்தனர் தமிழர்கள்.

பார்ப்பனர்களுக்கு சிறுபருவம் முதல் இரண்டுவகையான வாழ்க்கை முறைகள் கற்பிக்கப் படுகிறது. ஒன்று வைதீகம், மற்றொன்று லவுகீகம்.

வேத பெருமை பேசு, உபநயனம் செய், பிராமண தர்மத்தை விடாதே, வர்ணாஸ்ரமமே உயர்ந்தது, கோவில்,கடவுள்,பூஜைகள், மதம்  எதையும் கேள்வி கேட்காதே. இது வைதீகம்.

இது எதுவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையெனில் அனைத்தையும் ஓரமாக வை. அது நமக்கு சொந்தமான முழு உரிமையுடையது.எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆங்கிலம் படி, கடல்கடந்து
அயல்நாடு செல், அண்டிப் பிழைத்தாலும் உயர் பதவிகளை கைப்பற்றத் தவறாதே.
ஜெர்மன், பிரஞ்சு, என எந்த மொழி உயர்விற்கு வழியோ முடிந்தால் அதையும் கற்றுக் கொள்,
பாம்புக்கறி தின்கிற ஊருக்கு சென்றால் நடுத் துண்டை எடுத்துக் கொள்! இது லவுகீகம்.

நம் மக்கள் வீழ்ந்த இடம் இதுதான்.
நமக்கு எதை பிடித்தாலும் உடும்பு பிடி!அது கடவுள்,மதம், மொழி எதுவானாலும் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வது மலையை புரட்டுவது போன்ற மலைப்பு.
இந்த மலைப்பை உடைத்து
உலகியலுக்கு ( லவுகீகத்திற்கு) ஏற்றபடி
உயர்வை நோக்கி நம்மை உந்தி தள்ளியவைதான் தந்தை பெரியாரின் சிந்தனைகள்.

அப்படியானால் பெரியாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் மொழிப்பற்று இல்லையா? என்று கேட்டால் இருக்கிறது.
எப்போதெல்லாம் தமிழ்மொழிக்கு இன்னல் நேருகிறதோ அப்போதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நிற்கிற அளவிற்கும், அரசியல் பண்பாட்டுத் தளத்தில் எந்த அளவிற்கு மொழியை பயன்படுத்திட வேண்டுமென்று அறிந்து கொள்கிற அளவிற்கும் மொழிப் பற்று இருக்கிறது.

ஏற்போரின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுபவை அல்ல பெரியாரின் கருத்துகள்!

சனி, 13 ஜூலை, 2019

200 வருடத்துக்கு முந்தைய தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல் கல் அம்பாசமுத்திரத்தில் கண்டுபிடிப்பு!



நெல்லை மாவட்டம் அம்பாசமுத் திரத்திலிருந்து பிரமதேசம் செல்லும் சாலையின் இடது புறமாக, கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18ஆம் நூற் றாண்டைசேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.இரா சேந்திரன், இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் வே.இராஜகுரு, கொல்லங் குடி கா.காளிராசா, அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் ஆகியோரடங்கிய குழுவினரால் அடையாளங் காணப் பட்டுள்ளது.

இந்த மைல் கல்லின் வரலாற்று பின்னணி குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு ஆகியோர் கூறியதாவது:அம்பாசமுத்திரம் பகுதியின் முதல் தமிழ் எண் மைல் கல் இதுவரை புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டப்பகுதிகளில் 5 மைல்கல் கல்வெட்டுகள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகளில் தமிழ், ரோமன்,  எண்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த மைல் கல் இப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல்லாகும்.முதலாம் ராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 ஆண்டு வரை தாலுக்கா தலைமையிடமாகவும் இருந்த பிரமதேசம் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இது ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத் தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிர மதேசம் வரை இச்சாலையை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கவுதமபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டில் அம்பாசமுத்திரம் “க”, பிரமதேசம் “க” அதாவது கல் வெட்டு நடப்பட்டுள்ள வண்டன் குளக்கரையிலிருந்து இரண்டு ஊர் களும் நேரெதிர்திசையில் 1 மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் மற்றும் பிரம தேசம் செல்பவர்களுக்காக குறிப் பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டி ருக்க வேண்டும். ஆனால் இந்தவழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இதைப் போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அடையாளம் காணப் படவில்லை.

இக்கல்வெட்டின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ் சாலையாக இருந்துள்ளதை மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.இது குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரமதேசம் தாலுக்கா தலைமையகமாக  இருந்த காலக்கட் டத்தில் அதாவது கி.பி 1850க்கு முன்னதாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் சாலை அமைக்கப்பட்ட போது கிழக்கிந்திய கம்பெனியினரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்களை  பயன்படுத்தாமல் ரோமன் எண்களையும் தமிழ் எண் களையும் மட்டுமே பயன்படுத்தி இம் மைல் கல் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கிய மான சான்றாக உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் காலத்தி லேயே தமிழ் எண்கள்அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந் துள்ளதையும், பொது மக்களும் தமிழ் எண்களையே பயன்படுத்தினர் என்பதையும் அறிந்து கொள்வதோடு தமிழ் எண்கள் சமீபகாலமாகத்தான் புழக்கத்திலிருந்து அற்றுப்போயிருக் கிறது என்பதையும் தெளிவாக்குகிறது. என்றனர்.

-  விடுதலை ஞாயிறுமலர், 15.6.19

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மொழி பெயர்ப்பு தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் டி.ஆர்.பாலு மனு




சென்னை, ஜூலை13, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  கோரியுள்ளார்.

இதுகுறித்து புதுடில்லியில் உள்ள திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரின் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டிருப்பதாவது:-

தி.மு..தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) இந்தியா வின் தலைமை நீதிபதி அவர்களைச் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருக் கும் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் 2019 ஜூலை மாத இறுதியிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப் புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மாநில மொழிகளான அசாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு ஆகியவற் றுடன் தமிழையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியா போன்று பல மொழிகள் பேசப்படும் நாட்டில் ஏக காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்கான மாநில மக்களின்  தாய்மொழிகளின் பட்டியலில் தமி ழையும் சேர்ப்பதன் மூலம் வழக் காடுபவர்கள் வழக்கின் பிரச்சினை களை எளிதாகப் புரிந்து கொள்வதை நிச்சயமாக எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான மாநில மக்களின் தாய்மொழிகளின் பட்டி யலில் சேர்ப்பதற்காக கொடுக்கப்பட் டுள்ள முக்கியக் காரணங்கள் வரு மாறு:-

(1) தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டு வரும் திராவிட மொழி யான தமிழின் மேன்மையின் காரண மாக அதற்கு 2004 ஆம் ஆண்டு, பிற இந்திய மொழிகளில் முதலாவதாக செம்மொழித் தகுதி (அந்தஸ்து) வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரே அந்த (செம்மொழித் தகுதி), பிற மொழிகளுக்கு வழங்கப்பட்டது.

(2) உலகம் முழுவதும் தமிழ் சுமார் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு வருகிறது. கோடிக் கணக்கான மக்களால் இன்னமும் ஆற்றல் வாய்ந்த தாய்மொழியாக பேசப்பட்டு வரும் ஒரே புராதன மொழி தமிழேயாகும்.

(3) இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் அலுவல் (ஆட்சி) மொழி யாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவு களின் அலுவல் (ஆட்சி) மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. சிங்கப் பூரிலும், இலங்கை (சிறீலங்கா) யிலும் அலுவல் (ஆட்சி) மொழி களில் ஒன்றாகத் தமிழ் உள்ளது. மேலும் தமிழ் மொழி, மலேசியா, மியான்மர், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கற்பிக்கப் பட்டு வருகிறது. மேலும் பல நாடு களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது ஒரு பன்னாட்டு மொழி. இதன் முக்கியத்துவம் இதர நாடுகளிலும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

(4) மொழித்துறையில் அடை யாளம் என்பது ஒரு முக்கியமான கொள்கையாக தற்போது உள்ளது. மொழிப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது ஒரு சமுதாயத்தின் ஒருமைப் பாட் டுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த மொழியாகவும் அதே போன்று அடையாளத்திற்கு மூல மாகவும் தமிழ் இருப்பதால், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தாய் மொழிகளின் முதல் பட்டியலிலேயே அதை இடம் பெறச் செய்ய வேண்டும்.

(5)  பல்வேறு சட்ட ஆணையங் களின் (கமிஷன்களின்) அறிக்கை களில் மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் இருக்கைகளை நாட்டின் பிற பகுதி களில் அமைப் பதற்கு ஏற்ற இடங்கள் பற்றிய கருத்தைத் தெரிவித்த போது, நிதி நெருக்கடியின் காரணமாக உச்சநீதிமன்றத்தை அணுகு வதற்கு இயலாமல் இருக்கும் வழக்காடுபவர் களுக்கு உதவி செய்வதற்கு தமிழ் நாட்டில் அதை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(6) தாய்மொழிகளின் முதல் பட்டியலில் தமிழ் சேர்க்கப்படுவதன் மூலம், பன்மொழித் தன்மையின் நோக்கத்தை மேலும் கொண்டு செல் வதற்கும், அதேபோன்று குறிப்பாக தமிழ்நாட்டில் அம்மொழியைப் பேசும் மக்க ளுக்கும், நாடு முழுவதும் தமிழ் மொழி பேசும் பிற மக்களுக்கும் இடையே உடமைத் தன்மையையும், ஒருமைப்பாட்டையும் சாதிப்பதற் கும் மேலும் சேர்ப்பதற்கும் உதவி செய்யும்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு களை ஏக காலத்தில் மொழிபெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக் கும் தாய்மொழிகளின் முதல் பட்டி யலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக்கொண்டார்கள்.

இவ்வாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 13.7.19

சனி, 6 ஜூலை, 2019

மூன்று தமிழ்

மூன்று தமிழ் : தமிழ் மொழிதோற்றத்தையும் வரலாற்றுக்காலத்தையும் பல பகுதிகளாகபிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்


1. பழந்தமிழ் (Ancient Tamil)


உட்பிரிவுகள் மூன்று.


அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்


Early ancient Tamil (or) Proto Ancient Tamil


ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil


இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil


2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)


உட்பிரிவுகள் மூன்று.


அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil


ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil


இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil


3. தற்காலத் தமிழ் (Modern Tamil)


உட்பிரிவுகள் மூன்று.


அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil


ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil


முன்பழந்தமிழ் அல்லதுதொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil


 திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்


மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.


தமிழ்மொழியின் பெரும்புகழ்


திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

நன்றி : இணையம்


வெள்ளி, 5 ஜூலை, 2019

பெரியார் அன்று சொன்னார் (திரு)


பெரியார் ஆணைப்படி ஸ்ரீஎன்பதற்குப் பதிலாக திரு என்பதைப் பயன்படுத்த வேண்டும் என மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு நீதிக்கட்சியின் அமைப்புகள் அனுப்பிவைத்தன.இத்தீர்மானங் களுக்குப் பிறகு பெரியார் கீழ்க்காணும் வேண்டுகோள் ஒன்றினை அவரது பெயரால் ஈரோட்டிலிருந்து 10.03.1942இல் வெளியிட்டார். அவ்வேண்டுகோள் இதுதான்.

“நாம், நமது மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும், நம் மக்களுடைய பெயர்களுக்கு முன்பாக மரியாதை வார்த்தையாக இப்போது சர்க்காரால் உபயோகப்படுத்தப்படும் ஸ்ரீ என்கிற வார்த்தைக்குப் பதிலாக திரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்து, சென்னை சர்க்காருக்கு அனுப்பி இருந்ததுயாவரும் அறிந்திருந்ததேயாகும்.

இப்போது, சென்னை சர்க்காரார் அந்தப்படி மாறுதல் செய்யும் விஷயத்தில் பொதுமக்களின் அபிப்பிராயம் அறிய விரும்பு கிறார்கள் எனத் தெரிவதால், தாங்கள், தங்கள் ஊரில் உடனே ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அந்தப்படி மாற்ற வேண்டியது பற்றி தீர்மானம் நிறைவேற்றி, அதை சர்க்கார் சீப் செக்ரெடரி, மதராஸ் கவர்ன்மெண்ட், மதராஸ் என்ற விலாசத்துக்கு உடனே அனுப்பிக் கொடுத்து, விடுதலைக்கும் தெரிவிக்க வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இது மிகவும் அவசரமான காரிய மாகும். மற்றும், தங்கள் ஊரில் வேறு சங்கங்கள் இருந்தாலும் அதன் மூலமாயும் தீர்மானம் அனுப்பலாம்.

- (‘விடுதலை ‘ 15.03.1942)

 - விடுதலை ஞாயிறு மலர், 22. 6 .19