பக்கங்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

*மொழி ஆராய்ச்சி - தந்தை பெரியார்*




தமிழரசு, தமிழ்நாடு, தமிழ்மொழி என்று கூப்பாடு போடுகின்றார்களே! நாமென்ன தமிழுக்கு விரோதிகளா! தமிழ் வேண்டாமென்கிறோமா? தமிழ் மிலேச்ச மொழி என்று கூறுகிறோமா? அன்று தமிழ்மொழியைக் கொல்ல, கொடிபிடித்து, இந்தியை ஆதரித்து நமக்கெதிராகக் கொடி தாங்கித் திரிந்த தோழர்கள்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகின்றனர். இவர்கள் ஆரியத்திற்குச் சோரம் போயிருந்த அந்தக் காலத்திலும் கூட நாங்கள் தானே தமிழ் வளர்க்கப் பாடுபட்டோம். இதை யாராவது மறுத்துக் கூற முடியுமா?

*பொறுப்புள்ள புலவர் போட்டியிடட்டுமே*

நானும் ஒரு தமிழன்தானே. நான் பேசுவது கன்னடம் என்று சிலர் கூறலாம். நான் பேசும் மொழியை ஒருவன் கன்னடம் என்று கூறினால் அவன் தமிழ் அறியாதவன் என்றுதான் நான் கூறுவேன்.
தகுந்த, பொறுப்புள்ள, தன்மானமுள்ள எந்தப் பண்டிதர் வேண்டுமானாலும் முன் வரட்டும். என் சக்திக்கு ஏற்ற அளவுக்கு நான் பந்தயம் கட்டுகிறேன். அவர் மறுத்துக் கூறட்டுமே நான் பேசுவது தமிழல்ல, கன்னடம் என்று, நான் பேசும்மொழி தமிழ்தான். தமிழறியாததால் நீதான் அதைக் கன்னடம் என்று கூறுகிறாய். இதேபோல் தெலுங்கன் பேசுவதும் தமிழ்தான். அதைத்தான் தமிழ் தெரியாததால் நீ தெலுங்கென்று கூறுகிறாய், மலையாளி பேசுவதும் தமிழ்தான் நீதான் அதைத் தமிழ் தெரியாததால் மலையாளம் என்று கருதுகிறாய் என்று நான் கூறுகிறேன்.
தமிழ், தெலுங்குகளை வேறு என்போன் தமிழனே அல்ல

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன், தமிழ் மகனல்லன். ஆரியத்திற்குச் சோரம் போனவன்; நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்துக்கு ஆக்கம் தேட முயற்சிப் பவன். தமிழர் என்று தம்மை இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, இவர்களைத் தமிழ் அறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. திராவிட மொழி எது என்று கேட்கப்படுகிறது. திராவிட மொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது. ஆரியருக்கும் வடமொழி தவிர, வேறு மொழி பிடிக்கவும் செய்யாது. தமிழை நாம் பராமரிக்க மறந்துவிட்டோம். அதை நாம் லட்சியப் படுத்தாமல் கூடுமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டோம். நமது பண்டிதர்கள் எல்லாம் தமிழ் வல்லவர் என்று தம்மைக் கூறிக்கொண்டு, தம்மால் முடியுமளவுக்குத் தமிழை ஒழிக்க எதிரிக்குக் கையாளாயிருந்தார்களே ஒழிய, தமிழை வளர்த்தார்களில்லை. தமிழுக்கு எமனாக அன்று தொட்டு இருந்து வருபவர்கள் இந்தப் பண்டிதர் கள்தான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று கூறி பயனற்ற சில கூட்டத்தார், எதைச் சொன்னால் பாமரர்கள் ஏமாறு வார்களோ, அதைக் கூறி நம் முயற்சியைக் கெடுக்கிறார் களே ஒழிய, உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாடுபடுபவர் திராவிடர் கழகத்தார்தான். நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! எங்கள் முயற்சியால் எது போகும்? உன் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய, உண்மையில் தமி ழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் கேடு வருமா? நமது அரசாங்கத்தாருக்கு இன்று ஏற்பட்டுவிட்ட மொழிப் பற்று, நம் மொழியைக் கெடுக்க, கொலை செய்ய ஆரம் பித்து விட்டது கண்டு குலை நடுக்கமெடுக்கிறது.

*தமிழைக் கெடுக்க புது முயற்சி*

மொழிவாரி மாகாணம் பிரிக்கப்படப் போகிறது. அதுதான் பிரிந்து போகட்டும் என்றால், மொழிவாரி வித்வான்கள் நியமிக்கப்பட்டு, மொழிவாரி இலக்கணங் களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம், தீட்டியாகி விட்டதே! இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிதான் என்ற கருத்து மக்களிடையே செல் வாக்குப் பெற ஆரம்பித்ததும், ஆரிய ஆதிக்கம் அதைக் கெடுக்க, அவை ஒன்றல்ல தனித்தனி என்று பிரித்துக்காட்ட முற்பட்டு விட்டதே. நம்மைக் காட்டிக் கொடுக்கும் பண்பு வாய்ந்த தமிழ் மந்திரியும் தம் போன்ற விபீஷணர்களையே ஆஸ்தான வித்வான்களாக்க முயன்று வருகிறார். அவர் கள் இனி தம்மால் ஆனமட்டும் கேடு செய்வார்கள்.

*ஒன்றே நான்காகி உள்ளது*

பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட் டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான், அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்று தான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை நிரூபித்துக் காட்ட என்னால் முடியும்.

*ஒரே மக்கள் பலஜாதி,*

*ஒரே மொழி பலமொழி*

நாலு தனியிடங்களில் வசித்து வந்த மக்கள் போக்கு வரத்துத் தொடர்பு இல்லாததால் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப இயற்கையாகவே அவர்கள் பேசிய வார்த்தைகளில் சில சப்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு நம்மை நாலு ஜாதியாகப் பிரித்து வைத்த ஆரியம், நம் மொழியையும் நான்காகப் பிரித்து, வேண்டுமளவும் வடமொழியை அவற்றிற்குள் புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்து விட்டது. அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடிமைப் பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்களில்லை. இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்த பாடில்லை.

*நான்கு புலவர்களும் கூடட்டும்*

ஆரிய மோகமற்ற ஒரு தெலுங்குப் பண்டிதர், ஒரு கன்னடியப் பண்டிதர், ஒரு மலையாளப் பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வர் ஒன்றாக உட்கார்ந்து, நாலு அகராதிகளை வைத்துக்கொண்டு அவற்றிலுள்ள வடமொழி அத்தனையையும் நீக்கி விடுவார்களானால், எஞ்சியிருப்பவை அத்தனையையும் தமிழ் வார்த்தை களாகவே இருப்பதைக் காண்பார்கள். 100க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தையாக இருக்காது. அதற் குள்ள சற்று நீட்டலையோ, குறுக்கலையோ எடுத்துவிட்டுப் பார்த்தால் அவையும் தமிழாகவே முடியும்.

*ஏன் நீங்களே பாருங்கள்*

இன்று வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீட்டுக் குப்போய் 50-வருடத்திற்கு முந்திப் பதிப்பிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சொற்கள் புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். இந்நான்கு மொழிவாரிச் சொற்கள் யாவும், பெரும்பாலும் தமிழாகவே இருப்பதைக் காணலாம். இதைச் சுருக்கமாக சில உதாரணங்களால் விளக்குகிறேன்.

நாம் வசிக்கும் இடத்திற்கு தமிழில் வீடு என்கிறோம். நமது தாகத்தைத் தணித்துக் கொள்ள உபயோகிக்கும் பானத்தைத் தண்ணீர் என்று கூறுகிறோம். அவற்றை ஒரு தெலுங்கன் இல் என்றும், நீளு என்றும் சொல்கிறான். அதையே கன்னடியனொருவன் மனை என்றும், நீரு என்றும் சொல்கிறான். ஒரு மலையாளி அவற்றை பொறை என்றும், வெள்ளம் என்றும் சொல்கிறான். வீடு, இல், மனை, பொறை இவை நான்கும் தமிழ்ச் சொற்கள்தானே. நீர், நீளு, வெள்ளம் இவை தமிழ்தானே. நாம் எனக்கு என்று தமிழில் கூறுவதைத் தெலுங்கன் நாக்கு என்றும், கன்னடியன் நெனக்கி என்றும் கூறுவான். பார்ப்பான் நேக்கு என்று கூறுவான். அகத்திற்கு என்பதை ஆத்துக்கு என்று திரித்துக் கூறுவான். அவர்கள், இவர்கள் என்று கூற வேண்டியதை அவா, இவா என்கின்றான். இந்த நேக்கையும், ஆத்தையும், அவாள், இவாளையும் தமிழ் என்று கூறும்போது, இல், மனை, பொறை என்றும், நீளு, வெள்ளம் என்றும், நாக்கு, நெனக்கி, எனக்கி என்றும் கூறும் மக்களைத்தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்கவேண்டும்? இந்தப் பார்ப்பனரை எல்லாம் ஒரு தனியிடத்தில் வைத்துவிட்டால், இவர்கள் பேசுவதும் வேறொரு மொழியாகத்தானே போய்விடும்?

*உண்மைப் பற்று வேண்டும்!*

ஆகவேதான் நான் கூறுகிறேன். இவை நான்கும் நாலு இடத்தில் நாலு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கல்ல. ஆரியம் தான் இவற்றை நான்காகப் பிரித்து வைத்துள்ளது. இவ்வாரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள் தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய, உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். சுயநலம் மறந்து உண்மை மொழிப் பற்றுக்கொண்டு ஆரிய வடசொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும். இதை நமது தோழர்களுக்கு உணர்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கத்தான் நாம் உழைக்க வேண்டும்.

*பிளவு செய்த ஆரியமே,*

*இன்றும் பிளவு செய்கிறது*

நாமத்தை இரண்டு தினுசாகப் போட்டு, வடகலை, தென்கலை என்று கூறி வைணவர்களைப் பிரித்து வைத்தது போல், நம் மக்களிடையே புழக்கத்திலிருந்து வரும் சில சப்த வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு நம்மைப் பிரித்து வைத்த ஆரியம், நம்முடைய அப்பிரிவினை ஒழிப்பு முயற்சியைக் கண்டு பயந்து பிரிவினைக்கு ஆக்கம் தேட மொழிவாரி இலக்கணங்கள் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது. பிரிவினை என்று கூறிக்கொண்டே போனால் எதுவும் பிரிந்துதான் போகும், நாம் அங்கே என்பதை ஒருவன் அக்கடே என்றும் ஒரு வன் அவடே என்றும் கூறுகிறான். இச்சிறு வேறுபாட்டின் காரணமாக இவை வெவ்வேறு மொழியாக்கப்படலாமா? நமது பண்டிதர்கள் தமிழைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பார்ப்பனனிடம் சபாஷ் பட்டம் வாங்க வேண்டித் தம்மால் கூடுமான அளவுக்கு வடமொழியைத் தமது நூல்களில் புகுத்தித் தமிழைக் கெடுத்தனர், ஆரிய மத ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்ட அப்பண்டிதர்கள் தாராளமாக ஆரியச் சொற்களைக் கடன் வாங்கி மத நூல்களில் புகுத்தினர். உண்மையில் தமிழன் முன்னேற்றத்துக்குத் தடை இப் பண்டிதர்களும் இவர்களின் மதப்பற்றும்தான்.

*என்னருந் தமிழே!*

*நீயே தெலுங்கு, நீயே கன்னடம்*

நாம் பசு என்பதைத்தான் தெலுங்கன் ஆவு என்றும், கன்னடியன் அசு என்றும் மலையாளி ஆவ் என்றும் கூறுகிறான். ஆ என்றால் தமிழில் பசுவைத் தானே குறிக்கும்? இச்சிறு வித்தியாசத்தாலா இவை நான்காக் கப்பட வேண்டும்? இவை நான்கும் ஒரு உதிரத்திலிருந்து உதித்தெழுந்ததல்ல. அந்த உதிரமே தான் இவை நான்கும், என்னருந் தமிழே? நீயே தான் தெலுங்கு, நீயே தான் மலையாளம், நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். இவை வெவ்வேறு மொழிகளாயிருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? தமிழுக்குத்தான் முதல் நூல்கள் எத்தனையுள்ளன? அத்தனையும் ஆடிப் பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும் அவர்களின் அடி வருடிகளும்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்? இந்த அன்னக்காவடி சர்க்காரே, இந்தப் பாடம் கூடாது சீர்திருத்தம் பேசக்கூடாது ஆரியர், திராவிடர் என்று எழுதக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுகிறதே! இந்த 1947 இல் இதே இவ்வளவு செய்யு மானால் அன்றைய அரசாங்கத்தில் என்னதான் கேடு நடந்திருக்க முடியாது? அதைப் பற்றியெல்லாம் ரொம்ப சல்லீசாக மறந்துவிட்டுப், பார்ப்பானுக்கு அடிமையாகி அந்த அடிமை மோகத்தில் மூழ்கி, என்னை ஏனப்பா மொழிப் பற்றற்றவன் என்று ஏசுகிறாய்?

- 'குடிஅரசு', கட்டுரை - 10.01.1948

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தொல்காப்பியத்தில் சாதி



- ஊரன் அடிகள்
தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொல்காப்பியம், எழுத்ததிகாரம் எழுத்திலக்கணத்தைக் கூறுவது. சொல்லதி காரம் சொல்லிலக்கணத்தைக் கூறுவது. பொருளதிகாரம் வாழ்விலக்கணத்தைக் கூறுவது. யாப்பிலக்கணமும் அணி இலக்கணமும் பொருளதிகாரத்தில் அடங்கும்.

பொருளதிகாரத்தில் சில இடங்களில் சாதியைப் பற்றிய செய்திகள் உள்ளன. குறிப்பாக மரபியலில் 71 முதல் 85 முடியப் 15 சூத்திரங்கள், புறத்திணை இயலில் 16ஆவது சூத்திரம். இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

"நூலே, கரகம், முக்கோல், மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய"

- தொல், பொருள், மரபு - 71

"படையும், கொடியும், குடையும், முரசும் நடை நவில் புரவியும், களிறும், தேரும் தாரும் முடியும், நேர்வன பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய". - 72

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை - 78

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி - 81

என்னும் நான்கு சூத்திரங்களும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு சாதிக்குரிய தொழில் களைக் கூறுகின்றன.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய என்னும் சூத்திரம் அந்தணருக்குரிய அடையாளங்களைக் கூறுவதாகும்,

நூலே பூணூல்

அரகம் குண்டிகை (கமண்டலம்)

முக்கோல் திரி தண்டம் (தண்டு) இருக்கை (ஆசனப் பலகை)

மனை

பூணூலும் தண்டு கமண்டலங்களும் ஆசனப்பலகையும் அந்தணர்க்குரியனவாம். மணை என்பதற்கு "யாமை மணை" என்று உரை கூறுவார் பேராசிரியர். யாமை மணை - ஆமை வடிவ ஆசனம், கூர்மாசனம். நூல்களில் கோல் முக்கோலாகவே (திரி தண்டமாகவே) கூறப் பெறுகின்றதெனினும், வைணவ அந்தணத் துறவிகள் முக்கோல் ஏந்துவர் (முக்கோற்பகவர்), சைவ அந்தணத் துறவிகளும் மாத்வ அந்தணத் துறவிகளும் ஒரு கோலே (ஏக தண்டமே) ஏந்துவர் என்பதும் ஈண்டறியத்தக்கது. சங்கர மடத்தார் மத்வ மடத்தார் ஏகதண்டமும், ஜீயர்கள் திரி தண்டமும் தாங்கியிருப்பர்.

"உறித்தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்" என்னும் கலித்தொகையும் (9), "தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்னும் குறுந்தொகையும் (156) பேராசிரியரால் உதாரணமாக எடுத்துக் காட்டப் பெற்றன.

படையும் கொடியும் குடையும் முரசும் குதிரையும் யானையும் தேரும் மாலையும் முடியும் இவை போன்று பொருந்தும் பிறவும் செங்கோல் அரசர்க்குரியன என்பது ஆம் சூத்திரப் பொருள்.

"வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (78) என்பது வணிக வாழ்வு வைசியர்க்கு உரியது என்பதாம்.

"வேளாளர்க்கு வேளாண்மை தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறுவது 81-ஆம் சூத்திரம்.

"அறுவகைப்பட்ட பார்ப்பணப் பக்கமும் அய்வகை மரபின் அரசர் பக்கமும் இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறு இல் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும் பால் அறி மரபின் பொருநர் கண்ணும் அனை நிலை வகையொடு ஆங்கு ஏழு வகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்"
என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் ஆவது - சூத் திரம் இதன் முதல் மூன்றடிகளில் அந்தணர் (பார்ப்பணர்), அரசர், ஏனோர் (வணிகர் வேளாளராகிய மற்றை இருவர்) பக்கமும் குறிக்கப் பெறுகின்றன.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்

1. ஓதல், 2 ஓதுவித்தல், 3. வேட்டல், 4. வேட் பித்தல், 5. ஈதல், 6. ஏற்றல்.

அய்வகை மரபின் அரசர் பக்கம்;

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. காத்தல் 5.தண்டஞ்செய்தல்

இரு மூன்று (2x3) மரபின் ஏனோர் பக்கம்:

வணிகர்க்குரிய 6 பக்கம்:

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. உழவு. 5. நிரையோம்பல், (ஆநிரை ஓம்பல் - பசுக்காத்தல்) 6. வாணிகம்

வேளாளர்க்குரிய 6 பக்கம்

1.வேதம் ஒழிந்த ஓதல், 2. ஈதல், 3.உழவு, 4. நிரையோம்பல், 5. வாணிகம், 6, வழிபாடு - என்பார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் நிரை யோம்பலைப்  பகடு புறந்தருதல் என்பார்.  வாணிகத்தைத்
தவிர்த்து   விருந்தோம்பலைக்   கூறுவார்.

திவாகரம் பிங்கலம் முதலிய நிகண்டுகளிலும் நான்கு சாதியாருக்கும் ஆறு ஆறு தொழில்களே கூறப்பெற்றன. எனினும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழிலே முதன்மையான தாகும், சிறப்புத் தொழிலாகும்.

அந்தணர்க்குக் கல்வி 
அரசர்க்குக் காவல்
வணிகர்க்கு வணிகம் வேளாளர்க்கு வேளாண்மை.

"வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை. 
வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்.
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல்."

என்னும் அதிவீரராமபாண்டியர் வெற்றிவேற்கை ஈண்டு நினையத்தக்கது.

‌நூல் :- சாதியும் மதமும்
ஆசிரியர் :-ஊரன் அடிகள்
வெளியீடு :-சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், கடலூர்,
முதல் பதிப்பு- 2003

திங்கள், 18 ஜனவரி, 2021

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்  - பெரியாரின் பங்களிப்பு என்ன?

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவின்படி தமிழ் மிகத் தொன்மையான மொழி. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழுமை பெற்றிருந்த மொழி.

வட்டெழுத்தில் தொடங்கி இன்று பயன்படுத்தப்படும் வகையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன.

ஓலைச் சுவடிகளில் எழுதும்போது புள்ளி வைப்பது இயலாது. ஓலையில் ஓட்டை விழும். எனவே புள்ளி என்பதைக் கூட "புளளி" என்றே எழுதுவர்.

கல்வெட்டுக்களில் இந்தச் சிரமம் இல்லை.

பின்பு அச்சு எனும் Printing அறிவியல் அறிமுகமானபின்பு எழுத்துகளில் மாற்றம் தேவைப் பட்டது.

அதாவது எழுதும் பொருட்கள், அச்சு, இன்றைய கணினி ஆகியவற்றுக்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

அச்சுக் கலை உருவானபோது, வீரமாமுனிவர் அதற்கேற்ப சில. மாற்றங்கள் செய்கிறார்.

அது எ, ஏ, தே. தோ என்று இன்று நாம் பயன்படுத்தி வரும் மாற்றம். முன்பு எ என்பதை ஏ என்று ஒலிக்கும் வகையில் எழுத மேலே புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இதற்கென அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

வீரமாமுனிவருக்குப் பிறகு  7 எழுத்துகளுடன் ஐ, ஒள எனும் எழுத்துகளிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஐ என்பதை அய் எனவும் ஒள என்பதை அவ் என்றும் மாற்றக் கோரினர்.

அவ்வாறு தமிழறிஞர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் ....

1930 - காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.

1933 - திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.

1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.

1935 - குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் பெரியார். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ).

1941 - சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1948 -  பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.

1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார்

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன.

1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)

1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.

1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம் ஜி ஆர் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.

1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

இந்த வரிசையில்,

பெரியார் இதுகுறித்த கட்டுரை எழுதியதோடு நிற்காமல் குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் அச்சிலேயே இந்த மாற்றத்தை அரசின் ஒப்புதலோ, அங்கீகாரமோ இல்லாமலேயே அமல்படுத்தி செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல் விதையிட்டவர் 1930 - ல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா.

35 ல் தான் பெரியார் இதை முன்னெடுக்கிறார்.

காரணம், அச்சகத்தில் பழைய எழுத்துகளைக் கோர்ப்பதில் நடைமுறைச் சிக்கல், குறிப்பாக அச்சு வார்ப்பதில் இரட்டை வேலையாக இருந்தது.

ஆனால், இந்த மாற்றங்களில் ஐ. ஒள ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,  கடுமையாக எதிர்த்தனர். காரணம் இவை ஓரெழுத்து மொழியாக நின்று பொருள் தரக்கூடியவை பிரித்தால் அந்தப் பொருளைத் தராது என்று ண் எதிர்த்தனர்.

இதையடுத்து இந்த இரு எழுத்துகளை விட்டுவிட்டு மீதமுள்ள 7 உயிர் மெய் எழுத்துக்களைத் திருத்தி 19/10/1978 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

பெரியார் செய்ததாலும், பெரியாரை சிறப்பிக்கவுமே எம்.ஜி.ஆர் செய்தது இது


ஆனால் பெரியார், 

எழுத்து சீர்திருத்தத்தைக் குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: 

‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, பொதுவாகவே தம்மைப் பற்றிக் குறிப்பிடும்போது

"நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’  என்று குடிஅரசு, 25.12.1927 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாணை வெளியிட்டும் பதிப்பகங்கள், பத்திரிகைகள் பல மாறவில்லை. அரசு சலுகைகள் கிடைக்காது என எச்சரிகை விட்டவுடன் மாற்றம் பெற்றது.

( கட்டுரை முழுமை பெறவில்லை)

திங்கள், 11 ஜனவரி, 2021

ஜாதியோ, ஜாதி!(இலக்கிய பாக்களில்)

ஒற்றைப் பத்தி

ஜாதியோ, ஜாதி!

தமிழ் இலக்கியத்தில் பிற்காலத்தில் வருண வேறுபாடு கூறப்பட்டது. தமிழ் இலக்கணத்தில், எழுத்து, பாக்கள் ஆகியவற்றுக்கும்கூட வருண வேறுபாடு கூறப்பட்டது.

பார்ப்பனரை வெண்பாவாலும், சத்திரியரை (அரசரை) ஆசிரியப் பாவாலும், வைசியரை (வணிகரை) கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும்; பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்திலும் வருண பேதம்! தேவருக்கு 100, பார்ப்பனருக்கு 95, சத்திரியருக்கு 90, அமைச்சருக்கு 70, வைசியருக்கு 50, மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமாம்.

பாடல் இலக்கணத்தில்கூட வருண வகுப்பாடு என்கிற அளவுக்கு ஆரியம் புகுந்து விளையாடிய கொடூரத்தை என்னவென்று சொல்ல!

பாம்புகளில், பிராமண, அரச, வைசிய ஜாதிகள் எவை என்று சிந்தாமணி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பேச்சு வழக்கிலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வருண வேறுபாடு வழங்குவதைக் காணலாம். தலை வெளுத்து, உடல் சிவந்த கழுகைப் ‘‘பிராமணக் கழுகு'' என்று கூறினர்.

கருநிறமுடைய கழுகைப் ‘பறைக் கழுகு' என்று அழைத்தனர். வெண்மை கலந்த ஒரு வகை மைனாவை பார்ப்பார மைனா என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் ‘‘பார்ப்பாரச் சிலுவா'' (பார்ப்பனக் கிளுவை) என்று ஒரு வகைக் காட்டு வாத்து அழைக்கப்படுகின்றது. ஜாதி அடிப்படையில் வழங்கும் இவ்வழக்கு ஆங்கில மொழியிலும் வழங்கி வருகிறது. ‘பறை நாய்' என்ற பெயரை ஒருவகை நாயினத்துக்கு விலங்கு நூலார் வழங்குவதைக் காணலாம்.

‘‘பிரமா மாடு'' (பிராமண மாடு) என்ற பெயர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பரவிய இந்திய மாட்டினத்துக்குப் பெயராக வழங்குகின்றது.

வால்மீகி ஒரு செய்யுளில் ‘பிராமணி' என்ற பெயரில் அரணையைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது, ஆவணி அவிட்டத்தில் புதுப்பிப்பது அவர்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்று கூறி, பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் - வேசி மக்கள் என்று இழிவுப்படுத்துவதுதானே!

ஜாதியின் ஆணிவேர் அறுக்கப்பட்டால்தான் ஆரியம் ஒழியும்!

 - மயிலாடன்

புதன், 6 ஜனவரி, 2021

200 ஆண்டுகளுக்கு முன் வந்த புள்ளி இல்லா திருக்குறள் குறிப்பேடு


உலக மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நெறியை நினைவூட்டி, அறிவுறுத்தும் அறநூல், திருவள்ளு வரின் திருக்குறள்.

‘பிறப்பொக்கும் எல்லார்க்கும்' என்ற பேதமிலா பெருநெறியே மனித குலத்தினை உயர்த்திடும் வாழ்வியல் என்பதையும், எதையும் உன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முடிவு செய் என்றும் இடித்துள்ளது. மனித குலத்திற்கு வாழ்வியலாகும் முக்கிய கூறு மூன்று. அறம், பொருள் - இன்பம் என்பதே என்பதை விளக்கிடும் நூல். தமிழ்ப் பண்பாடு திராவிட நாகரீகம் எப்படி சிறந்ததாக 2500 ஆண்டுகளுக்கு முன் தழைத்தோங்கியிருந்தால், இப்படிப்பட்ட ஒப்பற்ற உயர் அறிவுச் செம்மல் இப்படிப்பட்ட திருக்குறளை - ‘குறுகத்தறித்த குறளாக' ஆக்கி தந்திருக்க முடியும்.

இதுவரை திருக்குறள் எத்தனையோ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு செம்மொழி தமிழின் அரும் அறிவுக் கருவூலங்களில் முதன்மையதாக உள்ளது!

அதன் பதிப்புகள் பலவும் வந்துள்ளது. ஆனால் இப்போது, சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தவரால் ‘மீள் பதிப்பாக' 2016 இல் வெளியாகி யுள்ள திருக்குறள் 1812ஆம் ஆண்டு வந்த பதிப்பின் மீள் பதிப்பு!

208 ஆண்டுக்கு முன் வந்த திருக்குறள் பதிப்பினை நமது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிவு விருந்தாக்கியுள்ளனர்.

மூலப் பதிப்பு புள்ளிகள் வைக்கப்படாத ஓலைச் சுவடி எழுத்துக்கள். ஏனெனில் புள்ளி வைத்தால் எழுத்தாணி ஓலைச் சுவடியைக் கிழித்துவிடக்கூடிய அவலம் உண்டு. அதனால் மக்கள் மனதால் அப்புள்ளியைப் போட்டு நிரப்பியே படித்துப் பயன் பெறப்பழகி விட்டிருக்கக் கூடும்.

அப்பதிப்பு அப்படியே தலைப்பு உட்பட - புள்ளி யில்லாமலே, (ஒரிஜினலில்) மூலத்தில் உள்ளபடி மீள் பதிப்பு அழகிய அச்சு, கட்டுகள் கூட ஒரு அருமை யான கையடக்க பரிசுப் பொருளாகப் பெறத் தகுதி யான நூலாக வெளி வந்துள்ளது.

“திருக்குறள்" (புள்ளியில்லாதது கூட) உள்ளே அதிகாரம் - குறட்பாக்கள் அனைத்தும் இம்முறை யிலே அப்படியே அச்சில் மீள் பதிப்பாக வெளி வந்துள்ளது!

200 ஆண்டுக்கு முன்னரே வந்துள்ள நம் இலக் கிய அறிவுக் கருவூலம் பற்றிய, ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலக இயக்குநர் திரு. க.சுந்தர் அவர்கள் எழுதியுள்ள பதிப்புரை பல அரிய தகவல்கள் தருகிறது. படியுங்கள்.

பதிப்புரை

செவ்வியல் இலக்கியங்களில் முதலில் அச்சேறி யது திருக்குறளே. 1812ல் வெளிவந்த இப்பதிப்பு, புள்ளியில்லா மெய்யெழுத்துக்களுடன் அச்சிடப் பட்டுள்ளது. இப்பதிப்பைத் தொடர்ந்து பல பதிப்பு கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திருக்குறள் முதற்பதிப்பு நூல் உலகளவில் இன்று ஐந்திற்கும் குறைவான பிரதிகளே உள்ளன. அரிதான இந் நூலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் இந்நூல் அனைவரிடத்திலும் சென்றடையும் என்ற எண் ணம் எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகரான திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் திருக்குறள் இன்பத்துப்பாலில் ஏழு குறட்பாக்களுக்கு நாட்டுப்புறப் பாணியில் பாடல்கள் இயற்றியுள்ளார். இத்தொகுப்பிற்கு திரு. டிராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்த ஓவியங் களுடன் புத்தக வடிவிலும், அதற்கு திரு. தாஜ் நூர் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஒலிப்பேழை வடிவிலும் 27 நவம்பர் 2016 அன்று வெளியிடப் படுகிறது. அதே நாளில் இப்பாடல் இசை அரங் கேற்றமும் நடைபெறவுள்ளது. இந்நாட்டுக்குறள் விழா திருக்குறள் ஆர்வலர்களைக் கொண்ட வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடக குழுமத்தினால் நடத்தப்படுகிறது. இவ்விழாவன்றே இம்மீள்பதிப்பை வெளியிடுவது மிக பொருத்தமாக இருக்கும் என வள்ளுவர் குடும்பத்தினர் ஊக்க மளித்தனர். இதற்காக, திருக்குறள் நூலின் முதல் பதிப்பு பிரதியை எண்ணிமப்படுத்தி, எண்ணிமத் தொழில்நுட்பம் மூலமாக சுத்தம் செய்து முதல் பதிப்பு பிரதியில் எந்த ஒரு மாற்றமும் திருத்தமும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கப்படுகிறது.

இம்மீள்பதிப்பை சேகரிப்பாளர் பிரதியாக (Collector's edition) அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். 1812ல் வெளிவந்த பதிப்பு அக்காலத்திலேயே பிரதி வேண்டுவோரிடம் பொருளுதவியை முன் கட்டணமாக பெற்றுக்கொண்டே அச்சிட்டப்பட்டது. அதேபோல் இம்மீள்பதிப்பையும் பொருளுதவி பெற்றே அச்சிட எண்ணினோம். ஸ்ரீராம் காபிடல் லிமிடெட் நிறுவனம் (Shriram Capital Limited) இதற்காக பெரும்பான்மை தொகையாக ரூபாய் மூன்று லட்சம் நல்கையாக வழங்கியுள்ளது. இந்நல் கையுடன், மீதமுள்ள பணத்தை ஆர்வலர்களிடம் பிரதிகளுக்கான முன்பணம் பெற்று இப்பிரதி அச்சிடப்படுகிறது. இப்பிரதியின் மூலம் வரும் வருவாய் நூலகப் பணிகளுக்குச் செலவிடப்படும்.

- க. சுந்தர் இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை

பாராட்டத்தக்கப் பணி. ஒவ்வொரு இல்லத்திலும் அணி செய்ய வேண்டியது.

இதனை எனக்கு 1.12.2020 அன்று நேரில் வந்து அளித்து மகிழ்ச்சியை வழங்கிய நண்பர்கள் திராவிட சிந்துவெளி நாகரிக ஆய்வாளர் திரு. ஆர்.பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்களுக்கும், இயக்குநர் க.சுந்தர் அவர்களுக்கும், நண்பர் விசுவேஷ் அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றி!

சனி, 26 டிசம்பர், 2020

திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?

புதன், 12 ஆகஸ்ட், 2020

எது மூத்த மொழி? தமிழா? சம்ஸ்கிருதமா?சான்றுகள் சொல்லும் உண்மை

எது மூத்த மொழி? தமிழா? சம்ஸ்கிருதமா?

சான்றுகள் சொல்லும் உண்மை

தமிழ் மொழி வட மொழியை விட பழமையானது என்பதற்கு நம்மிடம் தரவுகள் உள்ளதா? என்றொரு கேள்வி கோரா (Quora) தமிழ்த் தளத்தில் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு ஒரே ஒரு வரிப் பதில்:

தமிழ் மொழி, வடமொழியான சம்ஸ்கிருத (संस्कृत) பாஷையை விடப் பழமையானது என்பதற்குப் பல தரவுகள் உள்ளன!

ஆனால், இந்த ஒரே ஒரு வரிப் பதிலால், சிலரும் பலரும் நிறைவடைய மாட்டார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற தரவுகளின் ஆர்வம் தூண்டிக் கொண்டே இருக்கும்.

சிலருக்கோ, எவ்வளவு தரவுகள் கொடுத்தாலும் இசைய மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு இது பல்லாண்டுகளாக ஊடுபாயும் ஓர் ஆழ்மனச் சுகம்/ ஆதிக்கத் தற்பிடித்தம் மட்டுமே! இன்னும் சிலருக்கோ, அந்த ஆதிக்கத்தின் மீதான வெறுப்பு காரணமாகவே, தரவுகள் தேவைப்படாமலேயே, உடனடியாக இசைந்தும் விடுவார்கள்.

ஆனால், எப் பிடித்தங்களும் சாராமல், அவரவர் நிலைப்பாடு/கொள்கை தாண்டி, அறிவியல் முறைமையாக அணுக வேண்டிய ஒரு கேள்வி இது!

தொன்மை அறுதிப்பாடு (நிர்ணயம்), வரலாற்று மாந்தவியலில் பயன் மிக்கதே; ஆனால் அதே சமயம் கடினமானதும் கூட!

நமக்குத் தமிழ் மேல் உள்ள காதலால் தான், தமிழ் மூத்தமொழி என்று சொல்கிறோமா? அவர்களுக்குச் சமஸ்கிருத பாசம் (அ) மத/இன மேலாதிக்க உணர்வுகள் உள்ளூற இருப்பதனால் தான், சமஸ்கிருதம் மூத்த மொழி என்று சொல்கிறார்களா?

இன்னும் சிலருக்கோ சமஸ்கிருதமே தெரியாவிட்டாலும், சம்ஸ்கிருதம் தான் மூத்த மொழி என்று சாதிக்கிறார்களே, அது ஏன்?

இது போன்ற அரசியலும் சிக்கலும் இக் கேள்வியுள் பொதிந்து இருப்பதனால், இதை அறிவியல் முறையில்/ கல்வி முறையில் அணுகலே நலம் பயக்கும். அந்த அளவுக்குத் தரவுகள் கொடுத்தால் தான், இக் கேள்விக்கான ஒரு குறைந்த அளவுப் புரிதலாவது ஏற்படும்.

இன்று வரையில், எனக்கு 12 மொழிகள் தெரியும். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் தவிர, இந்திய/திராவிட மொழிகளுள் ஐந்தும், உலக மொழிகளுள் ஏழும் தெரியும். இன்னும் மூன்று மொழிகள் - அரபி, சிங்களம், அராவக் (அமேசான் பழங்குடி மொழி) - பயின்று கொண்டுள்ளேன்.

இத்தனை மொழிகளையும் ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்; பிறப்பால், என் தாய்மொழியாகத் தமிழ் அமைந்துவிட்டதால் அதைத் துதிபாட வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. மாறாகத் தற்பிடித்தம் கடந்து சொல்கிறேன்.

அறிவியல் முறைமையால் ஆராய்ச்சிகளின் காரணமாகவும், அறத்தின் முறைமையால் திணிப்பு/மறைப்பு இலாத மொழித் தகைமையாலும், இதைச் சொல்கிறேன்.

தமிழில் இருந்து விளைந்த தரவுகளை எடுத்துக் கொள்வோம். சமஸ்கிருதத்தில் இருந்து விளைந்த தரவுகளை எடுத்துக் கொள்வோம். இரண்டையும் சீர்தூக்கி ஒப்பிட்ட பின்னரே, முடிவு செய்குவோம்.

இதற்குத் துணை செய்யக் கூடிய நல்ல நூல்களாவன:

1) A History of Sanskrit Literature - Arthur A. MacDonell,

2) வடமொழி வரலாறு - மொழிஞாயிறு பாவாணர்,

3) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரியார்),

4) தமிழர் லரலாறும் பண்பாடும் - பேரா. நா. வானமாமலை,

5) Studies in Indian History: with special reference to Tamil Nadu - K. K. Pillay

6) A Sketch of Comparative Dravidian Morphology – Prof. Dr. Kamil Zvelebil

7) Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century C.E. (Tamil-Brahmi Inscriptions) – Iravatham Mahadevan

******

உலகத்தின் முதல் மொழி எது? என்பதை அறுதியிடுதல் மிக மிகக் கடினமே! ஏனெனில், உலகத்தின் முதல் மனிதர்கள் யார்? என்பதற்கான நேரடி விடை அறிவியலில் இல்லை! இருக்கவும் இருக்காது. ஏனெனில் மாந்த இனம் என்பது ஒரு படிமலர்ச்சியே (evolution). அதன் முதற்புள்ளி இது தான், முதல் நிலம் இது தான், முதல் மொழி இது தான், என்றெல்லாம் தட்டையாக அறுதியிட்டு விட முடியாது.

ஆனால், உலகின் முதல் மொழியை அறுதியிட முடியாவிட்டாலும், இந்தியத் துணைக் கண்ட மொழிகளுள் எவை தொன்மையானவை என்று, ஒப்பீட்டு அளவில் ஓரளவு அறுதியிட முடியும்.

உலகம் ஊமையாய் இருந்த அக்காலத்தில், Pangea எனும் ஒரே உலகப் பெருங் கண்டத்தில், மனித இனம் இன்னும் தோன்றவே இல்லை; அதனால் மொழியும் இன்னும் தோன்றவில்லை. மாந்த இனம், உலகின் 'ஒரேயொரு புள்ளிப் பகுதி'யில் தோன்றிப் பரவுவதில்லை; உயிர்த்தோற்ற அறிவியல் பரந்துபட்டது!

Big Bang அண்டவெளி நிகழ்வுக்குப் பின், Ozone திரை பெற்ற பூமி அடங்கி, கடலில் தோன்றிய முதல் 'செல்' உயிரினம், படிமலர்ச்சியால் நிலம் ஏகியது, 'ஒரேயொரு' இடத்தில் மட்டுமே அல்ல; அது பரந்துபட்ட றிணீஸீரீமீணீ பெருங்கண்டம்; அதில் தமிழகம் என்று இன்னும் பேர் பெறாத இடம், ஒரு துளி மட்டுமே!

Cell உயிரினத்திலிருந்து, எப்படி எப்படியோ Homo Erectus வரை வந்த உயிரினம், Home Sapiens & Homo Neanderthal  என இரண்டாகக் கிளைத்த போது கூட மொழி உருவாகிடவில்லை; விலங்கு நிலையே.

Homo Sapiens மேலும் மேலும் Evolutionஅடைந்தது ஒரு குறிப்பிட்ட நகரத்தில் அல்ல; பலப்பல இடங்களில். Homo Sapiens படிமலர்ச்சி அடையும் போது தான், எங்கோ ஒரு புள்ளியில், மொழியின் ஆதிக் கூறு தோன்றியிருக்க வேண்டும்.

இது தமிழோ/ சம்ஸ்கிருதமோ/ எபிரேயமோ/ எகிப்தியமோ அல்ல. சைகை/ சீழ்க்கை/ ஒலிப்பு மொழிகளே! மொழிக்கு, இது தான் முதற்புள்ளி என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால், பல்வேறு இடங்களில் நகர்ந்து கொண்டே இருந்த மாந்த இனம், அந்தந்த இடங்களில், தத்தங்களின் மொழித்தேவையை, வெவ்வேறு முறையில் உருவாக்கிக் கொண்டன. அவையே உலகின் ஆதிமொழிகளாகக் கூறு பெற்று, பின்பு நாகரிக வடிவமும் பெற்றுக் கொண்டன!

சிவன் டமருகம் அடித்துச் சம்ஸ்கிருதமோ, அல்லது முருகன் சங்கத்தில் உட்கார்ந்து தமிழையோ 'உருவாக்க'வில்லை. மாந்த இனங்களின் படிமலர்ச்சியே (Evolution) மொழிகள்!

அப்படிப் படிமலர்ச்சி பெற்று, 'தமிழ்' என்று தங்கள் மொழிக்கே ஒரு பேர் வைத்துக்கொள்ளும் வரை, எத்தனை எத்தனையோ மாந்தவியல் படிக்கட்டுகள்!

தமிழ், இந்தியப் பெருங்கண்டத்தின் தொன்மை மிக்க பெருமொழி. அது பிற மொழிகளைச் சார்ந்து உருவான ஒரு மொழி அல்ல! இனக் குழுக்களின் ஆதிமொழியாகவே தோற்றம் பெற்ற தொல்மொழி. அந்த இனக்குழு, வாழ்வியல் படிமலர்ச்சி அடைந்து... உணவு, உறையுள், உடை, உறவுகள், குழுக்கள், சமுதாயம் என்ற நிலையை அடைந்து விடுகிறது.

அப்படிச் 'சமுதாயம்' ஆன பின் உள்ள, மொழி நிலையை/ மொழித் தொன்மையைத் தான் அளவிட முடியும்; தரவுகளால் கணக்கிட முடியும்.

முதல் தரவு, எழுத்துத் தரவு!

தங்களின் கருத்துப் பரிமாற்ற ஒலிப்புகளை, எழுத்தாலும் எழுதி வைக்கத் துவங்குதலே, மொழியின் ஆதி ஆவணம்!

இனக்குழு மக்களின் உடற்கூறு, பழங்கற்காலக் கருவிகள், தொல்லெச்சப் பொருட்கள் என்பவையெல்லாம் அந்த இனக்குழு நாகரிகத்துக்கான தொன்மச் சான்று பகருமேயன்றி, மொழியின் தொன்மத்துக்கான அடிப்படைச் சான்று, எழுத்து வடிவமே!

தங்களின் பேச்சொலிகளை எழுத்தாக்கி எப்படி எழுதினார்கள் என்பதை அறிவது. Earliest Written Accounts என்று ஆங்கிலத்தில் ஆய்வுமொழியில் இதனைச் சொல்வார்கள்.

எழுத்துத் தரவுகள் என்று பார்க்கும் போது, தமிழ்மொழித் தரவுகள் நிறைய உள்ளன;

இன்றைய தமிழ் வரிவடிவம் தொட்டு, கோலெழுத்து, பல்லவக் கிரந்தம், வட்டெழுத்து, தமிழி (தமிழ்ப் பிராமி), சிந்து சமவெளி வரிவடிவம் (தொடரும் ஆய்வுகள்), படுகைக் குறிகள்/ படவெழுத்து (hieroglyph) என்று, தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பயணம், மிக நெடிது!

வடமொழி என்னும் போது, இரண்டு மொழிகள் - பிராகிருதம் & சம்ஸ்கிருதம் உள்ளன.

(இன்று நாம் வடமொழி என்றாலே சம்ஸ்கிருதம் என்று எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், சமஸ்கிருதம் தான் அதிகம், தமிழைச் சிதைக்க முற்பட்டது. பிராகிருதம் அப்படிச் செய்யவில்லை).

இன்று சம்ஸ்கிருதம் எழுதப்படுகின்ற வரியுரு, தேவநாகரி வரியுரு. இதே தேவநாகரியில் தான், இன்று பல வட இந்திய மொழிகளும் எழுதப்படுகின்றன. சம்ஸ்கிருத மொழியை, இந்தத் தேவநாகரி வரியுருவில் எழுதத் தலைப்பட்ட காலம், கிட்டத்தட்ட 1000 CE-க்குப் பின் தான்.

பதினோராம் நூற்றாண்டின் உதயகிரிக் கல்வெட்டுகள் (மத்தியப் பிரதேசம், விதிஷாவுக்கு அருகிலுள்ள 20 குடைவரைகள்), சம்ஸ்கிருத தேவநாகரிக்குச் சான்று பகர்ந்தாலும்,

அதற்கு முன்பே.. நந்திநாகரி, அர்த்தநாகரி, நாகரி, சித்த மாத்ரிகா, குப்த வரிவடிவம், கரோஸ்தி, பிராமி.. என்றெல்லாம் வடமொழியும் தொன்மம் மிக்கதே. ஆனால், அந்த வடமொழி, பிராகிருதமே அன்றி, சம்ஸ்கிருதம் அல்ல!

சம்ஸ்கிருத தேவநாகரிக்குப் பின், மோடி, கயஸ்தி, சாரதா எனப் பல வரிவடிவங்கள் ஆங்காங்கு தோன்றி மறைந்தாலும், தேவநாகரியே நிலைத்து நின்றது சம்ஸ்கிருதம் எழுதுவதற்கு!

அதற்கு முன்பு, பிராகிருத மொழிக்கான நாகரி வரிவடிவமும், குப்த வரிவடிவமும் தான் எழுதுவதற்கு!

அவற்றுக்கும் முன்பு, அசோக பிராமி என்ற வரி வடிவமும், பிராகிருத மொழித் தொன்மத்துக்கே அதிகம் சான்று பகர்பவை. சம்ஸ்கிருத மொழிக்கு அல்ல! எனில், சம்ஸ்கிருதம் எழுதவே படவில்லையா? என்ற வினா எழும். அங்கு தான், அம்மொழியின் ஆதிக் கூறுகள் ஒளிந்துள்ளன.

******

சம்ஸ்கிருதம், வேத காலச் சம்ஸ்கிருதம்/ பின்னாள் சம்ஸ்கிருதம் என்று இரு வேறாகச் சொல்லப்பட்டாலும், வேதங்கள் எழுதப்படாமல், வாய்வழியாகவே சொல்லப்படவேண்டும் என்ற மரபில் விளைந்தவை. அதனால் தான் ‘எழுதாக் கிளவி’ என்றொரு பெயரும் அதற்குண்டு.

வேதங்களை, ஸ்ருதி (श्रुति) என்பதும் அதனால் தான். ஸ்ருத் என்றால் கேட்கப்படுவது. எழுதி வைக்கக்கூடாது. (ஸ்ருதிஸ்து வேதோ விக்னேயஹ);

ஸ்ரவணம் என்பதும் அதன் அடியொட்டி வருவதே (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ, ஸ்மரணம் பாத ஸேவனம்). இப்படி எழுதப்படாமல், செவி/வாய் வழியாகவே வந்தவை ஆதலால், அவற்றின் தொன்ம நிறுவல்கள் யாவும் ஊக அடிப்படையில் மட்டுமே!

என்ன காரணத்துக்காக இப்படிச் செய்தார்கள்? அறிவைத் தங்களுக்குள் மட்டுமே வைத்துக் கொண்டுப் பொதுச் சமூகத்துக்குப் பகிர விரும்பவில்லையா? (அல்லது) பின்னாளில் எழுதிக் கொண்டு, இதுவும் தொன்மம் மிக்கதே, ஆனால் அதற்கான எழுத்து ஆதாரம் இல்லை என்று சொல்லத் தலைப்பட்டார்களா? என்று நமக்குத் தெரியாது, ஆதாரம் இல்லாததால் கண்டு பிடிக்கவும் முடியாது!

ஆனால் சமஸ்கிருத மொழியில், வேதங்கள் மட்டுமே நூல்கள் அல்ல; பின்னாளில் வேறு பல புராண நூல்களும், இலக்கிய/இலக்கணங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் எவ்வாறு எழுதப்பட்டன என்றால், மிகுதியாக எழுதப்பட்டது பின்னாள் குப்த வரிவடிவத்தில் தான்!

அதற்கும் சற்று முன்பு, பிராகிருத மொழி மிகுதியாக எழுதப்பட்ட அசோகப் பிராமி வரிவடிவத்திலும், சம்ஸ்கிருதத்தைச் சற்றே எழுதி வைக்க முனைந்தார்கள்! பிராகிருத மொழியும், அதன் மூலமாகச் சமண/பௌத்த மதங்களும் பரவத் தலைப்படும் போது, இனிமேலும் எழுதி வைக்காமல் போனால், தங்களின் மரபு அடியோடு அழிந்துபடும் என்பதாலும், எழுதாக் கிளவியில் இருந்து, எழுதும் கிளவிக்கு மாறினார்கள், குப்த காலத்தில்!

பிராகிருதம் (प्राकृत) = பிர+கிருதம் (Raw Form);

சம்ஸ்கிருதம் (संस्कृत) = சம்ஸ்+கிருதம் (Refined Form)

இம் மொழிகளின் பெயர்களே, இவற்றின் தொன்மங்களை ஓரளவு காட்டிக் கொடுத்து விடும். மக்களிடம் ஸிணீஷ் ஏற்பட்ட பின்னரே, பண்டிதர்களிடம் Refined  ஆகும். அதான் உலக இயற்கை.

சான்றாக: “தம்மம், மாக்கம், சத்தம்” என்ற பிராகிருத மொழிச் சொற்கள்,” தர்மம், மார்க்கம், சப்தம்” என்றெல்லாம் -ர்/-ப் ஒலி பெற்று, சம்ஸ்கிருத மொழி ஆகிவிடும்.

“தம்மம் ஸரணம் கச்சாமி” என்பது தான் பிராகிருத பௌத்தம். அந்தத் தம்மம் -> தர்மம் ஆகிவிடும், சம்ஸ்கிருத பாஷையில்.

போலவே, “காஹா சத்த சயி” என்ற பிராகிருத இலக்கியத்தை, “காதா சப்த சதீ” என்று சம்ஸ்கிருத பாஷையில் எழுதுவார்கள். “மொக்கல்லானா & சாரிபுத்தா” என்ற புத்தரின் சீடர்களை, “மௌத்கல்யயானா & சாரிபுத்ரா” என்று எழுதுவார்கள், சம்ஸ்கிருத பாஷையில். இப்படி, Raw/Refined என்று வடிவங்கள் மாறியதே பிராகிருதமும், சம்ஸ்கிருதமும்!

சொல்லப் போனால், காளிதாசரின் மஹா காவ்யமான சாகுந்தலத்தில், பொதுமக்கள் & பெண்கள் (கீழ்க்குடிகள்) பிராகிருத மொழி பேச, அரசவைப் பண்டிதர்கள் (மேல்குடிகள்) சம்ஸ்கிருத பாஷை பேசுவதாக, அவரே தம் நாடகத்தில் காட்டுவார்.

பிராகிருதம், மக்கள் மொழியாக இருந்ததினால் தான், அதிலேயே தங்கள் கருத்துக்களைப் பரப்பினார்கள், வேத மத எதிர்ப்பாளர்களான மகாவீரரும் புத்தரும்!

வேத வைதீக மதத்தினரோ, ‘மேன்மை’ கருதி, சம்ஸ்கிருத பாஷையைத் தான், தங்கள் மதத்துக்கு அதிகமாகக் கையாண்டார்கள்.

இன்று வடமாநிலங்களில் பரவியுள்ள பல மக்கள் மொழிகளுக்கு (ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ஒடியம், மகாராட்டிரம், இன்னும் பல) மூலம்: பிராகிருதமே அன்றி, சம்ஸ்கிருதம் அல்ல!

பாளி, சௌரசேனி, மகதி, அர்த்த மகதி, அவந்தி, காந்தாரி, மகாராட்டிரி என்று அந்தந்தப் பகுதிக்கேற்ப விளைந்த பிராகிருத மொழிகளே, மக்கள் மொழிகள் ஆகின.

அவற்றின் ஆதியான, சமண/பௌத்தப் பிராகிருத மொழியே, அசோகர் முதலானோர் காலத்திலும் பரவியிருந்து, அசோக பிராமி வரிவடிவங்களும் கொண்டிருந்தன. அப்போதெல்லாம், வைதீகச் சம்ஸ்கிருத மொழி, அதிகம் பிராமி வரிவடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவில்லை.

பின்னாள் குப்த காலத்தில் தான், வேத மரபுகள் -> புராண மரபுகளாய் மாறத் துவங்கிய போது, எழுதாக் கிளவி -> எழுதும் கிளவியாய், எழுத்தாக்கம் நிறைய உயிரூட்டப்பட்டு, குப்த வரிவடிவத்தையும் பிராமி வரிவடிவத்தையும் சம்ஸ்கிருதம் அரவணைத்துக் கொண்டது; அதுவே நாகரி/ தேவநாகரி என்றும் பின்னாளில் தொடர்ந்தது.

******

பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தின் காலம் 150 BCE என்பார்கள். ஆனால் அதன் எழுத்துணரியாக்கம் 14th CE தான் கிடைக்கும்.

ருக் (ரிக்) முதலான 4 வேதங்கள், பாணினியின் அஷ்ட த்யாயி இலக்கணம், காளிதாசரின் இலக்கியங்கள், பல்வேறு புராணங்கள், என்று இவற்றின் கால அளவீடு, உய்த்துச் சொல்லப்படும் காலக் கணிப்பே அன்றி, நேரடியான சம்ஸ்கிருத எழுத்தாவணத் தரவுகள் அல்ல! எழுத்துத் தரவு, (Written Account) பின்னாளில் தான் கிட்டும்!

சம்ஸ்கிருத மொழிக்கான ஆதி ஆவணக் காலத்தை 150 BCE என்று கணித்தாலும், நேரடியான எழுத்து வடிவம் கிட்டும் ஆவணங்கள், 1000 CE தான். (உதயகிரிக் கல்வெட்டுகள், தேவநாகரி வரிவடிவம்)

Bareilly குடிலைக் கல்வெட்டு (Kutila Inscription) தான், சம்ஸ்கிருத எழுத்து மூலம் காட்டத் தொடங்கும்; அதன் காலம் 990 சிணி தான். அதில், பிராமி & குப்த வரிவடிவங்கள் மாறி, தேவநாகரிச் சாயல் காட்டத் தொடங்கும். (குடிலை/ कुटिल என்பதே கோணலான எழுத்து என்று தான் பொருள்).

ருத்ரதாமன் கல்வெட்டுகள் (Junagadh) 150 CE என்று காலம் காட்டினாலும், அதில் மன்னனின் சம்ஸ்கிருத ஆதரவு சொல்லப்படுமே அன்றி, அதன் வரிவடிவம் பிராகிருத நாகரி எழுத்தே!

ராஜஸ்தான் (சித்தோர்கர்) பகுதியில் கிட்டும் தொன்மையான 1st century BCE கோசுண்டி-ஹதிபாடா கல்வெட்டுகள் கூட, மொழிச் சான்றாகக் கிட்டாமல், அஸ்வமேதச் சடங்குச் சான்றாகத் தான் கிட்டுகின்றன, அதுவும் அசோகப் பிராமி வரிவடிவத்தில்.

இப்படி, சம்ஸ்கிருத மொழிக்கே உரிய நேரடி எழுத்தாவண வரிவடிவச் சான்றுகள், பின்னாளே! 1st century BCE தான் கிட்டும்! எவையும் 6th century BCE-ல்லாம் காட்டாது!

******

தமிழுக்கு இந்தச் சிக்கல் இல்லை! ஆதி எழுத்து ஆவணங்கள் (Earliest written accounts) தமிழுக்கே அதிகம் கிட்டுகின்றன!

மேலும், தமிழுக்கென்று தனித்த வரிவடிவங்கள் உண்டு. தமிழி (தமிழ்ப் பிராமி), அசோக பிராமியினும் வேறுபட்டது; பின்னாள் வட்டெழுத்து, கோலெழுத்து என்று, இன்றைய வரிவடிவம் வரை, தமிழுக்கான எழுத்து தனித்தன்மை உடையது. பிற வடிவங்களைச் சாராதது.

இன்று, கீழடியில் 3.53 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட 6 பதக்கூறுகள் (Sample), Accelerator Mass Spectrometry (AMS) கால ஆய்விலே, தமிழி எழுத்து வரிவடிவத்தினை 580 BCE -க்கும் முன்பு இட்டுச் செல்கின்றன. 6 th century BCE என்பது, இதுவரை எந்த இந்தியத் தொன்மொழிக்கும் கிட்டாத, அறிவியல் ஆவணச் சான்றாகும்! அதுவும், சடங்குச் சான்றாக இல்லாமல், நேரடியான எழுத்தாவண வரிவடிவச் சான்றாகும்!

 

தமிழ்மொழி, சம்ஸ்கிருத பாஷையை விட மூத்த மொழி, என்று சொல்வதற்கு இது போன்ற எழுத்துத் தரவுகள் தான் முதற்புள்ளி! ஏனெனில், ஒரு மொழி, தன்னை எழுதுவதற்கு, சம்ஸ்கிருதம் போல் சொந்த வரிவடிவங்கள் ஏதுமின்றி, தன் நேரடியான எழுத்து முறையெல்லாம் தொலைத்து, இவ்வளவு திண்டாட வேண்டிய தேவையில்லையே! அஃதொன்றே, சான்று பகர்ந்து விடும், தொன்மையின் கூறுகளை!

தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்துக்கும் மூத்து விளங்கும் சிந்து சமவெளி எழுத்துக்கள் (Indus Script), தொல்தமிழ் (அ) Proto Dravidian  தான், என்று இன்னும் தீர்மானமாக முடிவு செய்யப்படவில்லை.          

 

படுகைக் குறிகள்/ படவெழுத்து (hieroglyph) ஆய்வுகளின் மூலமாக, Asko Parpola, Kamil Zvelebil,  ஐராவதம் மகாதேவன், Yuri Knorozov போன்ற பலப்பல உலக அறிஞர்கள், சிந்து சமவெளி வரிவடிவக் கூறுகள், ஆதி திராவிடமொழிக் குடும்பத்தின் தமிழ் வடிவமே என்று ஆய்ந்து உரைத்தாலும், அதற்கான மேலதிகத் தரவுகளை, இன்னும் அறிஞர்கள் தேடுகின்றார்கள்.             

 

அந்த ஆய்வுகளின் நிறைமுடிபும் வந்து சேர்ந்து விட்டால், தமிழ்த் தொன்மவியல் உலக அரங்கில் வலுவானதொன்றாகி விடும்! சிந்து சமவெளி நாகரிகம், Bronze Age என்பதால், 3000-2000 BCEவரை கூடச் செல்ல முடியும்!

சிந்து சமவெளி இன்னும் ஆய்வில் உள்ளதால், கீழடி தான் இப்போதைக்குத் தமிழ்மொழிக்குக் கிட்டக் கூடிய (Earliest Written Account) உச்சநிலைத் தொன்மச் சான்று! 6th Century BCE. அடுத்து வரும் தொன்மச் சான்றுகளையும், வரிசையாகக் காண்போம்.

அடுத்து, முதன்மையான சான்று, ஈழத்தில் (இலங்கையில்) கிட்டுகிறது. ஆனைக்கோட்டை முத்திரை என்ற எழுத்தாவணம். அது 4th Century BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்து ஆனைக்கோட்டையில், பெருங்கற்காலப் (Megalithic) புதைகுழித் திட்டு ஆய்வுகளின் போது, மண்டையோட்டு அருகே மண்பானைகளில் கிட்டியது. “கோ-வே-த” என்று தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணம், கோவந்து/ கோவேதன்/ திவுகோ என்று அறிஞர்களால் பலவாறாகப் படிக்கப்படுகிறது.

அடுத்து, பொருந்தல் என்றொரு தொல்லியல் களம். இது தமிழ்நாட்டின் பழனிமலை அருகில். கருப்பு-சிவப்பு மட்கலங்களில் கிட்டிய நெல்மணிகள், Accelerator Mass Spectrometry ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 490 ஙிசிணி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தின் காலம், 5th Century BCE என்ற சான்றையும் அளித்து, தமிழ்ப் பிராமி அசோக பிராமிக்கு (3rd Century BCE) 200 ஆண்டுகளுக்கு முன்பே, என்ற நிறுவலுக்கும் வழிவகுக்கின்றது.

அடுத்து, மதுரையின் அருகில் மாங்குளம் என்ற தொல்லியற்களம். இங்கு, சங்க காலக் குகைக் கல்வெட்டுக்களை, Robert Sewell 1880களிலேயே கண்டுபிடித்தார். பாண்டியன் நெடுஞ்செழியனின் பணியாளர்கள் (கடலன் வழுதி), சமண முனிவர்களுக்குக் கற்படுக்கைகள் செய்து கொடுக்கும் தகவல்கள், இதில் கிட்டுகின்றன. தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களில், சமணம் தொடர்பான பாளி மொழிச் சொற்களோடும் சேர்ந்து கிடைக்கும் அரிய கல்வெட்டு இது. இதன் காலம், 3rd Century BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து, கொடுமணல் என்ற தொல்லியல் களம், ஈரோடு/சென்னிமலைக்கு அருகில். அங்கும், தமிழ் வரிவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இலக்கியச் சங்கத் தமிழுக்கும் அறிவியல் சான்று தரும் களம். கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இத் தொழில்நகரம் தான், சங்கத்தமிழ் பதிற்றுப்பத்து நூலிலும் வருகிறது;  

ரோமாபுரிப் பொற்காசுகளும் இங்கு கிட்டியுள்ளன. இரும்பினை எஃகு ஆக்கும் உருக்குத் தொழில்நுட்பமும், அதற்கான கருவிகளும் இங்கே கிட்டியுள்ளன. நொய்யல் ஆற்றங்கரை நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் இந்த அகழாய்வில், முதுமக்கள் தாழி மட்டுமல்லாது, வாழும் நாகரிகப் பொருட்களும் ஒருசேரக் கிட்டியுள்ளன.           

ஈட்டி முனை, வாள், இரும்பு உருக்கு, ஒப்பனை வளையல், தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டம் என்று பலவும் கிட்டியதோடு மட்டுமன்றி, பண்டைய ரோமாபுரி தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்த Beryl கற்களும், இங்கிருந்தே!  Be₃Al₂Si₆O₁₈ என்று அறிவியலில் சொல்லப்படும் Beryllium Aluminium Cyclosilicate,  அணிகல அருங்கற்களான emerald, quartz, aquamarine போன்றவையும் கொடுமணல் வணிகச் சந்தையே.இதன் காலம், 2nd Century BCE  என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து, கோவைக்கு அருகில் பெரியதடாகம் பகுதியில், சுடுமண் தாங்கிகள் தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “தவ சாத்தன்” என்று எழுதப்பட்டுள்ள இவையும் 2nd Century BCE என்றே கணக்கீடு.

அடுத்து, ஈழத்தின் (இலங்கை) தென்பகுதியில் திசமகாராமை (Tissamaharama) நகரில் காணலாகும், தமிழி (தமிழ்ப் பிராமி) மட்பாண்டச் சாசனம். ‘திரளி முறி (அ) புலைத்தி முறி’ என்று அறிஞர்களால் படிக்கப்படும் இந்த வரிவடிவம், 2nd Century BCE என்றே கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வளவு நேரம் சொன்ன அத்தனை களங்களையும் ஆவணங்களையும் பொருத்திப் பாருங்கள்; ஒன்று கூடச் சம்ஸ்கிருதச் சான்றுகள் போல், 1st Century BCE அல்ல! எல்லாம் அதற்கும் மிக மிக முந்தியவை; 6th Century BCE வரை செல்கின்றன! (600 BCE – 200 BCE).

ஆனால், சம்ஸ்கிருத பாஷைக்குக் கிடைக்கும் நேரடிக் கல்வெட்டுச் சான்றுகளான கோசுண்டி-ஹதிபாடா கல்வெட்டு கூட, 100 BCE மட்டுமே; அதுவும் மொழிச் சான்றாகக் கிட்டாமல், அஸ்வமேதச் சடங்குச் சான்றாகத் தான்; அதுவும் நேரடிச் சம்ஸ்கிருத எழுத்து வரிவடிவத்தில் அல்ல; பிராகிருத அசோகப் பிராமியின் வரிவடிவத்தில் தான்; தமிழி (தமிழ்ப் பிராமி) போல் தனி எழுத்தில் அல்ல!

இதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம், தமிழுக்குக் கிடைக்கும் ஆதி எழுத்தாவணங்கள் (Earliest Written Account), சம்ஸ்கிருத பாஷைக்குக் கிடைக்கும் எழுத்தாவணங்களை விட, குறைந்தது 500 ஆண்டுகளாச்சும் மூத்தவை!

இவை தெளிவான அறிவியல் தரவுகள், புனைவுப் புராணங்கள் அல்ல!

இன்னொன்றையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பிற உலகச் சமூகங்களைப் போல், தமிழ்ச் சமூகத்துக்கு, ஒரு Greek Acropolis, Roman Forum, Egyptian Pyramid  போன்ற பெருங் கட்டடத் தொன்மச் சான்றுகள் கிட்டவில்லை.

ஆதி தமிழர்கள், எகிப்து Pyramid போல் பெரும் நினைவுச் சின்னங்கள் கட்டவில்லை. அதனால், தொன்மச் சான்று கிட்டல் கடினமாய் உள்ளது! இது வருத்தமே எனினும், இது தான் தொல்தமிழ் நாகரிகம், அதை இன்று நாம் போய் மாற்றி எழுத முடியாது. தொல் தமிழ்ச் சமூகம், “குடி சார்ந்த சமூகம்; கோன் சார்ந்த சமூகம் அல்ல”!

பின்னாளில் தான், அரசர்கள் சார்ந்து சார்ந்து, தனி மனிதத் துதி பெருத்துப் போனது. ஆதி தமிழர்களிடையே, ‘சமூக வாழ்வியல் நோக்கு’ தான் மிகுதி; அதனால், ஒற்றை மனிதத் துதிக் கட்டடங்கள் (எகிப்து பிரமிடுகள் போல்) என்பதெல்லாம் குறைவே; ஆதி தமிழர்களுக்குப் பெருங்கோயில்/ பெருஞ்சமாதிகள் கட்டிப் பழக்கம் இல்லை!

அச் 'சமூகநோக்கு' இயங்குமுறை தான் தமிழ்மொழியை இன்றும் காலங்கடந்து வாழ வைக்கிறது; எகிப்தியத் தொல்மொழியோ இறந்துபட்டது. எனவே, குறை என்று பார்த்தால்: தொன்மைக்குப் பெருஞ் சான்றாவணம் கிட்டாமை. நிறை என்று பார்த்தால்: இன்றும் காலங்கடந்து மொழி வாழ்கிறது. தேவை: தொன்மமா? தொடர்ச்சியா? – இரண்டும் தான்!

Tamil Archaeology has both upsides & downsides!

எகிப்து பிரமிடு போல், தமிழில் இல்லாதது குறை அல்ல; ஒற்றை ஆள்/ ராஜா/ கடவுள் துதி கடந்து, அதான் தமிழ் மொழியைச் சமூக நோக்கில் தள்ளி, இத்துணைக் காலம் வாழ்வித்துள்ளது; எனவே, தொல் ஆவணச் சான்றுக்கு நாம் தான், வேறு வழிகள் தேடிக் கொள்ள வேண்டும்!

எகிப்து பிரமிடு போல், 'பெருங் கட்டடச் சான்றாவணம்' தமிழில் கிட்டாமையால் தான்..

சிந்து சமவெளி, கீழடி, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், ஈழம் என்றெல்லாம்..

'சிறுச்சிறு வாழ்வியல் சான்றாவண'மாய்த் தேடிக் கொண்டு உள்ளோம், நம் தொன்மையை உறுதி செய்ய!

ஆனால் அதற்குத் தான் இன்று பல அரசியல் முட்டுக்கட்டைகள்; சம்ஸ்கிருத பாஷைக்குக் கிட்டும் நேரடித் தொல்லியல் தரவுகளை விட, தமிழ்த் தொல்லியல் தரவுகள் ஒருக்காலும் மிஞ்சி விடக் கூடாது என்று தான், பல அரசியல் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்தியத் தொல்லியல் துறைக்குள்ளேயே பல நச்சுப் போக்குள்ள அதிகாரிகள், தரவுகளை முடக்க எண்ணுகின்றனர். போராடித் தான் மீள வேண்டும்.

கீழடியைக் காப்பாற்றுவது போய், சிந்து சமவெளியைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற அவல நிலை இன்று வந்தே விட்டது.  Indus Script = Proto Dravidian Script,  என்று அறிவியலாய் நிறுவும் முன்னரே, Indus Valley  அகழாய்வுகள் புதையுண்டு மூடிக் கொள்ளப் போகின்றன. (வாசிக்க: The ancient city that's crumbling away) 

கீழடி கடந்து நாம் இன்னும் முன்னெடுத்துச் செய்ய வேண்டுவன:

வைகை ஆற்று நாகரிகம்

பொருநை (தாமிரபரணி) ஆற்று நாகரிகம்

ஈழத் தொல்லியல் களங்கள்

கடல் தொல்லியல் ஆய்வுகள் (Maritime archaeology)

கீழடி என்பது Tip of the Iceberg  தான். கீழடியைக் கடந்து, இன்னும் 293 களங்களை, திரு. அமர்நாத் என்றோ Journal பட்டியல் இட்டு விட்டார். Page 147-162, INDIAN ARCHAEOLOGY JOURNAL. (வாசிக்க:
http://asihyderabadcircle.com/storage/files/1pozl2KUOexYh6T3fJLyUCeNmtDjqxYuxy4GY1t0.pdf)

தொல்லியல் களங்கள் இன்னும் பலப்பல இருக்கின்றன. ஆனால் நாம் தான் நிறைய ஆய்வுகள் செய்யவே இல்லை; அதற்கான போதுமான நிதியோ/ அதிகாரமோ/ அரசு ஊக்கமோ/ மனமோ, நாட்டிலே இல்லை!

மொகஞ்ச-தாரோ/அரப்பா அகழாய்வுகளில், உலக அறிஞர்கள் எல்லோரையும் அழைத்து வந்து, பணத்தைக் கொட்டி, நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டு, விதவிதமாக ஆய்வு செய்தார்கள். ஆனால் அது போன்ற ஓர் ஆதரவு, கீழடிக்குக் கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் தனிமனிதனாகவோ, குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் ஓரிருவரோ, தனித் தனியாகச் செய்ய முடியாது. அரசாங்கம் மூலமாக, பன்னாட்டு அறிஞர்களையும் ஈடுபடுத்திச் செய்தால் தான் உண்டு;

அன்று அரிக்கமேடு அகழாய்வு முன்னெடுத்த Sir Mortimer Wheeler  அறிக்கையால் தான், தமிழ்மொழி 300 BCE வரையாச்சும் செல்ல முடிந்தது!

ஆற்றங்கரை நாகரிகத் தொல்லெச்சங்கள், பரந்துபட்ட இடங்களில் தோண்டினால் தான், காலநிலைப் படிமங்கள் கிடைக்கும். Harappan கிடைத்தது அப்படியே - 24 kmகளங்களில், 20 ஆண்டுகள் அகழ்வாய்வு. ஆனால், கீழடிக்கோ 30 மீட்டர் தோண்டவே, முக்க வேண்டியுளது!

தமிழகத்தில் மட்டுமன்றி, ஈழத்திலும் பரவலாகச் செய்யப்பட வேண்டும்!

ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தொல்லியல் களங்களைக் கடந்து,

தமிழ் இலக்கிய மணிமேகலையில் வரும் நயினாத் தீவு (மணிபல்லவம்), கந்தரோடை, உச்சப்பனை போன்ற இடங்களிலெல்லாம் தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவப் பானை ஓடுகள் நிறையவே கிட்டுகின்றன.

கிட்டும் போதே ஆயாமல் விட்டுவிட்டு, தொலைந்த பின் ஆய்வது என்பது, கண்கெட்ட பின் கதிரவ வணக்கம் போன்றதே!

தமிழ்த் தொல்லியலின் அடுத்த கட்டப் பணிகளாவன (Next Steps):

Government level MOU with the City of Rome (linking Tamilnadu-Roman ancient trade artifacts and Arretine Roman Pottery)

C14 Attestation by Global Bodies/ World Universities and extended U 234-Th 230 Dating.

Link all Excavation Sites of Tamilnadu under an autonomous international academic authority.

Establishing an Archaeological University of Tamilnadu with tie-ups to Global Universities.

Habitation and Burial Sites, Maritime archaeology - Resource Allocations.

Storage of Artifacts and International Insurance on precious artifacts.

******

முன்பே சொன்னது போல், இவற்றால் மட்டுமே மொழி பிறந்த நாளைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. இவை ஓர் ஒப்பியல் அளவில் மட்டுமே! Earliest Written Accounts சான்றுகள் கிடைக்கக் கிடைக்க, ஆய்வின் போக்குகள் மாறும். தரவுகளின் எல்லையே, ஆராய்ச்சியின் எல்லை.

Anecdotal evidence/ Empirical evidence  – இரண்டுமே ஆராய்ச்சிக்குத் தேவைப்பட்டாலும், அறிவியல் முறைமையிலான Empirical evidence என்பதற்கே முதன்மை.

இலக்கியம்/ கல்வெட்டுகள் போன்றன யாவுமே Anecdotal evidence வகையைச் சேர்ந்தவை. ஓர் உரையாடலாக மட்டுமே சொல்லப்படுபவை. அவற்றில் மனிதப் பிழைகள் (human error) ஏற்பட வாய்ப்புண்டு.

ஆனால், அகழாய்வில் கிட்டும் வரிவடிவ எழுத்துடைய பானை ஓடுகள் போன்ற பொருட்களோ, வெறும் உரையாடலாக மட்டும் இல்லாமல், காலக் கணிப்புக்கு உட்படுத்தப்படும் Empirical evidence வகையைச் சேர்ந்தவை.

போலவே, வெறும் வரித் தரவுகள் வேறு; சூழல் தரவுகள் வேறு! இரண்டும் ஒத்திசைவு பெற்றால் தான் ஆய்வில் செல்லுபடி ஆகும். வெறுமனே சில வரிகள், சில சுலோகங்களில்/ பாடல்களில் இருப்பதென்பதே முழுத் தரவு ஆகிவிடாது!

சம்ஸ்கிருத நூல்களில், சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இதில் கலியுகத்துக்கு மட்டுமே 432,000 ஆண்டுகள். இராமன் பிறந்த திரேதா யுகமோ 1,296,000 ஆண்டுகள் என்று சாஸ்திர வரிகள்.

ஆனால் அப்போது, மனிதனே தோன்றியிராத காலம். பெருங் கற்காலமே ~10,000 ஆண்டுகளில் தான் துவங்குகிறது. Homo Sapiens தோற்றக் காலமே 200,000 ஆண்டுகள் தான். எனில், இராமன் எப்படி 400,000 ஆண்டுகள்? இவை, புராணக் கதைக்கு நன்றாக இருக்கும். ஆனால் ஆய்வுகளில் செல்லாது!

போலவே, ராம ஸேது எனப்படும் இராமர் பாலத்தை ஜோடனையாக விவரித்துப் பாடும் வால்மீகி மகரிஷி, அதன் நீள-அகலங்களையும் குறிப்பிடுவார். ‘தச யோஜன விஸ்தீர்ணம், சத யோஜன ஆயதம், இதி நள ஸேதும்’ என்பது வெறும் வரித் தரவே; அது சூழல் தரவிலே அடிபட்டுப் போகும். 10 யோஜனை (130 km) அகலம், 100 யோஜனை (1300 km) நீளம் கொண்ட பாலம், உலகிலேயே இல்லை. மேலும், இலங்கைத் தீவோ, துணைக்கண்டத்திலிருந்து வெறும் 30 km தொலைவு மட்டுமே. 1300 km தொலைவில் அல்ல இலங்கை!

அதனால், ஒரு நூலில் சில வரிகள் வருவதாலேயே, வரித் தரவுகளே, முழுத் தரவுகள் ஆகிவிட மாட்டா!

******

அது மட்டுமல்ல, பல மேலை நாட்டு அறிஞர்களுக்கு, வரித் தரவுகள் மிகவும் பிடித்தமானவை என்பது உண்மையே! ஒன்றுமே இல்லாததற்கு, ஏதோவொரு சான்றாதாரம் என்ற வகையில் அது சரி தான்! ஆனால், உலகச் சூழலை விட, இந்தியச் சூழல் சற்றே மாறுபட்டது!

இங்கு, இந்தியச் சூழலில், சமூகநீதி என்பதும் சேர்த்து உள்ளடக்கியதே ஆராய்ச்சி முறைகள்!

ஏனெனில், ஒரு பெருஞ் சமூகத்துக்கே கல்வி மறுக்கப்பட்டு, அச் சமூகத்தின் தரவுகளையும், அதனை அடிமைப்படுத்திய வேறொருவரே எழுதிக் கொண்டது என்பதால், முழுக்க முழுக்கச் செல்லுபடி ஆகாது! வர்ணத்தாலும் ஜாதியாலும் கல்வி மறுக்கப்பட்ட ஒரு பொதுச் சமூகம், எப்படித் தன் முழு வரலாற்றை எழுத இயலும்? சற்றே அனுசரித்துப் போன இடைத்தட்டு மக்களும், அனுசரணையான சேதிகள் மட்டும் தானே எழுத முடியும்?

பறைக்குல மக்களின் வரலாற்றை, அவர்களால் எப்படி எழுதியிருக்க முடியும்? அவர்களைத் "தொல்லியல் சான்று கொண்டு வா", எனில், எங்கிருந்து கொண்டு வருவார்கள்? எங்கிருந்து கொண்டு வர முடியும்? அவர்களுக்கு நிவந்தங்கள், இறையிலிகள், மங்கலங்கள் என்று மன்னர்கள் ஒன்றுமே வழங்காத போது, தங்களை நிரூபிக்கும் கல்வெட்டுச் சான்றுக்கு, பாவம் அவர்கள் எங்கே போவார்கள்?

சில கல்வெட்டுக்கள், மன்னனே தன் தற்புகழ்ச்சிக்கு வெட்டிக் கொண்டிருக்கக் கூடும். எனவே, அச் செய்திகளின் உண்மைத் தன்மையை, ஒப்பியல் முறைமைகளில் சரி பார்க்க வேண்டியிருக்கும். சில பல கல்வெட்டுகளில், ‘திருபுவனச் சக்கரவர்த்தி’ என்று எழுதியிருப்பார்கள்.

ஆனால், அந்த அரசனோ ஒரு குறு நிலத்தை மட்டுமே ஆண்டவனாக இருப்பான். அடைமொழி/ துதிமொழிகளை எல்லாம் நீக்கிவிட்டு, தேவையான தரவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். இம் மன்னனைப் போலவே, எதிரி நாட்டு மன்னனோ (அல்லது) வேறு எவருமோ, கல்வெட்டில் செதுக்கி இருக்கிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து, முரண்பாடுகளை நீக்கி, ஒப்பியல் முறையில் தான் தரவுகள் எடுத்துக் கொள்ளப்படும்.

Anecdotal evidence/ Empirical evidence – இரண்டுமே ஆராய்ச்சிக்குத் தேவைப்பட்டாலும், அகழாய்வுகள் போன்ற அறிவியல் முறைமையிலான Empirical evidence என்பதற்கே முதன்மை! இது ஒரு தொடர் பயணம்! சான்றுகள் கிடைக்கக் கிடைக்க, ஆய்வின் போக்குகள் மாறும்; தரவுகளின் எல்லையே, ஆராய்ச்சியின் எல்லை!

******

தமிழ்த் தரவுகள் = (சிந்து சமவெளி), கீழடி, ஈழம் ஆனைக்கோட்டை, பொருந்தல், மாங்குளம், கொடுமணல் & Tissamaharama

=> Direct Writing & Earliest Written Accounts: 6th Century BCE

சம்ஸ்கிருதத் தரவுகள் = கோசுண்டி-ஹதிபாடா கல்வெட்டுகள், ருத்ரதாமன் கல்வெட்டுகள் (Junagadh), குடிலைக் கல்வெட்டு (ஙிணீக்ஷீமீவீறீறீஹ்), உதயகிரிக் கல்வெட்டுகள்

=> Direct Writing & Earliest Written Accounts: 1st Century BCE

தமிழ்மொழி, சம்ஸ்கிருத பாஷையை விடவும், குறைந்த அளவுச் சிற்றெல்லையாக, எழுத்தாவணத் தரவுகளால் (மீearliest written accounts), 500 ஆண்டுகள்/ 5 நூற்றாண்டுகள் பழமையானது என்று இங்ஙனம் தரவுகளோடு அறுதியிடலாம்! அறுதியிடுக! அறுதியிடுவோம்!

இதனாலேயே, தமிழ்மொழியின் பிறந்த நாளைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது எனினும், ஓர் ஒப்பியல் அளவிலே (Comparative Languages), அறிவியல் சான்றுகளால், Earliest Written Accounts அகழாய்வுச் சான்றுகள் கொண்டு, காலத்தால், தமிழ் > சம்ஸ்கிருதம் என்று அறிவியல் உண்மையை அறுதியிடலாம்!

எப்பொருள் எத் தன்மைத்து ஆயினும் - அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355)

सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः ।

येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम्

(முண்டக உபநிஷத் 3.1.6 - அதர்வ வேதம்)

ஸத்யம் ஏவ ஜயதே! ஸத்யேன பந்தா விததோ!)

வாய்மையே வெல்லும்!

வாய்மொழியின் தொன்மவியலில், வாய்மையே வெல்லட்டும்!

 

-பேரா.கண்ணபிரான் இரவிசங்கர்

- விடுதலை ஞாயிறு மலர், 8.8.20