பக்கங்கள்

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அவாள் பார்வையில் இன்னும் தமிழ் நீஷப்பாஷைதான்




மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காது காஞ்சிபுரம் ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி - தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்றார். தமிழ் என்றால் நீஷப் பாஷை என்ற சங்கர மடத்தின் - பார்ப்பனர்களின் துவேஷம் இந்த 2018 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது - சமூக வலைத்தளங்களில் இவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய தமிழர்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர்.

சென்னையில் நூல்களின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்ச¬யை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துகளை, பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டு ஆளுநரும் பங்கேற்ற அந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சங்கராச்சாரி பார்ப்பனர், தேசிய கீதத்தின்போது எழுந்து நின்றார். தமிழ் நீஷப் பாஷை என்பதுதானே காஞ்சி மடாதிபதிகளின் கருத்து - மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி தமிழை நீஷப் பாஷை என்று சொன்னவர் அல்லவா!

பூஜை வேளையில் அவர் நீஷப் பாஷையில் (தமிழில்) பேசமாட்டாராம். அப்படி பேச நேர்ந்தால் ஸ்நானம் செய்து தீட்டுக் கழித்த பிறகுதான் பூஜையில் இறங்குவார்.

தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாளின் பாடல் வரிக்கு தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்னவரும் அவரே!

- விடுதலை ஞாயிறு மலர்,27.1.18

பெரியாரும் தமிழும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.


தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி.

எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை.

அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிறைபடுத்தி வைத்திருந்த பழமை விரும்பும் புலவர்களை கண்டித்தார். அவர்களுக்கு உணர்வில் உறைக்கும் படியாகத் தமிழ் மொழியை ‘ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்றும் கூறினார்.

பெரியார் தமிழ்மொழியைப் பற்றிக் கருத்துக் கூறும் பொழுதெல்லாம், அவர் அதைப் பற்றி ஏதும் தெரியாத வகையில் கருத்துக் கூறிவிட வில்லை. தமிழ்மொழியின் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதல் திருக்குறள், கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், புறநானூறு, நாலடியார் முதலிய பாட்டு, கதை இலக்கியங்கள், அறநெறி நூல்கள்வரை அவர் ஓரளவு கற்றிருந்தார். திருக்குறளையும், கம்ப ராமாயணத்தையும் அவர் நன்கு ஆராய்ச்சி முறையில் அறிந்திருந்தார். கம்பராமாயணத்தை வடமொழி வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பெளத்த இராமாயணம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு, ஆராய்ந்து படித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையே பெரியார் எழுதியிருக்கிறார்.

பெரியார் நல்ல தமிழ்ப் பற்றுக் கொண்டவர். அவர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில் தந்தை பெரியாரின் தமிழ்ப்பற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘பெரியார் வீட்டு மொஇ கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்’ என்று எழுதுகிறார்.

தமிழ்மொழியேதான் திராவிட மொழிகளாக விளங்குகின்றது என்னும் கொள்கையுடையவர், பெரியார் அதைப் பற்றிக் கூறும் பொழுது அவர்,

“என் சிற்றறிவிற்கு, என் பட்டறிவிற்கு, ஆராய்ச்சிக்கு எட்டிய வரையில்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளன்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நாலு இடங்களுலும் நாலுவகையாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் கருதுகிறேன்” என்று கருத்தறிவிக்கிறார்.

தமக்குள்ள தமிழ்ப் பற்றைப் பற்றி அவரே 1939 ஆம் ஆண்டில் கோவை மாணவர் மன்றத்தில் பேசிய சொற்பொழிவில் கீழ்வருமாறு விளக்கியிருக்கிறார்.

‘தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டுமொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்வகைப் பற்றும் இல்லை. அல்லது தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. பொருளுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று. குணத்தினாலும், அக்குணத்தினால் ஏற்படும் நற் பயனுக்காகவுந்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கிறேன்.

........ என் தமிழ்ப்பற்றும் அதுபோல்தான். தமிழினடத்தில் நான் அன்பு வைத்திருக்கின்றேன் என்றால், அதன்மூலம், நான் எதிர்பார்க்கும் தன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பேற்படும் அளவையும் எண்ணி மதிப்பிட்டே நான் தமிழ்மொழியிடம் அன்பு செலுத்துகிறேண்.

.... தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் அப்படிப்பட்டவையெல்லாம் தமிழிலேயே இருக்கின்றனவா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லை என்றாலும் மற்ற பல இந்திய மொழிகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ்மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாகும் என ஐயுறத்தக்க வேறு எந்த மொழியும் விரும்பத் தகாததேயாரும்”

தந்தை பெரியார் அவர்கள் சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர் ஆகையால், எந்த கருத்தையும் ஆராயாது, அவர்க்குச் சரி என்று பட்டாலல்லாது, வெளிப்படையாகக் கூற மாட்டார். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு -தமிழர்களுக்குத் தாய்மொழியாகிய, தமிழ் மொழியிடத்தில் பற்று வேண்டும் என்று தந்தை பெரியார் மனவியல் முறைப்படி அறிவுறுத்தியிருக்கிறார். 1924 திசம்பரில் திருவண்ணாமலையில் நடந்த பேராயக் கட்சி மாநாட்டில் அவர் பின்வருமாறு பேசினார்.

“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு-தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று  கட்டாயம் தேவை,தேவை என்று சொல்கிறேன்.

வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு. மராட்டிரனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழ் மொழியில் பற்றில்லை. இது பொய்யா? தமிழ் நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்தவர்கள் எத்தனைப் பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனைப் பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்”

தந்தை பெரியாருடைய இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது. அறிவு சான்றது என்று தமிழரனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெரியார் தமிழ்மொழியை மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் பொதுமக்களிடம் கையாண்டார். அவர் நினைத்த கருத்தைப் பேசுவதற்கென்று அவர் கையாண்ட சொற்கள் படிக்காத மக்களுக்கும் நன்கு புரியக் கூடியவை. அவர் தமிழ் மொழியை மிக இயல்பான முறையில், இன்னும் சொன்னால் கொச்சையாகக் கூட கையாள்வார். ஆனால் அதில் இனிமை இருக்கும். சுவையிருக்கும். கேட்போரை ஈர்க்கக் கூடிய கவர்ச்சியிருக்கும்.

தமிழ்மொழியை இவ்வாறு இயல்பாகவும் கொச்சையாகவும், கலப்பாகவும் பெரியார் பேசினாலும் அல்லது எழுதினாலும், தமிழ் மொழி தூய்மையாகக் கலப்பில்லாமல் பேசப்பட வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறையிருந்தது. ஆர்வம் இருந்தது. தமிழ்மொழியைக் கலப்பில்லாமல் தூய்மையாக எழுத வேண்டும் - பேச வேண்டும் என்பதில் பெரியார் வலிமையான கருத்துக் கொண்டிருந்தார்.

1926 ஆம் ஆண்டு குடியரசு இதழிலும், 1937 ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழிலும் அவர் இப்படி எழுதுகினார்.

“தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும். சமசுக்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்றும் கூறி, பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று அமைவு சொல்லுவதோடு இதிலுமா சாதி வேற்றுமை என்கிறார்கள்.

அப்படியானால் ‘தண்ணீர் கொண்டு வா’ என்பதற்கு பகரமாக(பதிலாக) நம்மால் சரியாகப் பலுக்கவும் (அதாவது உச்சரிக்கவும்), எழுதவும், பழக்கமும் வாய்ப்பும் இல்லாத சமசுக்கிருதச் சொல்லாகிய ‘ஜலம் கொண்டு வா’ என்று சொல்வது குற்றமில்லையானால், ‘வாட்டர் கொண்டு வா’ என்று ஆங்கிலச் சொல் சொல்லுவதில் தப்பென்ன? அப்புறம் தனித் தமிழ் என்ற சொல்லுக்கும், மொழிப் பற்று என்கிற சொல்லுக்கும் பொருள் தான் என்ன? இம்மாதிரி மொழி பற்றிலிருந்தே, இவர்களது நாட்டுப்  பற்றின் தகுதியையும், அறிந்து கொள்ளலாம். பழையன கழிந்து, புதியன புகுவதாயிருந்தால், நமக்கும் கவலையில்லை. புதியவை வந்து வலுக்கட்டாயத்தில் புகுந்து கொண்டு, பழையவற்றையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால், அதைப் பொறுத்துக் கொண்டு, அதற்குச் சார்பாகப் பேசுவதென்பது மொழிக்கு இரண்டகமும், இன வஞ்சகமும் ஆவதோடல்லாமல் தமிழ்த்தாயின் கற்பைத் தமிழ்ப் பகைவர்களுக்குத் தந்நலத்திற்காக விற்றவர்கள் என்றுதான்சொல்ல வேண்டும்”

இத்தகைய கருத்துகள் எவ்வளவு துல்லியமானவை. துணிவு உடையவை.

பெரியாரின் மொழித்துறை ஈடுபாட்டுக்கும் தமிழ்மொழி பற்றி அவர் கொண்ட தெளிவுக்கும் அவர் சிறந்த தமிழ்ப் பேரறிஞர்கள்பால் கொண்ட தொடர்புகள் தான் காரணமாக இருந்தது.

மறைமலையடிகள், திரு.வி.க, சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியனார், சாமி சிதம்பரனார் போன்ற பெருமக்கள் தொடர்பும் துணையும் பெரியாருக்கிருந்தது.

திருக்குறள் பொதுமக்களிடமும் அறிஞர்களிடமும் இன்று பரபலாக வழங்குவதற்கும் பெருமையுற்றதற்கும் ஒருவகையில் பெரியார்தாம் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்திய முதல் பேரறிஞர் அவர். தமிழ் விழாவான பொங்கல் விழாவைப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும்படி செய்தவரும் பெரியார்தாம்.

தமிழ்மொழிக்கு ஊறுநேரும்படி பிற மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்பதைத் துணிவுடன் எதிர்த்தவரும் பெரியார்தாம்.

வேறு மொழியைக் கல்வி மொழியாக்குவதால், தமிழ்மொழியின் வளர்ச்சி குன்றும், தமிழ் மக்களின் முன்னேற்றமும் தடைபடும் என்று 1926 இலேயே குடியரசு இதழில் கண்டனம் தெரிவித்தார். மொத்தத்தில், பெரியார் ஈடுபாடு கொண்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் முதலிய துறைகளில் போலவே தமிழ்மொழித் துறையிலும், பலவகையான முன்னேற்றக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இன்று அரசு கொண்டுவந்துள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்ததிற்கு முதன்முதல் வழிவகுத்துக் கொடுத்தவரும் அதை நடைமுறைப் படுத்தியவரும், தந்தை பெரியார்தாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தமிழினத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டு செய்த பேரறிஞர் பெரியார். உலகிற்கே பயன்படுகின்ற வகையில் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரும், மக்கள் தொண்டாற்றியவருமாகிய பெரியார், தமிழ் மொழியில்தான் பேசினார். தமிழ்நாட்டில் தான் பிறந்து வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமையன்றோ! வாழ்க பெரியார்

-தென்மொழி, சுவடி-18, ஓலை-8,1982

சமற்கிருத திணிப்பு

சமற்கிருத திணிப்பு
உண்டா இல்லையா?

2011 குடி மதிப்பீட்டின்படி , இந்தியா முழுவதும் ,
வழக்கொழிந்த சமற்கிருத மொழியினைப் பேசுவோர் 14,346 பேர் !

இந்திய அரசு சமற்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கீடு /செலவு செய்த தொகை :

2014

சமற்கிருத வளர்ச்சிக்காக
பல்கலைக் கழகங்களுக்கு   170 கோடி
வழங்கப்பட்டது

2015

சமற்கிருத வாரம்
கொண்டாட             ......          . 470 கோடி

ஐக்கிய நாடுகள் சபையில்
இந்தியை அலுவல் மொழி
யாக்க்கும் நடைமுறைச்
செலவுகளுக்காக     ..     ....    270 கோடி

23.07.15

சமற்கிருத வாரத்திற்காக
C B S E  பள்ளிகளுக்கு
மனிதவளத் துறை ஒதுக்கீடு
செய்தது                                     320 கோடி

2015

ஐூலையில் பாங்காக்கில்
நடைபெற்ற சமற்கிருத
மாநாட்டிற்கு        ..                    200 கோடி

2016

ராஷ்டிரீய சமஸ்கிருத
சமஸ்தானுக்கு சமற்கிருத
வளர்ச்சிக்கு ஒதுக்கீடு              70 கோடி

                                          _________
                                            1500 கோடி
                                          __________

இதே காலகட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக  இந்தி அரசு ஒதுக்கீடு செய்த தொகை என்ன ?

தமிழர்களே சிந்திப்பீர் !
மையவரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினை உணர்வீர் !

" சமற்கிருதம் "

         தமிழ் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தில் தோன்றி வளர்ச்சியடைந்தது. தமிழ் வடக்கிற் சென்று திவிடமாகத் திரிந்து. திரவிடமே வடமேற்காகச் சென்று ஐரோப்பாவின் வடமேற்கு மூலையை முட்டி ஆரியமாக மாறி , பின்பு தென்கிழக்காக வந்து கீழையாரியமாக இந்தியாவுக்குட் புகுந்து வழக்கற்றது. அவ் வழக்கற்ற ஆரியமும் அக்காலத்து வடஇந்திய வழக்குமொழியாகிய பிராகிருதமுங் கலந்தே வேத ஆரியம்.

அவ் வேத ஆரியமும் திரவிடமுந் தமிழுங கலந்ததே சமற்கிருதம்.இங்கனம் ஆரியமும் பிராகிருதமும் திரவிடமும் தமிழும் கலந்து ஒன்றாக்கப்பட்டதினாலேயே, வடமொழி ஸம்ஸ்க்ருத எனப்பட்டது.

க்ரு என்பது கரு என்னும் தென்சொல்லின் திரிபாம்.
கருத்தல் , செய்தல்,அவ்வினை இன்று வழக்கற்றது.கருவி,கருமம் என்னும் தென்சொற்களின் முதனிலை கரு என்பதே.சொன்முதல் உயிர்மெய்யின் உயிர்நீங்குதல் வடமொழி யியல்பாம்.

எ-டு : துருவு - த்ரு , பெருகு - ப்ருஹ் , திரு - ச்ரீ, மரி - ம்ரு.
இதனால் , தமிழே ஆரியத்திற்கு மூலமானதும் திருந்தியதும் பண்பட்டதும்ஆகும் என அறிந்துகொள்க.

சான்று: பக்கம் . 143
தென்சொற் கட்டுரைகள்
ஆசிரியர்:மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.
பதிப்பாசிரியர்: புலவர் அ நக்கீரன், தமிழ்மண் பதிப்பகம்
அகமது வணிக வளாகம்,
எண்.293, இராயப்பேட்டைநெடுஞ்சாலை , சென்னை 600 014.

" சமற்கிருதம் " வடமொழி முதலில் எழுதப்பட்ட கிரந்தவெழுத்து தமிழெழுத்தின் திரிபே . கிரந்தவெழுத்தின் திரிபு வளர்ச்சியே தேவநாகரி. அது கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அரும்பி , 8 ஆம் நூற்றாண்டிற் போதாகி , 11 ஆம் நூற்றாண்டில் மலர்ந்ததாக , மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத ஆங்கில அகரமுதலி முன்னுரையிற் குறிப்பிடுகின்றார். (ப. 28 , அடிக்குறிப்பு). தேவநாகரி என்னும் பெயரே , தேவன் ,நகரம் என்னும் இரு தென்சொற் கூட்டின் திரிபென்பதை அறிதல் வேண்டும். ப. 2 , முன்னுரை பண்டைத் தமிழக அரசு வரலாறு நூல்: மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பதிப்பாசிரியர்: புலவர் அ.நக்கீரன் வௌியீடு:கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை அகமது வணிக வளாகம் 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை , இராயப்பேட்டை , சென்னை 600 014. __________________________________
இக்கால் இந்தியும் சமற்கிருதமும் தேவநாகரி வரிவடிவையே கைக்கொண்டுள்ளன என்பதை நினைவு கூர்க. தனக்கென சொந்த வரிவடிவமின்மையாலேயே சமற்கிருதம் வழக்கொழிந்தது என்பதையும் உணர்க.

எது முதலில் ? பிராகிருதமா ? சமற்கிருதமா ?

" மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய் பாட்டனையும் பெற்றான் ".

வேதகாலத்தை யடுத்துச் சமற்கிருதம் உருவாக்கப் பெற்றபோது , இந்திய வட்டார மொழிகளெல்லாம் , வடஇந்தியாவில் (மேற்கிலிருந்து கிழக்காய்ப்)
பைசாகி , சூரசேனி , மாகதி என்றும் நடுவிந்தியாவில் மராட்டிரி என்றும் , தென்னிந்தியாவில் திராவிடி என்றும் , ஐந்து பிராகிருத மொழிகள் கணக்கிடப்பெற்றன.
திராவிடி என்றது தமிழை . இதனால் திரவிடமொழிகளெல்லாம் அக்காலத்தில் தமிழுக்குள் அடக்கப் பெற்றமை அறியப்படும். பிராகிருதம் என்பவை சமற்கிருதத்திற்கு முன்னிருந்தவை அல்லது இயல்பாக முந்தித் தோன்றியவை. பிரா = முன் , கிருத = செய்யப்பட்டது . சமற்கிருதம் என்பது , வழக்கற்றுப்போன வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஐம்பிராகிருதங்களும் கலந்தது . சம்(ஸம்) = உடன் , ஒருங்கு , ஒன்றாக கிருத(க்ருத)=செய்யப்பெற்றது ஸமம்க்ரு என்னும் அடை பெற்ற அல்லது கூட்டு முதனிலை ஸகரமெய் இடையிடப் பெற்று ஸம்ஸ்க்ரு என்றாயிற்று. க்ரு = செய் , ஸம்ஸ்க்ரு = ஒருங்குசேர் , ஒன்றாகச் செய் , இசை(to put together, join together, compose) - இ.வே. இதனால் ,பிராகிருதம் , சமற்கிரதம் என்பன உறவியற் சொற்கள்(Relative Terms) என்பதும்,பிராகிருத மொழிகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை என்பதும் பெறப்படும் . ஆயினும் , மேலையர் இன்றும் வடவரைக் குருட்டுத்தனமாய் நம்பி , " மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றனர் " என்னும் முறையில் , சமற்கிருதத்தினின்று பிராகிருதமும் பிராகிருதத்தினின்று திரவிடமும்(தென்மொழியும்) வந்தன வென்று கொண்டிருக்கின்றனர். இதற்குச் சென்னைப் பல்கலைகழகத் தமிழ் அகரமுதலியும் இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின் தமிழ்ப்பற்றின்மையும் காட்டிக்கொடுப்பும் பெரிதுங் கரணியமாம். நடு இந்திய மொழிகளாகிய மராட்டியும் குசராத்தியும் பஞ்ச திரவிடக் கூறுகளாகக் கொள்ளப்பட்டிருந்தமை யாலும் , வடஇந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றுந் தமிழா யிருப்பதாலும் ,மேலையாரிய மொழிகளிலும் தமிழ் சிறிதும் பெரிதும் கலந்திருப்பதனாலும் , வடஇந்தியப் பிராகிருதங்களும் மூவகைத் திரவிடங்களுள் * ஒன்றான வடதிரவிடத்தின் திரிபு வளர்ச்சியா யிருக்கலாம் என்று கருத இடமுண்டு. சமற்கிருதத்தில் ஐம்பிராகிருதமுங் கலந்திருப்பினும் , நேர்வழியாகவும் அல்வழியாகவும் ஐந்தில் இரு பகுதி யென்னுமளவு மிகுதியாகக் கலந்திருப்பது தமிழே என்பதை அறிதல் வேண்டும். சான்று : பக்கம் 2 - 3 (முற்படை) "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ". ஆசிரியர்: மொழிஞாயிறு வேநேயப் பாவாணர் பதிப்பாசிரியர் : புலவர் அ.நக்கீரன் வௌியீடு:தமிழ்மண் பதிப்பகம் , சென்னை 600 014. 
___________________________________
பெறப்படுவது:
1.பிராகிருதம் , சமற்கிருதத்திற்கு முற்பட்டது.
2.தென் திரவிடியாகிய தமிழ் ஐம்பிராகிருதங்களுள் ஒன்று.
3.வட இந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றும் தமிழே. 4.சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி தமிழே ! ஆகையால்தான் , சமற்கிரதமே இந்திய மொழிகள் அனைத்திலும் தொன்மையானது என்னும் வடவர்கூற்றை "மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றான் " என்பது !

- Arumugam A.pachaiyapan,(சீனிவாசன் பதிவில்,4.2.18) முகநூல் பதிவு

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

வேதத்தில் தமிழ் கெட்ட பாஷை

பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்

பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.

உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.

தமிழ் கெட்டவர்களின் கெட்டபாஷை ? தமிழ் தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன ?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72

வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.

“தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை...”

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள்.

மிலேச்சபாஷை... அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.

எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மையற்ற பாஷை... என்கிறது வேதம்.

இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “...தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா...”

அதாவது... விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்... கங்கை, யமுனை நதிகள் பாயும்...  இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும்.

அதனால்... இந்த பகுதியை தவிர... மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை.

இதே நேரம்... மநு இன்னொரு கருத்தையும் சொல்கிறார் பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதிகளாக... வகுத்துச் சொல்லும் போது, ப்ரும்மா வர்த்தம், ப்ரும்மரிஷி வர்த்தம் என்றெல்லாம் இமய மலைச்சாரல் பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

மநு சொல்படி, வேதச் சொல்படி பார்த்தால்... பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்.

மேலும், அவர்கள் இமயமலை, விந்தியமலை, கங்கை, யமுனை பகுதிகளில்தான் வசிக்கவேண்டுமே தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது

முதலில் இவர்கள் வேதம் கூறுவதையாவது பின்பற்றுவார்களா? 

- இராமானுஜ தாத்தாசாரியார்