பக்கங்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2018

பெரியாரின் பேருள்ளம்! திருவிகவிற்கும் தமிழுக்கம் தந்த மரியாதை!

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால் பேராசிரியர் அ. ச. சம்பந்தன், மு. வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.
   சொல்லி சிறிது காலத்திற்குள் திருவிக இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
      சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
       தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள் எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
    இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
       "அப்படியா சொன்னார்? அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.
    ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.
     என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.
     சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.
   " அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.
     நானும் வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.
     தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர்.
      தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.
  (அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)

புதன், 14 நவம்பர், 2018

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்



பிரதான பதிவுகள்இன்றைய செய்திகள்அரசியல்

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்

11/25/2017 இனியொரு... 3 COMMENTS

முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:

முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.

இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.

மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.

இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.

இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.

கந்த புராணத்தின் முரண்கள்:

கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).

முருக வழிபாட்டின் இன்றைய நிலை:

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை

அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.

முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:

இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.

துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)

செவ்வாய், 13 நவம்பர், 2018

தமிழில் பெயர் பலகை: ஆய்வுக்கு உத்தரவு



திண்டுக்கல், நவ. 13- 'தமிழக கடைகள், உணவகங்கள், வணிகநிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா...' என, ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கடைகள், உணவ கங்கள் மற்றும் வணிக நிறுவ னங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். மேலும், 5:3:2 விகிதாச்சார அடிப்படையில் தமிழ், ஆங்கி லம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெற வேண்டும். இவை அனைத்தும், ஒரே பெயர் பலகையில் இருக்க வேண்டும். ஆனால், பல நிறுவன பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழி களில் எழுதப்படுகின்றன. அந் நிறுவனங்களிடம், 50 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக் கப்படுகிறது. அதனால், பலரும் தமிழில் பெயர் பலகை வைக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதில், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், மாதந்தோ றும் அரசு அலுவலகங்கள் மற் றும் 100 கடைகள், வணிக நிறு வனங்களில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக் காத, நிறுவனங்களின் விவரம் தொழிலாளர் துறை ஆணைய ருக்கு அனுப்பப்படும். அவர் கள் மூலம் வழக்கு பதிவு செய் யப்படும் என, உத்தரவிடப் பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13.11.18

சனி, 10 நவம்பர், 2018

தமிழர் சங்கம்

07.07.1929 - குடிஅரசிலிருந்து...
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டி ருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- விடுதலை நாளேடு, 10.11.18

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? - 3

***கலி.பூங்குன்றன்***
மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் 'நச்சு நச்சு' என்று கொடுத்தார் சாட்டையடி!
வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?
எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளை சந்தித்து விட்டு வரலாம் என்று 'ஆனந்த விகடன்' மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் கிளம்பி விட்டார்.
அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.
அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.
ஒன்று - பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை - அதற்கு வழி செய்ய வேண்டும்.
கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு
நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூலுக்கு மறுப்பு நூல் ஒன்றை முனைவர் மறைமலை இலக்குவன் எழுதுவார் என்று கூட்டத்தில் அறிவிப்பு.
இரண்டாவது - பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், "நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!" என்றதும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.
தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.
(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)
சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.
நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் Mirror of Tamil and Sanskrit எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.
அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். "Tamil Nadu A Land of Vedas" என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).
திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்? அறிவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது - என்பது குறள்.
அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? "பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.
அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மைப் பூண் டொழுகலான்.
என்பது தான் அந்தணருக்கு திருவள்ளுவர் சொல்லும்  விளக்கமாகும்.
நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).
எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.
ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? 'பித்தா பிறை சூடிய பெருமானே' என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.
இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது - ஆரவாரம் மக்களிடையே!
(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். "நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை" என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)
இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.
("சைவமும் தமிழும் தழைத்தோங்குக" என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).
இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.
இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.
கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?
திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் - அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.
ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.
- நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங் பிரதமராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.
தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு - தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா
எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.
2100 ஆண்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம்.  ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.
இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.
'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்' என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.
ஆரியம் வேறு, திராவிடம் வேறு - இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.
உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.
ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.
என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.
(பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.
சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.
ஆரிய - திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.
பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது - ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"
மனு அத்தியாயம் 10 சுலோகம் 841
இது ஆரியத் தத்துவம் - கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
இது திராவிடத் தத்துவம்.
இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!
நாகசாமியின் இந்த நூலைப் பற்றி - பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?
நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.
திட்டமிட்டே ஒரு வட்டாரம் - ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்தத் திராவிட மண்ணை - பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் - நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.
ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.
குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.
மனுதர்ம சாஸ்திரத்தில் கடைசிக் கடைசியாக சாஸ்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.
"இந்த சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விஷயத்தில்  மேற்சொல்லும் குணமுள்ள பிராமண ருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சய மான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).
இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.
அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை - இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை - சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
(முழு உரை பின்னர்)
- விடுதலை நாளேடு, 10.11.18

திருவள்ளுவரைப் பற்றிப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) புரட்டு! (2)

***கலி. பூங்குன்றன்***
உ.வே.சா. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.
"பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.
உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.
அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படிச் செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?
தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?
தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட, பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?
உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர் களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!" என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்கள்.
('குடிஅரசு' 10.3.1935 பக்கம் 3,4)
இதுதான்  தமிழ்  வளர்ப்பில்கூட இன பேதக் கண் ணோட்டம்!
"திரு" என்ற அருந் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவ தில்கூட பார்ப்பனர்களிடத்தில் மல்லுக் கட்ட வேண்டி யிருந்தது.
"திரு"வை எதிர்த்து இரா. இராகவய்யங்கார், உ.வே.சாமி நாதய்யர் முதலானோர் எழுதினர். இரா. இராகவய்யங்கார் "சுதேசமித்திரன்" இதழில் "திரு" என்ற சொல் "ஸ்ரீ" என்பது போலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும், "திரு" என்னும் அடையாளமும் உதவாதது என்றும் மறுத்தெழுதினார். (பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் அவர்களின் "தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்" மேலும் "குறளீயம்" 1.11.2000).
தமிழில் உள்ள ஓர் அழகிய சொல்லைப் பயன்படுத் துவதற்கு இந்தளவுக்குப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் மனப் பாங்கு எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.
சென்னை சிறப்பு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் "துக்ளக்கில்" சோ எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" எனும் கட்டுரைத் தொடருக்கு  "உண்மை" இதழில் "வெறுக்கத்தகுந்ததே பிராமணீயம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய தொடரிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.
"உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!
வ.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,
... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

"திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்" என்று எழுதி யுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவ தாக அமைந்து இருக்கிறது. அதில்கூட "அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,
“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.
அதாவது, "திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்" என்று எழுதினார்."
(க. திருநாவுக்கரசு அவர்களின் "திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்" சங்கொலி 14.6.1996)
என்னே பார்ப்பனத்தனம்!
ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே பறைசாற்றுவார்கள்; இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கும் இவர்தான் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுக்கும் இவர்தான் தலைவராம். (அப்படித்தானா?) ஆனால் மனம்? ஆதி சங்கரரைப் பற்றி  விவேகானந்தர் சொல்லுவதுபோல அவர் வழி வந்த இந்த சங்கராச்சாரியார்களுக்கு குறுகிய புத்திதான் - தான் பிறந்த பார்ப்பன ஜாதி எனும் ஆணவம் கொக்கரிக்கும் - குரூரக் குணம்தான் - தங்கள் மொழியான சமஸ்கிருதத்தின் மீது தாங்கொணா வெறிதான் - கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புரட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் - குறளைப் பற்றி இடைக்காடர் எனும் புலவர். மதுரைப் பாலாசிரியனார் எனும் புலவரோ,
வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண்திங்கள்
பொன் என நீக்கும் புறஇருளைத் - தெள்ளிய
வள்ளுவர் இக்குறள் வெண்பா அகிலத்தோர் உள் இருள் நீக்கும் ஒளி
என்றார்.
இப்படி உலகத்தாரின் உள் இருள் நீக்கும் ஒளியான திருவள்ளுவர் யாத்த திருக்குறளை லோகக் குரு என்று 'லொக் லொக்'கென்று இருமிக் கொண்டு, இறக்கும் தருவாயில் இருக்கும்  பார்ப்பனர்கள்கூட உச்சிமோந்து போற்றுகிறார்களே, அந்த சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
வைணவப் பெண்மணியாகிய ஆண்டாள் என்பவர் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல், "நாட்காலை நீர் ஆடி" என்று தொடங்குகிறது. அதில் 'செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்' என்பது ஒருவரி.
இதற்கு இந்த லோகக் குரு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?
"தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்லுகிறார் என்றால் இந்தப் புரோகிதப் பார்ப்பனக் கும்பலை என்னவென்று சொல்லுவது! 'குறளை' என்பதற்கு என்னதான் பொருள்? அய்காரத்தைக் கடைசியாகக் கொண்ட இந்த சொல்லுக்கான பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும் (மதுரைத் தமிழ் பேரகராதி)
தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்தக் கோட் சொல்லி குல்லுகப்பட்டர் பாம்பரையோ அர்த்தத்தை அனர்த்தமாக்கி ஆனந்தநடனம் ஆடுகிறதே!
இந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்லு கிறார் என்றால் சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தன் பங்குக்கு எதையாவது உளறி வைக்க வேண்டாமா?
மதுரையில் தொழில் அதிபரான பார்ப்பனர் ஒருவருக்கு கைங்கரிய சிரோமணி விருது வழங்க சென்ற இடத்தில் இவர் உதிர்த்த 'உன்னத' மொழி என்ன தெரியுமா?
"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றாரே பார்க்கலாம் ('தினத்தந்தி' 15.4.2004)
"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது." (கீதைஅத்தியாயம் 4 - சுலோகம் 13) இப்படி சொல்லும் கீதையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளும் ஒன்றாம்.
பிறவிக்குருடர்கூட இப்படிக்கூறி இப்படி அடையாளப் படுத்த மாட்டான்.
சந்தனமும் - சாணியும் ஒன்று, பாலும் -  பாஷாணமும் ஒன்று என்று சொல்லும் பாழ்ப்புத்தி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோகக் குணம்!
குறள் மனிதநேயத்தின் குணம்! சங்கரமடம் மனித வெறுப்பின் இனம்!! இரண்டும் எதிர்நிலை மனம்!!! இரண்டும் எதிர் நிலை - ஒன்றல்ல - புரிந்து கொள்வீர்!
'திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை - அதிலும் முதலில் பத்துக் குறள்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று காஞ்சி ஜெயேந்திரர் சொன்னதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதே!
"திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   "நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை" என்ற சிறு நூலில் காணப்படுகிறது.
அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். 'தமிழன்' என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.
இவர் 'பார்ப்பன வேதாந்த விவரம்' 'வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்' 'நந்தன் சரித்திர விளக்கம்' 'நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை' "திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. "அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று போற்றுகிறார்.
1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது "வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார்.
அதற்கு சிவநாம சாஸ்திரி, "சரி, கேளும்" என்றார்.
"நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் 'எம்.ஏ.,' 'பி.ஏ.,' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்" என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து "பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்" என்று கேட்டார்.
சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதர், "ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்," என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.
திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.
இந்த தகவலை "நூதன ஜாதிகள் உற்சவபீடிகை" எனும் நூலிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் சு. ஒளிச்செங்கோ. இத்திசையில் சொல்லிக் கொண்டே போகலாம்.
(நாளையும் உண்டு)
-விடுதலை நாளேடு,9.11.18

"திருக்குறள் மனுதர்மத்தின் சாரமாம்" பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி (1)

***கலி. பூங்குன்றன்***
மேனாள் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை (7.11.2018) 7 மணிக்கு  சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ. கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் அரிய உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் நன்றி கூறினார்.
பார்ப்பனர்களை பொறுத்தவரை தமிழையும், தமிழர் களையும், தமிழர்களின் பண்பாட்டையும்  கொச்சைப் படுத்துவதில் எப்பொழுதும் 'நயமாய்' ஈட்டி முனையாய்ச் செயல்படக் கூடிய இட்லர் மனப்பான்மை கொண்டவர்கள். உலகத்திலேயே ஆரிய இனம்தான் உயர்ந்தது என்று ஓங்காரக் குரல் கொடுத்த உன்மத்தன் ஆயிற்றே - அந்த உன்மத்தர்கள் இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்கள் உருவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழில் பேசுவார்கள், தேவைப்படும் இடங்களில் தங்களைத் தமிழர்கள் என்று கூடச் சொல்லிக் கொள்வார்கள்.ஆனால் நடப்பில் மட்டும் அவர்கள் எண்ணம் என்பது திரா விடர் - தமிழர் எதிர்ப்புதான் - தமிழ் மீது துவேஷம் தான்.
இதுபற்றி அறிஞர் அண்ணா கூறுவது கூர்மையானது - கவனிக்கத்தக்கதுமாகும்.  "தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ரெனப்பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" (திராவிடன்நாடு 2.11.1947 பக்கம் 18). பார்ப்பனர்களை எவ்வளவு துல்லியமாக அண்ணா படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இன்றைக்குக்கூட சங்கராச் சாரியார் ஒவ்வொரு நாளும் பூஜை வேளையில் (சந்திர மவுளீஸ்வரர் பூஜை என்று சொல்லிக் கொள்வார்கள்) தமிழில் பேச மாட்டார். பூஜை வேளையில் தமிழ் நீஷப் பாஷை என்று கூறிப் பேச மாட்டார்கள். (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - 'உண்மை' 1.12.1980).
ஓலைச் சுவடிகளை எல்லாம் திரட்டி தமிழ் இலக்கியங் களைப் பதித்தவர் உ.வே. சாமிநாதய்யர் என்று கூறப்பட்டாலும் அதிலும் கூட அவர் தனது பார்ப்பனர் உணர்வைக் காட்டத் தவற வில்லை.
"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்!" எனும் நூலில் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உ.வே.சா. பற்றி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார். "புறநானூற்றில் 'ஆன்முலை யறுத்த' - என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடி களில் உள்ள ஒரு சொல், யாழ்ப் பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் 'அறவோர்' என்று வந் துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் 'பார்ப்பார்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச் சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. 'அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா'தெனும் 'அறங்கூறும் அவ்வடி, 'பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா'தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் 'கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை' எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள 'தன்மை' என்னும் ஒரு சொல் லுக்கு 'அவரவர் சாதி இயல்பு' - என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை 'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்' எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, "இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க் கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது" என்றும்,
'அறிவுடையீரே' என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், 'பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது' என்றும்,
'ஆசில் தெருவில்' என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், 'ஆசில்' (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று 'தோன்றுகின்றது' என்றும் எழுதி, 'பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா' எனும் (இன்னா 3) அடியையும், 'அந்தணர் அமுதவுண்டி' (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கி யங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.
தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெரு மையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்ப தற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.
பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களை யெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷ்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களை பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.
அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணை யின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் 'வடசொல்லாட்சி' என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுக் கொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,
"இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள் எழுதி யுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியையென் றும், மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென் பதற்குப் பாடஞ்செய்யும் என்றும், அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குப் பரித் தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க."
தமிழ்த் தாத்தா என்று கூறப் படுவரே தமக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழை இப்படி யெல்லாம் குதறி இருக்கின்றார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுவானேன்!
(நாளை பார்ப்போம்)
- விடுதலை நாளேடு, 8.11.18