பக்கங்கள்

சனி, 10 நவம்பர், 2018

தமிழர் சங்கம்

07.07.1929 - குடிஅரசிலிருந்து...
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டி ருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- விடுதலை நாளேடு, 10.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக