பக்கங்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2018

பெரியாரின் பேருள்ளம்! திருவிகவிற்கும் தமிழுக்கம் தந்த மரியாதை!

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால் பேராசிரியர் அ. ச. சம்பந்தன், மு. வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.
   சொல்லி சிறிது காலத்திற்குள் திருவிக இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
      சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
       தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள் எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
    இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
       "அப்படியா சொன்னார்? அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.
    ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.
     என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.
     சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.
   " அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.
     நானும் வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.
     தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர்.
      தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.
  (அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக