பக்கங்கள்

சனி, 10 நவம்பர், 2018

"திருக்குறள் மனுதர்மத்தின் சாரமாம்" பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி (1)

***கலி. பூங்குன்றன்***
மேனாள் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை (7.11.2018) 7 மணிக்கு  சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ. கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் அரிய உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் நன்றி கூறினார்.
பார்ப்பனர்களை பொறுத்தவரை தமிழையும், தமிழர் களையும், தமிழர்களின் பண்பாட்டையும்  கொச்சைப் படுத்துவதில் எப்பொழுதும் 'நயமாய்' ஈட்டி முனையாய்ச் செயல்படக் கூடிய இட்லர் மனப்பான்மை கொண்டவர்கள். உலகத்திலேயே ஆரிய இனம்தான் உயர்ந்தது என்று ஓங்காரக் குரல் கொடுத்த உன்மத்தன் ஆயிற்றே - அந்த உன்மத்தர்கள் இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்கள் உருவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழில் பேசுவார்கள், தேவைப்படும் இடங்களில் தங்களைத் தமிழர்கள் என்று கூடச் சொல்லிக் கொள்வார்கள்.ஆனால் நடப்பில் மட்டும் அவர்கள் எண்ணம் என்பது திரா விடர் - தமிழர் எதிர்ப்புதான் - தமிழ் மீது துவேஷம் தான்.
இதுபற்றி அறிஞர் அண்ணா கூறுவது கூர்மையானது - கவனிக்கத்தக்கதுமாகும்.  "தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ரெனப்பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" (திராவிடன்நாடு 2.11.1947 பக்கம் 18). பார்ப்பனர்களை எவ்வளவு துல்லியமாக அண்ணா படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இன்றைக்குக்கூட சங்கராச் சாரியார் ஒவ்வொரு நாளும் பூஜை வேளையில் (சந்திர மவுளீஸ்வரர் பூஜை என்று சொல்லிக் கொள்வார்கள்) தமிழில் பேச மாட்டார். பூஜை வேளையில் தமிழ் நீஷப் பாஷை என்று கூறிப் பேச மாட்டார்கள். (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - 'உண்மை' 1.12.1980).
ஓலைச் சுவடிகளை எல்லாம் திரட்டி தமிழ் இலக்கியங் களைப் பதித்தவர் உ.வே. சாமிநாதய்யர் என்று கூறப்பட்டாலும் அதிலும் கூட அவர் தனது பார்ப்பனர் உணர்வைக் காட்டத் தவற வில்லை.
"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்!" எனும் நூலில் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உ.வே.சா. பற்றி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார். "புறநானூற்றில் 'ஆன்முலை யறுத்த' - என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடி களில் உள்ள ஒரு சொல், யாழ்ப் பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் 'அறவோர்' என்று வந் துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் 'பார்ப்பார்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச் சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. 'அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா'தெனும் 'அறங்கூறும் அவ்வடி, 'பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா'தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் 'கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை' எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள 'தன்மை' என்னும் ஒரு சொல் லுக்கு 'அவரவர் சாதி இயல்பு' - என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை 'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்' எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, "இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க் கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது" என்றும்,
'அறிவுடையீரே' என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், 'பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது' என்றும்,
'ஆசில் தெருவில்' என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், 'ஆசில்' (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று 'தோன்றுகின்றது' என்றும் எழுதி, 'பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா' எனும் (இன்னா 3) அடியையும், 'அந்தணர் அமுதவுண்டி' (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கி யங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.
தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெரு மையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்ப தற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.
பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களை யெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷ்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களை பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.
அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணை யின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் 'வடசொல்லாட்சி' என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுக் கொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,
"இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள் எழுதி யுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியையென் றும், மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென் பதற்குப் பாடஞ்செய்யும் என்றும், அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குப் பரித் தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க."
தமிழ்த் தாத்தா என்று கூறப் படுவரே தமக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழை இப்படி யெல்லாம் குதறி இருக்கின்றார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுவானேன்!
(நாளை பார்ப்போம்)
- விடுதலை நாளேடு, 8.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக