பக்கங்கள்

புதன், 9 டிசம்பர், 2015

புரட்சிக்கவிஞரின் வள்ளுவர் உள்ளம்!

Image result for புரட்சிக் கவிஞர்
புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை யான வள்ளுவர் உள்ளம் என்னும் நூலின் முன்முகம் பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறை யாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை உழவு, தொழில், வணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.
உழவும், தொழில் என்னும் துறையில் அடங்கு மேனும், சிறப்புக் கருதி, உழவுத் தொழிலைத் தனித் துறையாக வைத்துக் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற்துறையில் அடங்கியவை.
எழுத்து, சொல், பொருள் என்பனவும் கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும் போர்ப் பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.
வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை.
இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!
ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி என்னும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.
இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவலற் பெயர் வள்ளுவன் என்பது.
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்
என்னும் பிங்கலந்தைச் செய்யுளும் இங்குக் கருதத் தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.
எனவே, வள்ளுவர் என்பது ஒரு ஜாதி அல்ல. வள்ளு வன் என்பது ஒரு அலுவல். ஒரு அமைச்சர். அந்த ஆறு அமைச்சர்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு அறிவார்ந்த பேரறிஞன். எனவே, அப்படிப்பட்ட அறிஞன் என்ற கருத்தை புரட்சிக்கவிஞர் அவர்கள் இங்கே எடுத்துச் சொல்லி, இன்றைக்கு அதன்மூலமாக ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இல்லையென்றால், பழைய கதைகள்தான் நிற்கும். இந்த ஜாதிக்குப் பிறந்தவர், அந்த மதத்திற்கு உரியவர் என்றெல்லாம் சொல்லி வள்ளுவரைக்கூட ஒரு சிமிழுக்குள், ஒரு எல்லைக்குள் அடக்கவேண்டும் என்று சொல்லி, கொச்சைப்படுத்திய காலத்தை மாற்றிய பெருமை இந்த இயக்கத்தைச் சார்ந்தது.
ஆகவே, பெரியார் செய்த பெரும்பணி, அதைப் பெரியார் சமூக சேவை மன்றம் இந்த சிங்கப்பூர் நாட்டிற்குக் கொண்டு வந்து, நல்ல அறிஞர்கள் மத்தியில், ஆற்றல் மிகு தலைவர்களை அழைத்து, சிந்தனையாளர்களை அழைத்து இந்த விழாவை நடத்தியது என்பது மிகப்பெருமை!
-ஆசிரியர் கி.வீரமணி
-விடுதலை,22.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக